Monday, 28 April 2025
உழைப்பாளர் தினம் தோன்றிய வரலாறு
Saturday, 26 April 2025
நல்லியம்பாளையம் கதை பேசுவோம் -9
ஊருக்கு ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்றும் பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு வழிநடத்தப்படுகிறது.
அதுபோல ஊர் அருமைக்காரர் பொறுப்பும் ஊருக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு.( கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பல ஆவணங்களை அடையாளப்படுத்திய புலவர் இராசு ஐயாவின் பேரன் எனது மாணவன். அதன்மூலம் இராசு ஐயா அவர்களிடம் ஊர் அருமைக்காரர் பற்றிய தரவுகளை அவர்வழியே பத்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றேன். அந்தப் பதிவுகளே இங்கும் பகிரப்படுகிறது)
மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை ‘உரிமைப் பெண்’ என்று அழைப்பர். மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர்’ என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் ‘சகுனம்’ வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர். ஒரே குலத்தில் பெண் எடுக்கும் ‘அகமணம்’ கவுண்டர்களிடம் இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிந்து கொள்வர். பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர் என்று இராசு சொன்னதையும் நடைமுறை வாழ்வியலையும் பொருந்தச் செய்தன.
பெண் பார்த்தல்
சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம் என்று கூறினார். எனது நல்லியம் பாளையம் மற்றும் கொங்கு கிராமங்களில் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழாவின்போதோ பெண்ணை முதலில் பார்த்து அதன்பின்னரே உறுதி செய்வர்.
ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார்.
அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.
பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.
அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவார்கள். பெரியவர்களை வணங்க, மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை ஊர் அருமைக்காரர் சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.
நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் ‘பருப்புச்சாத விருந்து’ என்றும் அழைப்பர்.
அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பல எண்ணிக்கை சார்ந்த சடங்கு முறைகளை பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் செய்வார்கள் . அந்தச் சடங்குகள் அனைத்தும் அருமைக்காரர் தலைமையிலேயே நடைபெறும். சடங்குப் பெயர்களை மட்டும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.
மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல், திருமண அழைப்பு, விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்,பட்டினிச் சாதம், முகூர்த்தக்கால் போடுதல்,படைக்காலம் வைத்தல்,காப்புக் கட்டுதல்,சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்,மங்கலன் முகம் துடைத்தல்,கோயில் மாலை பெறுதல்,குப்பாரி கொட்டல்,நிறைநாழி,கணபதி வணக்கம்,குலதெய்வ வழிபாடு,நாட்டுக்கல் வழிபாடு,வெற்றிலை கட்டுதல்,இணைச்சீர்,தாயுடன் உண்ணல்,கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை,பால் பழம் சாப்பிடுதல்,பட்டம் கட்டுதல்,பெண்ணெடுத்தல்,மணமேல் பணம் மேற்காணும் சீர் முறைகளை ஊர் அருமைக்காரர் செய்வார்.
திருமணம் முடிந்த பின்னர் ஓலை எழுதிய புலவர் , நகை ஆசாரி, மங்கலன் என்றழைக்கப்படும் நாவிதன் , குயவன், வண்ணான் பதினெட்டு சமூகத்தாருக்கு பொருள் கொடுத்து பெரிய நிகழ்வாக திருமணம் நடத்தும் பாங்கு ஊர் அருமைக்காரருக்கு உண்டு. நல்லியம்பாளையம் கிராமத்தின் கொத்துக்காரர் மற்றும் அருமைக்காரர், மணியக்காரர் என நல்லியம்பாளையத்தின் அடையாளமாகிப்போன கவுண்டர்களை நினைவு கொள்கிறேன். எனது பால்ய வயதில் இவர்களின் பெருமை தெரியாமல் இவர்களுடன் பேசி உள்ளேன். ஆனால் ஊரின் ஆவணங்களே இவர்கள்தான் என்பதை என்னும் வயதில் இன்னும் ஊரைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருக்கும். நல்லியம்பாளையத்தின் கதையும் விதவிதமாக இருக்கும். மேலும் கதை பேசுவோம்.
Friday, 18 April 2025
நல்லியம்பாளையம் கதை பேசுவோம் -8“தொட்டி கட்டு வீடு”
Wednesday, 16 April 2025
இந்திய இரயில்வே உருவான வரலாறு - அறிய வேண்டிய வரலாறு
இந்தியாவில் முதல் இரயில் வட இந்தியாவில் மும்பை - தானே இடையே 1853 ல் இயக்கப்பட்டதாக நமது வரலாற்றுப் பக்கங்களில் , வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டு நாமும் படித்திருப்போம். ஆனால் இந்தியாவில் முதல் இரயில் சென்னையில் தான் இயக்கப்பட்டது என்பதும் அந்த இரயில் 1837 ல் இயக்கப்பட்டதும் நாம் அறியாத வரலாறு.
இந்தியாவில் இரயில் 1853ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கற்பிக்கபட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் வடக்கு-தெற்காக பிற்காலத்திய வரலாற்றாய்வாளர்கள் இந்தியாவை பிரித்தமையே காரணம். ஆனால் உண்மையில் இந்தியாவின் தெற்குப் பகுதியில்தான் முதன்முதலில் இந்திய தொடர்வண்டிக் கழகம் இயக்கப்பட்டது. இந்தியாவில் இரயில்வண்டிகளின் அவசியம் மற்றும் சாலைகள் குறித்து 1832 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அதனையடுத்து 1837 ஆம் ஆண்டு சென்னை நகர சாலை கட்டுமானப் பணிக்காக சர் ஆர்தர் என்பவரால் கிரானைட் கற்களைக் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது.
சர் வில்லியம் ஏவரி என்பவரின் உதவியால் நீராவி இயந்திரம் மூலம் செங்குன்றம் முதல் சிந்தாதரிப்பேட்டை வரை இயக்கப்பட்ட இரயில் சேவையே இந்தியாவின் முதல் இரயில் சேவை என்பதை பதிய வேண்டியதும் படிக்க வேண்டியதும் மிக அவசியம்.
ஆர்தர் காட்டன் என்பவர் இன்றைய செங்குன்றம் பகுதியை ரெட் ஹில் என்ற பெயரில் அழைக்க , ரெட் ஹில் இரயில்வேயை முதன்முதலாக உருவாக்கினார். இதுவே இந்தியாவின் முதல் இரயில் பாதை மற்றும் முதல் இரயிலும் ஆகும். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் இரயில்வே 1845 ல் உருவாக்கப்பட்டது.
1933 காலகட்டத்தில் கடும் வறட்சியும் பஞ்சமும் கோதாவரி மாவட்டங்களில் நிலவியது. அப்போதைய மாவட்ட அதிகாரி சர் ஹென்றி மவுண்ட் பிரித்தானிய அரசுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து பொறியாளர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் பகுதிகளைக் கள ஆய்வு செய்து மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர் 1846 டிசம்பர் 23 அன்று அணை கட்ட ஒப்புதல் கிடைத்தது. தாமதமின்றி, காட்டன் 1847 இல் அணை கட்டத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். பத்தாயிரம் தொழிலாளர்களும், ஐநூறு தச்சர்களும், ஐநூறு கொல்லர்களும் இவ்வணை கட்டுமானத்தில் ஈடுபட்டனர். இந்த அணை கட்டுமானத்திற்காக தற்காலிக இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களைப் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட இரயில்வே பாதை இந்தியாவின் இரண்டாவது பாதையாகும்.
பிரிட்டீஸ் அரசாங்கம் கிழக்கிந்திய நிறுவனத்தை இரயில்வே அமைப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பல தனியார் இரயில்வே அமைப்புகள் உருவாகின. 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர். ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேறு யாராவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு சென்றிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனச்சோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது . இது இந்தியாவின் மூன்றாவது இரயில் பாதை அமைப்பாகும். பிரித்தானிய அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது நீர்வழங்கல் கட்டுமானத்திற்கானக் கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.
கிரேட் இந்தியன் இரயில்வே நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ல் பாம்பேயின் போரிபண்டர் நிலையத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேவுக்குப் புறப்பட்டது. மூன்று நீராவி என்ஜின்கள் மூலம் இழுக்கப்பட்ட 14 வாகனங்களில் 400 பேர் பயணம் செய்தனர்.
சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி என்ஜின்கள் 14 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுத்தன. கிரேட் இந்தியன் தீபகற்ப இரயில்வே பயணிகள் பாதையை அமைத்து இயக்கியது. இந்த ரயிலை உருவாக்க 1,676 மிமீ (5 அடி 6 அங்குலம்) அகலப் பாதை பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1853 ஏப்ரல் 16 அன்று தொடங்கிய முதல் பயணிகள் இரயில் வரலாற்றிலும் மிக முக்கியமானதாக பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் இரயில்வே குறித்த பல பதிவுகள் இன்னும் பிரிட்டீஸ் அருங்காட்சியகத்தில் பேப்பர்களாக உள்ளது. இந்திய அரசு இரயில்வே அமைச்சகம் அதனை வெளிக்கொணர வேண்டும். வரலாற்றை அறிய வைக்க வேண்டும்.
Saturday, 12 April 2025
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -7 ஊரும் பேரும் நீரும்
Friday, 11 April 2025
ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -3
ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம்" 1.
Saturday, 5 April 2025
நல்லியம் பாளையம் கதை பேசுவோம்- 5
அம்மா கடையில் இருப்பார். கடைக்கு வரும் அருமைகாரர் பொடுசுங்க(குழந்தைகள்) எல்லாம் எங்க போச்சு என்று கேட்பார். கேட்டுவிட்டு பேப்பர் வந்துடுச்சா என்று விசாரிப்பார். நல்லியம்பாளையம் கிராமம் முழுமைக்கும் சேர்த்து கோயில் திடலில் ஒரு தினத்தந்தி நாளிதழ் இருக்கும்.
காலை 8 மணி அளவில் எங்கள் ஊரின் பெரிய மணியக்காரர் நடையாய் நடந்து கோயில் திடலுக்கு வந்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரில் வானொலி செய்திகளை நேரம் தவறாமல் கேட்டு எங்களுக்கு நேரத்திற்கு ஒருமுறை அதன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் உரிய பூச பொருட்களை எடுத்துக்கொண்டு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அவரோடு நானும் சென்று வழிபாடாற்றி வருவேன். கலைஞரின் அறியாத பல தகவல்களை அவர் மூலமாக எங்கள் ஊர் அறிந்து கொண்டது. ஒருமுறை கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது காலையில் தான் நாளிதழில் மூலம் ஊர் அறிந்து கொண்டது. இன்று போல் அன்று உடனடிச் செய்தி ஊடகங்கள் எதுவும் இல்லை. மாரியம்மன் கோயில் திடலில் ஊர் மக்கள் பலரும் கூடி நின்று பல மணி நேரங்களுக்கு அவரின் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பல தகவல்களை எங்களுக்கு அவர் பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரின் பெரியவர்களில் மிக உயர்ந்த படிப்பு படித்தவர் அவர் ஒருவரே.
.. என்னமோ போங்க யாரு எப்படி போனா என்ன நமக்கு ஊடு, காடு, ஆடு, மாடு இத விட்டா வேற என்ன இருக்குதுங்க என்று வள்ளியம்மாள் ஆத்தா பேசிக்கொண்டே செல்வார். கொங்கு கிராமங்களில் யாரையாவது அழைத்தால் “ஓவ்” சொல்லுங்க என்று பதில் முறை இருக்கும். தற்காலங்களில் இந்த முறை மாறிவிட்டது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஊர் முச்சூடும் எங்கு ஓடி திரும்பினாலும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு ஆத்தா நின்று என்னத்துக்குடா இந்த ஓட்டம் ஓடுறீங்க இரு உங்க அப்பன் ஆத்தா கிட்ட சொல்றேன் என்று கூறுவார். எங்களுக்கு காதில் எதுவும் விழாது. இப்படி ஊர் மூச்சுடூம் சுத்திட்டு திரிஞ்சீங்கனா மாடு மேய்க்கிறதுக்கு தான் லாக்கி என்ற சொலவடை எங்களை எதுவும் செய்யாது. இப்ப மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கோமுங்க என்று நாங்கள் கூற , அடி என்று ஒரு எட்டு எடுத்து வைத்து எங்களை செல்லமாக துரத்துவார். நாங்கள் ஓடி ஓடி சந்தில் ஒளிந்து திரிந்து விளையாடிக் கொண்டிருப்போம். எங்கள் ஊரின் கோயில் திண்ணையில் எப்படி கதை நிகழுமோ அதுபோல ஊர் கொத்துக்காரர் வீட்டு திண்ணையிலும் அவ்வப்போது கதைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சின்னாத்தா வீட்டுக்கு போனியே என்ன ஆச்சு என்று கேட்க அந்த கதையை ஏனுங்க கேக்குறீங்க என்று ஆடி காத்து கதை ஆரம்பித்து மார்கழி குளிர் வரை மக்கள் உரையாடி உவப்பாக இருப்பார்கள்.
பேசும் மக்கள் பேசிக் கொண்டிருக்க சாலையிலிருந்து (தோட்டத்திலிருந்து) பால் கறந்து பை நிறைய காய்களை எடுத்துக்கொண்டு வருபவர்களை பார்த்து வாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம் என்று அழைப்பார்கள். இப்பதான் காட்டு வேலை முடிஞ்சுது. அடுத்த ஊட்டு வேல இருக்கு. வெந்தண்ணில (சுடுநீரில்) தண்ணில தண்ணி வாத்தா தான் நல்லா இருக்குதுங்க. மேலுவலி நான் போய் கொஞ்ச நேரம் வெந்த தண்ணில தண்ணி வாத்துட்டு வாரனுங்க.
போய் தான் அடுப்பு மூட்டோனும் என்று கூறிக் கொண்டு சிலர் நடந்து சென்று விடுவார்கள். மாலையில் சீக்கடி (கொசுக்கடி) ஆரம்பிக்கும். வாய்க்கால்ல தண்ணி வுடப் போறானுங்க. தண்ணி வந்ததும் நடவு ஆரம்பிக்கனுமுங்க.
காட்டு வேலைக்கு போறவங்க எல்லாம் இன்னைக்கு வூட்டு வேலைக்கு போறதுனால காட்டு வேலைக்கு ஆளே இல்லாம போச்சு. என்னமோ போங்க…என்று ஒரு புலம்பல் குரல் கேட்க…சரி நடவு மட்டும் ஆள புடிங்க அதான் அறுக்கிறதுக்கு மிஷனு வந்துருச்சே என்று இன்னொரு தீர்வு கிடைக்கும்.
ஊரின் தெக்கு பக்கம் கோயில் திண்ணையிலும்
ஊர் மத்தியில் உள்ள பெருமாள் கோயில் வேப்பமரத்து திண்ணையிலும் ஊரின் வடக்குக் பக்கம் கொத்துக்காரர் வீட்டுத் திண்ணையிலும் கதைகள் கதைகளாய் எங்கள் மக்களால் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதையில் எங்கள் ஊரின் வாழ்வியலும் வலிகள் நிறைந்த சூழியலும் இருந்து கொண்டே இருக்கும்.
கதை பேசுவோம்.