ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள நல்லியம் பாளையம் அழகிய மண் மணம் மாறாத கொங்கு கிராமம். கிராமத்தில் எமது பொ.சங்கர் பால்யம் தொடங்கியது. நான் சிறுவனாக இருந்த போது கிராமம் கிராமமாகவே இருந்தது. ஊரின் இரு மருங்கிலும் வாய்க்கால் நீர் ஓடி வளமான பச்சை மரங்கள் அடர்ந்த ஊராகத் திகழ்ந்தது. ஊரின் மையப்பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்து ஊரின் அறிவிப்பு பகுதியாக இருக்கும். குளிர், கோடை என பருவ கால வித்தியாசமின்றி எமது இளம் பருவம் கடந்தது. கொங்கு மண் சார்ந்த எங்கள் ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. எங்கள் ஊரில் பெரும்பாலானவர்கள் நகைக்கடை வைத்திருப்பார்கள். வேளாண் தொழில் புரிவார்கள். "பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது" என்பது போல தென்னை மரங்கள் எங்கள் ஊரின் கோபுரங்கள் போல தோட்டங்கள் தோறும் அணி அழகு செய்தன.
எங்கள் ஊருக்கு நகைக்கடைக்காரர் ஊர் என்ற பட்டப்பெயர் உண்டு. கிராமிய மணம் மாறாத கொங்கு சொலவடைகள் எளிதாய் மக்கள் சொற்களில் நர்த்தனமிடும். "அரைக்காசுக்கு பரதேசம் போகாதடா" என்று எமது இளம் பருவத்தில் ஊர் கவுண்டர் சொன்ன சொல் இன்றும் நினைவில் உள்ளது."பொழச்சது நல்லியம் பாளையம்; வாழ்ந்தது நல்லியம்பாளையம்" என்னும் சொலவடை போல அந்த ஊரில் வாழ்ந்த பலரும் இன்று மேல் வருவாய் தேடி அருகிருக்கும் ஈரோடு நகரத்திற்கு சென்று விட்டனர். அதனால் கிராமம் தனது கிராமியத்தை சற்று இழந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஊர்ப் பெரியவர்கள் கோயில் திடலில் அமர்ந்து எத்தனை முறை எப்போது எங்கு சென்றாலும் அத்தனை முறையும் எங்கு செல்கிறாய் எதற்காகச் செல்கிறாய் என்று கேட்பார்கள். அதனால் இளம் பருவத்தில் நாங்கள் தப்பித் தவறி தவறுகள் செய்வதற்கு வாய்ப்பே இல்லாமல் அவர்கள் எங்களைக் காத்தார்கள். ஊரில் விஸ்வநாத கவுண்டர் என் மீது எப்போதும் பாசமாகவும் பரிவோடும் நடந்து கொள்வார். எங்களது விடுமுறை காலங்கள் எப்போதும் மருத நிலத்தின் கிணறுகளில் கொண்டாட்டமாய் இருக்கும். நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். கிரிக்கெட் விளையாடிவிட்டு உணவைத் துறந்து கிணறுகளில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவோம். மாலை இல்லம் செல்லும் போது கண்டிப்பாகத் திட்டு விழும். நல்லியம் பாளையம் கிராமத்திலிருந்து வடக்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால் பழையபாளையம் வரும். தெற்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால் ரங்கம்பாளையம் வரும். இந்த இரண்டு இடங்களையும் அடைந்தால் தான் முதன்மைச் சாலையை அடைய முடியும். அந்த வகையில் முதன்மைச் சாலையில் இருந்து உள்நோக்கி அழகிய கிராமமாக நல்லியம்பாளையம் திகழ்ந்தது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் சொல்லுக்கு ஏற்ப எமது கிராமத்தின் வேளாண் குடி மக்கள் ஒவ்வொரு பட்டத்தையும் உறுதி செய்து அதற்கு ஏற்ப மருத நில வயல்களில் நெல் கரும்பு சோளம் காய்கனிகள் ஆகியவற்றைப் பயிரிடுவர். கூத்தாடிக்குக் கெழக்க கண்ணு; கூலிக்காரனுக்கு மேக்க கண்ணு என்னும் சொலவடைச் சொல்லி வயல்களில் வேலை செய்யும் மக்களை வேலை வாங்குவார்கள். அவர்களுக்கான ஊதியத்தையும் முறையாகக் கொடுப்பார்கள். எங்கள் ஊருக்குச் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு நல்ல பெயர் உண்டு. நல்லியம் பாளையம் கிராமத்தின் அழகிய இடங்களில் ஒன்று மாரியம்மன் கோயிலுக்கு இறக்கத்தில் கீழே இருக்கும் பெரிய அரசமரம் அதன் அடியில் அழகிய விநாயகர் சிலை அதனை ஒட்டி சலசலவென்று ஓடும் வாய்க்கால். வாய்க்காலை ஒட்டி ஒரு அரசு தொடக்கப்பள்ளி.
எங்களது பள்ளிக் காலங்களில் எல்லா சனி ஞாயிறும் விடுமுறை தான். எல்லோரும் அரசுப் பள்ளிகளில் தான் கல்வி பயின்றோம். ஒரு சிலர் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில். ஆனால் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இன்றி ஒரு நாள் முழுவதும் கிரிக்கெட் கபடி போன்ற விளையாட்டுகளை மகிழ்வோடு விளையாடி இல்லத்தில் மகிழ்வோடு திட்டுவாங்குவோம்.
(மீண்டும் கதை பேசுவோம்)
No comments:
Post a Comment