தூத்த போட ஆரம்பிச்சிருச்சு…சீக்கிரம் சைக்கிள்ல போயிறலாம் .. இருடா ரயில் நகர் வேப்பமரத்துல நின்னுக்கலாம். கொஞ்ச நேரத்துல ரயில் வண்டி வந்துரும். வந்ததே வந்து புட்டோம். ரயில் வண்டியை பார்த்துபுட்டு போலாம் . மழை விட்டதும் சைக்கிள் ஏறி மிதிச்சுகிட்டு ரங்கம்பாளையம் ரயில் பாலத்தின் கீழ் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மேலே ஏறிச் சென்று ரயில் பாதையில் காசுகளை வைத்து விட்டு காந்தமாய் மாறுமா என்ற கற்பனையில் குக்கூ குக்கூ என்று வரும் ரயிலுக்காய் காத்து கிடப்போம். ஈரோட்டில இருந்து கிளம்பி வரும் ரயில் ரங்கம்பாளையத்தில் வேகம் எடுக்கும். நாங்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் சென்று தூரமாய் நின்று கொள்வோம். வைத்த காசு காந்தமாய் மாறும் என்ற நம்பிக்கையில் காத்து நிற்போம். காற்று சென்றது போல ரயில் சென்றுவிடும். நாங்கள் வைத்த காசு காணாமல் போய்விடும். ரயிலடியில் இருந்து இறங்கி சைக்கிள் எடுத்துக்கிட்டு நல்லியம்பாளையம் வாய்க்கால் பாலம் வந்து நிற்போம். மேடாய் தெரியும் மேட்டில் சைக்கிளில் எழாமல் சீட்டில் அமர்ந்தவாறு யார் கோவில் வரை செல்கிறார்கள் என்று போட்டி நடக்கும். பெரும்பாலும் எல்லோரும் வெற்றி பெற்று விடுவோம். கிட்டத்தட்ட 1/4 கிலோ மீட்டர் அளவுக்கு மேடு இருக்கும். மேடேறி சென்று கோயில் குழாயில் தாகம் தீர நீர் பருகுவோம். அவரவர் அவரவர் சாயங்காலம் வூட்டுக்குச் சென்று விடுவோம்.
வூட்டுக்குச் சென்றதும் அம்மா தெற்கு வூட்டுக்காரங்க வூட்டுக்குப் போய் பால் வாங்கிட்டு வாடா என்பார். பால் பாத்திரத்தை தூக்கிட்டு தெற்கால வூட்டுக்குப் போய் பால் வாங்கும் போது, அந்த வீட்டின் தொட்டிக்கட்டு அமைப்பை பிரமிப்போடு பார்த்து ரசிப்பேன். திண்ணையில் அமர்ந்து கொள்வேன். அன்று அவர்கள் வீட்டுக்கு பால் வாங்கச் சென்ற போது தூறல் மழையாகத் தொடங்கிவிட்டது. அவர்கள் வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டேன். மழை தாழ்வாரத்தில் பட்டு வீட்டின் நடுவில் கொட்டுவதை கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன். தெற்கு வீட்டு ஆத்தா இருடா மழை நின்னதும் போ என்று சொல்லி சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்தார். இன்றும் நினைவில் நிழலாடுகிறது. எங்கள் ஊரில் தொட்டி கட்டு வீடு அமைப்புடைய வீடுகள் ஐந்தாறு வீடுகள் இருக்கும். அதுபோல மாணிக்க சுந்தரம் அண்ணா வீடும் தொட்டிக்கட்டு அமைப்புடைய அழகிய வீடு. மணியக்காரர் வீடு அரும்புக்காரர் வீடு ஆகியோரின் தொட்டி கட்டு வீட்டுத் திண்ணையில் சிறுவயதில் அமர்ந்து விளையாடுவோம். ஊர்க் கொத்துக்காரர் வீட்டில் காமராஜர் படம் எல்லாம் மாட்டியிருப்பார்கள். வியந்து வியந்து பார்ப்போம்.
நல்லியம்பாளையம் கிராமத்தில் யாருக்கேனும் திருமணம் நடைபெற்றால் மங்கலன் என்று சொல்லக்கூடிய ஊர் நாவிதர் மங்கல வாழ்த்து பாடலை மண்டபத்தில் பாடும் மரபு இன்றும் தொடர்கிறது.
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
அகவல்பா
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் என்று தொடங்கி
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
எம்பெரு மானின் இணையடி வாழி!
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி!
நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
பாரத தேசம் பண்புடன் வாழி!
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
என்குரு கம்பர் இணையடி வாழி!
வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே! என்று திருமண மண்டபத்தில் இந்தப் பாடலைப் பாடி திருமண வைபவங்கள் நடைபெறும்.
தொட்டி கட்டு வீடும் ஊர் மக்கள் பண்பாடும் காலங்கள் மாறினாலும் ஊரின் அமைப்பு நிலை மாறினாலும் நினைவுகளில் இருந்து நீங்காது.
No comments:
Post a Comment