Friday, 11 April 2025

ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -3



நிலாச் சோறு 

நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பௌர்ணமி நாளில் கிராமத்துக்குள் இருக்கும் ஏதேனும் ஒருவர் வீட்டில் நிலாச்சோறு சாப்பிடும் வைபவம் நடக்கும்.

நாங்கள் பள்ளி விட்டு பொழுதோட வீடு வந்ததும் வூட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அம்மா செய்து தரும் சமையலுக்காகக் காத்திருப்போம்.

ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒவ்வொரு விதமான சமையல் மணக்க மணக்க கொண்டு வருவார்கள். 

மொளகாட்டி குழம்பு வைத்து , வணக்கிய சாதம், கொங்கு நாட்டுப் பருப்பு சாதம் , கல்லக்காய்(வேர்க்கடலை) குச்சிக் கிழங்கு (மரவள்ளிக் கிழங்கு) என ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் உணவு கொண்டு வருவோம். ஊரில் உள்ள ஓர் வீட்டில் அமர்ந்து அவரவர் உணவுகளை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து அருகில் இருப்பவர்கள் கொண்டு வந்த உணவுகளை நாம் பெற்று பகிர்ந்துண்டு பரிமாறி மகிழ்வோம். 

கிட்டத்தட்ட ஏழு மணிக்கு தொடங்கும் நிலாச்சோறு வைபவம் 9 மணி வரை நீளும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தூர்தர்ஷன் பொதிகை மட்டுமே ஒரே சேனல். ஆகையால் எங்கள் பொழுதுபோக்கு எல்லாம் நண்பர்களோடு கதை பேசுவது... ஊர் முழுக்க ஓடித்திரிந்து விளையாடுவது என்று கடந்தது. 

திடீரென்று ஒரு நாள் நிலாச்சோறு நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கடும் மழை பெய்யத் தொடங்கியது. எல்லோரும் மழையை ரசித்துக்கொண்டு உணவை ருசித்துக் கொண்டிருந்தோம். மறுநாள் சனிக்கிழமை என்பதால் பள்ளி பற்றிய கவலை இல்லை. 
மழை நின்றதும் அவரவர் இல்லம் திரும்பினோம். 
மறுநாள் காலையில் ஊருக்குள் இருக்கும் பெரியவர்கள் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். 
ஓர் ஒளவு(ஓர் உழவு) மழை பெஞ்சிருக்கும் போல... ஆமாம்மா என்று எங்கள் ஊரின் பெரிய கவுண்டர்கள் பேசுவார்கள். எங்கள் ஊரின் பள்ளத்தில் நீர் நிறைந்தோடும். 

நேத்து பேஞ்ச மழையில மாடு கட்டியிருந்த மொளக்குச்சியை மாடு இழுத்துட்டு போயிடுச்சு... ரங்கம்பாளையம் வரைக்கும் தேடுனேன்.. கப்பல் காட்டு பக்கத்துல நம்ம செவலை கண்ணு நின்னுட்டு இருந்துச்சு போய் ஓட்டியாந்தேன் என்று கோபாலின் தாத்தா விஸ்வநாத கவுண்டர் கூறுவார். 

அண்ணாங்கால் போட்டும் மாடு அவ்வளவு தூரம் போயிருச்சா என்று சின்ன மணியக்கார கவுண்டர் கேட்பார். ஆமா கொண்டாந்து தொண்டு பட்டில அடிச்சிட்டு இப்பதான் வர்றேன் என்று விசுவநாதக்கவுண்டர் கூறுவார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எப்போதாவது எங்கள் ஊர்ச் சாலையில் ஏதாவது ஒரு இருசக்கர வாகனம் வேகமாக செல்லும்.‌ வேகமாக செல்லும் அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி யாரப்பா நீ? எந்த ஊரு? இவ்வளவு வேகமா போற! நல்லியம்பாளையம் வந்தா மெதுவா போகணும்னு தெரியாதா என்று கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள். எப்படியும் ஒரு அரை மணி நேரம் அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். அவர் ஆளை விட்டால் போதும் என்று தப்பித்துச் செல்வார். அன்று எங்கள் ஊர் சேந்து கிணறு பக்கம் ஊருக்குப் புதியவர்கள் யாருமே வர முடியாது. ஊரின் நடுப்பகுதி அதுதான். அந்த கிணற்றில் எங்கள் ஊர் பெண்மணிகள் கயிறு கட்டி நீர் சேந்திக் கொண்டிருப்பார்கள். 
கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடி சென்றவர்கள் ஊருக்கு வரும்போது அந்தக் கிணற்றில் ஆசை தீர நீர் பருகி செல்வார்கள். நல்லியம்பாளையத்தின் சிறுவாணி அது. 
தலைக்கு மேல சும்மாடு வைத்து அதன் மேல் குடம் வைத்து மணிக்கணக்கில் நின்று கொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். பொழுது சாயப்போகுது பால் கறக்கோணும். நான் கிளம்புறேன்னுங்க என்று சொல்லி பொறவுக்கு என்ன சாப்பாடு ங்க என்று கேட்டு மீண்டும் கதை தொடங்கும்.. சும்மாடு மேல குடம் இருக்கும்.. கதை நிறைய இருக்கும். 
(மீண்டும் கதை பேசுவோம்).

No comments: