அம்மா கடையில் இருப்பார். கடைக்கு வரும் அருமைகாரர் பொடுசுங்க(குழந்தைகள்) எல்லாம் எங்க போச்சு என்று கேட்பார். கேட்டுவிட்டு பேப்பர் வந்துடுச்சா என்று விசாரிப்பார். நல்லியம்பாளையம் கிராமம் முழுமைக்கும் சேர்த்து கோயில் திடலில் ஒரு தினத்தந்தி நாளிதழ் இருக்கும்.
காலை 8 மணி அளவில் எங்கள் ஊரின் பெரிய மணியக்காரர் நடையாய் நடந்து கோயில் திடலுக்கு வந்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரில் வானொலி செய்திகளை நேரம் தவறாமல் கேட்டு எங்களுக்கு நேரத்திற்கு ஒருமுறை அதன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் உரிய பூச பொருட்களை எடுத்துக்கொண்டு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அவரோடு நானும் சென்று வழிபாடாற்றி வருவேன். கலைஞரின் அறியாத பல தகவல்களை அவர் மூலமாக எங்கள் ஊர் அறிந்து கொண்டது. ஒருமுறை கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது காலையில் தான் நாளிதழில் மூலம் ஊர் அறிந்து கொண்டது. இன்று போல் அன்று உடனடிச் செய்தி ஊடகங்கள் எதுவும் இல்லை. மாரியம்மன் கோயில் திடலில் ஊர் மக்கள் பலரும் கூடி நின்று பல மணி நேரங்களுக்கு அவரின் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பல தகவல்களை எங்களுக்கு அவர் பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரின் பெரியவர்களில் மிக உயர்ந்த படிப்பு படித்தவர் அவர் ஒருவரே.
.. என்னமோ போங்க யாரு எப்படி போனா என்ன நமக்கு ஊடு, காடு, ஆடு, மாடு இத விட்டா வேற என்ன இருக்குதுங்க என்று வள்ளியம்மாள் ஆத்தா பேசிக்கொண்டே செல்வார். கொங்கு கிராமங்களில் யாரையாவது அழைத்தால் “ஓவ்” சொல்லுங்க என்று பதில் முறை இருக்கும். தற்காலங்களில் இந்த முறை மாறிவிட்டது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஊர் முச்சூடும் எங்கு ஓடி திரும்பினாலும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு ஆத்தா நின்று என்னத்துக்குடா இந்த ஓட்டம் ஓடுறீங்க இரு உங்க அப்பன் ஆத்தா கிட்ட சொல்றேன் என்று கூறுவார். எங்களுக்கு காதில் எதுவும் விழாது. இப்படி ஊர் மூச்சுடூம் சுத்திட்டு திரிஞ்சீங்கனா மாடு மேய்க்கிறதுக்கு தான் லாக்கி என்ற சொலவடை எங்களை எதுவும் செய்யாது. இப்ப மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கோமுங்க என்று நாங்கள் கூற , அடி என்று ஒரு எட்டு எடுத்து வைத்து எங்களை செல்லமாக துரத்துவார். நாங்கள் ஓடி ஓடி சந்தில் ஒளிந்து திரிந்து விளையாடிக் கொண்டிருப்போம். எங்கள் ஊரின் கோயில் திண்ணையில் எப்படி கதை நிகழுமோ அதுபோல ஊர் கொத்துக்காரர் வீட்டு திண்ணையிலும் அவ்வப்போது கதைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சின்னாத்தா வீட்டுக்கு போனியே என்ன ஆச்சு என்று கேட்க அந்த கதையை ஏனுங்க கேக்குறீங்க என்று ஆடி காத்து கதை ஆரம்பித்து மார்கழி குளிர் வரை மக்கள் உரையாடி உவப்பாக இருப்பார்கள்.
பேசும் மக்கள் பேசிக் கொண்டிருக்க சாலையிலிருந்து (தோட்டத்திலிருந்து) பால் கறந்து பை நிறைய காய்களை எடுத்துக்கொண்டு வருபவர்களை பார்த்து வாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம் என்று அழைப்பார்கள். இப்பதான் காட்டு வேலை முடிஞ்சுது. அடுத்த ஊட்டு வேல இருக்கு. வெந்தண்ணில (சுடுநீரில்) தண்ணில தண்ணி வாத்தா தான் நல்லா இருக்குதுங்க. மேலுவலி நான் போய் கொஞ்ச நேரம் வெந்த தண்ணில தண்ணி வாத்துட்டு வாரனுங்க.
போய் தான் அடுப்பு மூட்டோனும் என்று கூறிக் கொண்டு சிலர் நடந்து சென்று விடுவார்கள். மாலையில் சீக்கடி (கொசுக்கடி) ஆரம்பிக்கும். வாய்க்கால்ல தண்ணி வுடப் போறானுங்க. தண்ணி வந்ததும் நடவு ஆரம்பிக்கனுமுங்க.
காட்டு வேலைக்கு போறவங்க எல்லாம் இன்னைக்கு வூட்டு வேலைக்கு போறதுனால காட்டு வேலைக்கு ஆளே இல்லாம போச்சு. என்னமோ போங்க…என்று ஒரு புலம்பல் குரல் கேட்க…சரி நடவு மட்டும் ஆள புடிங்க அதான் அறுக்கிறதுக்கு மிஷனு வந்துருச்சே என்று இன்னொரு தீர்வு கிடைக்கும்.
ஊரின் தெக்கு பக்கம் கோயில் திண்ணையிலும்
ஊர் மத்தியில் உள்ள பெருமாள் கோயில் வேப்பமரத்து திண்ணையிலும் ஊரின் வடக்குக் பக்கம் கொத்துக்காரர் வீட்டுத் திண்ணையிலும் கதைகள் கதைகளாய் எங்கள் மக்களால் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதையில் எங்கள் ஊரின் வாழ்வியலும் வலிகள் நிறைந்த சூழியலும் இருந்து கொண்டே இருக்கும்.
கதை பேசுவோம்.
No comments:
Post a Comment