Monday, 6 July 2026

அறிய வேண்டிய வரலாறு - தஸ்தாவெஸ்கி


                            



உலகின் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு இன்று கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கி என்னும் ஆளுமை உருவாக அன்னா என்ற கதாபாத்திரம் அடைந்த அவமானங்களே காரணம் என்றால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். 

         நாடு, மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்து பலராலும் வாசிக்கப்படும் கரம்சோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டணையும் அசடன் எனப் பல   புகழ் பெற்ற நூல்களை எழுதிய தஸ்தாவெஸ்கி வாழ்வுஅன்னாவுக்கு முன் - அன்னாவுக்குப் பின் எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.

       சில செயல்கள்  காரணமாக  மிகப்பெரிய கடனில் சிக்கி நீதிமன்ற வழக்கிற்கு ஆளாகிறார் தஸ்தாவெஸ்கி.  நீதிமன்றத்தில் கடும் தண்டனைக்கு ஆளாக நேர்ந்த போது நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை அளித்தது. அந்தத்  தீர்ப்பு என்னவெனில் மூன்று மாதத்திற்குள் ஒரு நாவலை எழுதி அதன் மூலம் கடனை அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட தஸ்தாவெஸ்கி , எனக்கு என் எழுத்துகளைத் தட்டச்சு செய்ய ஒரு உதவியாளர் வேண்டும் என்று மட்டும் கேட்டார்.

        அதன்படி அன்னா என்ற பெண்ணை தஸ்தாவெஸ்கிக்கு உதவியாளராக நீதிமன்றம் நியமித்தது. ஆரம்பத்தில் அந்தப் பணியை விருப்பமில்லாமல் செய்த  அன்னா , சில நாட்களில் தஸ்தாவெஸ்கி எழுத்துகளின் மீது பெரும் காதல் கொண்டவராக மாறினார். அவரின் மீது அன்பு செலுத்தி அவரை நேசிக்கலானார்.

             தஸ்தாவெஸ்கியின் கடன்களை அன்னா தன் உடமைகளை விற்று அடைத்தார். கடனில் சிக்கியிருந்த தஸ்தாவெஸ்கியின் இல்லத்திற்குக் கடனாளர்கள் வந்து கடனைக் கேட்கும் போதெல்லாம் அன்னாவே  எதிர் நின்று பதில் கூறினார் .

வீட்டின் இயலாமைச்  சூழல் தஸ்தாவெஸ்கிக்குத் தெரியாமல் அவரை நன்குப் பார்த்துக் கொண்டார். தஸ்தாவெஸ்கி எழுதும் போது அவருக்கு அருகில் எப்போதும் ஒரு கெட்டிலில் தேநீர் இருக்குமாறும் , அந்த அறையை கடன்காரர்கள் யாரும் நெருங்காமலும் பாரத்துக்கொண்டார்.  

வீட்டின் உள்ளேயே அமர்ந்து இரவு பகல் பாராமல் எழுதிக் கொண்டே இருந்த தஸ்தாவெஸ்கி, இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே எழுதி வந்தார். பலரின் அவமானச் சொற்களை எதிர்கொண்டு பதில் அளித்து அந்த அவமானங்கள் எதுவும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார். 

தஸ்தாவெஸ்கி  எழுதியதை அன்னா உரிய முறையில் தட்டச்சு செய்து நூல் வடிவத்திற்கு வர பெரும் முயற்சிகள் பலவற்றை எடுத்தார். எழுபத்தி ஏழு நாட்களில் நூல் பணியை நிறைவு செய்த தஸ்தாவெஸ்கி வெளியே வந்து பார்த்த போது , கேட்ட போது அன்னா சந்தித்த அவமானங்கள் , கடன்கள் எல்லாவற்றையும் கேட்டு அந்த பெரும் எழுத்து மேதை கலங்கி நின்றது. அன்னா அடைந்த அவமானங்களின் ஊக்கம்தான் குற்றமும் தண்டனையும் என்ற நூல்.  குற்றமும் தண்டனையும்  வெளிவந்து பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டு அவர்களின் ஏழ்மையைப் போக்கியது.



 இரஷ்ய வரலாற்றில்  பல வருடங்கள் ஆனாலும் கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துக்குப் பின்னால் அவரது மனைவி   அன்னா  அடைந்த அவமானங்களே ஊக்கமாய் உறுதுணையாய் இருந்தது.

   அன்னா மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் அவமான உலகில் நான்  சிறையிலோ  அல்லது  தற்கொலை செய்தோ இறந்திருப்பேன் என்று கூறிய தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கை அன்னா அடைந்த அவமானங்களின் பரிசு என்பதை அவரின் வரலாறு பதிவு செய்துள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்நாளில் கரமசோவ் சகோதரர்கள், சூதாடி, வெண்ணிற உறவுகள், உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி கதைகள், அப்பாவியின் கனவு   நூல்களை அவசியம் வாசித்து விடுங்கள். குற்றமும் தண்டனையும் நூல் என்னை வாசிப்பு அனுபவத்தில் திளைக்கச் செய்தது.  

 


Saturday, 4 July 2026

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 11. அரச மரம் ,ஆலமரம் , வேப்ப மரம்

அரசமரம்


     நல்லியம் பாளையம் கிராமம் ஐந்திணை அமைப்பில் மருத நிலம் என்னும் தகவமைப்பில் அமைந்துள்ளது. ஊரின் தெற்குப் பக்கத்தில் வாய்க்காலை ஒட்டி பெரிய அரசமரம் ஒன்று அமைந்திருக்கும்.
எங்கள் ஊர் பெரியவர்களை நான் கேட்டிருக்கிறேன். இந்த மரம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது என்று. 
     நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போதே இந்த மரம் இது போலவே தான் உள்ளது என்று கூறுவார்கள். 

வாய்க்காலுக்கு தெற்கு பக்கம் உள்ள காட்டில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய வெயிலில் நாங்கள் வாய்க்காலைத் தாண்டி வரும்போது எங்களை அறியாமல் நாங்கள் அண்ணாந்து பார்க்கும் அரசமரம் எங்களின் களைப்பைப் போக்கும் போதி மரமாக இருக்கும்.
 அதன் திண்ணையில் நாங்கள் அமர்ந்து கொள்வோம். காற்று சித்திரையிலும் சிலு சிலு என்று எங்கள் மீது வீசும். மகிழ்ந்து அரச மரத்தடியில் அமர்ந்திருப்போம்.

 எங்கள் அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை வீற்றிருக்கும். போகும்போதும் வரும்போதும் நாங்கள் எங்களை அறியாமலேயே வணங்கி விட்டு செல்வோம். 

அரச மரத்தை ஒட்டி ஓர் அறை இருக்கும். அந்த அறையில் ஒற்றுமை குழு நண்பர்கள் நற்பணி மன்றம் என்று ஒரு போர்டை பார்த்திருப்போம். 
ஆடு மாடுகளை மேய்த்து விட்டு வருவோர், இரங்கம்பாளையம் சென்று வருவோர், நல்லியம்பாளையம் வழியில் வருவோர் என அனைவரும் அந்த மரத்தடியில் நின்று சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வார்கள். 

அரச மரத்தை எப்போது கடந்து சென்றாலும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரின் முன்னோர்கள் பார்த்து அரசமரம் இன்று நாங்கள் பார்க்கும் அரசமரம், நாளை அடுத்த தலைமுறை பார்க்கும் அரசமரமாக எப்போதும் கம்பீரமாக உயரமாக வீற்றிருக்கும் அரசமரம் எங்கள் ஊரின் போதிமரம் தான். 

ஆலமரம்

       அரசமரம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கு நோக்கி சென்றால் வாய்க்கால் சற்று வளைவாகச் செல்லும் ஓர் இடம் வரும். அந்த இடத்தில் அரச மரத்திற்கு நிகராக எங்கள் ஊரின் ஆலமரம் வீற்றிருக்கும்.

 கோடையானாலும் குளிரானாலும் நாங்கள் இல்லத்திலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆலமரத்தின் அடியில் வளைவில் சலசலவென்று ஓடும் வாய்க்கால் நீரில் குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவோம்.

 ஆலமரத்தின் விழுதுகள் வாய்க்காலை ஒட்டி தவழ்ந்திருக்கும். ஆலமரத்தின் விழுதுகள் நிலத்தை நோக்கி வந்து அதன் தூண்களாய் வளர்ந்திருக்கும்.
 சிறுவயதில் விவரம் புரியாமல் எப்படி மரத்தின் மேலிருந்து மண்ணுக்குள் விழுது செல்கிறது என்று செந்தில் கவுண்டமணி காமெடி போல ஆராய்வோம். பக்கத்து தோட்டத்தில் பப்பாளி பழம் பறித்து வந்து ஆல மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

 இப்போது போல எங்களுக்கு அன்று கைக்கடிகாரம் எதுவும் இல்லை. ஆல மர நிழலில் கோடை வெயிலில் குதூகலமாய் வளைந்து நெளிந்து ஓடும் வாய்க்காலில் குளித்து குளித்து மகிழ்ந்தோம்.

 ஆலமரத்தில் சிறுசிறு பழங்கள் இருப்பதால் அந்த மரத்தில் எப்போதும் பறவைக் கூட்டங்கள் உற்சாகமாய் கத்திக் கொண்டே இருக்கும். வாய்க்காலில் எங்கள் சத்தம் , மரத்தில் பறவைகளின் சத்தம் என எப்போதும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த இடத்தை சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணுவேன். ஏனோ செல்ல இயல்வதில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது ஆலமர வாய்க்காலுக்கு எனது மகனையும் அழைத்துச் செல்ல வேண்டும். 
வேப்ப மரம் 
            எங்கள் ஊரின் நடுநாயகமாக ஊரின் மத்தியில் ஒரு வேப்பமரம் இருக்கும். 

அந்த வேப்ப மரத்தின் அடியில் பெருமாள் கோயில். 
மரத்தின் அடியில் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டில் நாங்கள் நெடுங்காலம் குடியிருந்தோம். குளிர்ச்சியான வேப்ப மரத்தின் காற்று எப்போதும் எங்களை புத்துணர்வாக வைத்திருக்கும். 

 ஊரில் உள்ள வயதான தாத்தா பாட்டிகள் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் திண்ணை எப்போதும் நிழலாக இருக்கும். எங்கள் ஊரில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. ஆனால் எங்கள் ஊர் மக்கள் மாரியம்மனையும் விநாயகரையும் பெருமாள் தெய்வத்தையும் வணங்கி மகிழ்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் அன்று அந்த பெருமாள் கோயில் திருவிழா கோலம் கொண்டிருக்கும். பிரசாதம் தருவார்கள். உண்டு மகிழ்ந்து ஓடி விளையாடுவோம். 
 
நல்லியம்பாளையம் கிராமத்தின் அரச மரம் ஆலமரம் வேப்பமரம் மூன்றும் எப்போதும் நீங்காத நினைவுகளை எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் வைத்திருக்கிறது. காலங்கள் பல மாறினாலும் இன்னும் சில அரச மரங்கள் ஊருக்குள் நடப்பட வேண்டும். 
ஏனெனில் ஊரின் பண்பாட்டை மரங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் என என் ஊரின் முன்னோர்கள் கூறிய சொற்கள் இன்றும் நினைவில் வந்து செல்கிறது. 

எங்கள் பால்ய காலம் மரங்களைச் சுற்றி வாய்க்காலைச் சுற்றி கிணறுகளைச் சுற்றி காடு மேடுகளைச் சுற்றி வயல் வரப்புகளைச் சுற்றி வலம் வந்த நினைவுகள் என்றும் நீங்கா நினைவுகள்.

Thursday, 2 July 2026

என் ஊரின் கங்கை- நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -13

மலையின் உச்சியில் இருந்து அருவியாக பாய்ந்து ஆர்ப்பரித்து அமைதியான ஆறாக பரவி பவானி நதி வந்து, அங்கிருந்து பவானி அணை சேர்ந்து பெரு வாய்க்காலில் பயணித்து என் ஊரை தொட்டு பாயும் நதியை எங்கள் ஊரில் வாய்க்கால் என்று அழைப்பார்கள். பள்ளம் என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். ஆண்டின் ஏழு மாதங்களில் வற்றாத நீரோடையாக பாயும்.
       இரட்டபாளி வலசை தாண்டி சலசலவென சலசலவென பாய்ந்து பரவசத்தோடு ஓடி வரும் என் ஊரின் கங்கையை ஊரின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் அரச மர விநாயகர் சன்னதி வரவேற்கும்.

       இந்தப் பெரும்பள்ளத்தின் கரையில் பல படிக்கப்படாத எழுதப்படாத இதிகாசங்கள் நிகழ்ந்துள்ளன. அரச மரத்தில் இருந்து சற்று கீழே இறங்கி பாலத்தில் நின்று கேட்டால் சலசலவென்று ஓடும் நீரின் ஓசை எங்கள் ஊரின் இசை. 
      புரட்டாசி ஐப்பசி காலங்களில் எங்கள் நல்லியம் பாளையம் ஊரின் கங்கையில் பாலத்தைத் தொட்டு செந்நிறமாய் பாய்ந்து ஓடும் நீரை பார்ப்பதற்கென்று நாங்கள் பாலத்தில் நின்று கொண்டிருப்போம். 
         பாலத்தின் மேற்குப் பக்கத்தில் ஏதேனும் பொருளை நீரில் போட்டுவிட்டு ஓடி வந்து பாலத்தின் கிழக்குப் புறத்தில் நின்று பார்ப்போம். 

      பல யுகங்களாய் ஓடிய நீர் பாறைகளில் பட்டு பட்டு சில பாறைகளை சிற்பமாகவும் மாற்றியுள்ளது. கால் நனைத்து முகம் நனைத்து காது மடல்களில் நீர் பட்டு நாங்கள் கோடை கால வெப்பத்தை இந்த வாய்க்காலில் தணித்திருக்கிறோம். 

      ஷாப் கார கவுண்டர் தோட்டம் செல்லும் பாதையில் ஓடும் வாய்க்காலில் சிறிது ஆழம் இருக்கும். நாங்கள் குதித்து மகிழ குளித்து மகிழ ஆர்வமும் இருக்கும். 
       மார்கழி மாதங்களில் எங்கள் ஊரின் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் பூச்சாட்டு நேரங்களில் பெரும்பாலும் நாங்கள் இரவில் நெடுநேரம் விழித்திருப்போம். பொடிநடையாய் ஊரின் மேலே இருந்து கீழே இறங்கி வழிந்து ஓடும் வாய்க்கால் நீரைக் கண்டு ரசிப்போம். இரவு நேரத்தில் பெளர்ணமி நிலவின் ஒளியில் வாய்க்கால் வண்ண வண்ண நினைவுகளை எங்களுக்கு வட்டமிட்டு காட்டும். 
     நல்லியம் பாளையம் எல்லையைத் தாண்டும் பள்ளம் அருகே எங்கள் ஊரின் இடுகாடு இருக்கும். அதற்குப் பின்னே உள்ள பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் செல்லத் தயங்குவோம். பயம் ஒரு காரணம். புதர்கள் மறு காரணம். இன்று அந்தப் பகுதியை சீரமைத்து பாலம் கட்டி சாலை அமைத்து விட்டார்கள். 
     நல்லியம்பாளையம் கிராமத்தின் வளத்தை வளப்படுத்தும் எங்கள் ஊரின் பள்ளம் எங்களுக்கு யமுனை நதி.
     நல்லியம்பாளையம் கிராமத்தில் வடக்குப் புறத்தில் பாயும் ஓடையும் தெற்குப் புறத்தில் பாயும் ஓடையும் ஓரிடத்தில் சங்கமிக்கும் கூடுதுறையும் எங்கள் ஊரின் தோட்டங்களில் உள்ளது. 
      எங்கள் இளம் பிராயத்தில் நானும் நண்பர்களும் நடந்து நடந்து வாய்க்கால் கரையோரத்திலேயே அணைக்கட்டு வரை சென்று பார்த்து வந்து வீட்டில் திட்டு வாங்கியுள்ளோம். 
எங்கள் ஊரில் பள்ளத்தில் சில வருடங்களில் பங்குனி மாதத்திலும் பளிங்கு நீராய் ஓடும் நீரை அள்ளி அள்ளி முகத்தில் தெளித்து உற்சாகம் கொள்வோம். சமீபத்தில் ஊருக்குச் சென்று இருந்த போது பாய்ந்து ஓடிய வாய்க்காலை நின்று பார்க்க மனம் கூசியது. ஊரைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகி விட்டமையால் என் ஊரின் கங்கையும் அதன் இயற்கை தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. வாய்க்காலை ஒட்டி சிமெண்ட் கரைகள் ஏற்படுத்தி விட்டாலும் நாங்கள் சிறுவயதில் பார்த்த வாய்க்காலே இன்னும் எங்களுக்குள் ஊர்வலமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. 
      பவானியில் இருந்து பவனி வரும் எங்கள் ஊரின் வாய்க்கால் நீர் பல துன்பங்களை மறைக்கச் செய்துள்ளது. சில மாதங்களில் காய்ந்திருக்கும் வாய்க்காலில் முதல் நீர் வரும்போது கால்நனைத்து கை நனைத்து உடல் நனைத்து உள்ளம் நனைத்து குளிப்போம். மீண்டும் ஒரு முறை நனைய வேண்டும். நல்லியம்பாளையத்தின் கங்கையில்…காவிரியில்…தாமிரபரணியில்…யமுனையில்…

நனைதல் தானே நதிக்கு அழகு. நல்லியம் பாளையம் நதியில் நனைவோம்.