நல்லியம்பாளையத்தில் இரண்டு மைதானங்கள் உண்டு. இரண்டு கிரிக்கெட் அணிகள் உண்டு. கோவிலுக்கு கீழே உள்ள நாச்சிமுத்துக் கவுண்டர் தோட்டம் கிரிக்கெட் மைதானத்திற்குரிய அமைப்புடன் இருக்கும். அதிகாலை அந்திமாலை என எந்த வேளையிலும் இந்த மைதானத்தில் நாங்கள் குழுமி இருப்போம்.
ஒறமொறைக்கு (உறவினர்) ஊருக்கு வருபவர்கள் உறவினர் இல்லம் சென்று பார்த்துவிட்டு வீடு தொரப்புக் குச்சி வைத்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் கோவில் அருகே வருவார்கள். கீழே காட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை அழைத்து ஒரு குறிப்பிட்ட பெயரைச் சொல்லி எங்கே அவங்க என்று கேட் பார்கள். அவங்க சாலையில் (தோட்டத்தில்) இருப்பாங்க ங்க என்று நாங்கள் கூறுவோம். பொறகு பொடி நடையா நடந்து அவங்க தோட்டம் சென்று சந்திப்பார்கள்.
நாங்கள் உச்சி வெயில் வரும் வரை விளையாடிவிட்டு கிரிக்கெட் பந்துகளை அங்கிருக்கும் பாறை முகட்டில் ஒளித்து வைத்துவிட்டு சூரம்பட்டியார் தோட்டத்திற்கு தண்ணி வாக்க (குளிக்க) செல்வோம். பொழுது சாய்ரவரை கிணத்திலேயே குளித்துக் கொண்டிருக்கும். சூரம்பட்டியார் தோட்டத்தில் வேலையால் பாசனத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். மோட்டார் ஓட ஓட கிணற்றில் நீர் குறைவதால் நாங்களே மேலே சென்று மோட்டாரை அணைச்சுடுவோம். மோட்டார் ரூம் மேல ஏறி கிட்டத்தட்ட 60 அடி உயரத்திலிருந்து கிணற்றில் குதிப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோட்டத்துக்கு கெணத்துல(கிணறு) குளிப்போம். எங்கள் ஊரின் வேட்டுவங் காட்டுத் தோட்டத்தில் நீர் எப்போதும் மேலேயே இருக்கும் (இப்போதும் கூட). தோட்டத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை பறிச்சு கூறு போட்டு பிரிச்சு கெணத்து மேட்டுல ஒக்காந்து சாப்பிடுவோம். கிணற்றுக் குளியல் முடிந்து வூட்டுக்குச் செல்ல எல்லார் வீடுகளிலும் வசை சொற்கள் வரிசையாய் விழும். விடியால விளையாட போன பொழுது சாயுறப்போ வூட்டுக்கு வர்ற என்று எங்கள் பெற்றோர்கள் திட்டித் தீர்ப்பார்கள். மாலை ஆறு மணி அளவில் கோயில் முகப்பு வந்து நின்று கொண்டிருப்போம். கோயில் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஊரில் ஒரு சிலரை கண்டால் நாங்கள் பயந்து நடுவோம். கார்த்தியின் அப்பா அமராவதி அண்ணன் எங்களை பார்த்தால் கூப்பிட்டு பேசுவார் ஆனால் அதுவே எங்களை திட்டுவது போல பயந்து நடுங்குவோம். கேசவ கவுண்டர் நாங்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்டு என்ன பழமை பேசிட்டு இருக்கீங்க வூட்டுக்கு போங்கடா என்று குரல் கொடுப்பார். சரிங்க என்று நாங்களும் குரல் கொடுத்து சுத்தி சுத்தி பெருமாள் கோயில் மூக்கு சென்று அவர் செல்லும் வரை நின்று விட்டு மீண்டும் கோவில் திண்ணைக்கு வந்து விடுவோம். சுமார் 7 மணி அளவில் எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் இரவு பூஜை நடக்கும். ஊர்ப் பூசாரி பரபரப்பாக பூஜைகள் செய்வார். ஊர்க்காரர்கள் கோவிலுக்கு வந்து விட்டால் பூஜை சற்று நேரம் நீளும். கோயில் பூஜை முடிந்து திருநீறு கொடுத்துவிட்டு வாக்கு கேட்கணும் என்று ஒவ்வொருவராய் சொல்வார்கள். பூசாரி அம்மன் மடியில் இருந்து சிவப்பு வெள்ளை மடித்த காகிதங்களை பொட்டலாமாய் எடுத்து வந்து குலுக்கி போடுவார். சிவப்பு வந்திருக்குங்க... வேண்டியது நடக்கும்ங்க என்று பூசாரி சொல்வார். சரி இன்னொருக்கா போடு என்று ஆத்தா சொல்லும். கிட்டத்தட்ட மூன்று நான்கு குறி வாக்குகளை கேட்டு சரி போதும் என்பார். ஒவ்வொருவராய் கோயிலில் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கும்போது டக் டக் டக் டக் டக் என்று குதிரையில் சாப்காரர் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல வருவார். கோயிலில் கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு நின்று என்ன செஞ்சிட்டு இருக்கீங்க. பூச பண்றது யாரு என்று உரக்க கேட்பார். கிட்டத்தட்ட அவர் எங்கள் ஊரின் நாத்திகர். ஏ பூசாரி எல்லா பொட்டலத்திலயும் சிவப்பு வச்சிருக்கியா என்று கேட்பார். இல்லைங்க என்று அவர் கூற சிறிய சிரிப்பலை அங்கு எழும். வாக்குக் கேட்கும் சம்பிரதாயம் முடிந்து எல்லோரும் கோயிலுக்கு உள்ளேயே திண்ணையில் அமர்ந்து விடியக்கால தொடங்கி பொழுது சாயற வரை நடந்த கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் கதை பேசிக் கொண்டிருக்கும்போது ஈரோடு ரயில் பாதையில் ரயில் செல்லும் போது ஹார்னடிக்கும் சத்தம் எங்கள் ஊர் வரை கேட்கும். தொட்டிபாளையத்தில் ரயில் நிற்குதாட்டுக்கு என்று சொல்லிவிட்டு மீண்டும் கதை பேசுவார்கள்.
கதை தொடரும்.
No comments:
Post a Comment