Tuesday, 31 March 2026

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் - நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டு விழா

 


நல்லியம் பாளையம் கிராமத்தில் இரண்டு திருவிழாக்கள் வகைப்படுத்தப்பட்டு அதன்படி நடந்து வந்தது. முதலில் ஊர் முன்னோர்களால் வகைப்படுத்தப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா. இந்தத் திருவிழாவை பொங்கல் , நோம்பி என்று வட்டார வழக்குச் சொற்களால் அழைப்போம்.

          இரண்டாவது  நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டு விழா . நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டுவிழாவும் கிட்டத்தட்ட திருவிழா போலவே ஊரில் நடக்கும்.

          ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வில்  பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.

ஊரின் தெற்குப் பக்கம் நீரோடும் பாலத்திலிருந்து சைக்கிள் போட்டி தொடங்கும். பலரும் சைக்கிள்களை வரிசையாக வைத்துக் கொண்டு தயாராக நிற்பர்.

          நல்லியம் பாளையத்தில் தொடங்கும் சைக்கிள் போட்டி இரயில் நகர் வழியாக , ஜீவா நகர் வழியாக , இரட்டப்பாளி வலசு வழியாக பல தோட்டங் காடுகளைத் தாண்டி மீண்டும் நல்லியம்பாளையம் பாலத்தின் அருகேயே வரும். நான் பார்த்த சைக்கிள் போட்டிகளில் ஷாப்கார கவுண்டர் மகன் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலாவதாக வந்துள்ளார்.

          நீரோடும் வாய்க்கால் ஓரத்தில் நாங்கள் நின்று கொள்ள, விசில் ஊதியதும் தொடங்கும் போட்டியில் ஊரின் இளவட்டங்கள் பலரும் பாய்ந்து செல்ல , மேடுகளையும் காடுகளையும் கடக்க கடக்க யார் முதலில் வருவாங்க என்று அறிய ஆவலாக நின்று கொண்டிருப்போம்.

          பெரும் பாய்ச்சலென வீர் சத்தத்துடன் சைக்கிள்கள் சர் சர் என வர அதில் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலில் வருவார்.

          அதன்பிறகு கோயில் முன்பு பானை உடைத்தல் போட்டி நடக்கத் தொடங்கும். கண்களைக் கட்டிக் கொண்டு பானையை உடைக்க ஊரின் இளைஞர்கள் தயாராக இருக்க போட்டி தொடங்கும். மணி நேரங்கள் கடந்தாலும் நேரம் போவதே தெரியாமல் நடக்கும் போட்டியை எல்லோரும் இரசித்துக் கொண்டே இருப்பாங்க.

          காலை தொடங்கி மாலை வரை நடக்கும் போட்டிகள் முடிந்து எல்லோரும் திருவிழா உற்சாகத்தில் இருப்போம்.

          அன்று இரவு 8 மணிக்கு மேல் கோயில் முன்பு பெரிய திரை கட்டி அதில் திரைப்படம் திரையிடுவார்கள். அன்றைய காலத்தில் நாங்கள் திரையரங்கு செல்வதற்கெல்லாம் பெரிய வாய்ப்புகள் அமையாது. அந்தக் குறையைப் போக்க பெரிய திரை கட்டி தியேட்டர் அனுபவத்தை நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருப்பார்கள்.

          ஒவ்வொரு வருடமும் ஒரு படம். நாட்டாமை, எஜமான். சூர்யவம்சம் போன்ற படங்கள் திரையிடுவார்கள். சில வருடங்கள் மிகப் பழைய திரைப்படங்களைத் திரையிட நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்திருப்போம்.

          நல்லியம் பாளையம் மாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக  ஓட்டுக் கட்டிடமாக இருக்க , பின்னர் ஊர்ப் பெரியவங்க ஒன்று சேர்ந்து கோயிலை அழகான வடிவில் மாற்றி பெரிய கோபுரங்கள் கட்டி குடமுழுக்கு நடத்தி பின்னர் ஊரின் அழகே எங்கள் கோயில் தான் என்பது போல மாற்றி அமைத்தார்கள். அவ்வாறு கோயில் பணிகளில் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்களைப் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

          ஆண்டு விழா முடிந்து அடுத்த நாள் விடுமுறை எனில் வெயிலோடு ஓடி , அடி பைப்பில் நீர் குடித்து , தோட்டத்திலோ , யாராச்சும் வீட்டிலோ அவங்ககிட்ட கேட்டு  பெரிய குச்சி வைத்து பப்பாளி பறித்து அமராவதி அண்ணன் மகன் கார்த்திக் ,கோபால் , நான் இன்னும் பிற நண்பர்கள்  கூட்டாக அமர்ந்து சாப்பிட்டு கிணற்றில் நீராடி நாட்கள் விளையாடிவோம்.

          என் நினைவில் எங்கள் ஊருக்கு ஒருமுறை கூட காவலர்கள் வந்ததாக நினைவில் இல்லை. ஊர்ப் பெரியவங்க எங்களின் ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். தப்பித் தவறி கூட தவறுகள் செய்யாத ஊர்க் கட்டுப்பாட்டில் நாங்கள் வளர்ந்தோம்.

          எங்கள் ஊர் நல்லியம் பாளையம் என்பது எங்களின் பெருமைகளில் ஒன்று.

Tuesday, 17 March 2026

கதை சொல்லிகளின் காலம் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -22

 

                                        


வேச காலத்தில அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடில. ஒரே வேக்காடா இருக்கு…சீக்கடி வேற  … இந்தச் சொற்தொடர்கள் எங்கள் நல்லியம் பாளையம் கிராமத்தில் பங்குனியில் கேட்கத் தொடங்கி விடும். 

எட்டித் தொடும் அளவில் கிணறுகளில் நீர் இருந்த காலம் மாறி எட்டிப் பார்க்கும் ஆழம் வரை நீரின் உயரம் பங்குனியில் கீழே சென்று விடும். 

பங்குனில ஒரு ஒலவு மழை கூட இருக்காது. இட்டேறில நடக்கறப்ப வேச காத்து மூஞ்சிலயே வீசும். பண்டம் பாடிலா மேயாம மர நிழலில் படுத்துக்கொள்ளும். 

25 வருசங்களுக்கு முன்பு நல்லியம்பாளையம் கிராமத்தில் இருந்து இரட்டபாளிவலசு செல்லும் பாதை மரங்கள் அடர்ந்த சிறு பாதையாக இருக்கும். மாட்டுவண்டிப்பாதையாக மட்டுமே இருந்த இந்தப்பாதை இன்று சாலை வசதியோடு வாகனங்கள் செல்லும் பாதையாக மாறிவிட்டது. அந்தப்பாதையில் தொட்டியங்காடு, ஷாப்காரர் காடு தோட்டங்கள் இருக்கும். 

யாராச்சும் ஒரு ஆத்தாவோ அப்புச்சியோ இரங்கம் பாளையம் ரேசங்கடை திறந்திருக்கா என்று தெற்குப் பக்கம் அரச மரத்துட்ட நின்னு விசாரிச்சு ,  உறுதி சொன்னா நடையா நடந்து போய் பொருள்  வாங்கி வருவாங்க. 

சின்ன மணியக்கார கவுண்டர் எங்கள் ஊரின் அழகான கதை சொல்லி. கடையில் சங்கு பீடியை வாங்கி காற்று லாவகமாக வீசிக் கொண்டிருக்கும் போது நெருப்புப் பொட்டில அழகாக சீவி தீயை வரவைத்து ,கைக்குள் குவித்து நெருப்பு அணையாமல் பீடியில் நெருப்பு வைக்கும் வித்தையை நின்று இரசிக்கும் சிறுவர்கள் நாங்கள். கோயிலுக்குப் போனா வெளக்குக்கு திரி வச்சி அணையாம விளக்கேத்த நாங்க படாதபாடு படுவோம். ஆனால் எங்க அப்புச்சிங்க அழகாக கைக்குள் நெருப்பைக் குவித்து பற்றவைக்கும் வித்தை கண்டு வியப்போம். 

கோயில் திண்ணைல ஒட்காந்து ரேசங்கடைப் பற்றிய கதையை அழகாக நயமுடன் சொல்வார். நான் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக பர்மா என்று நாடு பற்றி அறிந்தேன். இந்தியா ல அரிசிப் பஞ்சம் வந்தப்ப பர்மா  அரிசி வாங்கி நம் ரேசன் கடைகள் வாயிலாக இரங்கூன் அரிசி கொண்டு வந்து தருவாங்க என்று சொல்வார். மேலும் தாது வருசப் பஞ்சம் என்ற  சொல்லாட்சியும் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக அறிந்தேன். அதன்பிறகு 

இந்தியாவுல பஞ்ச காலத்தில் புதிதாக கண்டறிப்பட்ட நெல் இரகம் இரங்கூன் அரிசி  இரகம் னு அந்தக் கதையை அழகாக எடுத்துச் சொல்வார். 

நல்லியம்பாளையம் மாந்தர்களில் சின்ன மணியக்கார ஐயன் கதைகள் கேட்க கேட்க வியப்பை வர வைக்கும். அங்கராக்கு (சட்டை) அணியாமல் மேலில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு தான் எப்போதும் செல்வார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்துல ஊருக்குக் கட்டப்பட்ட பாலம் , கட்டப்பட்ட விதம் பற்றி சுவை குன்றாமல் எடுத்துச் சொல்வார். அப்போதெல்லாம் எங்களுக்கு எல்லா சனி ஞாயிறும் விடுமுறை. அதனால் மாரியம்மன் கோயில் திடலில் கதைகளும் , தாயம் ஆட்டமும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். 

 

எப்போதாச்சும் வேட்டுவங்காட்டு சின்னக் கவுண்டர்  கோயில் அருகே வரும்போது , ஏது திடீர்னு தெக்கால பக்கம்லா வாறீங்க என்று கதைகள் நீளும். எனக்கு  சிறுவயதில் மஞ்சக் காமாலை வந்து விட்டது என்று எல்லோரும் சொன்னப்ப, வேட்டுவங்காட்டு சின்ன கவுண்டரும் மணியக்கார கவுண்டரும்  சோற்றுக் கற்றாழையை அரைத்து நீராக்கி மிரட்டி மிரட்டி குடிக்க வைத்தனர். இப்படி தினமும் சின்ன மணியக்கார ஐயனும் , வேட்டுவக்காட்டு சின்ன ஐயனும் எனக்கு கற்றாழை நீரை வாயில் ஊற்றி என் நோயைக் குணப்படுத்திய மருத்துவர்கள். நாங்க அன்றைய காலத்தில் ஊர்ப் பெரியவர்களைக் கண்டாலே மரியாதையுடன் நின்று கடந்து செல்வோம். வேட்வங் காட்டு பெரிய கவுண்டர் எப்போதும் ஒரு கைத்தடியோடு வலம் வருவார். 

பெரிய மணியக்கார கவுண்டர் , உயரமாக நெற்றி நிறைய திருநீறு அணிந்து , வீட்டில் இருந்து நடந்து கோயில் அருகே வந்து நின்று பருவ மழை தொடங்கி  , வாய்க்காலில் நீர் விடும் காலம் என எல்லாவற்றையும் சொல்வார். எங்கள் ஊரில் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் கவுண்டர்களில் பெரிய மணியக்கார கவுண்டர் புதுமையானவர். 

கலைஞர் கருணாநிதி , எம்.ஜி.ஆர்  அரசியல் கதைகளை வியப்புக் குன்றாமல் நகர்த்திச் செல்லும் பாங்கு  அழகானது. ஒவ்வொரு பிரதோச நாளிலும் பெரிய மணியக்கார கவுண்டருடன் ஈரோடு சிவன் கோயில் சென்று வரும் நினைவுகள் இன்றும் கண்முன் நிழலாடுகிறது. எங்கள் ஊரின் கதை சொல்லிகளால் நாங்கள் கற்றது ஏராளம். 


நல்லியம்பாளையம் ஊர்  மாந்தர்கள் மருத்துவமனைக்குச் சென்று எங்கள் வயதில் பார்த்ததே இல்லை. இன்றைய காலத்தில் மாதம் ஒரு முறை நாம் மருத்துவமனை செல்லும் நிலையை எண்ணி அன்றைய நிலையை எண்ணாமல் இருக்க இயலவில்லை. காலம் பல மாந்தர்களை நமக்குத் தருகின்றது. அந்தக் கதை சொல்லிகள் நம்மை, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டு மாந்தர்கள். 


சினிமாவும் அரசியலும் அதிகம் கலவாமல் நல்லியம்பாளையம் கிராமம் அழகிய ஊராக இருந்தது. இரயிலோடும் ஓசை கேட்கும். நீரோடும் ஓசை கேட்கும். மண்ணின் மைந்தர்களின் கதை   கேட்கும்.