Monday, 12 May 2025

நல்லியம்பாளையம் கதை பேசுவோம் -10



எங்கள் நல்லியம் பாளையம் கிராமத்தில் யாரேனும் வந்து, சூரம்பட்டியார் காடு போகனுமுங்க என்று 
  ஒருவர் கேட்டால், 'அதுங்களா இந்த இட்டாலியைப் பிடிச்சு 4 காடு போனீங்கன்னா ஒரு பாங்கெணம் வருமுங்க, பக்கத்தால ஒரு தொக்கடவு இருக்குமுங்க, அதைத்தாண்டுனீங்கன்னா, சங்கம் பொதர் வருமுங்க. அங்க பூச்சி இருக்குமுன்னு சொன்னாங்க, பார்த்துப்போங்க. எதுக்காப்புலேதாங்க ஊடு தெரியுமுங்க. ஏங்க கொஞ்சம் நீர்த் தண்ணி தரேன் குடிச்சிட்டுப் போங்க' என்று பதில் வரும்.

இன்றைய இளைய தலைமுறைக்கு கொங்கு வட்டார வழக்குகள் பெரும்பாலும் தெரியாது…அதனை நினைவூட்டி நம் ஊரின் , நம் கொங்கின் பண்பாடு காப்போம்.

  இட்டாலி என்பது இரண்டுவேலிகளுக்கு உள்பட்ட சிறு வழி. பாங்கெணம் என்பது தண்ணீர் இல்லாது வறண்ட கிணறு, தொக்கடவு வேலி என்பது ஒய் வடிவிலான வழி, பொதர் என்பது புதர், பூச்சி என்பது பாம்பு, பாத்து என்பது சாக்கிரதையாக, பாங்காடு என்பது வறண்ட நிலம், ஊடு என்பது வீடு, புளுதண்ணி என்பது நீராகாரம்.

 தொளவு என்ற சொல், பகை விரோதம் என்ற பொருளைக் குறிக்கும். அண்ணன் தம்பிக்குள்ளே தொளவு ஏற்பட்டுப் போக்குவரத்தே இல்லிங்க என்பார் ஒருவர்.

கால்நடை மேய்ப்பவர் மாடுகளை குரால் என்றும், ஆடுகளை ஊத்தை என்றும் அழைப்பார். குரால் கம்முன்னு மேயுது, இந்த ஊத்தை அடுத்தவன் காட்டுக்குப் போயிருங்க என்பார். மக்கள் இறப்பைப் பெரிய காரியம் என்பர். பெரிய காரியம் போனேனுங்க, வீட்டுக்குள் வரக்கூடாதுங்க என்பார் ஒருவர்.

அண்ணன் மனைவி அண்ணியை நங்கை என்று அழைப்பது கொங்கு நாட்டு வழக்கம். கணவரின் அக்காவும் நங்கைதான். சண்டையிடும்போது ஏற்படும் பேரொலியை ரவுசு என்பர். பங்காளிக்குள் ஒரே ரவுசா கெடக்குதுங்க என்பது ஒரு தொடர்.

 அதிகாலையைக் கோழி கூப்பிடும் நேரம் என்பர், முன் இரவை நாய்ச் சோத்து நேரம் என்பர். மரியாதையை மருவாதி என்றும், வைகாசியை வய்யாசி என்றும், வியாழக்கிழமையை வெசாளக்கிழமை என்றும் பேச்சு வழக்கில் கூறுவர்.

பணங்கொடுக்கலன்னா மருவாதி கெட்டுப்போயிரும், வய்யாசி பொறந்தாபன்னண்டு வருஷம், வெசாளக்கிழமை ஈரோட்டுச் சந்தைக்குப் போகோனும் என்பன வழக்கமான தொடர்கள்.

 திருப்பூரைப் பேச்சு வழக்கில் திலுப்பூர் என்பது, கணவர் வீட்டில் கோபம் கொண்டு பெண் தாய் வீட்டில் தங்குவதைச் சீராட்டு என்பர்.  

 இடதுபுறத்தை ஒரட்டாங்கைப் பக்கம் என்றும், வலதுபுறத்தைச் சோத்தாங்கைப் பக்கம் என்றும் கூறுவர்.

திருமணப்பதிவு அலுவலகம் அன்று இல்லை. மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் இணைப்பாக இருந்து திருமணம் முடிய உதவுபவர் தானாவதி எனப்படுவார். ஒரு வீட்டில் திருமணம் என்றால் தானாவதி யார் என்று கேட்பார்கள். 

 வளைகாப்பு நிகழ்வைக் கட்டுச்சோறு கட்டுதல் என்பர், கால்நடைகளுக்குரிய இடத்தைத் தொண்டுப்பட்டி என்பர், காலுக்குச் செருப்பு அணிவதைச் செருப்புத்தொடுதல் என்பர். 

எங்கள் ஊர் நல்லியம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு சிலர் இந்த சொற்களைப் பேசி வருகின்றனர். இன்னும் சில வருடங்களில் இந்த வட்டார வழக்குச் சொற்கள் பேச்சு வழக்கில் மறைந்து விடும். வட்டார வழக்குச் சொற்கள் பேசி வரும் ஆத்தாவும் ஐயனும் பண்பாட்டைச் சுமந்து வருபவர்கள்.

Monday, 28 April 2025

உழைப்பாளர் தினம் தோன்றிய வரலாறு

 
காடாயினும் மேடாயினும் கணினியானும் கழனியாயினும் வீடாகினும் எங்கு உழைத்தாலும் அவர்கள் தொழிலாளர்களே. பகலும் இரவும் சந்திரனும் சூரியனும் இந்த உலகில் நிலையாய் இருப்பது போல உழைப்பும் நிலையானது. நாட்டின் வறுமை போக்க வீட்டின் வறுமையைத் துரத்த ஓடி ஓடி உழைக்கும் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். 
            எண்ணத்தில் ஏற்றமிகு வண்ணங்களைக் கனவுகளாக வைத்து கைகளில் உழைப்பைத் தந்து பாரினில் பாடுபடும் பாட்டாளிகள் மட்டுமல்ல உழைப்பாளிகள். அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு பின்னர் சமையலறை புகுந்து பக்குவாய் சமைத்து குடும்பத்தினர் மகிழ்வோடு பருகிட தேநீர் பானங்கள் தந்து துணி துவைத்து மடித்து மணிக்கணக்காய் ஆனாலும் உழைப்பு மட்டும் தீராத இல்லற பெண்களும் உழைப்பாளிகளே…
       எப்படி வந்தது இதற்கென்று ஒரு தினம் . இதை அறிய உங்கள் செவிகளைக் கொஞ்சம் கொடுங்கள். 
       1880களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அங்கே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
1806-ம் ஆண்டில் அமெரிக்காவின் பில்டெல்பியா நகரத்தின் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதுதான் தொழிலாளர்களின் கஷ்டங்களும் அவர்களின் உழைப்பின் மீதான சுரண்டலும் உலகுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த நகரின் இயந்திரத் தொழிலாளர்கள் ஆரம்பித்த சங்கம்தான் உலகின் முதல் தொழிலாளர் சங்கம் என்கிறது வரலாறு.
1820, 1830-ம் ஆண்டுகளில் பத்து மணிநேர வேலை நேரம் என்கிற கோரிக்கையை வகுத்து நிர்வாகத்திடம் போராடினர் தொழிலாளர் வர்க்கத்தினர். வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தன் முதல்படியை எடுத்து வைத்தது. அதன்படி அரசாங்க ஊழியர்களின் வேலைநேரம் பத்து மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது எந்தவித பலனையும் அளிக்கவில்லை. அனைவருக்கும் பத்து மணிநேர வேலை என்கிற தங்களின் கோரிக்கையோடு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1850-களில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோன்றியிருந்தன. பத்து மணிநேர கோரிக்கை இச்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையாக மாறியது. அமெரிக்கா மட்டுமன்றி எங்கெல்லாம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கட்டடத் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு என்கிற தங்கள் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெற்றியும் கண்டனர். இவ்வெற்றி உலகின் அத்தனை தொழிலார்களுக்கும் போராடினால் வெற்றி கிட்டும் என்கிற உத்வேகத்தை அளித்தது.
அமெரிக்காவில் அனைத்து தொழிலாளர்களுக்குமான ஒருங்கிணைந்த சங்கத்தின் தேவையை உணர்ந்து 1866-ல் தேசிய தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டு பால்டிமரில் நடந்த சங்க மாநாட்டில் 8 மணிநேர வேலை நாளை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக வில்லியம் சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் இந்த தேசிய தொழிலாளர் சங்கத்தைப் போன்றே லண்டனில் ``ஃபர்ஸ்ட் இன்டர்நேஷனல்" என பொதுவாக அறியப்படும் `சர்வதேச தொழிலாளி சங்கம்' 1866-ல் ஜெனிவாவில் 8 மணிநேர வேலை நாளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இப்படியாக இந்த இரு அமைப்புகளும் ஒரே கொள்கைகளோடு செயல்பட்டு வந்தன. வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்றும் இம்மாநாடு முன்மொழிந்தது. எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்துக் கார்ல் மார்க்ஸ் 1867-ல் வெளியான தனது மூலதனம் புத்தகத்தில் `வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது வன்முறையில் முடிந்து சில தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. 
 தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்த காலகட்டம் அது. இப்போராட்டங்களின் மையப்பகுதியாக சிகாகோ இருந்தது. முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு , நாடு முழுவதும் பரவி புரட்சிக்கான உணர்வோடு உழைக்கும் வர்க்கத்தினர் இருந்தனர். தங்களின் தொழிற்கருவிகளை கீழே வைத்துவிட்டு சாலையை நோக்கித் திரண்டு வந்த தொழிலாளர்களின் படை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. 8 மணிநேர வேலை நாள் என்கிற கோஷம் விண்ணைப்பிளந்தது. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் திரண்டெழுந்து தொழிலாள வர்க்கத்தின் மொத்தப் போராட்ட வரலாற்றையும் மே 1 என்கிற இந்த ஒற்றை நாளில் தூக்கி நிறுத்தினர். புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. 

தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வர 1889 ஜூலை மாதம் 14ம் தேதி உலகத் தொழிலாளர்களின் சர்வதேசக் கூட்டம் பாரிசில் நடைபெற்றது. அதில் காரல் மார்க்ஸ் தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கவும், மே 1ஐ உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவும் அறைகூவல் விடுத்தார். அதில் இருந்துதான் மே தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக இந்த தினத்தையே தொழிலாளர் தினமாக கொண்டாடவும் துவங்கினர். 

 உலகத் தொழிலாளர் நாள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த அமெரிக்காவில் தொழிலாளர் தினம் செப்டம்பர் முதல் வாரத்தில்தான் கொண்டாடுகின்றது . 
இந்தியாவில் முதன்முறையாக 1923-ம் ஆண்டு சிங்காரவேலர் என்கிற தமிழர் மே தினத்தை மெரினாவில் செங்கொடி ஏற்றி கொண்டாடியுள்ளார். 1957 வரை இந்த தினம் விடுமுறை நாளாக இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு விடுமுறை நாளாக மே முதல் நாளை அறிவித்தது. உழைப்பாளர் நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் இருக்கும் உழைப்பாளிகள் சிலை 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தொழிலாளர்களும் அவர்களது உழைப்பும்தான் இப்பூவுலகின் இயக்கத்தை நின்றுவிடாமல் சுழல வைக்கிறது. இன்று வாழும் இந்த நவீன யுகம் ஆண்டாண்டு காலமாய் உழைத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான ஒரு தினம் என்பது எவ்வளவு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆனால், மிகுந்த போராட்டங்களுக்கும் வலிகளுக்கும் பிறகே வரலாறு தொழிலாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட அனுமதித்தது.

 உலகில் மிகப்புனிதம் என ஒன்று இருக்குமென்றால் அது தொழிலாளர்களின் வியர்வைத் துளிகளேயன்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்! அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பாளர்தின வாழ்த்துகள். 

Saturday, 26 April 2025

நல்லியம்பாளையம் கதை பேசுவோம் -9


    ஊருக்கு ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம்.  எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்றும் பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு வழிநடத்தப்படுகிறது. 

       அதுபோல ஊர் அருமைக்காரர் பொறுப்பும் ஊருக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு.( கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பல ஆவணங்களை அடையாளப்படுத்திய புலவர் இராசு ஐயாவின் பேரன் எனது மாணவன். அதன்மூலம் இராசு ஐயா அவர்களிடம் ஊர் அருமைக்காரர் பற்றிய தரவுகளை அவர்வழியே பத்தாண்டுகளுக்கு முன்னர்  பெற்றேன். அந்தப் பதிவுகளே இங்கும் பகிரப்படுகிறது) 

    மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை ‘உரிமைப் பெண்’ என்று அழைப்பர். மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர்’ என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் ‘சகுனம்’ வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர். ஒரே குலத்தில் பெண் எடுக்கும் ‘அகமணம்’ கவுண்டர்களிடம்  இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிந்து கொள்வர்.  பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர் என்று இராசு சொன்னதையும் நடைமுறை வாழ்வியலையும் பொருந்தச் செய்தன. 

பெண் பார்த்தல்

 சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம் என்று கூறினார். எனது நல்லியம் பாளையம் மற்றும் கொங்கு கிராமங்களில் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. 

கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழாவின்போதோ பெண்ணை முதலில் பார்த்து அதன்பின்னரே உறுதி செய்வர். 


ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார். 

அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.

பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.

அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவார்கள். பெரியவர்களை வணங்க, மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை ஊர் அருமைக்காரர் சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.

நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் ‘பருப்புச்சாத விருந்து’ என்றும் அழைப்பர். 

அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பல எண்ணிக்கை சார்ந்த சடங்கு முறைகளை பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் செய்வார்கள் . அந்தச் சடங்குகள் அனைத்தும் அருமைக்காரர் தலைமையிலேயே நடைபெறும். சடங்குப் பெயர்களை மட்டும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன். 

மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல், திருமண அழைப்பு, விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்,பட்டினிச் சாதம், முகூர்த்தக்கால் போடுதல்,படைக்காலம் வைத்தல்,காப்புக் கட்டுதல்,சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்,மங்கலன் முகம் துடைத்தல்,கோயில் மாலை பெறுதல்,குப்பாரி கொட்டல்,நிறைநாழி,கணபதி வணக்கம்,குலதெய்வ வழிபாடு,நாட்டுக்கல் வழிபாடு,வெற்றிலை கட்டுதல்,இணைச்சீர்,தாயுடன் உண்ணல்,கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை,பால் பழம் சாப்பிடுதல்,பட்டம் கட்டுதல்,பெண்ணெடுத்தல்,மணமேல் பணம் மேற்காணும் சீர் முறைகளை ஊர் அருமைக்காரர் செய்வார். 

திருமணம் முடிந்த பின்னர் ஓலை எழுதிய புலவர் , நகை ஆசாரி, மங்கலன் என்றழைக்கப்படும் நாவிதன் , குயவன், வண்ணான் பதினெட்டு சமூகத்தாருக்கு பொருள் கொடுத்து பெரிய நிகழ்வாக திருமணம் நடத்தும் பாங்கு ஊர் அருமைக்காரருக்கு உண்டு. நல்லியம்பாளையம் கிராமத்தின் கொத்துக்காரர் மற்றும் அருமைக்காரர், மணியக்காரர் என நல்லியம்பாளையத்தின் அடையாளமாகிப்போன கவுண்டர்களை நினைவு கொள்கிறேன். எனது பால்ய வயதில் இவர்களின் பெருமை தெரியாமல் இவர்களுடன் பேசி உள்ளேன். ஆனால் ஊரின் ஆவணங்களே இவர்கள்தான் என்பதை என்னும் வயதில் இன்னும் ஊரைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன்.  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருக்கும்.  நல்லியம்பாளையத்தின்  கதையும் விதவிதமாக இருக்கும். மேலும் கதை பேசுவோம். 


Friday, 18 April 2025

நல்லியம்பாளையம் கதை பேசுவோம் -8“தொட்டி கட்டு வீடு”



        தூத்த போட ஆரம்பிச்சிருச்சு…சீக்கிரம் சைக்கிள்ல போயிறலாம் .. இருடா ரயில் நகர் வேப்பமரத்துல நின்னுக்கலாம். கொஞ்ச நேரத்துல ரயில் வண்டி வந்துரும். வந்ததே வந்து புட்டோம். ரயில் வண்டியை பார்த்துபுட்டு போலாம் . மழை விட்டதும் சைக்கிள் ஏறி மிதிச்சுகிட்டு ரங்கம்பாளையம் ரயில் பாலத்தின் கீழ் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மேலே ஏறிச் சென்று ரயில் பாதையில் காசுகளை வைத்து விட்டு காந்தமாய் மாறுமா என்ற கற்பனையில் குக்கூ குக்கூ என்று வரும் ரயிலுக்காய் காத்து கிடப்போம். ஈரோட்டில இருந்து கிளம்பி வரும் ரயில் ரங்கம்பாளையத்தில் வேகம் எடுக்கும். நாங்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் சென்று தூரமாய் நின்று கொள்வோம். வைத்த காசு காந்தமாய் மாறும் என்ற நம்பிக்கையில் காத்து நிற்போம். காற்று சென்றது போல ரயில் சென்றுவிடும். நாங்கள் வைத்த காசு காணாமல் போய்விடும். ரயிலடியில் இருந்து இறங்கி சைக்கிள் எடுத்துக்கிட்டு நல்லியம்பாளையம் வாய்க்கால் பாலம் வந்து நிற்போம். மேடாய் தெரியும் மேட்டில் சைக்கிளில் எழாமல் சீட்டில் அமர்ந்தவாறு யார் கோவில் வரை செல்கிறார்கள் என்று போட்டி நடக்கும். பெரும்பாலும் எல்லோரும் வெற்றி பெற்று விடுவோம். கிட்டத்தட்ட 1/4 கிலோ மீட்டர் அளவுக்கு மேடு இருக்கும். மேடேறி சென்று கோயில் குழாயில் தாகம் தீர நீர் பருகுவோம். அவரவர் அவரவர் சாயங்காலம் வூட்டுக்குச் சென்று விடுவோம். 
வூட்டுக்குச் சென்றதும் அம்மா தெற்கு வூட்டுக்காரங்க வூட்டுக்குப் போய் பால் வாங்கிட்டு வாடா என்பார். பால் பாத்திரத்தை தூக்கிட்டு தெற்கால வூட்டுக்குப் போய் பால் வாங்கும் போது, அந்த வீட்டின் தொட்டிக்கட்டு அமைப்பை பிரமிப்போடு பார்த்து ரசிப்பேன். திண்ணையில் அமர்ந்து கொள்வேன். அன்று அவர்கள் வீட்டுக்கு பால் வாங்கச் சென்ற போது தூறல் மழையாகத் தொடங்கிவிட்டது. அவர்கள் வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டேன். மழை தாழ்வாரத்தில் பட்டு வீட்டின் நடுவில் கொட்டுவதை கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன். தெற்கு வீட்டு ஆத்தா இருடா மழை நின்னதும் போ என்று சொல்லி சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்தார். இன்றும் நினைவில் நிழலாடுகிறது. எங்கள் ஊரில் தொட்டி கட்டு வீடு அமைப்புடைய வீடுகள் ஐந்தாறு வீடுகள் இருக்கும். அதுபோல மாணிக்க சுந்தரம் அண்ணா வீடும் தொட்டிக்கட்டு அமைப்புடைய அழகிய வீடு. மணியக்காரர் வீடு அரும்புக்காரர் வீடு ஆகியோரின் தொட்டி கட்டு வீட்டுத் திண்ணையில் சிறுவயதில் அமர்ந்து விளையாடுவோம். ஊர்க் கொத்துக்காரர் வீட்டில் காமராஜர் படம் எல்லாம் மாட்டியிருப்பார்கள். வியந்து வியந்து பார்ப்போம். 
நல்லியம்பாளையம் கிராமத்தில் யாருக்கேனும் திருமணம் நடைபெற்றால் மங்கலன் என்று சொல்லக்கூடிய ஊர் நாவிதர் மங்கல வாழ்த்து பாடலை மண்டபத்தில் பாடும் மரபு இன்றும் தொடர்கிறது. 

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
அகவல்பா
அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திர சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும் என்று தொடங்கி 
ஆதி கணேசன் அன்புடன் வாழி!
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
எம்பெரு மானின் இணையடி வாழி!
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி!
நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
பாரத தேசம் பண்புடன் வாழி!
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
என்குரு கம்பர் இணையடி வாழி!
வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!
இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே! என்று திருமண மண்டபத்தில் இந்தப் பாடலைப் பாடி திருமண வைபவங்கள் நடைபெறும். 
தொட்டி கட்டு வீடும் ஊர் மக்கள் பண்பாடும் காலங்கள் மாறினாலும் ஊரின் அமைப்பு நிலை மாறினாலும் நினைவுகளில் இருந்து நீங்காது.

Wednesday, 16 April 2025

இந்திய இரயில்வே உருவான வரலாறு - அறிய வேண்டிய வரலாறு

  

                    

         இந்தியாவில் முதல் இரயில் வட இந்தியாவில் மும்பை - தானே இடையே 1853 ல் இயக்கப்பட்டதாக நமது வரலாற்றுப் பக்கங்களில் , வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டு நாமும் படித்திருப்போம். ஆனால் இந்தியாவில் முதல் இரயில் சென்னையில் தான் இயக்கப்பட்டது என்பதும் அந்த இரயில் 1837 ல் இயக்கப்பட்டதும் நாம் அறியாத வரலாறு. 

         இந்தியாவில் இரயில் 1853ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாக கற்பிக்கபட வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் வடக்கு-தெற்காக பிற்காலத்திய வரலாற்றாய்வாளர்கள் இந்தியாவை பிரித்தமையே காரணம். ஆனால் உண்மையில் இந்தியாவின் தெற்குப் பகுதியில்தான் முதன்முதலில் இந்திய தொடர்வண்டிக் கழகம் இயக்கப்பட்டது. இந்தியாவில் இரயில்வண்டிகளின் அவசியம் மற்றும் சாலைகள் குறித்து 1832 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அதனையடுத்து 1837 ஆம் ஆண்டு சென்னை நகர சாலை கட்டுமானப் பணிக்காக சர் ஆர்தர் என்பவரால் கிரானைட் கற்களைக் கொண்டு செல்ல தொடங்கப்பட்டது. 

                    சர் வில்லியம் ஏவரி என்பவரின் உதவியால் நீராவி இயந்திரம் மூலம் செங்குன்றம் முதல் சிந்தாதரிப்பேட்டை வரை இயக்கப்பட்ட இரயில் சேவையே இந்தியாவின் முதல் இரயில் சேவை என்பதை பதிய வேண்டியதும் படிக்க வேண்டியதும் மிக அவசியம். 

          ஆர்தர் காட்டன் என்பவர் இன்றைய செங்குன்றம் பகுதியை ரெட் ஹில் என்ற பெயரில் அழைக்க , ரெட் ஹில் இரயில்வேயை முதன்முதலாக உருவாக்கினார். இதுவே இந்தியாவின் முதல் இரயில் பாதை மற்றும் முதல் இரயிலும் ஆகும். அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் இரயில்வே 1845 ல் உருவாக்கப்பட்டது. 

             1933 காலகட்டத்தில் கடும் வறட்சியும் பஞ்சமும் கோதாவரி மாவட்டங்களில் நிலவியது. அப்போதைய மாவட்ட அதிகாரி சர் ஹென்றி மவுண்ட் பிரித்தானிய அரசுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து பொறியாளர் ஆர்தர் காட்டன்  கோதாவரி ஆற்றின் பகுதிகளைக் கள ஆய்வு செய்து மெட்ராஸ் ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர் 1846 டிசம்பர் 23 அன்று அணை கட்ட ஒப்புதல் கிடைத்தது. தாமதமின்றி, காட்டன் 1847 இல் அணை கட்டத் தொடங்கி 1850 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.  பத்தாயிரம் தொழிலாளர்களும், ஐநூறு தச்சர்களும், ஐநூறு கொல்லர்களும் இவ்வணை கட்டுமானத்தில் ஈடுபட்டனர். இந்த அணை கட்டுமானத்திற்காக தற்காலிக இரயில் பாதைகள் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பொருட்களைப் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட இரயில்வே பாதை இந்தியாவின் இரண்டாவது பாதையாகும். 

              பிரிட்டீஸ் அரசாங்கம் கிழக்கிந்திய நிறுவனத்தை இரயில்வே அமைப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் கேட்டுக்கொண்டது. அதன்படி பல தனியார் இரயில்வே அமைப்புகள் உருவாகின. 1845-ம் ஆண்டு மே மாதம் ஆங்கிலேய அரசு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனியை ஆரம்பித்தது. அதனுடைய நிர்வாக இயக்குனராக ஸ்டீவன்சனை நியமித்தது. அதன்பின் இவர் எடுத்த முயற்சிகளை பற்றி எழுத பெரிய புத்தகமே போடவேண்டும். அத்தனை சிரமப்பட்டிருக்கிறார் அந்த மனிதர்.  ஸ்டீவன்சன் உடல் பலவீனமானவர். ஆனாலும் ஐந்து ஆட்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மனவலிமை மிக்கவர். இந்திய மொழிகள் எதுவும் தெரியாதவர். எப்போதும் அலுவலகமே கதியென்று கிடப்பவர். இருப்புப் பாதை அமைக்கும் பணியில் அரசுடனும் நில உரிமையாளர்களுடனும், ஒப்பந்தகாரர்களுடனும் இவர் சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வேறு யாராவது இது போன்ற சிக்கல்களை சந்தித்திருந்தால் எப்போதோ வேலையை விட்டு சென்றிருப்பார்கள். ஆனால், ஸ்டீவன்சனோ கோபங்களுக்கும் மனச்சோர்வுக்கும் அப்பாற்பட்டவர். அளவுகடந்த பொறுமை கொண்டவர். முடியாது என்ற வார்த்தையே அவரது அகராதியில் கிடையாது. இப்படி பல இன்னல்களுக்கு இடையே சாதித்துக்காட்டியவர் ஸ்டீவன்சன். இவர் இல்லாமல் இந்திய ரயில்வே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 

1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது . இது இந்தியாவின் மூன்றாவது இரயில் பாதை அமைப்பாகும்.   பிரித்தானிய அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது நீர்வழங்கல் கட்டுமானத்திற்கானக் கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 

           கிரேட் இந்தியன் இரயில்வே நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ல்  பாம்பேயின் போரிபண்டர் நிலையத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானேவுக்குப் புறப்பட்டது. மூன்று நீராவி என்ஜின்கள் மூலம் இழுக்கப்பட்ட 14 வாகனங்களில் 400 பேர் பயணம் செய்தனர்.

       சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி என்ஜின்கள் 14 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுத்தன. கிரேட் இந்தியன் தீபகற்ப இரயில்வே பயணிகள் பாதையை  அமைத்து இயக்கியது. இந்த ரயிலை உருவாக்க 1,676 மிமீ (5 அடி 6 அங்குலம்) அகலப்  பாதை பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 


                   1853 ஏப்ரல் 16 அன்று தொடங்கிய முதல் பயணிகள் இரயில் வரலாற்றிலும் மிக முக்கியமானதாக பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் இரயில்வே குறித்த பல பதிவுகள் இன்னும் பிரிட்டீஸ் அருங்காட்சியகத்தில் பேப்பர்களாக உள்ளது. இந்திய அரசு இரயில்வே அமைச்சகம் அதனை வெளிக்கொணர வேண்டும். வரலாற்றை அறிய வைக்க வேண்டும்.




Saturday, 12 April 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -7 ஊரும் பேரும் நீரும்



     நல்லியம் பாளையம் - இந்தப் பெயரை கூறும்போது எங்களுக்குள் எப்போதும் ஒரு பெருமை இருக்கும். கட்டுப்பாடு மிகுந்த ஊர். தப்பித் தவறி கூட நாங்கள் தவறுகள் ஏதும் செய்து விடாமல் எங்களைப் பக்கவமாய் வளர்த்த ஊர். திண்டல் அருகே மேல்நிலைக் கல்விக்காக பள்ளிக்கூடத்தில் சேர்ந்த போது பள்ளி ஆசிரியர் எங்கள் ஊரையும் பெயரையும் வரிசையாகக் கேட்டார். நான் எழுந்து என் பெயரையும் என் ஊரான நல்லியம்பாளையம் என்ற பெயரையும் இயல்பாக கூறிய போது அந்த ஆசிரியர் மிகுந்த கட்டுப்பாடான ஊர் நல்ல இயற்கையான கிராமம் என்று அப்போது கூறினார். எனக்கு அப்போது அதன் அருமையும் பெருமையும் புரிபடவில்லை. இப்போது நன்றாய் புரிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக பெரும் முயற்சிகள் எடுத்து ஊர்மக்கள் பலரிடமும் கையொப்பம் பெற்று பல முயற்சிகள் எடுத்து எங்கள் ஊருக்கு அரசுப் பேருந்தை வர வைத்தார்கள். காலை மதியம் மாலை என மூன்று நேரங்கள் எங்கள் ஊரைத் தொட்டு அரசுப் பேருந்து செல்லும். நண்பர்கள் நற்பணி மன்றத்திற்கு முன்பாக எங்கள் ஊரில் ஒற்றுமைக் குழு நற்பணி மன்றம் என்று ஒன்று இருந்தது என்பதை ஊர்ப் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் நற்பணி மன்றத்தின் சார்பாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு முறையாக குடிநீர் வசதியை நற்பணி மன்றத்தினர் ஏற்படுத்தித் தந்தனர். ஊரின் அனைத்து தேவைகளையும் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் முன்னின்று முதன்மையாய் செய்தனர். நீர் என்ற போது இந்த கிணறுகள் எங்கள் நினைவலைகளில் நிச்சயம் வந்துவிடும். செந்தில் புக் கடைக்காரர் வீட்டு அருகே ஊரின் வடபுறத்தில் இறக்கத்தில் குட்டிக் கிணறு என்று ஒரு கிணறு அந்த நீரின் சுவை எந்த சுவைக்கும் ஈடாகாது. பக்கத்து ஊர்க்காரர்களும் சைக்கிளிலும் இருசக்கர வாகனத்திலும் வந்து கிணற்றில் நீர் எடுத்துச் செல்வார்கள். அதுபோல ஊரின் மத்தியில் இருக்கும் சேந்து கிணறு. ஊர் மக்களுக்கு மட்டுமே அந்த கிணறு பயன்பாடு உடையது. அடுத்து கோயிலுக்குத் தென்புறத்தில் ஒரு அடி பைப் இருக்கும். அந்த நீரின் சுவையும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தந்தது. நாங்கள் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாடிவிட்டு மேடேறி வந்து அந்த அடி பைப்பில் நீர் பருகும் போது தாகம் தீராது. தண்ணீரின் சுவையும் தீராது. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அப்போதுதான் வீட்டு வசதி வாரியம் அமைத்தார்கள். வீட்டு வசதி வாரியத்தில் நீர் வசதி இருப்பினும் குடிப்பதற்கான நீர் அங்கு குறைவாகவே இருந்தது. ஆதலால் ஹவுசிங் போர்டு மக்கள் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் எங்கள் ஊருக்கு வந்து சைக்கிள்களில் நீர் எடுத்துச் செல்வார்கள். நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றி குடியிருப்புகள் பெருகினாலும் எங்கள் ஊரின் மண் மனம் மாறாத கலாச்சாரமும் கட்டுப்பாடும் அப்படியே இருந்தது. ஊருக்கு வடபுறத்திலும் தென்புறத்திலும் மேகமாய் வரும் வாகனங்கள் கூட நல்லியம்பாளையம் எல்லையைத் தொட்டதும் வேகத்தை இயல்பாகவே குறைத்து விடுவார்கள். அவசியமின்றி ஹாரன் அடிக்க மாட்டார்கள். அவசரமாக எந்த பயணமும் நிகழாது. நிதானமாக ஓடும் வாய்க்கால் நீரைப் போல பக்குவமாய் எங்கள் ஊர் நல்லியம்பாளையம் பெயரிலும் நீரிலும் சிறந்து விளங்கியது.

Friday, 11 April 2025

ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -3



நிலாச் சோறு 

நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பௌர்ணமி நாளில் கிராமத்துக்குள் இருக்கும் ஏதேனும் ஒருவர் வீட்டில் நிலாச்சோறு சாப்பிடும் வைபவம் நடக்கும்.

நாங்கள் பள்ளி விட்டு பொழுதோட வீடு வந்ததும் வூட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அம்மா செய்து தரும் சமையலுக்காகக் காத்திருப்போம்.

ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒவ்வொரு விதமான சமையல் மணக்க மணக்க கொண்டு வருவார்கள். 

மொளகாட்டி குழம்பு வைத்து , வணக்கிய சாதம், கொங்கு நாட்டுப் பருப்பு சாதம் , கல்லக்காய்(வேர்க்கடலை) குச்சிக் கிழங்கு (மரவள்ளிக் கிழங்கு) என ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் உணவு கொண்டு வருவோம். ஊரில் உள்ள ஓர் வீட்டில் அமர்ந்து அவரவர் உணவுகளை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து அருகில் இருப்பவர்கள் கொண்டு வந்த உணவுகளை நாம் பெற்று பகிர்ந்துண்டு பரிமாறி மகிழ்வோம். 

கிட்டத்தட்ட ஏழு மணிக்கு தொடங்கும் நிலாச்சோறு வைபவம் 9 மணி வரை நீளும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தூர்தர்ஷன் பொதிகை மட்டுமே ஒரே சேனல். ஆகையால் எங்கள் பொழுதுபோக்கு எல்லாம் நண்பர்களோடு கதை பேசுவது... ஊர் முழுக்க ஓடித்திரிந்து விளையாடுவது என்று கடந்தது. 

திடீரென்று ஒரு நாள் நிலாச்சோறு நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கடும் மழை பெய்யத் தொடங்கியது. எல்லோரும் மழையை ரசித்துக்கொண்டு உணவை ருசித்துக் கொண்டிருந்தோம். மறுநாள் சனிக்கிழமை என்பதால் பள்ளி பற்றிய கவலை இல்லை. 
மழை நின்றதும் அவரவர் இல்லம் திரும்பினோம். 
மறுநாள் காலையில் ஊருக்குள் இருக்கும் பெரியவர்கள் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். 
ஓர் ஒளவு(ஓர் உழவு) மழை பெஞ்சிருக்கும் போல... ஆமாம்மா என்று எங்கள் ஊரின் பெரிய கவுண்டர்கள் பேசுவார்கள். எங்கள் ஊரின் பள்ளத்தில் நீர் நிறைந்தோடும். 

நேத்து பேஞ்ச மழையில மாடு கட்டியிருந்த மொளக்குச்சியை மாடு இழுத்துட்டு போயிடுச்சு... ரங்கம்பாளையம் வரைக்கும் தேடுனேன்.. கப்பல் காட்டு பக்கத்துல நம்ம செவலை கண்ணு நின்னுட்டு இருந்துச்சு போய் ஓட்டியாந்தேன் என்று கோபாலின் தாத்தா விஸ்வநாத கவுண்டர் கூறுவார். 

அண்ணாங்கால் போட்டும் மாடு அவ்வளவு தூரம் போயிருச்சா என்று சின்ன மணியக்கார கவுண்டர் கேட்பார். ஆமா கொண்டாந்து தொண்டு பட்டில அடிச்சிட்டு இப்பதான் வர்றேன் என்று விசுவநாதக்கவுண்டர் கூறுவார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எப்போதாவது எங்கள் ஊர்ச் சாலையில் ஏதாவது ஒரு இருசக்கர வாகனம் வேகமாக செல்லும்.‌ வேகமாக செல்லும் அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி யாரப்பா நீ? எந்த ஊரு? இவ்வளவு வேகமா போற! நல்லியம்பாளையம் வந்தா மெதுவா போகணும்னு தெரியாதா என்று கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள். எப்படியும் ஒரு அரை மணி நேரம் அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். அவர் ஆளை விட்டால் போதும் என்று தப்பித்துச் செல்வார். அன்று எங்கள் ஊர் சேந்து கிணறு பக்கம் ஊருக்குப் புதியவர்கள் யாருமே வர முடியாது. ஊரின் நடுப்பகுதி அதுதான். அந்த கிணற்றில் எங்கள் ஊர் பெண்மணிகள் கயிறு கட்டி நீர் சேந்திக் கொண்டிருப்பார்கள். 
கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடி சென்றவர்கள் ஊருக்கு வரும்போது அந்தக் கிணற்றில் ஆசை தீர நீர் பருகி செல்வார்கள். நல்லியம்பாளையத்தின் சிறுவாணி அது. 
தலைக்கு மேல சும்மாடு வைத்து அதன் மேல் குடம் வைத்து மணிக்கணக்கில் நின்று கொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். பொழுது சாயப்போகுது பால் கறக்கோணும். நான் கிளம்புறேன்னுங்க என்று சொல்லி பொறவுக்கு என்ன சாப்பாடு ங்க என்று கேட்டு மீண்டும் கதை தொடங்கும்.. சும்மாடு மேல குடம் இருக்கும்.. கதை நிறைய இருக்கும். 
(மீண்டும் கதை பேசுவோம்).