காலை நேரத்துக் குளிர்ச்சி இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. தமிழ் இலக்கியமும் வரலாறும் நம் கண்ணெதிரே உயிர்பெறப்போகும் ஒரு நாள்!
2021 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் காலை 6 மணிக்கு கோவை – திருச்சி முதன்மைச் சாலையில் குளித்தலை காவிரிக் கரையோரம் காற்று வாங்கி நின்று கொண்டிருக்க,
திருச்சி மாநகரை அடைந்து அடையாறு ஆனந்தபவன் உணவகத்தில் மினி டிபன் அருந்தி மீண்டும் வாகனம் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியனவற்றைக் கடந்து புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பறந்தது. நானும் பிரபாகரனும் மாறி மாறி வாகனத்தின் சாரதிகளாக இயங்கினோம்.
முதல் நிறுத்தம்: பாறைகளில் உறைந்த கலை – நார்த்தாமலை
எங்களின் முதல் பயணம் நார்த்தாமலையை நோக்கி அமைந்தது. குன்றுகளும் பாறைச் சரிவுகளும் நிறைந்த அந்த இடத்திற்குச் சென்றடைந்ததும், பேராசிரியர் திருநாவுக்கரசு ஐயா எங்களை ஒரு குறிப்பிட்ட குன்றின் முன்னால் அழைத்துச் சென்று நிறுத்தினார்.
"சங்கர், பிரபாகரா... இந்த விஜயாலய சோழீஸ்வரத்தைப் பாருங்கள். இடைக்காலச் சோழர்களின் கட்டிடக்கலைக்கு இதுதான் தொடக்கப் புள்ளி!" என்றார் பேராசிரியர், தன் கைவிரல்களால் அந்தப் பழமையான கற்றளியைச் சுட்டிக்காட்டியபடி.
(திரு.இளங்கோவன் அவர்களும், திரு.திருநாவுக்கரசு அவர்களும் விளக்கம் சொல்லும் காட்சி)
பதிணென்பூமி விண்ணகரம் கோயில் உட்புறம்
பதிணென்பூமி விண்ணகரம் அரிகில் ‘’பழியிலி ஈசுவரம் ‘’ எனும் சிறிய குடைவரைக் கோயில் காணப்பட அருகே அவ்விடத்தின் குளுமைக்கு ஆதாரமாக மிகப்பெரிய மாமரம் விற்றிருக்க , அவ்விடத்தின் பிரமிப்பு ஆட்கொண்டது. இந்த குடைவரையின் உட்புறம் அழகிய துவாரபாலகர்கள் வீற்றிருக்க ‘’ பழியிலி சிவனார்’ என்னும் அழகிய பெயரில் சிவனார் வீற்றிருந்தார். நகரத்தார் மக்கள் ஒருசிலர் வருடத்திற்கு ஒருமுறை நார்த்தாமலை வந்து வணங்கிச் செல்கின்றனர் என்பதைக் கூற்றுகளின் வழி அறிந்து மகிழ்ந்தோம். விஜயாலய சோழிச்சுவரம் கோயிலின் மேலிருந்து கீழ் பார்ப்பின் கழுகுப் பார்வையில் அனைத்தும் தெரிய , கீழிருந்து மேல் நோக்கின் எதுவும் தெரியாத முறையில் கோயிலின் அமைப்புக் கட்டப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இளங்கோவன் அந்த அமைதியான பாறைச் சூழலை ரசித்தபடியே, "பாறைகளைக் குடைந்து கோயில்களை உருவாக்கிய பல்லவர், பாண்டியர் மற்றும் சோழர்களின் கலை நுணுக்கம் ஒரே இடத்தில் சந்திக்கும் அபூர்வமான இடம் இது. இந்தச் பாறைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை நம்மிடம் சொல்லத் தயங்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது," என்றார்.
முனைவர் ஐயா சோழர்களின் கட்டடக்கலை பாணியைப் பற்றி விளக்க, பிரபாகரன் தன் குறிப்பேட்டில் குறிப்புகளைச் சுடச்சுட எழுதிக் கொண்டான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிற்பிகளின் உளிச் சத்தம் அந்தப் பாறைகளில் இன்னும் எதிரொலிப்பது போலவே எனக்குள் ஒரு பிரமை ஏற்பட்டது.
இரண்டாம் நிறுத்தம்: வண்ணங்களும் மெய்ஞானமும் – சித்தன்னவாசல்
நார்த்தாமலையின் வரலாற்று அமைதியிலிருந்து விடைபெற்று, அடுத்து நாங்கள் அடைந்தது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல்.
மலைமேல் அமைந்துள்ள சமணர் படுக்கைகளையும், குகைக் கோயிலின் கூரையில் வரைந்து வைக்கப்பட்ட புகழ்பெற்ற மூலிகை ஓவியங்களையும் கண்டபோது எங்களின் பிரமிப்பு இரட்டிப்பானது. தாமரைத் தடாகம், அதில் நீந்தும் மீன்கள், அன்னப் பறவைகள், தாமரை மலர்களைப் பறிக்கும் பவள உதட்டு மனிதர்கள்...
"இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த வண்ணங்களின் பொலிவு குறையாமல் இருக்கிறதே!" என்று வியந்து பிரபாகரனும் நானும் கேட்டோம்.
அதற்கு எழுத்தாளர் இளங்கோவன், "இயற்கையான மூலிகைகளையும் பாறை வண்ணங்களையும் கொண்டு வரைந்த ஓவியங்கள் இவை. கலையை வெறும் அழகாக மட்டும் பார்க்காமல், அதைத் தவமாகக் கருதியவர்களின் கைவண்ணம் இது," என்று நெகிழ்ந்து கூறினார்.
குகையின் உள்ளே நிலவிய அந்த மெல்லிய அமைதியில் பேராசிரியர் திருநாவுக்கரசு ஐயா சமண சமயத்தின் துறவற வாழ்க்கையைப் பற்றியும், துறவிகள் பாறைகளில் தங்கிப் புரிந்த தவத்தைப் பற்றியும் கூறிய தகவல்கள், அந்த இடத்தின் பரிசுத்தத்தை எங்களுக்கு உணர்த்தின.
மூன்றாம் நிறுத்தம்: சிற்பக் கலை அற்புதம் – மூவர் கோயில் (கொடும்பாளூர்)
மதியத்தைக் கடந்து மாலைப் பொழுதின் நிழல்கள் நீண்ட வேளையில், எங்களின் பயணம் கொடும்பாளூர் 'மூவர் கோயில்' வளாகத்தை அடைந்தது.
மூன்று கோயில்களில் இன்று இரண்டு மட்டுமே கம்பீரமாக நிற்கின்றன. ஆயினும், அங்கிருந்த ஒவ்வொரு சிற்பமும் செதுக்கப்பட்ட விதம் எங்களை வாயடைக்க வைத்தது. வேலீர் வம்சத்து மன்னர்களின் கொடைத் தன்மையையும், ராஜராஜ சோழனின் காலத்திற்கு முந்தைய சிற்பக்கலை சிறப்பையும் முனைவர் ஐயா எங்களுக்கு விவரித்தார்.
"ஒரு சிறிய கல்லில் கூட எவ்வளவு துல்லியமான பாவங்கள்! இந்தச் சிற்பங்களின் அமைதியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது," என்றேன் நான், அங்கிருந்த ஒரு சிவ வடிவச் சிற்பத்தின் அழகில் சொக்கிப் போய்.
"உண்மைதான் சங்கர்," என்றார் இளங்கோவன். "எழுத்தில் கொண்டுவர முடியாத பல உணர்வுகளை இந்தச் சிற்பங்கள் மிக அமைதியாகக் கடத்தி விடுகின்றன."
சூரியன் மேலை வானத்தில் மறைய, மூவர் கோயில் வளாகத்தில் தென்றல் காற்று மெல்ல வீசத் தொடங்கியது. நால்வரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து, அன்று பார்த்த இடங்களையும் கற்றுக்கொண்ட வரலாற்று உண்மைகளையும் பற்றி உரையாடினோம்.
கொடும்பாளூர் பயணத்தை நிறைவு செய்து வரும் வழியில் எங்கும் உணவுக்கடை இல்லாமல் நீண்ட பயணத்தில் , ஒரு சந்திப்பில் ஓர் ஓலைக்குடிசை உணவகம் இயங்கிக்கொண்டு இருந்தது.
மகிழுந்தில் இருந்து இறங்கி ஓலைக்குடிசை பெஞ்சில் அமர்ந்து சூடான புரோட்டா சாப்பிட்டோம். காலம் பல கடந்தும் அதன் சுவை இன்னும் நாவில் நிழலாடுகின்றன.
பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்களின் ஆழ்ந்த அறிவாற்றலும், எழுத்தாளர் இளங்கோவனின் கலை நயமிக்கப் பார்வையும், பிரபாகரனின் ஆர்வம் நிறைந்த கேள்விகளும், என் மனதிற்குள் எழுந்த வரலாற்று உணர்வுகளும் இணைந்து அந்த ஒரு நாள் பயணத்தை மறக்க முடியாத ஒரு ஞான அனுபவமாக மாற்றியிருந்தன.
கல்வெட்டுகளும், ஓவியங்களும், சிற்பங்களும் வெறும் கற்கள் அல்ல, அவை நமது முன்னோர்களின் வாழ்வியலும் ஆன்மாவுமாகும் என்பதை உணர்ந்தவாறு, மனநிறைவோடு எங்களின் பயணத்தைத் தொடங்கினோம்.




No comments:
Post a Comment