எங்கள் நல்லியம் பாளையம் கிராமத்தில் யாரேனும் வந்து, சூரம்பட்டியார் காடு போகனுமுங்க என்று
ஒருவர் கேட்டால், 'அதுங்களா இந்த இட்டாலியைப் பிடிச்சு 4 காடு போனீங்கன்னா ஒரு பாங்கெணம் வருமுங்க, பக்கத்தால ஒரு தொக்கடவு இருக்குமுங்க, அதைத்தாண்டுனீங்கன்னா, சங்கம் பொதர் வருமுங்க. அங்க பூச்சி இருக்குமுன்னு சொன்னாங்க, பார்த்துப்போங்க. எதுக்காப்புலேதாங்க ஊடு தெரியுமுங்க. ஏங்க கொஞ்சம் நீர்த் தண்ணி தரேன் குடிச்சிட்டுப் போங்க' என்று பதில் வரும்.
இன்றைய இளைய தலைமுறைக்கு கொங்கு வட்டார வழக்குகள் பெரும்பாலும் தெரியாது…அதனை நினைவூட்டி நம் ஊரின் , நம் கொங்கின் பண்பாடு காப்போம்.
இட்டாலி என்பது இரண்டுவேலிகளுக்கு உள்பட்ட சிறு வழி. பாங்கெணம் என்பது தண்ணீர் இல்லாது வறண்ட கிணறு, தொக்கடவு வேலி என்பது ஒய் வடிவிலான வழி, பொதர் என்பது புதர், பூச்சி என்பது பாம்பு, பாத்து என்பது சாக்கிரதையாக, பாங்காடு என்பது வறண்ட நிலம், ஊடு என்பது வீடு, புளுதண்ணி என்பது நீராகாரம்.
தொளவு என்ற சொல், பகை விரோதம் என்ற பொருளைக் குறிக்கும். அண்ணன் தம்பிக்குள்ளே தொளவு ஏற்பட்டுப் போக்குவரத்தே இல்லிங்க என்பார் ஒருவர்.
கால்நடை மேய்ப்பவர் மாடுகளை குரால் என்றும், ஆடுகளை ஊத்தை என்றும் அழைப்பார். குரால் கம்முன்னு மேயுது, இந்த ஊத்தை அடுத்தவன் காட்டுக்குப் போயிருங்க என்பார். மக்கள் இறப்பைப் பெரிய காரியம் என்பர். பெரிய காரியம் போனேனுங்க, வீட்டுக்குள் வரக்கூடாதுங்க என்பார் ஒருவர்.
அண்ணன் மனைவி அண்ணியை நங்கை என்று அழைப்பது கொங்கு நாட்டு வழக்கம். கணவரின் அக்காவும் நங்கைதான். சண்டையிடும்போது ஏற்படும் பேரொலியை ரவுசு என்பர். பங்காளிக்குள் ஒரே ரவுசா கெடக்குதுங்க என்பது ஒரு தொடர்.
அதிகாலையைக் கோழி கூப்பிடும் நேரம் என்பர், முன் இரவை நாய்ச் சோத்து நேரம் என்பர். மரியாதையை மருவாதி என்றும், வைகாசியை வய்யாசி என்றும், வியாழக்கிழமையை வெசாளக்கிழமை என்றும் பேச்சு வழக்கில் கூறுவர்.
பணங்கொடுக்கலன்னா மருவாதி கெட்டுப்போயிரும், வய்யாசி பொறந்தாபன்னண்டு வருஷம், வெசாளக்கிழமை ஈரோட்டுச் சந்தைக்குப் போகோனும் என்பன வழக்கமான தொடர்கள்.
திருப்பூரைப் பேச்சு வழக்கில் திலுப்பூர் என்பது, கணவர் வீட்டில் கோபம் கொண்டு பெண் தாய் வீட்டில் தங்குவதைச் சீராட்டு என்பர்.
இடதுபுறத்தை ஒரட்டாங்கைப் பக்கம் என்றும், வலதுபுறத்தைச் சோத்தாங்கைப் பக்கம் என்றும் கூறுவர்.
திருமணப்பதிவு அலுவலகம் அன்று இல்லை. மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் இணைப்பாக இருந்து திருமணம் முடிய உதவுபவர் தானாவதி எனப்படுவார். ஒரு வீட்டில் திருமணம் என்றால் தானாவதி யார் என்று கேட்பார்கள்.
வளைகாப்பு நிகழ்வைக் கட்டுச்சோறு கட்டுதல் என்பர், கால்நடைகளுக்குரிய இடத்தைத் தொண்டுப்பட்டி என்பர், காலுக்குச் செருப்பு அணிவதைச் செருப்புத்தொடுதல் என்பர்.
எங்கள் ஊர் நல்லியம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு சிலர் இந்த சொற்களைப் பேசி வருகின்றனர். இன்னும் சில வருடங்களில் இந்த வட்டார வழக்குச் சொற்கள் பேச்சு வழக்கில் மறைந்து விடும். வட்டார வழக்குச் சொற்கள் பேசி வரும் ஆத்தாவும் ஐயனும் பண்பாட்டைச் சுமந்து வருபவர்கள்.
1 comment:
மிக அருமையான கட்டுரை அண்ணா.....
வாசிக்கும் பொழுதே நேரில் அக்காட்சிகளைக் காண்பது போல் இனிமையாக இருந்தது.
Post a Comment