Saturday, 12 April 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -7 ஊரும் பேரும் நீரும்



     நல்லியம் பாளையம் - இந்தப் பெயரை கூறும்போது எங்களுக்குள் எப்போதும் ஒரு பெருமை இருக்கும். கட்டுப்பாடு மிகுந்த ஊர். தப்பித் தவறி கூட நாங்கள் தவறுகள் ஏதும் செய்து விடாமல் எங்களைப் பக்கவமாய் வளர்த்த ஊர். திண்டல் அருகே மேல்நிலைக் கல்விக்காக பள்ளிக்கூடத்தில் சேர்ந்த போது பள்ளி ஆசிரியர் எங்கள் ஊரையும் பெயரையும் வரிசையாகக் கேட்டார். நான் எழுந்து என் பெயரையும் என் ஊரான நல்லியம்பாளையம் என்ற பெயரையும் இயல்பாக கூறிய போது அந்த ஆசிரியர் மிகுந்த கட்டுப்பாடான ஊர் நல்ல இயற்கையான கிராமம் என்று அப்போது கூறினார். எனக்கு அப்போது அதன் அருமையும் பெருமையும் புரிபடவில்லை. இப்போது நன்றாய் புரிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக பெரும் முயற்சிகள் எடுத்து ஊர்மக்கள் பலரிடமும் கையொப்பம் பெற்று பல முயற்சிகள் எடுத்து எங்கள் ஊருக்கு அரசுப் பேருந்தை வர வைத்தார்கள். காலை மதியம் மாலை என மூன்று நேரங்கள் எங்கள் ஊரைத் தொட்டு அரசுப் பேருந்து செல்லும். நண்பர்கள் நற்பணி மன்றத்திற்கு முன்பாக எங்கள் ஊரில் ஒற்றுமைக் குழு நற்பணி மன்றம் என்று ஒன்று இருந்தது என்பதை ஊர்ப் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் நற்பணி மன்றத்தின் சார்பாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு முறையாக குடிநீர் வசதியை நற்பணி மன்றத்தினர் ஏற்படுத்தித் தந்தனர். ஊரின் அனைத்து தேவைகளையும் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் முன்னின்று முதன்மையாய் செய்தனர். நீர் என்ற போது இந்த கிணறுகள் எங்கள் நினைவலைகளில் நிச்சயம் வந்துவிடும். செந்தில் புக் கடைக்காரர் வீட்டு அருகே ஊரின் வடபுறத்தில் இறக்கத்தில் குட்டிக் கிணறு என்று ஒரு கிணறு அந்த நீரின் சுவை எந்த சுவைக்கும் ஈடாகாது. பக்கத்து ஊர்க்காரர்களும் சைக்கிளிலும் இருசக்கர வாகனத்திலும் வந்து கிணற்றில் நீர் எடுத்துச் செல்வார்கள். அதுபோல ஊரின் மத்தியில் இருக்கும் சேந்து கிணறு. ஊர் மக்களுக்கு மட்டுமே அந்த கிணறு பயன்பாடு உடையது. அடுத்து கோயிலுக்குத் தென்புறத்தில் ஒரு அடி பைப் இருக்கும். அந்த நீரின் சுவையும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தந்தது. நாங்கள் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாடிவிட்டு மேடேறி வந்து அந்த அடி பைப்பில் நீர் பருகும் போது தாகம் தீராது. தண்ணீரின் சுவையும் தீராது. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அப்போதுதான் வீட்டு வசதி வாரியம் அமைத்தார்கள். வீட்டு வசதி வாரியத்தில் நீர் வசதி இருப்பினும் குடிப்பதற்கான நீர் அங்கு குறைவாகவே இருந்தது. ஆதலால் ஹவுசிங் போர்டு மக்கள் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் எங்கள் ஊருக்கு வந்து சைக்கிள்களில் நீர் எடுத்துச் செல்வார்கள். நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றி குடியிருப்புகள் பெருகினாலும் எங்கள் ஊரின் மண் மனம் மாறாத கலாச்சாரமும் கட்டுப்பாடும் அப்படியே இருந்தது. ஊருக்கு வடபுறத்திலும் தென்புறத்திலும் மேகமாய் வரும் வாகனங்கள் கூட நல்லியம்பாளையம் எல்லையைத் தொட்டதும் வேகத்தை இயல்பாகவே குறைத்து விடுவார்கள். அவசியமின்றி ஹாரன் அடிக்க மாட்டார்கள். அவசரமாக எந்த பயணமும் நிகழாது. நிதானமாக ஓடும் வாய்க்கால் நீரைப் போல பக்குவமாய் எங்கள் ஊர் நல்லியம்பாளையம் பெயரிலும் நீரிலும் சிறந்து விளங்கியது.

Friday, 11 April 2025

ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -3



நிலாச் சோறு 

நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பௌர்ணமி நாளில் கிராமத்துக்குள் இருக்கும் ஏதேனும் ஒருவர் வீட்டில் நிலாச்சோறு சாப்பிடும் வைபவம் நடக்கும்.

நாங்கள் பள்ளி விட்டு பொழுதோட வீடு வந்ததும் வூட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு அம்மா செய்து தரும் சமையலுக்காகக் காத்திருப்போம்.

ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒவ்வொரு விதமான சமையல் மணக்க மணக்க கொண்டு வருவார்கள். 

மொளகாட்டி குழம்பு வைத்து , வணக்கிய சாதம், கொங்கு நாட்டுப் பருப்பு சாதம் , கல்லக்காய்(வேர்க்கடலை) குச்சிக் கிழங்கு (மரவள்ளிக் கிழங்கு) என ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் உணவு கொண்டு வருவோம். ஊரில் உள்ள ஓர் வீட்டில் அமர்ந்து அவரவர் உணவுகளை அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து அருகில் இருப்பவர்கள் கொண்டு வந்த உணவுகளை நாம் பெற்று பகிர்ந்துண்டு பரிமாறி மகிழ்வோம். 

கிட்டத்தட்ட ஏழு மணிக்கு தொடங்கும் நிலாச்சோறு வைபவம் 9 மணி வரை நீளும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தூர்தர்ஷன் பொதிகை மட்டுமே ஒரே சேனல். ஆகையால் எங்கள் பொழுதுபோக்கு எல்லாம் நண்பர்களோடு கதை பேசுவது... ஊர் முழுக்க ஓடித்திரிந்து விளையாடுவது என்று கடந்தது. 

திடீரென்று ஒரு நாள் நிலாச்சோறு நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கடும் மழை பெய்யத் தொடங்கியது. எல்லோரும் மழையை ரசித்துக்கொண்டு உணவை ருசித்துக் கொண்டிருந்தோம். மறுநாள் சனிக்கிழமை என்பதால் பள்ளி பற்றிய கவலை இல்லை. 
மழை நின்றதும் அவரவர் இல்லம் திரும்பினோம். 
மறுநாள் காலையில் ஊருக்குள் இருக்கும் பெரியவர்கள் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். 
ஓர் ஒளவு(ஓர் உழவு) மழை பெஞ்சிருக்கும் போல... ஆமாம்மா என்று எங்கள் ஊரின் பெரிய கவுண்டர்கள் பேசுவார்கள். எங்கள் ஊரின் பள்ளத்தில் நீர் நிறைந்தோடும். 

நேத்து பேஞ்ச மழையில மாடு கட்டியிருந்த மொளக்குச்சியை மாடு இழுத்துட்டு போயிடுச்சு... ரங்கம்பாளையம் வரைக்கும் தேடுனேன்.. கப்பல் காட்டு பக்கத்துல நம்ம செவலை கண்ணு நின்னுட்டு இருந்துச்சு போய் ஓட்டியாந்தேன் என்று கோபாலின் தாத்தா விஸ்வநாத கவுண்டர் கூறுவார். 

அண்ணாங்கால் போட்டும் மாடு அவ்வளவு தூரம் போயிருச்சா என்று சின்ன மணியக்கார கவுண்டர் கேட்பார். ஆமா கொண்டாந்து தொண்டு பட்டில அடிச்சிட்டு இப்பதான் வர்றேன் என்று விசுவநாதக்கவுண்டர் கூறுவார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எப்போதாவது எங்கள் ஊர்ச் சாலையில் ஏதாவது ஒரு இருசக்கர வாகனம் வேகமாக செல்லும்.‌ வேகமாக செல்லும் அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி யாரப்பா நீ? எந்த ஊரு? இவ்வளவு வேகமா போற! நல்லியம்பாளையம் வந்தா மெதுவா போகணும்னு தெரியாதா என்று கேள்வி கேட்க தொடங்கி விடுவார்கள். எப்படியும் ஒரு அரை மணி நேரம் அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். அவர் ஆளை விட்டால் போதும் என்று தப்பித்துச் செல்வார். அன்று எங்கள் ஊர் சேந்து கிணறு பக்கம் ஊருக்குப் புதியவர்கள் யாருமே வர முடியாது. ஊரின் நடுப்பகுதி அதுதான். அந்த கிணற்றில் எங்கள் ஊர் பெண்மணிகள் கயிறு கட்டி நீர் சேந்திக் கொண்டிருப்பார்கள். 
கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடி சென்றவர்கள் ஊருக்கு வரும்போது அந்தக் கிணற்றில் ஆசை தீர நீர் பருகி செல்வார்கள். நல்லியம்பாளையத்தின் சிறுவாணி அது. 
தலைக்கு மேல சும்மாடு வைத்து அதன் மேல் குடம் வைத்து மணிக்கணக்கில் நின்று கொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். பொழுது சாயப்போகுது பால் கறக்கோணும். நான் கிளம்புறேன்னுங்க என்று சொல்லி பொறவுக்கு என்ன சாப்பாடு ங்க என்று கேட்டு மீண்டும் கதை தொடங்கும்.. சும்மாடு மேல குடம் இருக்கும்.. கதை நிறைய இருக்கும். 
(மீண்டும் கதை பேசுவோம்).

ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம்" 1.



ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள நல்லியம் பாளையம் அழகிய மண் மணம் மாறாத கொங்கு கிராமம். கிராமத்தில் எமது பொ.சங்கர் பால்யம் தொடங்கியது. நான் சிறுவனாக இருந்த போது கிராமம் கிராமமாகவே இருந்தது. ஊரின் இரு மருங்கிலும் வாய்க்கால் நீர் ஓடி வளமான பச்சை மரங்கள் அடர்ந்த ஊராகத் திகழ்ந்தது. ஊரின் மையப்பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்து ஊரின் அறிவிப்பு பகுதியாக இருக்கும். குளிர், கோடை என பருவ கால வித்தியாசமின்றி எமது இளம் பருவம் கடந்தது. கொங்கு மண் சார்ந்த எங்கள் ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. எங்கள் ஊரில் பெரும்பாலானவர்கள் நகைக்கடை வைத்திருப்பார்கள். வேளாண் தொழில் புரிவார்கள். "பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது" என்பது போல தென்னை மரங்கள் எங்கள் ஊரின் கோபுரங்கள் போல தோட்டங்கள் தோறும் அணி அழகு செய்தன.
எங்கள் ஊருக்கு நகைக்கடைக்காரர் ஊர் என்ற பட்டப்பெயர் உண்டு. கிராமிய மணம் மாறாத கொங்கு சொலவடைகள் எளிதாய் மக்கள் சொற்களில் நர்த்தனமிடும். "அரைக்காசுக்கு பரதேசம் போகாதடா" என்று எமது இளம் பருவத்தில் ஊர் கவுண்டர் சொன்ன சொல் இன்றும் நினைவில் உள்ளது."பொழச்சது நல்லியம் பாளையம்; வாழ்ந்தது நல்லியம்பாளையம்" என்னும் சொலவடை போல அந்த ஊரில் வாழ்ந்த பலரும் இன்று மேல் வருவாய் தேடி அருகிருக்கும் ஈரோடு நகரத்திற்கு சென்று விட்டனர். அதனால் கிராமம் தனது கிராமியத்தை சற்று இழந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. 
ஊர்ப் பெரியவர்கள் கோயில் திடலில் அமர்ந்து எத்தனை முறை எப்போது எங்கு சென்றாலும் அத்தனை முறையும் எங்கு செல்கிறாய் எதற்காகச் செல்கிறாய் என்று கேட்பார்கள். அதனால் இளம் பருவத்தில் நாங்கள் தப்பித் தவறி தவறுகள் செய்வதற்கு வாய்ப்பே இல்லாமல் அவர்கள் எங்களைக் காத்தார்கள். ஊரில் விஸ்வநாத கவுண்டர் என் மீது எப்போதும் பாசமாகவும் பரிவோடும் நடந்து கொள்வார். எங்களது விடுமுறை காலங்கள் எப்போதும் மருத நிலத்தின் கிணறுகளில் கொண்டாட்டமாய் இருக்கும். நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். கிரிக்கெட் விளையாடிவிட்டு உணவைத் துறந்து கிணறுகளில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவோம். மாலை இல்லம் செல்லும் போது கண்டிப்பாகத் திட்டு விழும். நல்லியம் பாளையம் கிராமத்திலிருந்து வடக்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால் பழையபாளையம் வரும். தெற்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால் ரங்கம்பாளையம் வரும். இந்த இரண்டு இடங்களையும் அடைந்தால் தான் முதன்மைச் சாலையை அடைய முடியும். அந்த வகையில் முதன்மைச் சாலையில் இருந்து உள்நோக்கி அழகிய கிராமமாக நல்லியம்பாளையம் திகழ்ந்தது. 

ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் சொல்லுக்கு ஏற்ப எமது கிராமத்தின் வேளாண் குடி மக்கள் ஒவ்வொரு பட்டத்தையும் உறுதி செய்து அதற்கு ஏற்ப மருத நில வயல்களில் நெல் கரும்பு சோளம் காய்கனிகள் ஆகியவற்றைப் பயிரிடுவர். கூத்தாடிக்குக் கெழக்க கண்ணு; கூலிக்காரனுக்கு மேக்க கண்ணு என்னும் சொலவடைச் சொல்லி வயல்களில் வேலை செய்யும் மக்களை வேலை வாங்குவார்கள். அவர்களுக்கான ஊதியத்தையும் முறையாகக் கொடுப்பார்கள். எங்கள் ஊருக்குச் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு நல்ல பெயர் உண்டு. நல்லியம் பாளையம் கிராமத்தின் அழகிய இடங்களில் ஒன்று மாரியம்மன் கோயிலுக்கு இறக்கத்தில் கீழே இருக்கும் பெரிய அரசமரம் அதன் அடியில் அழகிய விநாயகர் சிலை அதனை ஒட்டி சலசலவென்று ஓடும் வாய்க்கால். வாய்க்காலை ஒட்டி ஒரு அரசு தொடக்கப்பள்ளி. 
எங்களது பள்ளிக் காலங்களில் எல்லா சனி ஞாயிறும் விடுமுறை தான். எல்லோரும் அரசுப் பள்ளிகளில் தான் கல்வி பயின்றோம். ஒரு சிலர் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில். ஆனால் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இன்றி ஒரு நாள் முழுவதும் கிரிக்கெட் கபடி போன்ற விளையாட்டுகளை மகிழ்வோடு விளையாடி இல்லத்தில் மகிழ்வோடு திட்டுவாங்குவோம். 

(மீண்டும் கதை பேசுவோம்)

Thursday, 10 April 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -6

மானம் மோடம் போட்டுருக்கு. பண்டம் பாடி ல ஓட்டிட்டு போகோனும்..
இதுல கருப்பாடும் வெள்ளாடும் ஓரியாட்டம் போட்டுட்டு இருக்குது. தொண்டுபட்டி வேற கூட்டாம கிடக்குது என்ற சொற்கள் எங்கள் ஊரில் ஐப்பசி மாதங்களில் கேட்கத் தொடங்கிவிடும். ஒருமுறை தேர்தல் வந்த சமயத்தில் எங்கள் ஊரின் அனைத்துப் பாதைகளையும் சிமெண்ட் சாலையாக மாற்றும் ஆணை அரசிடம் இருந்து வந்தது. எங்களுக்கோ கொண்டாட்டம். ஊரின் அத்தனை சந்துகளிலும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு ஊர் மிக கம்பீரமாய் காட்சியளிக்கத் தொடங்கியது. வேச காலத்தில் (கோடை) எங்கள் ஊரின் கோயில் சிமெண்ட் திண்ணையில் நாங்கள் பலரும் சேர்ந்து குடம் குடமாக நீரூற்றி விடுவோம். மாலை ஆறு மணிக்கு மேல் பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருந்தாலும் எல்லா வீட்டு ஆத்தாக்களும் நடந்து வந்து கோயில் திண்ணையில் அமர்ந்து ஊர்ப் பொதுத் தொலைக்காட்சியில்நாடகம் பார்க்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள். டிவியில் நாடகம் ஓடிக்கொண்டிருக்கும். எங்கள் மக்கள் தொலைக்காட்சி கதையை மச்சாண்டார் வீட்டு கதையோடு தொடர்பு படுத்தி மனக் கவலை கொள்வர். எப்போதாவது ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது நாங்கள் ஆத்தாக்களிடம் கெஞ்சி இன்று ஒரு நாள் மட்டும் மேட்ச் பார்க்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருப்போம். இந்தப் பசங்க மட்ட புடிக்கிற விளையாட்டு பார்த்து பார்த்து வீணா போறாங்க என்று எங்களை வைவார்கள். மக்காநாளு (அடுத்த நாள்) சனிக்கிழமை நாடக போட மாட்டானுங்க. நீங்க புறகு பாருங்கடா என்று கூறுவார்கள். ஆத்தா நாளைக்கு மேட்ச் நடக்காது ஆத்தா இன்னைக்கு மட்டும் தான் என்று நாங்கள் கூறுவோம். உங்களோட அன்னாடும் இதே பொழப்பா போச்சு.
ஏண்டா வெறுமானத்துல யாராச்சும் விளையாடுவாங்களா (அமாவாசை அடுத்த நாள்) போ போய் ஓரமா உட்காருங்க நாளாண்ணிக்கு நீங்க மேட்சு பாருங்க என்று சாமானியமாக எங்களை விட மாட்டார்கள். எட்டு மணிக்கு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பார்கள். அதுவரை ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்த நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் எல்லோரும் எழுந்து அவரவர் வீட்டுக்குச் செல்வர். எட்டு மணி வாக்கில் நடந்தும் சைக்கிளிலும் வரும் ஊர்ப் பெரியவர்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து செய்தி கேட்பார்கள். அப்போது "நிர்மலா பெரியசாமி" சன் தொலைக்காட்சியில் அழகாக செய்தி வாசிப்பார். அவரின் குரல் கேட்கவே ரம்யமாக இருக்கும். மகிழ்ச்சியான செய்திகளை மகிழ்ச்சியோடும் துக்கமான செய்திகளை குரல் கம்மும் நிலையிலும் அழகோடு செய்தி வாசிப்பார். செய்திக்கு நடுவில் விளம்பரம் போடுவார்கள். அதுவரை அமைதியாக செய்தி கேட்டுக் கொண்டிருந்த எங்கள் ஊர் பெரிய கவுண்டர்கள் இந்த சீக்கடி வேற.. என்று தோளில் இருக்கும் துண்டுகளால் வீசுவார்கள். எங்கள் ஊர் பெரிய கவுண்டர்கள் யாரும் அங்கராக்கு (சட்டை) போட்டு நாங்கள் பார்த்ததில்லை. ஏதேனும் நோம்பி நொடி என்றால் வெள்ளாடை அணிவார்கள். அதிலும் அவர்கள் பட்டன் போடுவதற்குள் தடுமாறி போய்விடுவார்கள். பெரும்பாலும் எங்கள் ஊரின் திண்ணையில் அங்கராக்கு அணியாமல் பெரிய கவுண்டர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஐப்பசி முகூர்த்தத்தில் கண்ணால ஒன்னு இருக்கு. மாடு கண்ணு எல்லாம் சீக்கிரம் கட்டிப்புட்டு பால் கறந்துட்டு பழைய பாளையம் மண்டபத்துக்கு போகணும் என்று ஒருவர் கூற யார் வூட்டு கண்ணாலம் என்று இன்னொருவர் கேட்பார். அவர் ஒரு ஒறவு முறையைக் கூறுவார். ஓ சரி சரிங்க என்று கதை நீளும். அதற்குள் இடைவேளை முடிந்து விடும். கலைஞர் கருணாநிதி செல்வி ஜெயலலிதா மூப்பனார் ரஜினிகாந்த் ஆகியோர் சார்ந்த அரசியல் செய்திகள் அன்றைய நிலைகளில் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் பரபரப்பாக பேசப்படும். 8.20 வரை எங்கள் ஊர் பெரியவர்கள் செய்திக் கேட்டு கொண்டிருப்பார்கள். 8.25க்கு விளையாட்டுச் செய்தி ஆரம்பிக்கும் 
 பெரியவர்கள் ஒவ்வொருவராய் மீண்டும் அவரவர் காடு சார்ந்த கதைகளைப் பேசத் தொடங்குவார்கள். அதற்குள் இல்லம் சென்று சமையலை சமைத்து வைத்துவிட்டு பெண்கள் ஊர் திண்ணைக்கு வந்து விடுவார்கள். 

பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு என்ற பாடல் திடீரென்று ஏதேனும் ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எந்த ஊட்டுல அம்மா கிட்ட தர்றானுக. பூரா பயலும் பொறுப்பில்லாமல் தான் செலவு பண்றாங்க என்று பெரிய ஆத்தாக்கள் கூற, கொடுத்த காசை பானையில் போட்டு வச்சிருக்கீங்க. அத முதல்ல எடுங்க என்று ஷாப் கார கவுண்டர் லாவகமாக பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கூற சிரிப்பலை எழும்‌ . 

கதை பேசுவோம்.