நோம்பி வேற வருது..
வூடு வாசல் எல்லாம் சுத்தம் பண்ணி பூசி வலிக்கோனும்ங்க என்ற சொற்கள் எங்கள் ஊரில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் கேட்கத் தொடங்கிவிடும். நல்லியம்பாளையம் கிராமத்தில் மையப் பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் காக்கும் கடவுளாக விளங்கி வருகின்றது. ஈரோடு நகரின் அருகில் இருக்கும் சூரம்பட்டி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுத் தொடங்கியவுடன் அதனைத் தொடர்ந்து பழைய பாளையம் நல்லியம்பாளையம் ரங்கம்பாளையம் ரெட்டபாலி வலசு கவுண்டிச்சி பாளையம் என அனைத்துக் கிராமங்களிலும் நோம்பி தொடங்கிவிடும். நோம்பி என்னும் சொல் திருவிழாவைக் குறிக்கும். எங்கள் ஊர் மக்கள் பெரும்பாலும் இந்த நோம்பியை பொங்கல் என்றே குறிப்பிடுவர்.
நகரத்திற்கு குடிபோன ஊரின் மக்கள் வழிபாட்டுக்காக நல்லியம்பாளையம் வரும்போது , ஏனுங்க நங்கையா கொளுந்தியா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்ற சொல்லாட்சி மாறி மாறி கேட்கும்.
'வாங்கொ வாங்கொ இப்பத்த வர்ரீங்களா'
'வூட்ல எல்லாரும் நல்லாருக்கலாங்கலா'
'ஐயன் ஆத்தா அப்பன் அம்மா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்று ஊரில் குடியிருக்கும் மக்கள் வாஞ்சையோடு நலம் விசாரிப்பார்கள்.
பையன் என்ன பன்றானுங்க..என்று நகர்ப்புறத்து மாந்தர் விசாரிக்க கிராமப்புற மாந்தர்,
காலேஜி சேந்துருக்கானுங்க நாலு வருஷமுங்க என்று பேசி மகிழ்வார்கள். குறிப்பிட்ட நாளில் மார்கழி மாதத்தில் பூச்சாட்டுத் தொடங்கும். நாங்கள் கிராமம் முழுவதும் திரிந்து வேப்பிலை , ஆவாரம் பூ ஆகியவற்றை பை நிறைய பறிக்க கிளம்பி விடுவோம். இன்றைய நவீன உபகரணங்கள் அன்று எதுவுமில்லை. வேப்பிலையும் ஆவாரம் பூவும் பறிக்கச் செல்லும் போது தோட்டங்களில் பப்பாளியைப் பறித்து கூட்டமாக அமர்ந்து கூறு போட்டு சாப்பிடுவோம். கொய்யா மரத்தில் ஏறி கொய்த கனிகளை மென்றிடுவோம். தோட்டத்தில் உள்ள ஐயன் டேய் யார்ரா அது என்று குரல் கொடுப்பார். ஐயா நாங்க தானுங்க என்று நாங்கள் குரல் கொடுக்க சரி சரி மரத்தை முறிக்காதீங்க.. என்று கூறுவார். பை நிறைய வேப்பிலையும் ஆவாரம் பூ பறித்து மாலை தயாராக இருப்போம். நல்லியம்பாளையத்தில் பூச்சாட்டுத் தொடங்கும் நாளில் கோயிலுக்கு கீழ்ப்புறம் உள்ள ஊர்க் கிணற்றில் காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலை நீருக்குள் இருப்பது போல ஒரு வருடம் முழுமையும் கோயில் பூச்சாட்டு மரம் ஊர்க் கிணற்றில் நீருக்குள் தவம் இருக்கும். ஊர்க் கோயில் பூசாரி பயபக்தியுடன் வழிபாடு செய்து கிணற்றுக்குள் இறங்கி பூச்சாட்டு மரத்தை மேலே தூக்கி வருவார். சலசலவென்று ஓடும் வாய்க்காலின் கரையில் அரச மரத்தின் கீழ் பூச்சாட்டு மரத்தை தனது தோளில் சுமந்து ஊர்க் கோயில் பூசாரி நர்த்தன நடனம் ஆடுவார். நாங்கள் பறித்து வந்த வேப்பிலையை மரத்தின் மீது தூவ வேண்டும் என்னும் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் தூவுவோம். இல்லை இல்லை நாங்கள் மிக வேகமாக அந்த வேப்பிலையை வீசும் போது பூசாரியின் முதுகில் சுளிர் சுளிர் என்று வேப்பிலைகள் பட்டுத் தெறிக்கும். ஊர் மனிதர் வானவேடிக்கை நிகழ்த்துவார். நாங்கள் அண்ணாந்து பார்த்து வான வேடிக்கையை நட்சத்திர மின்மினிகளுக்கு இடையில் கண்டு ரசிப்போம். அரச மர விநாயகர் சிலையில் இருந்து மேடேறி கோயில் முன்பாக பூசாரியின் ஆட்டம் தொடங்கும். பிறகு கோயிலுக்குள் உள்ளே வந்து கோயிலின் மையப் பகுதியில் சுமந்து வந்த மரத்தின் மூன்று கவைகளுக்கு மத்தியில் எரியும் பூச்சட்டியை வைப்பார். அதில் எப்போதும் அணையாத சுடர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் முழுமையும். மறுநாள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் இல்லங்களில் இருந்து சிறு குடம் எடுத்து வந்து பூச்சாட்டு கம்பத்திற்கு நீரூற்றி வழிபாடு நிகழ்த்துவார்கள். இரவு மக்கள் இல்லங்களில் உணவை முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை புரிந்து விடுவர். கோயில் திண்ணைகளில் அமர்ந்து ஆத்தாக்களும் ஐயன்களும் பேசிக் கொண்டிருப்பர். இளவட்டங்களாகிய நாங்கள் பறை இசைக்க நடு சாமம் வரை பறை இசைக்கேற்ப ஆடிக்கொண்டே இருப்போம். பறை இசைக் கலைஞர்கள் கை வலிக்க இசை இசைக்க நாங்கள் கால் வலிக்க ஆடிக்கொண்டே இருப்போம். எப்போதும் பூச்சாட்டுத் தொடங்கி அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஊர் மக்கள் பொதுவாக காவேரி ஆறு சென்று நீர் சுமந்து வருவோம். மக்கள் எல்லோரும் செல்வதற்கு வசதியாக இரண்டு லாரிகள் தயாராக இருக்கும். ஆண்களுக்கு ஒரு லாரி பெண்களுக்கு ஒரு லாரி. மாலை 4 மணிக்கு லாரி காவிரிக்கரை நோக்கிச் செல்லும். அங்கு காவிரியில் குளித்து நீராடி மகிழ்ந்து நீர் சுமந்து காவிரியின் கரையில் ஒரு பொது இடத்தில் எல்லா குடங்களையும் பூ சுற்றி மாவிலை வைத்து வைத்து விடுவோம். ஊர்க்காரர்களுக்கு தெரியாமல் நானும் நண்பர்களும் கரையை விட்டு வெளியே வந்து சிற்றுண்டிகள் சாப்பிட்டு ஓடி வந்து விடுவோம். கரகம் வேல் கம்பு முதலியனவற்றை ஒவ்வொருவரும் எடுத்து சுமந்து வருவர். காவிரிக் கரையில் இருந்து நடந்து ஈரோடு நகருக்குள் புகுந்து பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபாடு நிகழ்த்தி பெரியார் நகர் சூரம்பட்டி நால்ரோடு வழியாக சூரம்பட்டி கோயிலுக்குள்ளும் சென்று திருநீறு அணிந்து கொண்டு மீண்டும் நடந்து பழைய பாளையம் வழியாக நல்லியம்பாளையம் வந்தடைய இரவு ஒரு மணி ஆகிவிடும். காவிரியில் இருந்து சுமந்து வந்த நீரினை அம்மனுக்கு ஊற்றி வழிபாடு நிகழ்த்தி உறங்கிப் போவோம். புதன் அன்று விடியற்காலையில் இல்லத்து பெண்கள் கோயில் முற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடாற்றுவார்கள். கோயிலில் சிறு சிறு பொம்மைக் கடைகள் இருக்கும். அன்று முழுவதும் நாங்கள் மகிழ்ச்சியோடு ஆடிப் பாடி விளையாடி மகிழ்வோம். அன்றுதான் நோம்பி. மறுநாள் கோயிலுக்குள் இருக்கும் அம்மனை உற்சவர் ஆக மாற்றி தேரில் அமர்த்தி ஊர் முழுவதும் வலம் வந்து மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெறும். மதியம் கிளம்பிய அம்மன் உற்சவம் இரவு வரை ஊரின் அனைத்து வீதிகள் வழியாகவும் சென்று இல்லங்கள் தோறும் காட்சி கொடுத்து மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருக்கும். அம்மன் உற்சவம் மீண்டும் கோயிலுக்கு வரும்போது இரவு நெடுநேரம் ஆகியிருக்கும். நோம்பி முடிந்து விட்டதே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
(மீண்டும் கதை பேசுவோம்)
No comments:
Post a Comment