Thursday, 10 April 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -6

மானம் மோடம் போட்டுருக்கு. பண்டம் பாடி ல ஓட்டிட்டு போகோனும்..
இதுல கருப்பாடும் வெள்ளாடும் ஓரியாட்டம் போட்டுட்டு இருக்குது. தொண்டுபட்டி வேற கூட்டாம கிடக்குது என்ற சொற்கள் எங்கள் ஊரில் ஐப்பசி மாதங்களில் கேட்கத் தொடங்கிவிடும். ஒருமுறை தேர்தல் வந்த சமயத்தில் எங்கள் ஊரின் அனைத்துப் பாதைகளையும் சிமெண்ட் சாலையாக மாற்றும் ஆணை அரசிடம் இருந்து வந்தது. எங்களுக்கோ கொண்டாட்டம். ஊரின் அத்தனை சந்துகளிலும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு ஊர் மிக கம்பீரமாய் காட்சியளிக்கத் தொடங்கியது. வேச காலத்தில் (கோடை) எங்கள் ஊரின் கோயில் சிமெண்ட் திண்ணையில் நாங்கள் பலரும் சேர்ந்து குடம் குடமாக நீரூற்றி விடுவோம். மாலை ஆறு மணிக்கு மேல் பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருந்தாலும் எல்லா வீட்டு ஆத்தாக்களும் நடந்து வந்து கோயில் திண்ணையில் அமர்ந்து ஊர்ப் பொதுத் தொலைக்காட்சியில்நாடகம் பார்க்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள். டிவியில் நாடகம் ஓடிக்கொண்டிருக்கும். எங்கள் மக்கள் தொலைக்காட்சி கதையை மச்சாண்டார் வீட்டு கதையோடு தொடர்பு படுத்தி மனக் கவலை கொள்வர். எப்போதாவது ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது நாங்கள் ஆத்தாக்களிடம் கெஞ்சி இன்று ஒரு நாள் மட்டும் மேட்ச் பார்க்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருப்போம். இந்தப் பசங்க மட்ட புடிக்கிற விளையாட்டு பார்த்து பார்த்து வீணா போறாங்க என்று எங்களை வைவார்கள். மக்காநாளு (அடுத்த நாள்) சனிக்கிழமை நாடக போட மாட்டானுங்க. நீங்க புறகு பாருங்கடா என்று கூறுவார்கள். ஆத்தா நாளைக்கு மேட்ச் நடக்காது ஆத்தா இன்னைக்கு மட்டும் தான் என்று நாங்கள் கூறுவோம். உங்களோட அன்னாடும் இதே பொழப்பா போச்சு.
ஏண்டா வெறுமானத்துல யாராச்சும் விளையாடுவாங்களா (அமாவாசை அடுத்த நாள்) போ போய் ஓரமா உட்காருங்க நாளாண்ணிக்கு நீங்க மேட்சு பாருங்க என்று சாமானியமாக எங்களை விட மாட்டார்கள். எட்டு மணிக்கு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பார்கள். அதுவரை ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்த நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் எல்லோரும் எழுந்து அவரவர் வீட்டுக்குச் செல்வர். எட்டு மணி வாக்கில் நடந்தும் சைக்கிளிலும் வரும் ஊர்ப் பெரியவர்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து செய்தி கேட்பார்கள். அப்போது "நிர்மலா பெரியசாமி" சன் தொலைக்காட்சியில் அழகாக செய்தி வாசிப்பார். அவரின் குரல் கேட்கவே ரம்யமாக இருக்கும். மகிழ்ச்சியான செய்திகளை மகிழ்ச்சியோடும் துக்கமான செய்திகளை குரல் கம்மும் நிலையிலும் அழகோடு செய்தி வாசிப்பார். செய்திக்கு நடுவில் விளம்பரம் போடுவார்கள். அதுவரை அமைதியாக செய்தி கேட்டுக் கொண்டிருந்த எங்கள் ஊர் பெரிய கவுண்டர்கள் இந்த சீக்கடி வேற.. என்று தோளில் இருக்கும் துண்டுகளால் வீசுவார்கள். எங்கள் ஊர் பெரிய கவுண்டர்கள் யாரும் அங்கராக்கு (சட்டை) போட்டு நாங்கள் பார்த்ததில்லை. ஏதேனும் நோம்பி நொடி என்றால் வெள்ளாடை அணிவார்கள். அதிலும் அவர்கள் பட்டன் போடுவதற்குள் தடுமாறி போய்விடுவார்கள். பெரும்பாலும் எங்கள் ஊரின் திண்ணையில் அங்கராக்கு அணியாமல் பெரிய கவுண்டர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஐப்பசி முகூர்த்தத்தில் கண்ணால ஒன்னு இருக்கு. மாடு கண்ணு எல்லாம் சீக்கிரம் கட்டிப்புட்டு பால் கறந்துட்டு பழைய பாளையம் மண்டபத்துக்கு போகணும் என்று ஒருவர் கூற யார் வூட்டு கண்ணாலம் என்று இன்னொருவர் கேட்பார். அவர் ஒரு ஒறவு முறையைக் கூறுவார். ஓ சரி சரிங்க என்று கதை நீளும். அதற்குள் இடைவேளை முடிந்து விடும். கலைஞர் கருணாநிதி செல்வி ஜெயலலிதா மூப்பனார் ரஜினிகாந்த் ஆகியோர் சார்ந்த அரசியல் செய்திகள் அன்றைய நிலைகளில் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் பரபரப்பாக பேசப்படும். 8.20 வரை எங்கள் ஊர் பெரியவர்கள் செய்திக் கேட்டு கொண்டிருப்பார்கள். 8.25க்கு விளையாட்டுச் செய்தி ஆரம்பிக்கும் 
 பெரியவர்கள் ஒவ்வொருவராய் மீண்டும் அவரவர் காடு சார்ந்த கதைகளைப் பேசத் தொடங்குவார்கள். அதற்குள் இல்லம் சென்று சமையலை சமைத்து வைத்துவிட்டு பெண்கள் ஊர் திண்ணைக்கு வந்து விடுவார்கள். 

பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு என்ற பாடல் திடீரென்று ஏதேனும் ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். எந்த ஊட்டுல அம்மா கிட்ட தர்றானுக. பூரா பயலும் பொறுப்பில்லாமல் தான் செலவு பண்றாங்க என்று பெரிய ஆத்தாக்கள் கூற, கொடுத்த காசை பானையில் போட்டு வச்சிருக்கீங்க. அத முதல்ல எடுங்க என்று ஷாப் கார கவுண்டர் லாவகமாக பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கூற சிரிப்பலை எழும்‌ . 

கதை பேசுவோம்.

1 comment:

Anonymous said...

கிராமத்தைக் கண் முன் நிறுத்தும் பதிவு