Sunday, 25 February 2024

ஹிட்லர்- அறிய வேண்டிய சில பக்கங்கள்- பொ.சங்கர்





                               


                    இந்த ஓவியத்தை மிகச்சிறந்த கலைஞனால் தான் வரைய முடியும். ஆம் வரலாற்றின் பக்கங்களில் சிறந்த ஓவியராகக் கோடுகளை வரைந்த ஒருவரை நாடுகளின் கோடுகளை மாற்றும் அளவிற்கு மாற்றியது யார்? சிறந்த ஓவியங்களை வரைந்தவர் ஹிட்லர் . சிறு வயதில் ஓவியக்கல்லூரிக்கு ஓவியம் வரைய ஹிட்லர்சென்ற போது ஓவியக்கல்லூரி நிர்வாகம் அவருக்கு சீட் தராமல் வெளியேற்றியது. அன்று ஓவியக்கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் பல நாடுகளின் எல்லைகள் மாறுபட்டிருக்காது. ஆனாலும் மிகச்சிறந்த ஓவியங்களை வரைந்து தன் நேரத்தைப் போக்குவார் என்று வரலாற்று ஊகங்கள் சொல்கின்றன.

சர்வதிகாரி, இரண்டாம் உலகப்போர், யூதர்கள் என்று சில சொற்களை வாசிக்க நேர்ந்தால் ஹிட்லர் என்னும் பெயரையும் வாசித்தே ஆக வேண்டும். கடுமையான போர்முறைகளின் இராஜதந்திரி என்று எதிரி நாடுகளாலேயே வர்ணிக்கப்பட்டவர். ஹிட்லரின் அறியாத சில பக்கங்களைப் புரட்டுவோம்.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லர் தன் வாழ்வில் சைவ உணவுகளையே விரும்பி உண்டார். தன் வாழ்வில் போர்க்காலங்களில் கூட தப்பித்தவறி அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்த கருணையாளன்.

தன் சிறு வயதில் அதிகமான நூல்களை விரும்பி வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டவர் ஹிட்லர். அதிலும் சாகசங்கள் போர்கள் பற்றிய நூல்களை ஆழ்ந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

சிறு வயதில் செய்த ஒரு தவறால் தனது ஆசிரியரிடம் இனி எக்காலத்திலும் மது , சிகரெட்டைத் தொட மாட்டேன் என்று சத்தியம் செய்தார். அதுபோலவே தன் இறுதிக்காலம் வரை நடந்தும் கொண்டார். தன் வாழ்வில் தனி மனித ஒழுக்கத்தைத் தங்கத்தைப் போல கடைப்பிடித்தார் ஹிட்லர். மது விடுதிகளுக்குச் சென்றாலும் மதுபானங்களைத் தொடாமல் , அருந்தாமல் இருந்துள்ளார். வரலாற்றில் பெரும் அரசுகள் வீழ்ச்சி அடைந்த இடம், பெண்கள் என்பதால் தன் வாழ்விலும் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தாமல் பொது வாழ்வின் இலக்கணமாகவே திகழ்ந்துள்ளார்(தன் கடைசி காலத்தில் மட்டும் பெண்ணால் எதிரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்தார் என்கிறது வரலாறு. )

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றமைக்கு யூதர்கள்தான் காரணம் என்னும் ஆழமான விதை ஹிட்லரின் ஆழ்மனதில் பதிந்தது. அதன் காரணமாகவே வரலாற்றில் யூத ஒழிப்பில் அதீத ஆர்வம் காட்டினார்.

ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஜெர்மனி ஏகாதிபத்திய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றது. அதற்குக் காரணம் ஹிட்லரின் ஆட்சி நிர்வாகம் என்பது மறுக்க முடியாத உண்மை.


ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார். அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான். அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது.
ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். "கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்!" என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.



முதல் உலகப்போரில் வெர்சைல்ஸ் ஒப்பந்தம் மூலம் வென்ற நாடுகள் ஜெர்மனியிடம் பல கோடிகளை நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொண்டன. ஜெர்மனியின் எல்லைகள் குறைக்கப்பட்டது. ஜெர்மனியின் இராணுவ பலம் குறைக்கப்பட்டது. இதனால் ஜெர்மானியர்கள் அவமானத்தால் தலைகுணிந்தனர். வேலை வாய்ப்புகள் இன்றி பசியின் கொடுமை நோக்கி ஜெர்மனி சென்று கொண்டிருந்த நேரத்தில் அரசியலில் கால்பதித்தார் ஹிட்லர். அதன்பிறகு வரலாற்றிலும் இடம்பிடித்தார். பசியால் வாடிய நாட்டை நேசித்து நேசித்து தன் கூர்த்த அறிவால் செதுக்கினார். இராணுவத்தை மேம்படுத்தினார். மக்களை மேம்படுத்தினார். உலக நாடுகள் ஹிட்லரை வீழ்த்த வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கும் போது பல நாடுகளை வென்று தன் ஆளுமைக்குள் வைத்திருந்தார் .

சிறந்த ஆளுமைமிக்க தலைவராக ஹிட்லர் உருவெடுப்பதற்குக் காரணம் அவரின் தனித்த பேச்சாற்றல். மிகச்சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களை தன் வயப்படுத்தினார். ஹிட்லரின் பேச்சு வசீகரம் மிக்கது என்று அன்றைய கால ஊடகங்கள் புகழ்மொழி பரப்பின என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் என்றில்லை. அதுதான் உண்மை. யூதர்களை அழிப்பதற்கு தனி அமைச்சகத்தையே உருவாக்கினார். அந்த அமைச்சகம் அந்தப் பணியில் மட்டும் செவ்வனே ஈடுபட்டது. வரலாற்றின் ஆகச்சிறந்த ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ஹிட்லர் யூத அழிப்பின் காரணமாக, பல நாடுகளின் எல்லைகளை தன் ஓவிய வரைகோடுகள் போல மாற்றியமையால் வரலாற்றின் சர்வதிகாரி என்னும் பட்டத்தைப் பெற வேண்டியதாயிற்று.

தோல்வியின் இறுதி மரணமே தவிர எதிரிகளிடம் சிக்கக் கூடாது என்பதில் நாஜிப்படைகள் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தன. அதன்படி ஏப்ரல் 30 ஆம் நாள் தன் கைத்துப்பாக்கியால் வரலாற்றின் பெரும்பக்கங்களை ஆண்ட அரசன் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாக வரலாறு பதிவு செய்கிறது.

‘என்றாவது ஒருநாள் சர்வ வல்லமை பொருந்திய நாடாக ஜெர்மனி மாறும்’ இது என் கனவு என்று முழக்கமிட்ட நாயகன் தன் கனவை அடைந்தே வீழ்ந்தார்.




வரலாற்று விரும்பிகள் வாசிக்க வேண்டிய நூல் - எனது போராட்டம் என்னும் மெயின் காம்ப்




கூடுதல் தரவுகள்


மேற்காணும் படத்தில் எல்லோரும் ஹிட்லரை வணங்க ஒரு வீரன் கைகட்டி நிற்கும் படம் வரலாற்றுப்பக்கங்களில் அலசப்பட்ட புகைப்படம்.









Wednesday, 21 February 2024

அறிய வேண்டிய நூறு வரலாறு - இந்தியாவின் மூன்று இயக்கங்கள் - பொ.சங்கர்

 

                             

                         இந்தியாவின் மூன்று இயக்கங்கள்  - பொ.சங்கர் 


 
         பாடப்புத்தகங்களில் வெறும் பத்திகளாக மட்டுமே பதிவு செய்யப்பட்ட சில வரலாறுகள் எதிர்காலத்தலைமுறையினர் வாசித்து அறிய வேண்டிய பகுதிகள்.   அவ்வகையில் இந்தியாவில் மூன்று இயக்கங்கள் வரலாற்று  ரீதியாக அறிய வேண்டியது அவசியம் .  சுதந்திர இந்தியா  இயக்கம், பூமிதான இயக்கம், சிப்கோ இயக்கம். இந்த மூன்று இயக்கங்களும் அமைதியான வழியில் போராடி மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கங்கள். வெற்றி கண்ட இயக்கங்கள். சுதந்திர இந்தியா இயக்கம் மக்களைச் சென்றடைந்த அளவு மற்ற இயக்கங்கள் மக்களுக்குத் தெரியவில்லை. வரலாறு அறிவோம். வாருங்கள். 

               சுதந்திர இந்தியா  இயக்கம்  மகாத்மா காந்தியடிகளின் பயணத்தால் பல மாற்றங்களையும் பல ஏற்றங்களையும் சந்தித்தது. பயணம்  செல்வதில் பெருவிருப்பம் கொண்டவர் மகாத்மா காந்தியடிகள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களுக்கும் யாத்திரை மூலம் பயணம் மேற்கொண்டார். பெரும்பாலும் இரயில்களில் பயணம் மேற்கொண்டு தேவைப்படும் இடங்களுக்கு காரிலும் , காலாற நடந்தும் பயணம் மேற்கொண்டு சுதந்திர இந்தியா  இயக்கத்தை  மகாத்மா காந்தியடிகள் வலுவூட்டினார். இந்தியாவின் பெரும்பாலான கிராமங்கள் தமிழகத்தில் சென்னை , ஊட்டி, கோவை, திருச்செங்கோடு , மதுரை , திருச்சி போன்ற நகரங்களுக்கு வந்து அங்கிருந்து குக்கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். 1930 மார்ச் 12 அன்று உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கி 250 மைல்கள் கொண்ட தண்டி கடற்கரை நோக்கி மூட்டுவலியுடன் நடந்தே சென்று ஏப்ரல் 6 அன்று தண்டி கடற்கரையில் ஒரு பிடி உப்பை அள்ளி கைகளை உயரே தூக்கியபோது பிரிட்டீஸ் இந்தியா ஆட்டம் காணத்துவங்கியது. மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த எழுச்சி காரணமாக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் இந்தியர்கள் சிறைகளை நிரப்பி  கைது செய்யப்பட்டனர்.

                              


 இன்றைய தலைமுறையினர் , உப்புக்காக எதற்கு இவ்வளவு போராட்டம் என்று கேலி செய்யலாம்.  ஆனால் இன்று எளிதாகக் கிடைக்கும் உப்பு அன்றைய காலங்களில் எளியோர்க்குக் கிடைக்காத உணவுப் பொருள் என்பதை அறிய வேண்டும். சுவாசிக்கக் காற்றும் அருந்த நீரும் இன்றியமையாதது போல உப்பும் இன்றியமையாதது என்றும் அனைத்து மக்களுக்கும் உப்பு கிடைக்கப்பெற வேண்டும் என்று பெரும் போராட்டத்தைத் காந்தி முன்னின்று நடத்த அந்த எழுச்சி இந்தியா எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது அகிம்சை போராட்டம் வலுவானலும் ஆங்கிலேய அரசு சில நேரங்களில் மகாத்மா காந்தியைப் பொருட்படுத்தாமல் இயங்கியது. 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலபாக் போராட்டத்தில் பலரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்ற போது தமது சபர்மதி ஆசிரமத்தில் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மேலும் தமது அகிம்சைப் போராட்டத்தை ‘இமாலயப் பிழை’ என்றும் சுட்டிக்காட்டினார். 1921 ஆம் ஆண்டு தாம் சார்ந்த காங்கிரசு இயக்கத்திற்கு நிதி சேர்க்க மீண்டும் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.



இந்தியா முழுவதும் 30 இலட்சம் இராட்டைகளை பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது பயணத்தைத் தொடங்கி இரயில்களில் பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில் பயணம் மேற்கொண்டார். தமது வாழ்வின் கடைசி காலம் வரை பயணம் , உண்ணாவிரதம் , அகிம்சை ஆகியவற்றை தீவிரமாகக் கடைப்பிடித்தார். காலங்கள் பல கடந்தும் கால எல்லையின்றி மாறுபட்ட கொள்கை உடையோரையும் நேசிக்க வைத்த காந்தியம் அவசியம் அறிய வேண்டியது.  காந்தியின் இறுக்கமான பல பிடிவாத குணங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டும். 

2.  பூமிதான இயக்கம் 

                                    


          சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்கம் பூமிதான இயக்கம். பூமிதான இயக்கத்திற்காக  பல்லாயிரம் மைல்களுக்கு நடந்தே சென்று தனது   காலடித்தடங்களின் மூலம் இலட்சியத்தை அடைந்தவர் வினோபாவே.    இந்த லட்சியம் ஒருவருக்கானதல்ல. இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காகத் தொடங்கிய இலட்சியப் பயணம் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இருந்துதான் தொடங்கியது. வானூர்தி , வாகனங்கள் இருந்தும்  நடந்து நடந்து தனது காலடித்தடங்களின் மூலமாக இந்தியாவின் இதயத்தை நிரப்பிய  வல்லமை வினோபா பாவே   குறித்து இன்றைய இளைய தலைமுறையினர் இந்த வரலாற்றை  அறிவது அவசியம். 

              நிலம் என்னும் சொல் நீண்ட காலப் போரட்டத்தின் நீட்சி என்பதை நீண்ட பயணத்தின் மூலம் அடைந்து தடம் பதித்த வினோபா பாவே தம் வாழ்நாளில் இரு பயணத்தைத் திட்டமிட்டார். இந்தியச் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் கல்கத்தா சென்று புரட்சியில் ஈடுபடலாமா? காசிக்குச் சென்று துறவறம் மேற்கொள்ளலாமா? என்று இரு திட்டங்களில் இருந்தவரை ஒரு இலட்சியத்தை நோக்கி நடக்க வைத்த பெருமை மகாத்மா காந்தியை சாரும். மகாத்மா காந்தியின் உரையைக் கேட்டு தம் வாழ்நாளில் அகிம்சையே சிறந்த இலட்சியம் என்ற நோக்குடன் பயணத்தைத் தொடங்கி பல , காந்தியம் என்னும் இலட்சியத்தை காந்தியை விட சரியாகப் பின்பற்றியவராக மகாத்மா காந்தியாலேயே அடையாளம் காட்டப்பட்டார். 

        1947 ல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மகாத்மா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அகிம்சை என்னும் இலட்சியத்தைப்  போதிக்க ஊரூர் தோறும் சென்ற வினோபா பாவே அவர்களின் பாதை திடீரென ஒரு களத்தில் , ஒரு கிராமத்தில் , ஒரு மரத்தடியில் தன் பாதையை மாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். அகிம்சையைப் போதிக்கும் வினோபா பாவே விடம் ஒரு முதியவர் எழுந்து, ஐயா நாங்கள் அகிம்சையாளர்களே. ஆனால் இந்தச் சமூகத்தின் நிலையால் நாங்கள் வயிறு என்னும் ஆயுதம் சுமந்து அகிம்சையைப்  பின்பற்றமுடியாமல் தவிக்கிறோம் என்றார். மரத்தடியில் அமர்ந்து மாற்றி யோசிக்கத் தொடங்கியர் தொடங்கிய இலட்சிய இயக்கம் பூமிதான இயக்கம். 

        இந்தியாவின் காந்திய மனிதராக , மகாத்மா காந்தியாலேயே அடையாளம் காட்டப்பட்ட வினோபா பாவே இன்றைய தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி என்னும் இடத்தில் , முதியவரின் புலம்பலுக்குத் தீர்வாக நிலம் கொடுக்க யார் தயார் ? என்ற வினாவுடன் எதிர்நோக்க இராமச்சந்திரன் என்னும் நிலக்கிழார் முதன்முதலாக நூறு ஏக்கர் நிலத்தைத் தான் தானமாகத் தருவதாக உறுதியளித்தார். இந்த உறுதி வினோபா அவர்களை பல இலட்சம் மைல்கள் நடக்கத் தூண்டியது. 

           நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் என்னும் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி 14 ஆண்டுகளில் 75 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் தனது பாதம் தேய , இலட்சிய நெருப்பை அணைய விடாமல் நடந்தார். அவரின்காலடித் தடம்மண்ணையும் மனிதர்களையும் இணைக்கும் தடமாக மாறி மகத்தான இலட்சியத்தை நோக்கி மாபெரும் மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கியது. 



         தீராத துயர் தரும் சிறு சிறு நோய்கள் வினோபா அவர்களை வாட்டினாலும் தினமும் இருபது மைல்கள் நடந்து தம் தடங்களினால் தடம் பதிக்க வேண்டும் என்ற உயரிய ஒற்றை இலட்சியத்துக்காக நடக்கத் தொடங்கியவரின் எளிமை , நோக்கம் , தீ்ர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல நடுத்தர விவசாயிகளும் தமது நிலங்களைத் தரத் தொடங்கினார்கள். நிலங்களைப் பெற்று உரிய முறையில் சட்ட வழியில் ஏழைகளுக்கு நிலம் வழங்குவதை மிகச் சரியாகச் செய்யத் தொடங்கினார். எளிய மக்களிடம் எளிய மொழியில் பேச வேண்டும் என்பதற்காகத் தம் பயணத்தில் எட்டு இந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இந்தியா என்னும் நாடு  வேளாண் குடிகளின் உழைப்பால் உயர்ந்த நாடு என்பதைக் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்களின் இல்லத்தில் இலட்சிய விளக்கை ஏற்றினார் வினோபா . 

             ஐந்தடி உயரம் கொண்ட சட்டை அணியாத வினோபா பாவே எளிய மக்களின் இலட்சியங்களுக்கு விடிவெள்ளியாக மாறத் தொடங்கினார். இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்று மிகப்பெரிய இலட்சியத்தின் மீட்சிப்பாதையை உருவாக்கிய வினோபா பாவே அவர்களைப் போற்றி டைம் நாளிதழ் தமது அட்டைப்படத்தில் இவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து மரியாதை செலுத்தியது. 

           இந்தியா முழுவதும் எளிய குக்கிராமங்கள் நோக்கி நடந்து நடந்து 43 இலட்சம் ஏக்கர் நிலங்களை நிலக்கிழார்களிடம் பெற்று நிலமில்லாத ஏழைகளுக்குப் பிரித்துத் தந்தார் வினோபா பாவே. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புக் கொண்ட நிலங்களைப் பெற்று ஏழைகளுக்குத் தந்த வினோபா பாவே நாள் ஒன்றுக்கு வெறும் இரண்டு அணாக்கள் மட்டுமே தம் செலவான உணவுக்குப் பயன்படுத்தினார் என்பதை இன்றைய வளரிளம் தலைமுறையினர் அறிய வேண்டும்.  

           பாதைகளே இல்லாத இடத்திலும் கூட வினோபா அவர்களின் பாதம் பட்டு பூமிதான இயக்கம் மக்கள் இயக்கமாக வளரத்தொடங்கி பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த இந்த இயக்கத்தின் இலட்சியம் இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் நம்பிக்கையின் உதயத்தை மலரச் செய்தது. 

         மிகப்பெரிய பயணம் முதல் அடியில்தான் தொடங்கும் என்பது போல மிகப்பெரிய இயக்கத்தின் இலட்சியம் வினோபா அவர்களின் பல இலட்சக்கணக்கான காலடித்தடங்களால் பூர்த்தி செய்யப்பட்டது. 

         இலட்சியத்திற்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது என்னும் இலட்சியத்துடன் பயணித்த வினோபா பாவே அவர்களின் காலடித்தடம் நாம் பணிந்து வணங்க வேண்டிய , கடைப்பிடிக்க வேண்டிய , காக்க வேண்டிய காலடித் தடம் என்பதை உணர்வோம்.   

3. சிப்கோ இயக்கம்



           காடுகளே இந்தியாவின் பொருளாதாரம் என்று இந்திய அரசுக்குப் பாடம் எடுத்தவர்கள் மலைவாழ் மக்கள். தொழிற்புரட்சியே இந்தியாவை மேம்படுத்தும் என்ற கோணத்தில் இமயமலையின் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அற்று எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும் வெட்டிக்கொள்ளலாம் என்ற தீவிரத்தை எதிர்த்து சுந்தர்லால் பகுகுணா என்ற மாமனிதரின் போராட்டம் சிப்கோ இயக்கமாக மாறியது.1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டு  மரங்களை வெட்டக்கூடாது என்னும் நோக்கில் பல பகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்த இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார்.

        மகாத்மா காந்தியடிகள் மார்ச் மாதம் தண்டி யாத்திரையைத் தொடங்கியதன் நினைவாக மார்ச் மாதம் சிப்கோ இயக்கப் பயணத்தைத் தொடர்ந்தார். கவுரா தேவி என்னும் பெண்ணின் தலைமையில் பல பெண்கள் மரங்களைப் பற்றிக் கொண்டு ‘ இந்தக் காடும் இந்த மரங்களும் எங்கள் தாயின் வீடு’ என்று முழங்கினார்கள். மரம் வெட்ட வந்தவர்கள் தடுமாறினார்கள். 1974 மற்றும் 1975 ஆண்டுகளில் இமயமலை மத்தியப்பகுதிகள் முழுவதும் சுந்தர்லால் பகுகுணா தலைமையில் 5000 மைல்களுக்கு மேல்  பயணம் மேற்கொண்டனர். சிப்கோ இயக்கம் பற்றி ரோஸ் என்பவர் எழுதிய The People Who Hugged the Trees என்ற நூல் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். சிப்கோ இயக்கத்தின் பெரும்பாலான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. சுந்தர்லால் பகுகுணாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெரும் படை செயல்படத்தொடங்கியது. சிப்கோ இயக்கம் வெறும் போராட்ட இயக்கமாக இல்லாமல் மலைவாழ் மக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கும் பாடுபடத்தொடங்கியது. காட்டு வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுத்தந்தது. டெகரி பகுதியில் சுரங்கம் தோண்டுவதை எதிர்த்து சிப்கோ இயக்கம் போராடி அந்தத் திட்டத்தை தடை செய்யும் வரை போராடியது.

                   


       18 ஆம் நூற்றாண்டிலேயே சிப்கோ இயக்கம் போலவே பெண்கள் மரங்களைக் கட்டி அணைத்து வெட்டக்கூடாது என்று இராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் நடத்திய நிகழ்வும் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட வேண்டும்.

       சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு அகிம்சை போராட்டம் இந்தியாவில் வெற்றி பெற சுந்தர்லால் பகுகுணா என்ற மனிதரின் பயணம் உதவியது. இந்தியாவின் மூன்று இயக்கங்கள் வரலாற்றால் வாசிக்க வேண்டிய, அறிய வேண்டிய முக்கியமானவை ஆகும்.

 

 

Tuesday, 20 February 2024

அறிய வேண்டிய நூறு வரலாறு - நெப்போலியன் போனபர்ட்

                                    அறிய வேண்டிய நூறு வரலாறு- பொ.சங்கர்

                                                    வறுமையாலும் கலகத்தாலும் சிதறுண்ட  பிரான்ஸ் நாட்டைத்  தன் ஆட்சித் திறமையால் மீட்சிமை பெற வைத்தவரின் வரலாறு அறிய வேண்டுமா? மொத்த ஐரோப்ப உலகத்தையும் தன் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு அரசாட்சி செலுத்தியவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா?  இழந்த நாட்டை வீழ்ந்து போது வீறு கொண்டு போராடி மீட்டவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா? இப்படி  பல வரலாறுகளுக்குச் சொந்தமான மாவீரன் யார்? நெப்போலியன் போனபர்ட் என்னும் பெயரே வரலாறாக, வரலாறே பெயராக மாற்றிய மாவீரனின் வரலாறு அறிவோம் வாருங்கள். 

       பிரான்ஸ் நாட்டின் கார்சிகா தீவில் 1769 ல் பிறந்த நெப்போலியன் சிறுவயதில் சாதாரண மாந்தருக்கு மகனாகப் பிறந்து மன்னனாக மாறிய இவரின் வாழ்வு சரித்திரத்தின் சாதனைச் சுவடுகளில் காலம் கடந்தும்  வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் மகனாகப் பிறந்து பார் புகழும் மன்னனாக அவதாரம் எடுத்த நெப்போலியன்  , தாம் கடந்து வந்த பாதைகளைப் பார் புகழும் வரலாறாக மாற்றினார். 

           நெப்போலியன்,  பிரெஞ்ச் இராணுவப்  படையின் ஆர்டிலரி பிரிவில் சேர்ந்து டுலால் போரில் சிறப்பாகப் போரிட்டமைக்காக, பிரெஞ்ச் படையின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.  படைத்தளபதியாக முன்னின்று ஆஸ்திரிய படைகளை வென்ற பிறகு நெப்போலியனின் புகழ் நாடு கடந்து பரவியது. படைத்தளபதியாக பல நாடுகளை வென்றவர் ஒரு கட்டத்தில் தன் நாட்டின் அரசனாக 1804 ல்  தன்னைத் தானே முடிசூட்டிக் கொண்டார். 

      1804 முதல் 1815 வரை பல நாடுகளை வென்றெடுத்து பிரெஞ்ச் நாட்டை பல வழிகளில் மேம்படுத்தினார். வரலாற்றில் ‘நெப்போலியன் போர்கள்’ என்றழைக்கப்படும் இந்தப் போர்களினால் பலவற்றை இழந்து , பலவற்றைப் பெற்று தம் தேசத்தைக் கட்டமைத்தார். புரட்சி, கலகம் , வறுமையால் அமைதியை இழந்திருந்த பிரெஞ்ச் நாடு நெப்போலியன் மன்னராக ஆனபிறகுதான் அமைதியான வாழ்வை வாழத்தலைப்பட்டனர். பிரெஞ்ச்  நாட்டின் உயர் வகுப்பு மக்களின் அதிகாரத் திமிரை அடக்கி , பிரெஞ்ச் நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாழ்வை இழந்து , உரிமைகளை இழந்திருந்த தேசத்திற்கு நெப்போலியன் விடிவெள்ளியாக மாறினார். பிரெஞ்ச் நாட்டின் அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் CODE OF NEPOLEAN என்று அழைக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் BANQUE DE FRANCE வங்கியை நிறுவி நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவினார். ஜெர்மனி, இத்தாலி , போலந்து , டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 

                 

       அமைதி இல்லாத , உரிமை இல்லாத , வறுமை நீடித்திருந்த ஒரு தேசத்தின் மக்களுக்கு உரிமைகள் பலவற்றை அளித்து வறுமை இல்லாத நாடாக மாற்றிய நெப்போலியன் வரலாற்றில் அவசியம் படிக்கப்படவேண்டிய பாடம். இவ்வளவு புகழுடன் விளங்கியவரின் வீழ்ச்சியையும் நாம் அறிய வேண்டும்.  

ஐரோப்பா முழுமையையும் போரில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கடைசி வரை இங்கிலாந்தை நெப்போலியனால் வெல்ல முடியவில்லை. அதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாடும் இங்கிலாந்துடன் வணிகத்தொடர்புகள் கொள்ள கூடாது என்று தடை விதித்தார்.

நெப்போலியனின் தடையை மீறி ரஷ்ய நாடு இங்கிலாந்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டது. இதனால் ரஷ்யா மீது போர்ப்பிரகடனம் செய்து ஐந்தரை இலட்சம் படை வீரர்களுடன் ரஷ்யாவை முற்றுகையிட்டார். ரஷ்ய படைகள் தம்மை எதிர்க்கும் , ரஷ்ய மன்னன் எதிர்கொண்டு தம்மோடு போர் புரிவான் தம் படையால் ரஷ்யாவை வீழ்த்தலாம் என்று எண்ணியவரை மாஸ்கோ என்னும் மனிதர்கள் இல்லாத நகரம் வரவேற்றது. மன்னன் இல்லாத , மனிதர்கள் இல்லாத ரஷ்ய நாட்டில் கடுமையான பனியும் கடுங்குளிரும் பிரெஞ்ச் வீரர்களை வாட்டியது. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து பிரெஞ்ச் நாட்டைக் கைப்பற்றிய நெப்போலியன் ரஷ்ய நாடு குறித்துத் திட்டமிடாமல் நடத்திய போரால் கிட்டத்தட்ட பல இலட்சம் வீரர்களை இழந்தான். 30 ஆயிரம் படை வீரர்களுடன் நாடு திரும்பிய நெப்போலியனை ரஷ்யா ,இங்கிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரிய நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கியது. பல இலட்சம் படை வீரர்களை இழந்த நெப்போலியன் தம் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான். 

நான்கு நாடுகளும் கூட்டாகத் தாக்கியதில் பிரெஞ்ச் வீழ்ந்தது. எல்பா தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி மீண்டும் பிரெஞ்ச் நாட்டின் சக்ரவர்த்தியானார்.  இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தை பெல்ஜியத்தில் வாட்டர்லூ என்னுமிடத்தில் எதிர்கொண்டார். சூரியன் மறையாத , தோல்வியே இல்லாத இங்கிலாந்திடம் நெப்போலியன் மீண்டும் தோற்றார். வரலாற்றில் வாட்டர்லூ போர் நீங்கா இடம் வகித்தது. நெப்போலியனும் நீங்கா இடம்பிடித்தார். பல சிறப்புகளை , பல வரலாறுகளை உருவாக்கிய நெப்போலியனை ஹெலினா தீவில் ஆறு வருடங்களுக்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து வைத்தனர். மங்காத புகழுக்குச் சொந்தக்காரனாக விளங்கிய நெப்போலியன் தன் வாழ்வில் வீழ்ச்சி அடைந்தாலும் வரலாற்றில் வீழ்ச்சி அடையவில்லை. அறிய வேண்டிய வரலாற்றில் நெப்போலியன் வரலாறு தனித்துவமானது. 


Wednesday, 14 February 2024

விடை காண முடியாத வினாக்கள்

விடை காண முடியாத வினாக்கள் பட்டியல் இந்தியாவின் சாலைகள் போல நீளமாகவே உள்ளது. 
1.நீதிமன்றம் என்று பெயர். ஆனால் நிதி இருந்தால்தான் நீதி கிடைக்கிறது. இந்த வினா சாமானிய மக்களுக்கு பல காலமாக விடை கிடைக்காத  கிடைக்காத வினாவாகவே உள்ளது. உதாரணமாக இந்தியாவின் உயரிய அரசியல்வாதிகளுக்கும் திரை நட்சத்திரங்களுக்கும் இரவு இரண்டு மணிகளுக்குக் கூட நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வார்கள் அவர்களுக்கு ஏற்றவாறு.. ஆனால் சாமானிய மக்களுக்கு வாய்தா என்னும் வினா நீண்டு கொண்டே செல்கிறது. நீதி எப்போது நீதியாக இருக்கும் என்பதை நாம் எப்போது உணர்வது ?
2. கோயில்கள். மன நிம்மதி வேண்டி மக்கள் படை எடுக்கும் இடம். ஆனால் பொது தரிசனத்திற்குப் பொதுவாகவே நீண்ட வரிசை. பத்து ரூபாய் செலுத்தினால் பொது தரிசனத்திற்கு சற்று குறைந்த வரிசை. நூறு ரூபாய் செலுத்தினால் வரிசையின் நீளம் குறையும். இந்த வரிசைகளில் பணம் செலுத்தாமல் கோயில் பணியாளர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தினால் எந்த வரிசையிலும் நிற்காமல் உள் சென்று காண இயலும் இறைவனை. இந்த வினாவிற்கும் விடை எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. 
3. அரசியல்வாதிகள். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை நம்பி வேறொரு மாற்றத்தைத் தேடி, விடையைத் தேடி வாக்களிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ விடை காண முடியாத வினாக்கள் மட்டுமே. இதில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று, தேர்தல் காலத்தில் மக்கள் தம் வியாபாரத்திற்காக மருத்துவத்திற்காக பயன்பாட்டிற்காக கொண்டு செல்லும் தொகைகளைப் பறிமுதல் செய்து செய்தியாக ஒளி(லி)பரப்புவார்கள்.!. ஆனால் எந்த அரசியல்வாதியின் எந்த அரசியல் கட்சியின் மொத்த தொகையும் கைப்பற்றப்பட்டதாக வரலாறு இல்லை. இதற்கு விடையும் இல்லை. 

Thursday, 16 March 2023

இராஜராஜ சோழன் - உடையார் நாவல்



      பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்துப் புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்தவிடை பாலகுமாரனின்            ' உடையார்'.

      ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்குச் சோழ தேசம் காண வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கைப்பிடித்து அழைத்துப் போகிறார் பாலகுமாரன். ஒரு அரசன் எப்படி இருப்பான் ,எப்படி பேசுவான், எப்படி நடப்பான், எப்படி உத்தரவு போடுவான் என அத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.

சுந்தர சோழனுக்குப் பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,


இராசராசன் இல்லை என்றால் தமிழுக்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை. சிதம்பரத்தில் தமிழ் - தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழை அந்த மகான் மீட்டுக் கொடுத்தது தான் அத்தனையும்.

இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை. அவனோடு வாழ்ந்து அவனோடு வாழ்வீர்கள்.

என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன்.கடைசி அத்யாயம் வாசித்து 20 நிமிடம் தனித்தேன். நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் .என் அரசன் இறந்தது போல் அழுதேன்.என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன். கடவுள். நீ எங்கே? இப்போது எங்கே இருக்கிறாய்? நான் இனி உன்னை எப்படிப் பார்ப்பேன்? இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டுக் கேட்ட கேள்வி.

நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலைக் கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை. எம் மக்கள் கட்டியது என்றும்,

"நாம் கொடுத்தனவும்

நம் அக்கன் கொடுத்தனவும்

நம் பெண்டுகள் கொடுத்தனவும்

கொடுப்பார் கொடுத்தனவும் "

என கல்வெட்டில் எழுதச் சொன்னானே இவன் அரசனா, இல்லை அவன் ஈசனின் குழந்தை.

கோவிலுக்கு நிவந்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல்வெட்டாக பதியப்பட்டு உள்ளது.

இதில் வரும் கதை 95% உண்மை சிறிது கற்பனை. இதில் வரும் பெயர்கள் 98% உண்மை.

நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன். ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்தது.

ஆனால் உடையார் படித்து அதன் பிறகு 

நான் தஞ்சை போனேன்.

அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு

" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி.....

என்று அவன் 
மெய்க்கீர்த்தியை உரக்கச் சொன்னேன். அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டுத் தடவி அவன் நின்ற இடம் தொட்டு கண்ணில் ஒற்றினேன்.

இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்தக் கல்லைத் தடவி இருப்பான்.இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான்., இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டுத் தடவி மெய் சிலித்து போனேன்.

அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வணங்க வேண்டும் போல இருந்தது.

அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை.அவர்களின் மாட மாளிகைகள் இல்லை. எல்லாம் பின்னால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது.

ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..

"சந்திரர் சூரியர் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "

வாழ்க சோழ தேசம்

வளர்க தமிழ்

வாழ்க இராசராசன்



** உங்கள் வாழ் நாளில் கட்டாயம் 'உடையார்' படியுங்கள் ***

உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்தப் பிரமாண்ட கோவில் முன் நின்று, கண்ணில் நீர் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவீர்கள்.வணங்குவீர்கள்..

இப்படி ஒரு படைப்பைத் தந்த எழுத்தாளர் 'எழுத்துச் சித்தர் திரு பாலகுமாரன்' அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

Monday, 18 July 2022

கவிஞர் புவியரசு


கவிஞர் புவியரசு அவர்கள்

1. உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன்புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாக 1930 ஆம் ஆண்டில் பிறந்தவர் கவிஞர் புவியரசு.
இவரது இயற்பெயர் எஸ். ஜெகநாதன்.ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும்.
2. இடைநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் கற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன.


3. வானம்பாடி கவிஞர்களில் மூத்தவர் , பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியின் முதல் மாணவர் கவிஞர் புவியரசு.

4. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருதை இரண்டு முறை பெற்ற மூத்தப் படைப்பாளி.

5. கேரள மாநிலத்தின் சாகித்திய புரஸ்கார் விருது பெற்றவர்.

6. கலைஞர் கருணாநிதி அவர்களால் பொற்கிழி விருது பெற்றவர்.

 7. ‘வானம்பாடி’ இதழின் தாய்ப்பறவை. ‘தேடாதே தொலைந்துபோவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று அக்காலகட்டத்தின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்குமாறு கவிதை எழுதியவர்.

 8. அமைப்புகளில் முடங்கிக் கிடந்த கவிதைகளை வீதிவரை கொண்டு வந்து வீட்டில் இருந்தவர்களை வெளியே வர வைத்தது வானம்பாடி அமைப்பின் மிகப்பெரிய சாதனை.. வானம்பாடியின் முகவரியும் கூட கவிஞர் புவியரசு தான்.

 9. சலனமில்லாத மனதை உடையவர் தான் சத்குரு. என் தந்தை சலனமில்லாத மனம் உடையவர். அதனால்தான் என் இல்லத்திற்கு சத்குரு இல்லம் என்று பெயர் வைத்துள்ளேன்.

 10. என்னுடைய தத்துவத் தேடுதலுக்கு மேடை அமைத்துக் கொடுத்த இடம் பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியே என்று பலமுறை கூறி வருபவர். அவ்வகையிலேயே என்னுடைய மிர்தாதின் புத்தகம், அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் என்ற நூலும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறுபவர்.

11. பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரியில் மாணிக்க வாசகரையும் கற்கவும், மபொசியையும் , மார்க்ஸையும் கற்கவும் பேரூராதீனம் 24 ஆம் சன்னிதானம் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறுவார்.

12. தலைவனை நம்பாதே தத்துவத்தை நம்பு என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருப்பவர் கவிஞர் புவியரசு.

13. பலராலும் இன்றுவரை பாராட்டப்படும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக மிர்தாதின் புத்தகம் கரமசோவ் சகோதரர்கள் நூலும் திகழ்கின்றது.
 
14. இந்தியாவின் தலைசிறந்த 10 மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் கவிஞர் புவியரசுக்கு இடம் உண்டு.

 15. கரம்சோவ் சகோதரர்கள் நூலை மொழிபெயர்த்த இவர்தான் கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் ஓஷோ பாகம் 1 என்ற நூலையும் மொழிபெயர்த்தவர். இரண்டு தத்துவங்களும் வேறு வேறு மார்க்கத்தை கொண்டவை. ஆனால் இரண்டு மார்க்கத்திலும் தீவிர ரசிகர்களை உடையவர் கவிஞர் புவியரசு அவர்கள்.
 
16. ஓஷோ நூல்களின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக 
அன்பின் அதிர்வுகள், இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள், உன் அற்புத ரோஜா மலரட்டும், 
புல் தானாகவே வளர்கிறது என்று இவரது மொழிபெயர்ப்பு நீண்டு கொண்டே செல்கிறது..

 17 . நாம் உணராத வேற்று மொழி இலக்கியங்களான கலீல் கிப்ரானும், உமர் கய்யாமும், தாகூரும்,ஷேக்ஸ்பியரும் புவியரசு வழியாகவே தமிழகம் வந்தடைந்தார்கள்.

18. கவிஞர் , நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என அத்துணை துறைகளிலும் தனது பிரமாண்டமான கப்பலை செலுத்தி வருபவர்..
மறக்க இயலாத கதைகளாக 
ஒப்பம், அடக்கடவுளே, தோன்றாத் துணை, அஜீரணம், மகன் தந்தைக்காற்றும் உதவி, தாளிப்பு, குழப்பம் என்னும் பட்டியல் நீள் வரிசை கொண்டது...

19.பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல்’ என்ற முழக்கத்துடன் வானம்பாடி கவி மடல்கள் வலம் வந்தன.

20. புரூக் பாண்ட் தேயிலை நிறுவனத்தின் லட்சினை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர் புவியரசு வின் அப்பாதான். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர் அப்பா. ஓவியம் வழியாக ஒருகட்டத்தில் தத்துவத்துக்குப் போய்விட்டார். அவரின் பெயர் சுப்பையா.

21. நடிகர் கமல்ஹாசன் மதிக்கும் ஆசிரியர்களில் கவிஞர் புவியரசு முக்கியமானவர்.

22. மருதநாயகம் கதை வடிவமைப்பு கமல்ஹாசன் , கவிஞர் புவியரசு, எழுத்தாளர் சுஜாதா ஆகிய மூவரும் உருவாக்கியதே ஆகும்.

23. கவிஞர் புவியரசு அவர்களின் படைப்பில் முக்கியமானதாகக் கொண்டாடப்படும் 'மிர்தாத்தின் புத்தகம்' நூலை ரமணாசிரமத்திலிருந்து அனுப்பி மொழி பெயர்க்கச் சொன்னார்கள் என்றும், இதை மொழிபெயர்த்து விட்டு செத்து போ என்று அவராகவே நினைத்து எழுதியுள்ளார்.

24. ஞானிகள் நமக்குப் பாதைகளைச் சுட்டிக்காட்டும் கைகாட்டி மரங்களாக நின்றுகொண்டிருப்பார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார். 

25. கவிஞர் புவியரசு அவர்கள் ,பயணவழி அனுபவங்களே பாடங்கள். அதுவே வாழ்க்கை . அனுபவங்களை உணருங்கள் என்று வலியுறுத்துவார்.

26. கவிஞர் புவியரசு அவர்களின் மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பானது இன்று வரை மிகச் சிறந்த சாதனையாக உள்ளது.

27. நடிகர் பார்த்திபனுடன் ஹவுஸ்புல் படத்தில் இணை இயக்குநராகவும் கவிஞர் புவியரசு பணியாற்றியுள்ளார்.

28. சாகித்ய அகாடமி விருதுகள் கவிஞர் புவியரசு அவர்களுக்கு, வங்காளக் கவிஞன் காஜி நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான புரட்சிக்காரனுக்காகவும், கையொப்பத்திற்காகவும் வழங்கப்பட்டன.

29. ஒரு இரயில் பயணத்தில் "வானத்திற்கும் வாசல் திறக்கும்" என்ற மரபின் மைந்தன் முத்தையா மூலமே ஓஷோ பற்றிய அறிமுகம் கவிஞர் புவியரசு அவர்களுக்குக் கிடைத்தது. 

30. இன்றைய ஆசிரியர்களுக்கே ஓஷோவைத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு செல்ல முடியும்? என்னும் ஆதங்கத்தை அடிக்கடி வெளியிடுவார்.

31. தமிழரசு இயக்கத்தில் பங்குகொண்டு தமிழ் ஆட்சி மொழி- பயிற்சி மொழி -மற்றும் தமிழகஎல்லைப்போராட்டங்களிலும் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றவர்.

32. கவிஞர் புவியரசு அவர்களின் ஞானக்கிளி என்ற 13 வாரத்தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று .

33. ‌மூன்றாம் பிறை நாடகக்காவியம் பல 
பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.

34. மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசைப் பெற்றுள்ளார்.

35. திரைப்படத் துறையில் பங்கு கொண்டிருந்த கவிஞர் புவியரசு கேரள திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

36. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. 

37. மார்க்சியவாதியாய் இருந்த எனக்கு மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தி என்னுடைய தத்துவத் தேடலுக்கு வழி வகுத்தவர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களே என்று கவிஞர் புவியரசு அடிக்கடி மேடையில் கூறுவார்.

38. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் முதல் மாணவர்களில் கவிஞர் புவியரசு அவர்களும் , திரு.மணவாளன் அவர்களும் முக்கியமானவர்கள்.

39. உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற போது கலைஞர் கருணாநிதி அவர்கள் விரும்பி அழைத்தும் , கொண்ட கொள்கை காரணமாக மறுத்தார். கலைஞர் கருணாநிதி அவர்கள், கவிஞர் கனிமொழி மூலம் பலமுறை வலியுறுத்தியும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் கவிஞர் புவியரசு.

40. கவிஞர் புவியரசு அவர்கள் , தமது தத்துவத்தின் தலைவராக திரு.மபொசி அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த போது , தமது தலைவனே கொள்கை மாறியதற்கு(திராவிட ஆதரவு) மிகவும் வருந்தி அதனை ஒரு பொது மேடையிலும் குறிப்பிட்டுள்ளார்.

41. மார்க்சிய திறனாய்வாளர் திரு. ஞானி அவர்களும் கவிஞர் புவியரசு அவர்களும் நெருங்கிய நண்பர்கள்.

42. கவிஞர் புவியரசு அவர்களின் இளமைக் காலத்தில் பாதி நாட்கள் சிறை , மீதி நாட்கள் பேரூராதீனம் தமிழ்க் கல்வி என்றே கழிந்தது. 

43. கவிஞர் புவியரசு அவர்கள் நாடகத் துறையிலும் சிறந்து விளங்கி வருபவர். இவர் இயற்றிய பல நாடகங்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளது.

44. வானம்பாடி கவிஞர்கள் , "மானுடம் பாடும் வானம்பாடி" என்னும் நோக்கில் கவிதைகள் எழுதி தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

45. வானம்பாடி என்பது இதழ் அல்ல , இயக்கம் என்று கவிஞர் புவியரசு அடிக்கடி குறிப்பிடுவார்.

46. உலகின் மிகச்சிறந்த நல்ல நூல்களை எந்த மாநிலத்தில் அழகாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் எனில் மலையாள இலக்கியம் என்று மறுக்காமல் கூறி வருபவர் கவிஞர் புவியரசு.

47. கவிஞர் புவியரசு அவர்கள் ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமையோடு திகழ்கிறார். ஆங்கிலத்தை பள்ளி, கல்லூரியில் கற்காமல் Reader's digest எனும் இதழ் வாயிலாகவே கற்றுத் தேர்ந்தவர்.

48. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தை அறிஞர் அண்ணாவுடன் அமர்ந்து பார்த்த நிகழ்வு , தன் வாழ்நாளில் மறக்க இயலாத ஒன்று என்று எப்போதும் குறிப்பிட்டு மகிழ்வார்.

49. இலக்கிய வாழ்வு வாழ்ந்ததில் நிறைவு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. சின்ன மனத்தாங்கல்களும் இருக்கின்றன... அதில் முக்கியமானது, புறக்கணிக்கப்படுதல்.
எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்ற பலருக்கும் அது இருக்கிறது என்பது கவிஞர் புவியரசு அவர்களின் முக்கிய வினாவாக இன்றும் தொடர்கிறது.

50. 91 வயதிலும் தமிழ் இலக்கிய வானிலும் மொழி பெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கும் கொங்கு நாட்டின் மணி மகுடம் கவிஞர் புவியரசு.

இன்னும் பல நூல்கள் கவிஞர் புவியரசு அவர்கள் மூலம் இந்த உலகம் பிரசவிக்கும்..

அன்புடன் சங்கர்.

Monday, 30 May 2022

நான் விரும்பும் தலைவர் - வ.உ. சிதம்பரனார்

 நான்  விரும்பும் தலைவர் - வ.உ.சிதம்பரனார்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை

  2. பிறப்பும் இளமையும்இளமையும்

  3. தேசவிடுதலைப் பணிகள்

  4. இவரது சேவைகள்

  5. முடிவுரை

முன்னுரை

இந்திய சுதந்திர போராட்டத்திலே தனது அளப்பரிய தியாகத்தினால் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவர்அறியப்பட்டவர் வ.உ சிதம்பரனார் ஆவார். இவரது வாழ்க்கை , இவரது சேவை , இவரது போராட்டங்கள் இக்கட்டுரையில் கட்டுரையில் நினைவுகொள்ளப்படுகிறது.

பிறப்பும்  இளமையும்இளமையும்

 வ.உ.சிதம்பரனார்  தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலுள்ள “ஒட்டப்பிடாரம்” எனும் இடத்தில் 05 செப்டம்பர் 1872 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தனது இளமை  முதலே சிறந்த கல்வி அறிவும் , பிற நல்ல குணங்களை உடைய மனிதராக விளங்கினார். வலியவர்களால் எளியவர்களுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் இவர் மனம் கலங்கி அவர்களுக்கு உதவும் குணம் உடையவர்.

         திலகர் போன்ற தேசவிடுதலைப் போராளிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு 1905 இல் இந்திய காங்கிரஸில்  தன்னை இணைத்துக்க் கொண்ட இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.மிகச்சிறந்த தனது அறிவாற்றலால் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இவரது வாழ்க்கைப் பயணம் முழுவதும்   போராட்டமாகவே விளங்கியது.

தேசவிடுதலைப்  பணிகள்

ஆங்கில அரசு இந்தியர்களை எல்லா வகையிலும் அடிமைப்படுத்துவதை கண்டு கொதித்த இவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெபெனிக்கு எதிராக 1906 இல் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” நிறுவனத்தை இவர் துவங்கினார்.

“எஸ். எஸ் கார்னியோ” “எஸ். ஏஸ் காவோ” என்ற இரு கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களின் எதிர்ப்பைக் காட்டினார். அதனால்  கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். இவரது போராட்டங்களைக்க் கண்டு கோபமடைந்த ஆங்கில அரசு இவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தி இவரை சிறையில் அடைத்தது.அந்தத் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே,  சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் ,  பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார். 

                    கோயமுத்தூர் சிறைச்சாலையில் இருந்த போது ஆங்கிலேய அரசு இவரை செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியது.  மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்  நோவதுவுங் காண்கிலையோ?” என்று அவரின் உற்ற நண்பர் பாரதியார் மனம் நொந்து பாடினார்.

இவரது சேவைகள்

          இவரது சேவைகள் காலம் கடந்தும் வாழ்கின்றது. அடிமைப்பட்டு கிடந்த தேசத்துக்காக வ.உ.சி போராடினார். வசதி இல்லாத மக்களுக்கு சட்ட உதவிகளையும் இன்னும் பிற உதவிகளையும் எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்தார்.    சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை எழுதி தமிழ்ப்ப்பணி ஆற்றினார். தனது சுயசரிதை வாயிலாக தேசத்து மக்களை உத்வேகப்படுத்தினார். இவர் தனது மன நிலைப்பாட்டை

“என் மனமும் என் உடம்பும் என் சுகமும் என் அறம் என் மனையும் என் மகவும் என் பொருளும்- என் மதியும் குன்றிடினும் யான் குன்றேன். கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து”

என்று மிகுந்த மன வைராக்கியம் உடைய மனிதராக வாழ்ந்து காட்டியவர் இவராவார்.  தம் வாழ்வின் இறுதி நிமிடங்களில்  , மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய 1936 நவம்பர் 18 ஆம் நாள் உயிர் துறந்தார்.

முடிவுரை

     வ.உ.சி அவர்களைப்  பெருமைபடுத்தும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் , பாடசாலைகளும், நூலகங்களும்  இவரது பெயரில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார்   போன்ற பெரும் தலைவர்களுக்கு எம்மால் முடிந்த நன்றிக் கடன் என்னவெனில் அவர்களின்  விடுதலை உணர்வுகளை எந்நாளும் மறவாமல் இருப்பதே ஆகும்.