Tuesday, 20 February 2024

அறிய வேண்டிய நூறு வரலாறு - நெப்போலியன் போனபர்ட்

                                    அறிய வேண்டிய நூறு வரலாறு- பொ.சங்கர்

                                                    வறுமையாலும் கலகத்தாலும் சிதறுண்ட  பிரான்ஸ் நாட்டைத்  தன் ஆட்சித் திறமையால் மீட்சிமை பெற வைத்தவரின் வரலாறு அறிய வேண்டுமா? மொத்த ஐரோப்ப உலகத்தையும் தன் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு அரசாட்சி செலுத்தியவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா?  இழந்த நாட்டை வீழ்ந்து போது வீறு கொண்டு போராடி மீட்டவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா? இப்படி  பல வரலாறுகளுக்குச் சொந்தமான மாவீரன் யார்? நெப்போலியன் போனபர்ட் என்னும் பெயரே வரலாறாக, வரலாறே பெயராக மாற்றிய மாவீரனின் வரலாறு அறிவோம் வாருங்கள். 

       பிரான்ஸ் நாட்டின் கார்சிகா தீவில் 1769 ல் பிறந்த நெப்போலியன் சிறுவயதில் சாதாரண மாந்தருக்கு மகனாகப் பிறந்து மன்னனாக மாறிய இவரின் வாழ்வு சரித்திரத்தின் சாதனைச் சுவடுகளில் காலம் கடந்தும்  வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் மகனாகப் பிறந்து பார் புகழும் மன்னனாக அவதாரம் எடுத்த நெப்போலியன்  , தாம் கடந்து வந்த பாதைகளைப் பார் புகழும் வரலாறாக மாற்றினார். 

           நெப்போலியன்,  பிரெஞ்ச் இராணுவப்  படையின் ஆர்டிலரி பிரிவில் சேர்ந்து டுலால் போரில் சிறப்பாகப் போரிட்டமைக்காக, பிரெஞ்ச் படையின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.  படைத்தளபதியாக முன்னின்று ஆஸ்திரிய படைகளை வென்ற பிறகு நெப்போலியனின் புகழ் நாடு கடந்து பரவியது. படைத்தளபதியாக பல நாடுகளை வென்றவர் ஒரு கட்டத்தில் தன் நாட்டின் அரசனாக 1804 ல்  தன்னைத் தானே முடிசூட்டிக் கொண்டார். 

      1804 முதல் 1815 வரை பல நாடுகளை வென்றெடுத்து பிரெஞ்ச் நாட்டை பல வழிகளில் மேம்படுத்தினார். வரலாற்றில் ‘நெப்போலியன் போர்கள்’ என்றழைக்கப்படும் இந்தப் போர்களினால் பலவற்றை இழந்து , பலவற்றைப் பெற்று தம் தேசத்தைக் கட்டமைத்தார். புரட்சி, கலகம் , வறுமையால் அமைதியை இழந்திருந்த பிரெஞ்ச் நாடு நெப்போலியன் மன்னராக ஆனபிறகுதான் அமைதியான வாழ்வை வாழத்தலைப்பட்டனர். பிரெஞ்ச்  நாட்டின் உயர் வகுப்பு மக்களின் அதிகாரத் திமிரை அடக்கி , பிரெஞ்ச் நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாழ்வை இழந்து , உரிமைகளை இழந்திருந்த தேசத்திற்கு நெப்போலியன் விடிவெள்ளியாக மாறினார். பிரெஞ்ச் நாட்டின் அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் CODE OF NEPOLEAN என்று அழைக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் BANQUE DE FRANCE வங்கியை நிறுவி நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவினார். ஜெர்மனி, இத்தாலி , போலந்து , டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 

                 

       அமைதி இல்லாத , உரிமை இல்லாத , வறுமை நீடித்திருந்த ஒரு தேசத்தின் மக்களுக்கு உரிமைகள் பலவற்றை அளித்து வறுமை இல்லாத நாடாக மாற்றிய நெப்போலியன் வரலாற்றில் அவசியம் படிக்கப்படவேண்டிய பாடம். இவ்வளவு புகழுடன் விளங்கியவரின் வீழ்ச்சியையும் நாம் அறிய வேண்டும்.  

ஐரோப்பா முழுமையையும் போரில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கடைசி வரை இங்கிலாந்தை நெப்போலியனால் வெல்ல முடியவில்லை. அதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாடும் இங்கிலாந்துடன் வணிகத்தொடர்புகள் கொள்ள கூடாது என்று தடை விதித்தார்.

நெப்போலியனின் தடையை மீறி ரஷ்ய நாடு இங்கிலாந்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டது. இதனால் ரஷ்யா மீது போர்ப்பிரகடனம் செய்து ஐந்தரை இலட்சம் படை வீரர்களுடன் ரஷ்யாவை முற்றுகையிட்டார். ரஷ்ய படைகள் தம்மை எதிர்க்கும் , ரஷ்ய மன்னன் எதிர்கொண்டு தம்மோடு போர் புரிவான் தம் படையால் ரஷ்யாவை வீழ்த்தலாம் என்று எண்ணியவரை மாஸ்கோ என்னும் மனிதர்கள் இல்லாத நகரம் வரவேற்றது. மன்னன் இல்லாத , மனிதர்கள் இல்லாத ரஷ்ய நாட்டில் கடுமையான பனியும் கடுங்குளிரும் பிரெஞ்ச் வீரர்களை வாட்டியது. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து பிரெஞ்ச் நாட்டைக் கைப்பற்றிய நெப்போலியன் ரஷ்ய நாடு குறித்துத் திட்டமிடாமல் நடத்திய போரால் கிட்டத்தட்ட பல இலட்சம் வீரர்களை இழந்தான். 30 ஆயிரம் படை வீரர்களுடன் நாடு திரும்பிய நெப்போலியனை ரஷ்யா ,இங்கிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரிய நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கியது. பல இலட்சம் படை வீரர்களை இழந்த நெப்போலியன் தம் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான். 

நான்கு நாடுகளும் கூட்டாகத் தாக்கியதில் பிரெஞ்ச் வீழ்ந்தது. எல்பா தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி மீண்டும் பிரெஞ்ச் நாட்டின் சக்ரவர்த்தியானார்.  இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தை பெல்ஜியத்தில் வாட்டர்லூ என்னுமிடத்தில் எதிர்கொண்டார். சூரியன் மறையாத , தோல்வியே இல்லாத இங்கிலாந்திடம் நெப்போலியன் மீண்டும் தோற்றார். வரலாற்றில் வாட்டர்லூ போர் நீங்கா இடம் வகித்தது. நெப்போலியனும் நீங்கா இடம்பிடித்தார். பல சிறப்புகளை , பல வரலாறுகளை உருவாக்கிய நெப்போலியனை ஹெலினா தீவில் ஆறு வருடங்களுக்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து வைத்தனர். மங்காத புகழுக்குச் சொந்தக்காரனாக விளங்கிய நெப்போலியன் தன் வாழ்வில் வீழ்ச்சி அடைந்தாலும் வரலாற்றில் வீழ்ச்சி அடையவில்லை. அறிய வேண்டிய வரலாற்றில் நெப்போலியன் வரலாறு தனித்துவமானது. 


No comments: