மலையின் உச்சியில் இருந்து அருவியாக பாய்ந்து ஆர்ப்பரித்து அமைதியான ஆறாக பரவி பவானி நதி வந்து, அங்கிருந்து பவானி அணை சேர்ந்து பெரு வாய்க்காலில் பயணித்து என் ஊரை தொட்டு பாயும் நதியை எங்கள் ஊரில் வாய்க்கால் என்று அழைப்பார்கள். பள்ளம் என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். ஆண்டின் ஏழு மாதங்களில் வற்றாத நீரோடையாக பாயும்.
இரட்டபாளி வலசை தாண்டி சலசலவென சலசலவென பாய்ந்து பரவசத்தோடு ஓடி வரும் என் ஊரின் கங்கையை ஊரின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் அரச மர விநாயகர் சன்னதி வரவேற்கும்.
இந்தப் பெரும்பள்ளத்தின் கரையில் பல படிக்கப்படாத எழுதப்படாத இதிகாசங்கள் நிகழ்ந்துள்ளன. அரச மரத்தில் இருந்து சற்று கீழே இறங்கி பாலத்தில் நின்று கேட்டால் சலசலவென்று ஓடும் நீரின் ஓசை எங்கள் ஊரின் இசை.
புரட்டாசி ஐப்பசி காலங்களில் எங்கள் நல்லியம் பாளையம் ஊரின் கங்கையில் பாலத்தைத் தொட்டு செந்நிறமாய் பாய்ந்து ஓடும் நீரை பார்ப்பதற்கென்று நாங்கள் பாலத்தில் நின்று கொண்டிருப்போம்.
பாலத்தின் மேற்குப் பக்கத்தில் ஏதேனும் பொருளை நீரில் போட்டுவிட்டு ஓடி வந்து பாலத்தின் கிழக்குப் புறத்தில் நின்று பார்ப்போம்.
பல யுகங்களாய் ஓடிய நீர் பாறைகளில் பட்டு பட்டு சில பாறைகளை சிற்பமாகவும் மாற்றியுள்ளது. கால் நனைத்து முகம் நனைத்து காது மடல்களில் நீர் பட்டு நாங்கள் கோடை கால வெப்பத்தை இந்த வாய்க்காலில் தணித்திருக்கிறோம்.
ஷாப் கார கவுண்டர் தோட்டம் செல்லும் பாதையில் ஓடும் வாய்க்காலில் சிறிது ஆழம் இருக்கும். நாங்கள் குதித்து மகிழ குளித்து மகிழ ஆர்வமும் இருக்கும்.
மார்கழி மாதங்களில் எங்கள் ஊரின் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் பூச்சாட்டு நேரங்களில் பெரும்பாலும் நாங்கள் இரவில் நெடுநேரம் விழித்திருப்போம். பொடிநடையாய் ஊரின் மேலே இருந்து கீழே இறங்கி வழிந்து ஓடும் வாய்க்கால் நீரைக் கண்டு ரசிப்போம். இரவு நேரத்தில் பெளர்ணமி நிலவின் ஒளியில் வாய்க்கால் வண்ண வண்ண நினைவுகளை எங்களுக்கு வட்டமிட்டு காட்டும்.
நல்லியம் பாளையம் எல்லையைத் தாண்டும் பள்ளம் அருகே எங்கள் ஊரின் இடுகாடு இருக்கும். அதற்குப் பின்னே உள்ள பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் செல்லத் தயங்குவோம். பயம் ஒரு காரணம். புதர்கள் மறு காரணம். இன்று அந்தப் பகுதியை சீரமைத்து பாலம் கட்டி சாலை அமைத்து விட்டார்கள்.
நல்லியம்பாளையம் கிராமத்தின் வளத்தை வளப்படுத்தும் எங்கள் ஊரின் பள்ளம் எங்களுக்கு யமுனை நதி.
நல்லியம்பாளையம் கிராமத்தில் வடக்குப் புறத்தில் பாயும் ஓடையும் தெற்குப் புறத்தில் பாயும் ஓடையும் ஓரிடத்தில் சங்கமிக்கும் கூடுதுறையும் எங்கள் ஊரின் தோட்டங்களில் உள்ளது.
எங்கள் இளம் பிராயத்தில் நானும் நண்பர்களும் நடந்து நடந்து வாய்க்கால் கரையோரத்திலேயே அணைக்கட்டு வரை சென்று பார்த்து வந்து வீட்டில் திட்டு வாங்கியுள்ளோம்.
எங்கள் ஊரில் பள்ளத்தில் சில வருடங்களில் பங்குனி மாதத்திலும் பளிங்கு நீராய் ஓடும் நீரை அள்ளி அள்ளி முகத்தில் தெளித்து உற்சாகம் கொள்வோம். சமீபத்தில் ஊருக்குச் சென்று இருந்த போது பாய்ந்து ஓடிய வாய்க்காலை நின்று பார்க்க மனம் கூசியது. ஊரைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகி விட்டமையால் என் ஊரின் கங்கையும் அதன் இயற்கை தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. வாய்க்காலை ஒட்டி சிமெண்ட் கரைகள் ஏற்படுத்தி விட்டாலும் நாங்கள் சிறுவயதில் பார்த்த வாய்க்காலே இன்னும் எங்களுக்குள் ஊர்வலமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பவானியில் இருந்து பவனி வரும் எங்கள் ஊரின் வாய்க்கால் நீர் பல துன்பங்களை மறைக்கச் செய்துள்ளது. சில மாதங்களில் காய்ந்திருக்கும் வாய்க்காலில் முதல் நீர் வரும்போது கால்நனைத்து கை நனைத்து உடல் நனைத்து உள்ளம் நனைத்து குளிப்போம். மீண்டும் ஒரு முறை நனைய வேண்டும். நல்லியம்பாளையத்தின் கங்கையில்…காவிரியில்…தாமிரபரணியில்…யமுனையில்…
நனைதல் தானே நதிக்கு அழகு. நல்லியம் பாளையம் நதியில் நனைவோம்.
No comments:
Post a Comment