Sunday, 24 November 2013

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்

    பண்டிதமணி                                                                                                                    கதிரேசனாரின் துவக்க காலத் தமிழ்த் தொண்டில் குறிப்பிடத்தக்கது மேலைச் சிவபுரியில் இவர் அமைத்து நடத்திய 'சன்மார்க்க சபை' ஆகும். பொருளியலில் காட்டிய ஆர்வத்தை நகரத்தார் கல்வியில் காட்டாதிருந்த அக்காலத்தில் சன்மார்க்க சபையின் மூலம் அவ்வினத்தாரிடம் தமிழார்வத்தைத் தூண்டி வளர்த்த பெருமை கதிரேசனாரையே சாரும். இதற்கு பொருளுதவி செய்தவர் பழநியப்ப செட்டியார் என்ற பெரும் செல்வராவார். மேலும் இச்சபையின் பிரிவுகளாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை', 'தொல்காப்பியனார் நூல் நிலையம்' ஆகியவை ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றன. இச்சபை பல பேரறிஞர்கள் முன்னிலையில் இவரின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியது அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இச்சபையில் சொற்பொழிவாற்றியுள்ளனர். இவர்களில் திரு. வி. க., உ. வே. சாமிநாதைய்யர், மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இச்சபையின் ஆதரவால் தான் பண்டிதமணி அவர்கள் 'கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை' தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினார். ஆனால், இப்பணி இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதுதான் முடிவுற்றது. இச்சபையின் சார்பாகத் துவக்கப்பட்ட 'கணேசர் செந்தமிழ்க் கல்லூரி', சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிறப்புடன் நடந்து இன்றும் இவரின் தமிழ்த்தொண்டினை நினைவூட்டும் சின்னமாக விளங்குகிறது

No comments: