Saturday, 23 November 2013

பரிதமாற் கலைஞர்

பரிதமாற் கலைஞர்

                      டல்படை சூழ்ந்த இவ்வுலகின் கண்ணே பயிலுறும் மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து வகுத்து அடைவுபடுத்தி நின்ற மொழிநூற் புலவர்கள் அவையிற்றை ஆரிய மொழிகள், துரானிய மொழிகள் என இரு பகுப்பினும் அடக் குவாராயினர். ஆரிய மொழிகளுள் அடங்குவன பலவற்றுள்ளும் தமிழ் மொழி தலைசிறந்த தொன்றாம். எனவே சமஸ்கிருதமும் தமிழும் வேறு வேறு மொழிகளென்பது வெள்ளிடை மலையென விளங்கும். ஆகவும் சிலர் தமிழ் முன்னதன் வழிமொழியேயன்றித் தனிமொழி யன்றென வாய் கூசாது கூறுவராயினர்.

சமஸ்கிருதமுந் தமிழும் ஒரே நாட்டின்கண் முறையே வடக்கினுந் தெற்கினுமாக வழங்கிய காரணம் பற்றி இவ்விரண்டுந் தம்மிற் சில்லாற்றாற் கலப்பனவாயின. அங்ஙனங் கலப்புழி ஒன்று பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நிற்ப, மற் றொன்று இருவகை வழக்கிலும் நின்றமையால் முன்னதன் சொற்பொருள்கள் பல பின்னதன்கட் போந்து வழக்கேற்பனவாயின. இது மொழி நூல் முறையே. இதனை பெய்யாதார் கூற்று ஒதுக்கற் பாலதென விடுக்க.

இனி மொழிநூற் புலவர்கள் வகுத்தவகை ஒருபுறமிருப்பச் சிலர் தமிழ் மொழியின் ஏற்றமுணராது மயங்கிப் பிறிதுபட வகுத்தனர். வடமொழியை உயர்தனிச் செம்மொழியினும் (Classical Language) தென்மொழியை உண்ணாட்டு மொழியினும் (Vernacular Languages) அடக்கி வகைப்படுத்தினர். அங்ஙனம் வகைப்படுப்புழி ஒன்று உயர்வும் மற்றொன்று தாழ்வுமாம் என்ற உட்கருத்துடன் படுப்பாராயினர். அவ்வுட் கருத்துச் சின்னாட்களில் வலியுறுவதாயிற்று. தனிமொழியென்றை அதன் வழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்தத்தகாதோ? தமிழனை உண்ணாட்டு மொழிகளுட் படுத்ததேயன்றித் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதன் வழி மொழிகளோடு ஒரு நிகரெனக் கூறலாமோ? ஆரிய மொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமை போலத் துரானிய மொழிகளுள் தலைநின்ற தென்மொழியை அதன் வழிமொழி களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியா திருந்தலே அமைவுடைத்து.

இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலா சாலையார் மேற்கூறியாங்குத் தமிழை இழிவுபடுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப் படுத்தல் சாலாதென மறுத் திருத்தல் வேண்டும். அப்போழ் தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்துவிட்டனர் நம் தமிழ் மொழியாளர். ஆதலின் இப்போழ்தத்து, "சர்வகலாசாலை விசாரணை'  (Universities Commission) யில் தமிழ்மொழிக் கல்வியை யோக்கிதைப் பட்டப் பரீட்சைகளினின்றும் ஒதுக்கி விட்டனர். வடமொழி மட்டில் உயர்தனிச் செம்மொழியாதலின் வைத்துக்கொள்ளப்பட்டது.

ஈதென்னை வம்பு! அவ்வுயர் தனிச் செம்மொழி என்பதன் இலக்கணந்தா னென்னை? அதனைச் சிறிது ஆராய்வோம்.

தான் வழங்கும் நாட்டின் கணுள்ள பலமொழிகட்குந் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையுமுள்ள மொழியே உயர் மொழி என்பது இவ்விலக்கணத்தால் ஆராய்ந்த வழி. நம் தமிழ்மொழி தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னட, மலையாள, துளுவங்களுக் கெல்லாம் தலைமையும் அவையிற்றினும் மிக்க மேதகவுடைமையால் தானம் உயர்மொழியே யென்க. தான் வழங்கு நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி எனப்படும். தான் பிறமொழிகட்குகச் செய்யும் உதவி மிக்கும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ் மொழியின் உதவி களையப் படின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன இயங்குதலொல்லா; மற்றும் அவையற்றி னுதவி களையப்படினும் தமிழ்மொழி சிறிதுமிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையி னியங்க வல்லது. இஃது இந்திய மொழி நூற் புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின், நம் தமிழ்மொழி தனிமொழியே யென்க.

இனிச் செம்மொழியாவது யாது?

"திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி புகல் செம்மொழியாம்' என்பது இலக்கணம். இம் மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ்மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட  சொல் முடிபுகளும் பொருள் முடிபு களும் இன்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணரவற்றாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் மொழிக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற் படுமிடத்துப் பிறமொழி சொற்களன்றித் தன் சொற்களே மேற்கோடல் வேண்டும். இவையும் நம் உயர்தனித் தமிழ் மொழிக்கும் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய் மொழியு மாம். எனவே தமிழ் செம்மொழி என்பது ஒருதலை. இதுபற்றியன்றே தொன்று தொட்டு நம் தமிழ் மொழி, "செந்தமிழ்' என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று.

ஆகவே, தென்னாட்டின்கண் சிறந்தொளிரா நின்ற நம் அமிழ்தினுமினிய  தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாம் என்பது திண்ணம். இத்துணை உயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் பன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர் தனிச் செம்மொழி சமஸ்கிருத மெனக் கொண்டாற் போல, தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம். இதனை நமது கனம் பொருந்திய ராஜப் பிரதிநிதியவர்களும் சர்வகலா சாலையின் அவயவிகளும் உள்ளவாறே கவனித்து நடப்பார்களாக. இவர்கள் தமக்கு என்றுங் குன்றாப் பழியை விளைக்கத் தக்க செயலிற் புகாது புகழ் பயக்கற்பால நல்லாற்றிற் சென்று நம் தமிழ் மொழியும் உயர்தனிச் செம்மொழியென்றே கொண்டு ஒழுகுவார்களாக. ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் திருவருள் பெற்ற நம் தமிழ் மக்கள் என்றுந் தலைகவிழாது ஒளிர்க.

தமிழ்ப் பாடசாலைகள்

கிராமந்தோறும் தமிழ்ப் பாடசாலைகள் தொன்றுதொட்டு நடந்து வருகின்றன. கிராமச் சிறார்கள் இவற்றிற் கல்வி கற்று வருகின்றனர். இவற்றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஐம்பது வருடங்கட்கு முன்னர் இப்பாடசாலைகளில் தமிழ் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதென்பதும், தற்காலத்தில் அத்துணை பயிற்றுவிக்கப்படவில்லை யென்பதும் எவரும் அறிந்த விஷயமே. இதன் காரணம் யாது?

தற்காலத்துத் தமிழ்ப் பாடசாலைகளில் வாத்திமைத் தொழில் நடத்துவோர் பெரும் பான்மையும் தமிழறிவு நுட்பங்கள் காணாதவரே. ஆங்கிலேய பாடசாலைகளிற் சில்லாண்டு கற்று ஆங்கிலேயமாயினும் தமிழாயினும் சீர்பெறக் கல்லாமல் உதரவலி ஒழித்தற் பொருட்டுத் திரிபவரே சிறுவர்களுக்குப் போதிக்க வருபவராவர். இவர்கட்கு இலக்கண இலக்கிய அறிவு சூனியம். "சட்டியிலுண்டானாலன்றோ அகப்பையில் வரும்' பண்டமில்லாத வாசிரியரிடங் கற்கும் மாணவர் எங்ஙனம் பயன்பெறுவர்? அன்றியும் ஆங்கிலம் அரச மொழியானதனால் முதன்மை பெற்று, நம் நாட்டு ஆலமரம்போல் தழைத்து விழுதுவிட்டு வலிமையுற்று விளங்கி வரும் இக்காலத்தில் சிறார் தமிழ்ப் பாடசாலைகளில் தங்கும் காலம் சிறிதேயாம்.

அன்னார் ஐந்து வயதாகும் முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து, கண் பூத்து, மனமிற்று நாளடைவில் யமனுக் குணவாகின்றனர். உலகறி வும் ஆயுள் விருத்தியும் குன்றிய இவர்களுடைய சந்ததியின் நிலையை நினைப்பிற் பரிதாபமே. மேலும் தமிழ் பயிற்றும் முறையைக் கவனிக்கப் புகின் வியப்பே. இலகுவாய்ப் பிள்ளைகளுக்குப் மொழியைக் கற்றுக் கொடுக்கக் கருதித் துரைத்தனத்தார் செய்திருக்கும் ஏற்பாடுகள் தமிழ் மொழிக்கு ஒவ்வாதனவே. முன்னிருந்த தமிழ்ப் பாடசாலை உபாத்தியாயருக்கு ஆங்கிலக் கல்வி கிடையாதாயினும் தமிழ் இலக்கண இலக்கியத் தேர்ச்சி மிகுதியுமுண்டு. பிள்ளைகளும் குறைந்தது பன்னிரண்டு வயதுவரை தமிழ் கற்றுவந்தார்கள்.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, உலகநீதி, வெற்றிவேற்கை, குறள், நாலடி, குறவஞ்சி, திவாகரம், நிகண்டு, எண்சுவடி, குழிப்பெருக்கம், தானப்பெருக்கம் இவை போன்ற நூல்களைப் பயின்று வந்தனர். எண்ணெழுத்திகழாத இம்மாணவர் பாக்களை வாசித்து அன்வயப் படுத்தி அருத்தஞ் சொல்லவும் கொடுத்த கணக்கை வாயாற்றீரவும் சக்தியுள்ள வராய், உலகில் (லௌகீக) அறிவு படைத்தவராய், ஒழுக்கம் விழுமிதாக் கொண்டவராய் நன்கு மதிக்கப்பட்டு வந்தனர். ஞாபக சக்தி தற்காலத்து வாலிபர்களுக்குப் பெரும்பான்மையும் கிடையாது. நான்கு பாட்டுச் சொல்ல ஏலாது, சிலேட்டி லாயினும் காகிதத்திலாயினும் எழுதிப்பாராமல் கணக்கு ஓடாது. இஃதன்றியும் கற்குங் காலவுளவும் சிறிதன்று. தமிழ்ப் பாடசாலை விட்டபின் குறைந்தபட்சம் பதினெட்டாண்டு செல்லும் பி.ஏ. பட்டம் பெற.

பதினொரு வயதில் ஆங்கிலம் கற்கப்புகுந்த மாணவரும் மேற்கூறிய காலவளவிற்கு முன்னரே அஃதாவது இருபது வயதில் பட்டம் பெற்று வந்தனர். இருதிறத்தாருக்கும் வித்தியாசம் என்னவெனில்... பின்னவர் நீண்ட ஆயுளும், அறிவு முதிர்ச்சியும், ஒழுக்கச் செல்வமும், உடற்றிறமும் பெற்றிருந்தனர். முன்னவரோ, ஈப்போல் நைந்தும், கண்ணொளியிழந்தும், இழைத்த நாள் எல்லையடையாததும், உடலாக்கம், மனவாக்கம் பெறாதும் கைப்பொருளிழந்தும் வருவாய் குன்றியும், தம்மைப் பெற்றார் தவிக்கவும், தாம் பெற்ற குழவிகள் துடிக்கவும் விட்டொழிகின்றனர்.
அந்தோ பாவம்! இப் பரிதாபநிலை தவிர்த்தல் எங்ஙனம்? துரைத்தனத்தாரும் தமிழபிமானிகளும் தமிழ்ப் பாடசாலைகளை நன்கு பாராட்டுதலினாற் கூடும். இன்ஸ்பெக்டராக ஏற்பட்டிருக்கும் தமிழர்கள் தக்க தமிழ்ப் பாடங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழ் கற்பிக்கும் முறை வேறு, மற்ற மொழிகள் கற்பிக்கும் முறை வேறு  என்பதை வற்புறுத்தித் தமிழின் விசேஷங்களை எடுத்துக் காட்டி ஆங்கிலப் போதனா முறை இதற்கு உதவாது என்பதை விளக்க வேண்டும். ஆங்கிலத் தேர்ச்சி மட்டுமின்றி; தமிழிலும் தக்க தேர்ச்சி யுடையவரைத் தெரிந்து ஆசிரியராக்க வேண்டும். அன்னார்க்கு மட்டும் போதனா முறை பயிற்றறவித்துப் போதகரா யனுப்பவேண்டும். சர்க்காருதவிப் பொருளையும் பாத்திரமறிந்து படைக்க வேண்டும். இத்தகைய குறிப்புக்களை கலப்பரேல், எல்லாத் தீமைத் தொழில் முன்போற் பறக்கும், மாணவர் மிக்க பயன்பெறுவர், வாழ்நாள் வீணானாகாமல் இம்மையிற் றழைத்து, மறுமைக்கும் வித்திடுவர் தமிழபிமானிகள்! தமிழபிவிருத்திக்கு ஆணிவேர் தமிழ்ப் பாட சாலைகளாதலினால் அவற்றைக் கண் திறந்து பாருமின். அவற்றிற்குப் பைதிறந்துதவுமின், வாக்குச் சகாயம் செய்யுமின், எவ்வாற்றானும் சிறார்கள் தமிழ்த் தாயைப் போற்றவல்ல வழிகளை நாடிக் கொடுமின்.

No comments: