Sunday, 28 July 2024
Sunday, 30 June 2024
NON ALIGNED MOVEMENT - இந்தியாவின் அணி சேரா இயக்கமும் கோவாவின் இராணுவ நடவடிக்கையும் - அறிய வேண்டிய வரலாறு
1947 ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா தனக்கான கட்டமைப்புகளை உருவாக்கி உலகளவில் தனித்த நாடாக உருவெடுத்து வந்தது. வல்லரசு நாடுகள் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது , அகிம்சை மூலம் உலகை ஆள வேண்டும் என்னும் பொதுமைக் கருத்துடன் 1955 ல் பாண்டுங் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட கொள்கை உடன்பாடு மூலம் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு , யுகோசுலா அதிபர் பிரோசு டிட்டோ, எகிப்து அதிபர் அப்துல் நாசிர் ஆகியோரால் 1961 ஆம் ஆண்டு அணி சேரா அமைப்பு தொடங்கப்பட்டது.
பனிப்போரில் ஈடுபடும் வளர்ந்த நாடுகளுடன் இணையாமல் , இராணுவ பொருளாதார நடவடிக்கையினை ஆதரிக்காமல் வளரும் நாடுகள் செல்ல வேண்டும் என்னும் நோக்கில் தொடங்கப்பட்ட அணிசேரா நாடுகள் தனித்த கொள்கைகளை உருவாக்கின.
அணிசேரா நாடுகளின் கொள்கைகள்.
எல்லா நாடுகளின் இறையாண்மைக்கும் மதிப்பளித்தல்
எல்லா நாடுகளையும் சமமானதாகக் கருதுதல்.
அயல் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை.
உறுப்பு நாடுகள் ஒன்றையொன்று ஆக்கிரமிப்புச் செய்யாமை.
உலகப் பிரச்சினைகள் அனைத்தையும் சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ளுதல்.
என்று கொள்களைகளை வகுத்து இந்த நாடுகள் செயல்பட ஆரம்பித்தன.
உலக அளவில் நேரு மற்றும் எகிப்து அதிபரின் இந்த இயக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அகிம்சை மட்டுமே ஆயுதம் என்பதில் உறுதியாக இருந்த அணி சேரா இயக்கத்தின் முக்கிய தலைவரான நேரு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாறு உலக அளவில் விமர்சனத்தை உருவாக்கினாலும் எதிர்ப்புகளை உருவாக்கவில்லை.
இந்தியாவின் முதன் முதலில் காலனியாதிக்கத்தை நிறுவியவர்கள் போர்த்துக்கீசியர்கள். 1947 ல் பிரிட்டன் அதனைத் தொடர்ந்து பிரெஞ்சு போன்ற நாடுகள் இந்தியாவை விட்டு வெளியேறின. ஆனால் போர்த்துகீசியர்கள் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி இந்தியாவை விட்டு வெளியேற மறுத்தனர்.
NON ALIGNED MOVEMENT இயக்கத்தில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருந்தமையாலும் நேருவின் தொடர் பேச்சுவாரத்தைகளின் காரணமாகவும் போர்த்துகீசியர்களின் ஆதிக்கப் பகுதிகளில் நடவடிக்கை எடுக்க இயலாமல் நேரு தவித்தார்.
போர்த்துகீசிய நாடும் , நாங்கள் இந்தப் பகுதியை ஆக்ரமித்த போது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை. ஆகவே இந்தப் பகுதிகள் எங்களுக்குச் சொந்தமானவை என்பதில் உறுதியாக இருந்தன. போர்த்துகீசியர்களின் இந்த செயலுக்கு அன்றைய அமெரிக்க உறுதுணையாக இருந்தது.
1961 NON ALIGNED MOVEMENT என்ற இயக்கம் தொடங்கி அகிம்சையை வலியுறுத்திய போது அணி சாரா நாடுகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, “ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், ஆயுதக் குறைப்பை மேற்கொள்ளுங்கள், உலகில் சமாதானம் தழைக்க ஒத்துழையுங்கள்” என்று அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அதேசமயம், கோவாவை போர்த்துகீசியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை. சர்வதேச விவகாரங்களில் காந்திய அணுகுமுறையைக் கடைப்பிடித்த நேருவுக்கு, கோவா தொடர்பாக முடிவெடுப்பதில் ஆரம்பத்தில் தர்மசங்கடம் ஏற்பட்டது.
போர்ச்சுகல் அரசின் பிடிவாதப் போக்கால் எரிச்சலடைந்த இந்தியர்கள் கோவாவின் விடுதலைக்காகத் தத்தமது பகுதியிலேயே அமைதிப் போராட்டங்களை நடத்தினர். 1955-ல் கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியாளர்கள் கோவாவுக்குள் நுழைந்தபோது, போர்த்துகீசிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு 20 இந்தியர்களைப் பலி வாங்கியது. இதை அடுத்து கோவா பகுதி மீது பொருளாதாரத் தடையினைப் பிரதமர் நேரு அறிவித்தார்.
மக்களுடைய எழுச்சியும் உலக நாடுகளின் நேரு நெருக்குதலும் போர்த்துகீசியர்களை வெளியேற்றிவிடும் என்று நம்பினார். சர்வதேச நெறிமுறைகளுக்கும் பொறுமைக்கும் இடம் கொடுத்தும் பலன் ஏதும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த நேரு, அதன் பிறகே ராணுவ நடவடிக்கை மூலம் கோவாவை விடுவிக்க முடிவுசெய்தார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி, பிரிட்டிஷ் பிரதமர் ஹரால்ட் மெக்மில்லன், ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஊதாண்ட் ஆகியோர் அந்த முடிவைத் தள்ளிவைக்குமாறு நேருவை வற்புறுத்தினர். ஆனால், நேரு தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்திய ராணுவத்தை கோவாவுக்கு அனுப்பிவைத்தார். டிசம்பர் 18-ல் போர்த்துகீசியப் படைகள் சரணடைந்தன. நிபந்தனையின்றி சரண் அடைவதாக அப்போது கோவாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வசலோ இ சில்வா கைப்பட எழுதிக்கொடுத்தார்.
உலக அளவில் அணி சேரா அமைப்புகள் வாயிலாக அகிம்சை பேசிய நேரு இனி அந்தத் தலைப்பைப் பேச இயலாது என்று இந்தியாவின் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் இந்தியாவில் கோவாவில் நேரு அவர்களின் மதிப்பு உயர்ந்தே காணப்பட்டது.
இந்தியப் பகுதிகளில் முதலாவதாக வந்து காலனியாதிக்கத்தை உருவாக்கிய போர்த்துகீசியர்கள் 1961 ல் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 1961 முதல் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருந்துவந்த கோவா, 1987-ம் ஆண்டு மே 30-ம் தேதி இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது.
அறிஞர் அண்ணாவும் மோகன் ராண்டேவும்
மோகன் ரானடே, ஒரு காலத்தில் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து கோவாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் . கோவா விடுதலைக்குப் போராடிய அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருந்தது போர்ச்சுக்கீசிய அரசு. போர்க்குற்றவாளி ஆக்கப்பட்ட அவர் ஆயுள் தண்டனையில் இருந்தார்.
1961-ல் கோவா விடுதலையடைந்து, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்துவிட்டது என்றாலும்கூட, தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள காக்சியா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார் ரானடே. அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பின் 1968-ல் அயல் நாட்டுப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் போப் ஆண்டவரையும் சந்தித்தார் . அப்போது போப்பிடம் அவர் முன்வைத்த வேண்டுகோள், “எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றார்.
அறிஞர் அண்ணாவின் கோரிக்கையினை ஏற்று கத்தோலிக்க நாடான போர்த்துகீசிய அரசிடம் போப் ஆண்டவர் கோரிக்கை வைக்க , அந்த அரசு மறுக்க முடியாமல் கோவாவின் விடுதலை வீரர் மோகன் ராணடேவை விடுதலை செய்தது. காக்சியா சிறையில் இருந்து வெளியே வந்த மோகன் ராணடே இந்தியா வந்து முதலில் சந்திக்க விரும்பிய நபர் அறிஞர் அண்ணா. ஆனால் உடல்நிலை காரணமாக அறிஞர் அண்ணா மறைந்துவிட்ட செய்தி அறிந்து சென்னை வந்து அவரின் சமாதியில் கலங்கி நின்றார். சொந்த மாநில மக்களே மறந்து போன மோகன் ராணடேவை மீட்டுக் கொண்டு வந்ததில் அறிஞர் அண்ணாவின் பங்கு அளப்பரியது. 26 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோகன் இராணடே 1955 முதல் 1969 வரை போர்ச்சுகல் சிறையில் இருந்தார்.
அறியப்படாத வரலாறுகளும் அறிய வேண்டிய மனிதர்களாலும் உருவானதே வரலாறு.
Tuesday, 28 May 2024
மார்க்கோபோலோ- அறிய வேண்டிய வரலாறு
Tuesday, 14 May 2024
இந்திய சுதந்திரப் போரில் தூந்தாஜி வாக் எனும் தோண்டியா வாக் - அறிய வேண்டிய வரலாறு
வரலாறு சில மனிதர்களின் தியாகத்தை மறந்தும் மறைத்தும் விடும். வரலாற்று ஆசிரியர்களும் சில நேரங்களில் மறைத்து விடுவதும் உண்டு. அப்படி வரலாறால் , வரலாற்று ஆய்வாளர்களால் மறைக்கப்பட்ட தூந்தாஜி வாக் என்பவர் இந்திய சுதந்திரப் போரில் ஆற்றிய பங்கு குறித்து நாம் அறிவது அவசியம்.
ஆங்கிலேயர்களை தென்னிந்திய அரசர்களே கதிகலங்க வைத்தனர் என்பதற்கு ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகளே சாட்சியாகவும் சரித்திரமாகவும் இருக்கின்றன. அவ்வகையில் தென்னிந்திய பகுதிகளில் ஐதர் அலி , அவரது மகன் திப்பு சுல்தான், ராணி வேலு நாச்சியார் , கட்டபொம்மன், தீரன்சின்னமலை என பல தென்னிந்திய அரசர்கள் ஆங்கிலேயர்களை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அந்த வகையில் தூந்தாஜி வாக் என்னும் வீரன் அரசனாகி ஆங்கிலேயர்களை மிரள வைத்தார் என்பதும் நமது வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்ட பெயராகவும் இருப்பது காலத்தின் பிழை.
திப்பு சுல்தானின் ஒரு படைப்பிரிவுக்கு தளபதியாக, திப்பு சுல்தானின் நம்பிக்கைக்கு உரிய மாவீரனாகத் திகழ்ந்தவர் தூந்தாஜி வாக். திப்பு சுல்தானின் தந்தையார் காலத்தில் அவரது படைப்பிரிவில் படை வீரனாக பணியைத் துவங்கி திப்பு சுல்தான் காலத்தில் தளபதியாக உயர்ந்தவர் தூந்தாஜி வாக்.
இந்திய அரசர்களில் ஆங்கிலேயர்களை அவர்களுக்கு நிகரான ஆயுதங்கள் வைத்து தாக்கியவர்கள் ஐதர் அலியும், திப்பு சுல்தானும் மட்டுமே. அந்த வகையில் சிறந்த படையணிகளை வைத்திருந்த மைசூர் மாகாண அரசர் ஐதர் அலி காலத்தில் ‘ஆங்கிலோ மைசூர் போர்’ முதலிரண்டும் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைய ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’ குறித்து வெளிப்படையாக அறிவித்து ஆங்கிலேயருக்கு எதிராக போரைத் தொடங்கினார். அந்தப் போரில் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக தூந்தாஜி வாக் பணியாற்றினார்.
‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’ கோயம்புத்தூர், பாலக்காடு, சத்தியங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் ஆங்கிலேயர்களை விரட்டியட்த்து வெற்றி கண்டனர். அதன்பிறகு திப்பு சுல்தானுடன் மன வேறுபாடு காரணமாக தனி படையணி ஒன்றை உருவாக்கி மராட்டிய எல்லைப் பகுதிகளைத் தாக்கினார். எதிர்ப்புகள் காரணமாக மீண்டும் திப்பு சுல்தானிடம் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினார்.
நான்காவது ஆங்கிலோ மைசூர் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை சிறைப்பிடிக்க அதன் பிறகு மைசூர் படைகள் பிரிந்து போயின. திப்பு சுல்தானை வென்று விட்டோம் என்று வெற்றிக் களிப்பில் இருந்த நேரத்தில் திப்பு சுல்தானின் பல ஆயிரக்கணக்கான படை வீரர்களை தூந்தாஜி வாக் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயர்களுக்கு சிப்ப சொப்பனமாகத் திகழ்ந்தார்.
திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் மைசூர் பகுதியை மீட்ட நேரத்தில் பெரும் படையுடன் மைசூரின் வடக்குப் பகுதியில் ஆங்கிலேயர்களைத் தாக்கி வெற்றி கொண்டார் தூந்தாஜி வாக். சத்ரபதி மன்னர்களுக்கு அடுத்து பேஷ்வா என்னும் பதவியுடன் பொறுப்பில் இருந்து மராட்டிய பகுதிகளை ஆட்சி நடத்த மராட்டிய அரசர்களால் நியமிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பாளர்கள் பேஷ்வாக்கள். இவர்களை தூந்தாஜி வாக் எதிர்த்து மைசூரின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி ‘இரு உலகங்களின் இராஜா’ என்று தூந்தாஜி வாக் பட்டம் சூட்டிக்கொண்டார்.
(பேஷ்வா)
ஆங்கிலேயரும் பேஷ்வா படையும் இணைந்து தூந்தாஜி வாக்கை எதிர்க்க முடிவு செய்தன. மராட்டிய பேஷ்வாவும் , மாறுவேடத்தில் சில வீரர்களை மைசூரின் வடக்குப் பகுதிக்கு அனுப்பினார்கள். மாறுவேடத்தில் சென்றவர்களை தூந்தாஜி வாக் சிறைபிடிக்க , ஆங்கிலேயர்கள் அவர் மீது படையெடுக்க திட்டமிட்டனர்.
தூந்தாஜி வாக் தலைமையிலான படையில் 90 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் 75 ஆயிரம் காலாட்படை வீரர்களும் இருந்தனர். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு பெரும்பாலான படை வீரர்கள் தூந்தாஜி வாக் தலைமையில் ஒன்றிணைய ஆங்கிலேயர்கள் பெரும் சிக்கலாக தூந்தாஜி வாக் மாறினார். பெரும்பாலான மைசூர் பகுதிகளை தூந்தாஜி வாக் கைப்பற்றிக் கொண்டே வந்தார். அவரின் பலத்தைக் கண்டு திகைத்த ஆங்கிலேயர்கள் பலமான கூட்டணி அமைத்து தூந்தாஜி வாக் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.
1800 ஆம் ஆண்டு மைசூர் கவர்னராக ஜெனரல் வெல்லஸ்லி நியமிக்கப்பட்டார். ஜெனரல் வெல்லஸ்லி மைசூரைச் சுற்றியிருந்த பல அரசுகளுக்குக் கடிதம் எழுதி , தூந்தாஜி வாக் வளர்ச்சியைத் தடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி 1800 மே 26 ல் கடிதம் எழுதினார். . ஜெனரல் வெல்லஸ்லி தலைமையில் மைசூர் உடையார் வம்சம், ஹதராபாத் நிஜாம் அரசர்கள் ஒன்றிணைந்து 1800 ஆம் வருடம் ஜூன் மாதம் 16 ஆம் நாள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஆங்கியேயரின் படைகள், உடையார் வம்ச படைகள், ஹதராபாத் நிஜாம் படைகள் என பல படைகள் மோதியும் அவர்களை தூந்தாஜி வாக் தைரியமுடன் எதிர்கொண்டார்.
ஜூன் மாதம் 16 ஆம் நாள் தொடங்கிய போர் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தது. போரில் முதலில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தூந்தாஜி வாக் கைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கும் நிஜாம் அரசர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். ஆங்கிலோ மைசூர் போர்கள் கூட குறிப்பிட்ட நாட்களில் முடிவடைய , தூந்தாஜி வாக் உடனான போர் நீண்டு கொண்டே சென்றது. செப்டம்பர் 10 ஆம் நாள் இன்றைய இராய்ச்சூர் மாவட்டத்தில் தூந்தாஜி வாக் ஆங்கிலேய படையால் கொல்லப்பட்டார். ஆங்கிலேயர்களுக்கு பெரும் சொப்பனமாகத் திகழ்ந்த தூந்தாஜி வாக் கிட்டத்தட்ட 90 நாட்கள் படைகளை நடத்தி ஆங்கிலேயர்களையும் பிற அரசர்களையும் திணறடித்தார். போரின் இறுதியில் அவரது சொற்ப வீரர்கள் கைது செய்யப்பட்ட போது , ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லி , தூந்தாஜி வாக் மகனுக்குப் பாதுகாப்பை வழங்க முன்வந்தார். மைசூர் உடையார் வம்சத்தினரும் ஹதராபாத் நிஜாமும் தூந்தாஜி வாக்கின் 4 வயது மகன் சலாபத் கானை கொல்ல முடிவெடுத்த போது ஜெனரல் வெல்லஸ்லி அதனைத் தடுத்து சலாபத் கானை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
( ஜெனரல் வெல்லஸ்லி)
வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தோண்டியா வாக் என்று அழைக்கப்பட்ட தூந்தாஜி வாக் நிச்சயம் அறிய வேண்டிய சுதந்திர வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.