சாகசங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாலேயே சாதிக்கப்படுகின்றன. பயணங்கள் மூலம் வரலாற்றின் பக்கங்களை மாற்றியவர்கள் உலக வரலாற்றில் தமக்கென தனித்த இடத்தைப் பிடித்தார்கள். அவ்வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வெனிஸ் நகரத்தில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் மார்க்கோபோலோ.
செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் தாய்ப்பாசத்தையும்,தந்தை அன்பையும் சிறு வயதிலேயே இயற்கைக் காரணிகளால் இழந்தார். ஆம் ,சிறு வயதில் தாயை இழந்தார். தந்தை வணிகராதலால் பெரும்பாலும் வணிகநோக்கத்திற்காகப் பயணத்திலேயே இருந்தமையால் அன்பை அடைய இயலாதவராகவே இருந்தார். இருப்பினும் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை வரலாறாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் பயணியாக மாற வேண்டும் என்னும் கனவை விதைக்கலானார். விதை விருட்சமாகும் வரை தம் வாழ்நாளில் பல காலங்களை , பல நாடுகளை, பல கோடைகளை, பல குளிர்காலங்களை நடந்தே கடக்கலானார்.
மார்க்கோபோலோ நடந்த பாதைகள் இன்று உலகின் புகழ்பெற்ற பட்டுப்பாதை(Silk Road) என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட நான்காயிரம் மைல்களுக்கும் மேல் நடை நடையாய் நடந்து வரலாற்றின் அதிசயங்களுக்கு அடையாளம் தந்தவர் மார்க்கோபோலோ. உலகின் பெரும்பகுதியை நடந்து கடந்தவரின் வாழ்வியலை ஒரு காலத்தில் ஐரோப்பிய உலகம் புறக்கணித்துச் சிரித்தது.
ஐரோப்பிய நாடுகளில் நாடகங்களில் கோமாளி வேடத்தின் புனைகதைகளில் மார்க்கோபோலோ பாத்திரம் நகைச்சுவைப் பாத்திரமாகப் படைக்கப்பட்டது. தன் சொந்த தேசமே ஏளனப்படுத்திய போதும் தன் பயணத்தின் குறிக்கோளை அடைந்தே அடையாளமாக்கினார் மார்க்கோபோலோ. “த ட்ராவல்ஸ் ஆஃப் மார்கோ போலோ” என்னும் நூலை சிறையில் எழுத்தாளர் ருஸ்டி செல்லா உதவியுடன் எழுதி ஆவணப்படுத்தினார். எந்த ஐரோப்பிய உலகம் இவரை எள்ளி நகையாடியதோ அதே ஐரோப்பிய உலகம் ஒரு காலத்தில் இவரை உயரத்தில் வைத்துக் கொண்டாடியது. அதற்குக் காரணம் இவர் விரைந்து சென்ற வெற்றிக்கான தூரங்களே!
மண், மலை, நிலம், காடு, வெயில், குளிர், வெப்பம், காற்று, மொழி இவ்வாறு பல தடைகளைத் தகர்த்து பயணம் செய்த மார்க்கோபோலோ பல நிலங்களில் பல கலாச்சாரங்களைக் கண்டடைந்தார். தமது பயணத்தில் சீனா நாட்டைப் பற்றி மிக அதிகமாக மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் அரசன் குப்லாய்கானின்(செங்கிஸ்கானின் பேரன்) நம்பிக்கை மிகுந்தவராகவும் மாறிப்போனார். சீனா நாட்டின் கரங்கள் தம்மை கட்டி அணைத்து வரவேற்றதாகக் குறிப்பிடும் அவர் சீனாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். சீனாவிலிருந்து வெனீஸ் நோக்கி தம் பயணத்தைத் தொடங்கிய போது குப்லாய்கானின் மகளை பாக்தாத் வரை பயண அனுபவத்திற்குப் படையுடன் அழைத்துச் சென்றார். தம் வாழ்வில் கிட்டத்தட்ட இருபத்தி ஏழு ஆண்டுகள் பயணத்திலேயே வாழ்ந்த மார்க்கோபோலோ , பாக்தாத் , ஈரான் , ஆசியப்பகுதிகளைக் கடந்து இந்தியா வந்தடைந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கப்பலில் இறங்கிய மார்க்கோபோலோ தமிழகத்தின் பெரும் பகுதி நிலங்களுக்கும் சென்றார். தமிழகத்தின் பண்பாட்டையும் சிறப்பையும் தமது il million - the travelsof marcopolo என்னும் நூலில் அழகுபடக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் இராஐராஐ சோழன் , இராஜேந்திரச் சோழனுக்குப் பிறகு பெரும் அரசனாக சேர ,சோழ, பாண்டிய , இலங்கை மற்றும் மகத நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனை தமது பயணத்தில் சந்தித்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். தமது நூலில் ‘ அரசர்கள் தரையில் அமர்வதை விரும்புவதாகவும், எளிய ஆடைகளில் அழகுமிகு ஆபரணங்கள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். தாம் பார்த்த நாடுகளில் தமிழகமே செல்வ வளமிக்க நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகப் பயணத்தை நிறைவு செய்து மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின் மார்க்கோபோலோ அடைந்த துயரங்கள் மிகுதியானது. தன்னுடன் பயணித்த பலரையும் நோய்த்தாக்குதலில் , இயற்கைக் காரணிகளில் இழக்க வேண்டியிருந்தது. பல சிரமங்களைக் கடந்து தன் சொந்த தேசத்தை அடைய முற்பட்ட போது வெனீஸ் மற்றும் ஜெனோவா இடையிலான போரில் மார்க்கோபோலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தம் உடன் தங்கியிருந்த எழுத்தாளர் ஒருவரின் உதவியுடன் தம் பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினார்.
மார்க்கோபோலோவின் எழுத்துகள் பல படிகளாக பலரால் வாசிக்கப்பட்டு கிழக்காசியா நோக்கிய பயணத்தையும் , சீனா , இந்தியா போன்ற நாடுகள் பற்றியும் அறிய வைத்தது. பிற்காலத்தில் கொலம்பஸ் போன்ற பயணிகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருவதற்கு மூல காரணம் மார்க்கோபோலோவோவோவின் நூலே காரணமாய் அமைந்தது. மார்க்கோபோலோ தமது பயணத்தில் வணிகராக, நாடோடியாக,கடலோடியாக தம் பயணத்தைத் தொடந்து கொண்டே இருந்தார். உலகின் பெரும்பாலான நாடுகளின் கலாச்சாரத்தை 13 ஆம் நூற்றாண்டுகளில் பதிவு செய்தவராகத் திகழும் இவரின் பயணங்கள் தூரங்களையும் துயரங்களையும் கொடுரங்களையும் சிறைகளையும் கடந்து பிற்காலத்திய தலைமுறைக்குப் பெரும் வரலாற்றைச் சொல்லும் களஞ்சியமாக இவரின் வரலாறு திகழ்கிறது. இத்தாலியில் இவர் பயணம் சென்ற பாதைகள் , வரைபடங்கள் குறித்த தரவுகள் அடங்கிய மாபெரும் நூலகம் ஒன்றை அந்நாடு பராமரித்து வருகிறது. பதினேழு வயதில் பயணியாக வாழ்வைத் தொடங்கி பெரும் பள்ளத்தாக்குகளை, பாலைவனங்களைக் கடந்து தம் எழுபது வயதில் ஜனவரி மாதம் எட்டாம் நாள் பயணியாகத் தம் வாழ்வை நிறுத்திக்கொண்டார் . அச்சு இயந்திரம் வருவதற்கு முன்பாக அறிஞர்கள் , துறவிகளால் கைகளால் எழுதப்பட்ட நூலாக மார்க்கோபோலோவின் நூல்கள் இடம் பெறுகின்றன. பயண இலக்கியத்தின் மிகச்சிறந்தபடைப்புகளாக மார்க்கோபோலோவின் il milion - the travels of marco polo , The Description of the World என்னும் இரண்டு நூல்கள் திகழ்கின்றன. தம் வாழ்வின் இறுதிக்காலங்களில் மிகச்சிறந்த தொழிலதிபராக வாழ்வை நகர்த்திய மார்க்கோபோலோ பலருக்கும் வரலாறாய் வாழ்கின்றார். பிறக்கின்றோம் , வாழ்கின்றோம், இறக்கின்றோம் என்பதற்குப் பதிலாக வாழ்ந்த பூமிக்குப் பரிசாக வழங்க வேண்டிய கடமைகளை சரிவர செய்த பயணியாக , உலகைப் பற்றிய பதிவைப் படைத்தவராக விளங்கும் மார்க்கோபோலோ நமக்கக் கற்றுத் தந்த பாடம் ‘ விரைந்து செல்லுங்கள் வெற்றிக்கான தூரம் அதிகம்’ என்பதுதான். மார்க்கோபோலோவின் குறிப்புகள் நாம் படிக்கவேண்டிய பாடங்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஜனவரி மாதமும் அவரின் நினைவு நாளைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment