1992-ல் தலால் தெருவில் எல்லோருக்கும் ஒரு கடவுள் இருந்தார். அவர் பெயர் ஹர்ஷத் மேத்தா. அவர் 15,000 சதுர அடி பங்களாவில் வசித்தார். டொயோட்டா லெக்ஸஸ் கார் வைத்திருந்தார். பத்திரிகைகள் அவரை "Big Bull", Share Market ன் அமிதாப் பச்சன் என்று எழுதின.
யாருக்கும் அவரைக் கேள்வி கேட்க தைரியம் இல்லை. ஒருவரைத் தவிர.
அவர் பெயர் சுசேதா தலால். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு இளம் நிருபர். வயது 30 கூட இல்லை. பங்குச் சந்தை பற்றி எழுதும் ஒரு சில பெண்களில் அவரும் ஒருவர்.
சுசேதாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஹர்ஷத்திடம் எப்படி இவ்வளவு பணம்?அவர் சம்பளம் வாங்கும் பணியாளர்தான். ஒரு பணியாளர்க்குத் தினமும் 100, 200 கோடி எப்படி வரும்? வங்கிகள் தங்கள் கஜானா பணத்தை ஒரு மனிதரிடம் எப்படி கொடுக்கும்?
சுசேதா தன் சோர்ஸ்களை தொடர்பு கொண்டார். SBIயில் ஒரு அதிகாரி மெதுவாகச் சொன்னார், "மேடம், எங்க SGL கணக்கில் பெரிய மைனஸ் இருக்கு"SGL என்றால் Subsidiary General Ledger. RBI-யில் வங்கிகளின் பத்திரங்கள் இருக்கும் கணக்கு. அதில் ஒரு வங்கியின் பத்திரம் குறைந்தால், அது பத்திரத்தை விற்றுவிட்டது என்று அர்த்தம். ஆனால் SBI-யின் பதிவேட்டில் பத்திரம் குறையவில்லை, ஆனால் பணம் போய்விட்டது. அதற்குப் பதில் கையில் BR மட்டும் இருந்தது.
சுசேதா தன் உதவியாளர் தேபாசிஸ் பாசுவுடன் சேர்ந்து கணக்குகளைத் தோண்டினார்.
அவர்களுக்கு கிடைத்த முதல் க்ளூ, ஒரு செக். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹர்ஷத் மேத்தாவுக்கு கொடுத்த 100 கோடி செக். அந்த செக்கின் பின்புறத்தில் ஹர்ஷத்தின் கையெழுத்து. அந்த பணம் நேராக பாங்க் ஆஃப் கராட்-ல் இருந்த ஹர்ஷத்தின் தனிப்பட்ட கணக்கிற்குப் போயிருந்தது. ஒரு அரசு வங்கியின் பணம், ஒரு தனி நபரின் கணக்கில் எப்படி போகும்?
சுசேதா இன்னும் ஆழமாக போனார். ஹர்ஷத்தின் கார் டிரைவர், ஆபிஸ் பையன், வங்கி கிளார்க் என்று சிறு சிறு ஆட்களிடம் பேசினார். ஒரு உண்மை தெரிந்தது . ஹர்ஷத் மட்டும் அல்ல, முழு அமைப்பும் இதில் இருந்தது.
நேஷனல் ஹவுசிங் பேங்க், பாங்க் ஆஃப் கராட், பாங்க் ஆஃப் அமெரிக்கா இவற்றின் சில அதிகாரிகள் ஹர்ஷத்திற்கு BRகளை விலைக்கு கொடுத்திருக்கிறார்கள். ஹர்ஷத் அவர்களுக்கு கமிஷனும், வெளிநாட்டுப் பயணமும் கொடுத்திருக்கிறார்.ஏப்ரல் 20, 1992. சுசேதா தனது எடிட்டரிடம் போனார். "சார், 500 கோடிக்கு மேல் மோசடி நடந்திருக்கிறது. ஹர்ஷத் மேத்தா இதில் இருக்கிறார்" என்றார்.
எடிட்டர் பயந்தார். "சுசேதா, அவர் பெரிய ஆள். ஆதாரம் இல்லாமல் எழுதினால் நம் பத்திரிகை மீது வழக்கு வரும். பம்பாயின் பாதி பணக்காரர்கள் அவர் நண்பர்கள்"
சுசேதா சொன்னார், "என்னிடம் ஆதாரம் இருக்கிறது. SBIயின் செக் நகல் இருக்கிறது"
ஏப்ரல் 23, 1992 காலை 6 மணி. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் ஒரு சிறிய செய்தி, ஆனால் தலைப்பு பெரிய வெடிகுண்டு.
"Harshad Mehta involved in Rs 500 crore securities scam, SBI officials say"
அன்று காலை 10 மணிக்கு பங்குச்சந்தை திறந்தது. Sensex 120 புள்ளிகள் கீழே விழுந்தது. மக்கள் பீதியில் விற்க ஆரம்பித்தார்கள்.ஹர்ஷத் தனது வோர்லி வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்தார். அவர் நண்பர்களுக்குப் போன் செய்தார். யாரும் எடுக்கவில்லை.
அன்று மாலை ஹர்ஷத் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினார். "இது சதி. என்னை வீழ்த்த பார்க்கிறார்கள். நான் வங்கிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை, வங்கிகள் தான் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்" என்றார். யாரும் நம்பவில்லை.
அடுத்த சில நாட்களில் சுசேதா அடுத்தடுத்து கட்டுரைகள் எழுதினார். ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புது வங்கி. ஒரு புது போலி BR. கணக்கு 500 கோடியில் இருந்து 2000 கோடி, 4000 கோடி என்று ஏறியது.
ஜூன் மாதம் அரசாங்கம் ஜானகிராமன் குழுவை அமைத்தது. RBIயின் துணை கவர்னர் ஜானகிராமன் தலைமையில் விசாரணை. அந்த குழுவின் முன் ஹர்ஷத் வரவழைக்கப்பட்டார்."நீங்கள் வங்கிப் பணத்தை எடுத்தீர்களா?" என்று கேட்டார்கள்.
ஹர்ஷத் சிரித்துக்கொண்டே சொன்னார், "நான் எடுக்கவில்லை, அவர்கள் கொடுத்தார்கள். நான் கேட்டபோதெல்லாம் கொடுத்தார்கள். ஏன் கொடுத்தார்கள் என்று அவர்களை கேளுங்கள்"இது தான் இந்த மோசடியின் மிகப்பெரிய உண்மை. திருடன் மட்டும் குற்றவாளி அல்ல, பூட்டை திறந்து வைத்திருந்தவனும் குற்றவாளி தான்.
சுசேதா தலால் அந்த பூட்டு திறந்திருப்பதை உலகிற்கு காட்டினார். அவர் இல்லை என்றால் இந்த மோசடி இன்னும் பல ஆயிரம் கோடிகளுக்கு போயிருக்கும். ஒரு வேளை இன்று வரையிலும் தொடர்ந்திருக்கலாம்.
அவர் அந்தச் செய்தியை எழுதியதால் அவருக்கு என்ன கிடைத்தது? மிரட்டல்கள். தலால் தெருவின் பெரும் புள்ளிகள் அவரைத் தொலைபேசியில் மிரட்டினார்கள். "உன் வேலையை பார்" என்றார்கள். ஆனால் அவர் நிற்கவில்லை.
இன்று நாம் பங்குச் சந்தையில் பார்க்கும் DEMAT கணக்கு, NSE என்ற புது பங்குச் சந்தை, வங்கிகளின் டிஜிட்டல் SGL இவை எல்லாம் சுசேதா தலாலின் அந்த ஒரு கட்டுரையால் வந்தது.
வங்கி அமைப்பு தன்னை சரி செய்து கொண்டது.ஆனால் சாமானியன்? 1992ல் பங்கு சந்தையில் பணத்தைப் போட்டு இழந்த அந்த நடுத்தர குடும்பங்கள்? அவர்கள் கதை என்ன ஆனது?Black Mondayயில் சாமானியனுக்கு என்ன நடந்தது?
அடுத்த அத்தியாயத்தில்.....
1 comment:
1992-ஆம் ஆண்டின் இந்தியப் பங்குச் சந்தை மோசடியின் பரபரப்பையும், தீவிரத்தையும் மிக அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஹர்ஷத் மேத்தாவின் பிரம்மாண்டமான அதிகாரத்தையும், அதை எதிர்த்து நின்ற சுசேதா தலாலின் துணிச்சலான கட்டுரைகள்
SGL கணக்குகள் மற்றும் போலி BR போன்ற சிக்கலான நிதித்துறைச் சொற்களை மிகவும் எளிய நடையில் புரிய வைத்திருப்பது சிறப்பு. விறுவிறுப்பான கதைநகர்த்தலும், காட்சிகளை விவரிக்கும் திறனும் வாசகர்களின் ஆர்வத்தை இறுதிவரை தக்கவைக்கின்றன. நடுத்தரக் குடும்பங்களின் இழப்பைக் கேள்வியாகக் கேட்டு முடித்திருக்கும் விதம், அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்குகிறது.
Post a Comment