Tuesday, 20 February 2024

அறிய வேண்டிய நூறு வரலாறு - நெப்போலியன் போனபர்ட்

                                    அறிய வேண்டிய நூறு வரலாறு- பொ.சங்கர்

                                                    வறுமையாலும் கலகத்தாலும் சிதறுண்ட  பிரான்ஸ் நாட்டைத்  தன் ஆட்சித் திறமையால் மீட்சிமை பெற வைத்தவரின் வரலாறு அறிய வேண்டுமா? மொத்த ஐரோப்ப உலகத்தையும் தன் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு அரசாட்சி செலுத்தியவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா?  இழந்த நாட்டை வீழ்ந்து போது வீறு கொண்டு போராடி மீட்டவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா? இப்படி  பல வரலாறுகளுக்குச் சொந்தமான மாவீரன் யார்? நெப்போலியன் போனபர்ட் என்னும் பெயரே வரலாறாக, வரலாறே பெயராக மாற்றிய மாவீரனின் வரலாறு அறிவோம் வாருங்கள். 

       பிரான்ஸ் நாட்டின் கார்சிகா தீவில் 1769 ல் பிறந்த நெப்போலியன் சிறுவயதில் சாதாரண மாந்தருக்கு மகனாகப் பிறந்து மன்னனாக மாறிய இவரின் வாழ்வு சரித்திரத்தின் சாதனைச் சுவடுகளில் காலம் கடந்தும்  வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் மகனாகப் பிறந்து பார் புகழும் மன்னனாக அவதாரம் எடுத்த நெப்போலியன்  , தாம் கடந்து வந்த பாதைகளைப் பார் புகழும் வரலாறாக மாற்றினார். 

           நெப்போலியன்,  பிரெஞ்ச் இராணுவப்  படையின் ஆர்டிலரி பிரிவில் சேர்ந்து டுலால் போரில் சிறப்பாகப் போரிட்டமைக்காக, பிரெஞ்ச் படையின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.  படைத்தளபதியாக முன்னின்று ஆஸ்திரிய படைகளை வென்ற பிறகு நெப்போலியனின் புகழ் நாடு கடந்து பரவியது. படைத்தளபதியாக பல நாடுகளை வென்றவர் ஒரு கட்டத்தில் தன் நாட்டின் அரசனாக 1804 ல்  தன்னைத் தானே முடிசூட்டிக் கொண்டார். 

      1804 முதல் 1815 வரை பல நாடுகளை வென்றெடுத்து பிரெஞ்ச் நாட்டை பல வழிகளில் மேம்படுத்தினார். வரலாற்றில் ‘நெப்போலியன் போர்கள்’ என்றழைக்கப்படும் இந்தப் போர்களினால் பலவற்றை இழந்து , பலவற்றைப் பெற்று தம் தேசத்தைக் கட்டமைத்தார். புரட்சி, கலகம் , வறுமையால் அமைதியை இழந்திருந்த பிரெஞ்ச் நாடு நெப்போலியன் மன்னராக ஆனபிறகுதான் அமைதியான வாழ்வை வாழத்தலைப்பட்டனர். பிரெஞ்ச்  நாட்டின் உயர் வகுப்பு மக்களின் அதிகாரத் திமிரை அடக்கி , பிரெஞ்ச் நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாழ்வை இழந்து , உரிமைகளை இழந்திருந்த தேசத்திற்கு நெப்போலியன் விடிவெள்ளியாக மாறினார். பிரெஞ்ச் நாட்டின் அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் CODE OF NEPOLEAN என்று அழைக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் BANQUE DE FRANCE வங்கியை நிறுவி நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவினார். ஜெர்மனி, இத்தாலி , போலந்து , டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 

                 

       அமைதி இல்லாத , உரிமை இல்லாத , வறுமை நீடித்திருந்த ஒரு தேசத்தின் மக்களுக்கு உரிமைகள் பலவற்றை அளித்து வறுமை இல்லாத நாடாக மாற்றிய நெப்போலியன் வரலாற்றில் அவசியம் படிக்கப்படவேண்டிய பாடம். இவ்வளவு புகழுடன் விளங்கியவரின் வீழ்ச்சியையும் நாம் அறிய வேண்டும்.  

ஐரோப்பா முழுமையையும் போரில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கடைசி வரை இங்கிலாந்தை நெப்போலியனால் வெல்ல முடியவில்லை. அதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாடும் இங்கிலாந்துடன் வணிகத்தொடர்புகள் கொள்ள கூடாது என்று தடை விதித்தார்.

நெப்போலியனின் தடையை மீறி ரஷ்ய நாடு இங்கிலாந்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டது. இதனால் ரஷ்யா மீது போர்ப்பிரகடனம் செய்து ஐந்தரை இலட்சம் படை வீரர்களுடன் ரஷ்யாவை முற்றுகையிட்டார். ரஷ்ய படைகள் தம்மை எதிர்க்கும் , ரஷ்ய மன்னன் எதிர்கொண்டு தம்மோடு போர் புரிவான் தம் படையால் ரஷ்யாவை வீழ்த்தலாம் என்று எண்ணியவரை மாஸ்கோ என்னும் மனிதர்கள் இல்லாத நகரம் வரவேற்றது. மன்னன் இல்லாத , மனிதர்கள் இல்லாத ரஷ்ய நாட்டில் கடுமையான பனியும் கடுங்குளிரும் பிரெஞ்ச் வீரர்களை வாட்டியது. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து பிரெஞ்ச் நாட்டைக் கைப்பற்றிய நெப்போலியன் ரஷ்ய நாடு குறித்துத் திட்டமிடாமல் நடத்திய போரால் கிட்டத்தட்ட பல இலட்சம் வீரர்களை இழந்தான். 30 ஆயிரம் படை வீரர்களுடன் நாடு திரும்பிய நெப்போலியனை ரஷ்யா ,இங்கிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரிய நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கியது. பல இலட்சம் படை வீரர்களை இழந்த நெப்போலியன் தம் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான். 

நான்கு நாடுகளும் கூட்டாகத் தாக்கியதில் பிரெஞ்ச் வீழ்ந்தது. எல்பா தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி மீண்டும் பிரெஞ்ச் நாட்டின் சக்ரவர்த்தியானார்.  இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தை பெல்ஜியத்தில் வாட்டர்லூ என்னுமிடத்தில் எதிர்கொண்டார். சூரியன் மறையாத , தோல்வியே இல்லாத இங்கிலாந்திடம் நெப்போலியன் மீண்டும் தோற்றார். வரலாற்றில் வாட்டர்லூ போர் நீங்கா இடம் வகித்தது. நெப்போலியனும் நீங்கா இடம்பிடித்தார். பல சிறப்புகளை , பல வரலாறுகளை உருவாக்கிய நெப்போலியனை ஹெலினா தீவில் ஆறு வருடங்களுக்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து வைத்தனர். மங்காத புகழுக்குச் சொந்தக்காரனாக விளங்கிய நெப்போலியன் தன் வாழ்வில் வீழ்ச்சி அடைந்தாலும் வரலாற்றில் வீழ்ச்சி அடையவில்லை. அறிய வேண்டிய வரலாற்றில் நெப்போலியன் வரலாறு தனித்துவமானது. 


Wednesday, 14 February 2024

விடை காண முடியாத வினாக்கள்

விடை காண முடியாத வினாக்கள் பட்டியல் இந்தியாவின் சாலைகள் போல நீளமாகவே உள்ளது. 
1.நீதிமன்றம் என்று பெயர். ஆனால் நிதி இருந்தால்தான் நீதி கிடைக்கிறது. இந்த வினா சாமானிய மக்களுக்கு பல காலமாக விடை கிடைக்காத  கிடைக்காத வினாவாகவே உள்ளது. உதாரணமாக இந்தியாவின் உயரிய அரசியல்வாதிகளுக்கும் திரை நட்சத்திரங்களுக்கும் இரவு இரண்டு மணிகளுக்குக் கூட நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வார்கள் அவர்களுக்கு ஏற்றவாறு.. ஆனால் சாமானிய மக்களுக்கு வாய்தா என்னும் வினா நீண்டு கொண்டே செல்கிறது. நீதி எப்போது நீதியாக இருக்கும் என்பதை நாம் எப்போது உணர்வது ?
2. கோயில்கள். மன நிம்மதி வேண்டி மக்கள் படை எடுக்கும் இடம். ஆனால் பொது தரிசனத்திற்குப் பொதுவாகவே நீண்ட வரிசை. பத்து ரூபாய் செலுத்தினால் பொது தரிசனத்திற்கு சற்று குறைந்த வரிசை. நூறு ரூபாய் செலுத்தினால் வரிசையின் நீளம் குறையும். இந்த வரிசைகளில் பணம் செலுத்தாமல் கோயில் பணியாளர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தினால் எந்த வரிசையிலும் நிற்காமல் உள் சென்று காண இயலும் இறைவனை. இந்த வினாவிற்கும் விடை எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. 
3. அரசியல்வாதிகள். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை நம்பி வேறொரு மாற்றத்தைத் தேடி, விடையைத் தேடி வாக்களிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ விடை காண முடியாத வினாக்கள் மட்டுமே. இதில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று, தேர்தல் காலத்தில் மக்கள் தம் வியாபாரத்திற்காக மருத்துவத்திற்காக பயன்பாட்டிற்காக கொண்டு செல்லும் தொகைகளைப் பறிமுதல் செய்து செய்தியாக ஒளி(லி)பரப்புவார்கள்.!. ஆனால் எந்த அரசியல்வாதியின் எந்த அரசியல் கட்சியின் மொத்த தொகையும் கைப்பற்றப்பட்டதாக வரலாறு இல்லை. இதற்கு விடையும் இல்லை. 

Thursday, 16 March 2023

இராஜராஜ சோழன் - உடையார் நாவல்



      பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்துப் புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்தவிடை பாலகுமாரனின்            ' உடையார்'.

      ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்குச் சோழ தேசம் காண வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கைப்பிடித்து அழைத்துப் போகிறார் பாலகுமாரன். ஒரு அரசன் எப்படி இருப்பான் ,எப்படி பேசுவான், எப்படி நடப்பான், எப்படி உத்தரவு போடுவான் என அத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.

சுந்தர சோழனுக்குப் பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,


இராசராசன் இல்லை என்றால் தமிழுக்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை. சிதம்பரத்தில் தமிழ் - தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழை அந்த மகான் மீட்டுக் கொடுத்தது தான் அத்தனையும்.

இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை. அவனோடு வாழ்ந்து அவனோடு வாழ்வீர்கள்.

என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன்.கடைசி அத்யாயம் வாசித்து 20 நிமிடம் தனித்தேன். நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் .என் அரசன் இறந்தது போல் அழுதேன்.என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன். கடவுள். நீ எங்கே? இப்போது எங்கே இருக்கிறாய்? நான் இனி உன்னை எப்படிப் பார்ப்பேன்? இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டுக் கேட்ட கேள்வி.

நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலைக் கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை. எம் மக்கள் கட்டியது என்றும்,

"நாம் கொடுத்தனவும்

நம் அக்கன் கொடுத்தனவும்

நம் பெண்டுகள் கொடுத்தனவும்

கொடுப்பார் கொடுத்தனவும் "

என கல்வெட்டில் எழுதச் சொன்னானே இவன் அரசனா, இல்லை அவன் ஈசனின் குழந்தை.

கோவிலுக்கு நிவந்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல்வெட்டாக பதியப்பட்டு உள்ளது.

இதில் வரும் கதை 95% உண்மை சிறிது கற்பனை. இதில் வரும் பெயர்கள் 98% உண்மை.

நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன். ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்தது.

ஆனால் உடையார் படித்து அதன் பிறகு 

நான் தஞ்சை போனேன்.

அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு

" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி.....

என்று அவன் 
மெய்க்கீர்த்தியை உரக்கச் சொன்னேன். அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டுத் தடவி அவன் நின்ற இடம் தொட்டு கண்ணில் ஒற்றினேன்.

இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்தக் கல்லைத் தடவி இருப்பான்.இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான்., இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டுத் தடவி மெய் சிலித்து போனேன்.

அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வணங்க வேண்டும் போல இருந்தது.

அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை.அவர்களின் மாட மாளிகைகள் இல்லை. எல்லாம் பின்னால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது.

ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..

"சந்திரர் சூரியர் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "

வாழ்க சோழ தேசம்

வளர்க தமிழ்

வாழ்க இராசராசன்



** உங்கள் வாழ் நாளில் கட்டாயம் 'உடையார்' படியுங்கள் ***

உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்தப் பிரமாண்ட கோவில் முன் நின்று, கண்ணில் நீர் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவீர்கள்.வணங்குவீர்கள்..

இப்படி ஒரு படைப்பைத் தந்த எழுத்தாளர் 'எழுத்துச் சித்தர் திரு பாலகுமாரன்' அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

Monday, 18 July 2022

கவிஞர் புவியரசு


கவிஞர் புவியரசு அவர்கள்

1. உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன்புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாக 1930 ஆம் ஆண்டில் பிறந்தவர் கவிஞர் புவியரசு.
இவரது இயற்பெயர் எஸ். ஜெகநாதன்.ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும்.
2. இடைநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் கற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன.


3. வானம்பாடி கவிஞர்களில் மூத்தவர் , பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியின் முதல் மாணவர் கவிஞர் புவியரசு.

4. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருதை இரண்டு முறை பெற்ற மூத்தப் படைப்பாளி.

5. கேரள மாநிலத்தின் சாகித்திய புரஸ்கார் விருது பெற்றவர்.

6. கலைஞர் கருணாநிதி அவர்களால் பொற்கிழி விருது பெற்றவர்.

 7. ‘வானம்பாடி’ இதழின் தாய்ப்பறவை. ‘தேடாதே தொலைந்துபோவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று அக்காலகட்டத்தின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்குமாறு கவிதை எழுதியவர்.

 8. அமைப்புகளில் முடங்கிக் கிடந்த கவிதைகளை வீதிவரை கொண்டு வந்து வீட்டில் இருந்தவர்களை வெளியே வர வைத்தது வானம்பாடி அமைப்பின் மிகப்பெரிய சாதனை.. வானம்பாடியின் முகவரியும் கூட கவிஞர் புவியரசு தான்.

 9. சலனமில்லாத மனதை உடையவர் தான் சத்குரு. என் தந்தை சலனமில்லாத மனம் உடையவர். அதனால்தான் என் இல்லத்திற்கு சத்குரு இல்லம் என்று பெயர் வைத்துள்ளேன்.

 10. என்னுடைய தத்துவத் தேடுதலுக்கு மேடை அமைத்துக் கொடுத்த இடம் பேரூராதீனம் தமிழ்க் கல்லூரியே என்று பலமுறை கூறி வருபவர். அவ்வகையிலேயே என்னுடைய மிர்தாதின் புத்தகம், அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் என்ற நூலும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறுபவர்.

11. பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரியில் மாணிக்க வாசகரையும் கற்கவும், மபொசியையும் , மார்க்ஸையும் கற்கவும் பேரூராதீனம் 24 ஆம் சன்னிதானம் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று பெருமையுடன் கூறுவார்.

12. தலைவனை நம்பாதே தத்துவத்தை நம்பு என்ற கொள்கையில் இன்றுவரை உறுதியோடு இருப்பவர் கவிஞர் புவியரசு.

13. பலராலும் இன்றுவரை பாராட்டப்படும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக மிர்தாதின் புத்தகம் கரமசோவ் சகோதரர்கள் நூலும் திகழ்கின்றது.
 
14. இந்தியாவின் தலைசிறந்த 10 மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் கவிஞர் புவியரசுக்கு இடம் உண்டு.

 15. கரம்சோவ் சகோதரர்கள் நூலை மொழிபெயர்த்த இவர்தான் கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் ஓஷோ பாகம் 1 என்ற நூலையும் மொழிபெயர்த்தவர். இரண்டு தத்துவங்களும் வேறு வேறு மார்க்கத்தை கொண்டவை. ஆனால் இரண்டு மார்க்கத்திலும் தீவிர ரசிகர்களை உடையவர் கவிஞர் புவியரசு அவர்கள்.
 
16. ஓஷோ நூல்களின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக 
அன்பின் அதிர்வுகள், இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள், உன் அற்புத ரோஜா மலரட்டும், 
புல் தானாகவே வளர்கிறது என்று இவரது மொழிபெயர்ப்பு நீண்டு கொண்டே செல்கிறது..

 17 . நாம் உணராத வேற்று மொழி இலக்கியங்களான கலீல் கிப்ரானும், உமர் கய்யாமும், தாகூரும்,ஷேக்ஸ்பியரும் புவியரசு வழியாகவே தமிழகம் வந்தடைந்தார்கள்.

18. கவிஞர் , நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என அத்துணை துறைகளிலும் தனது பிரமாண்டமான கப்பலை செலுத்தி வருபவர்..
மறக்க இயலாத கதைகளாக 
ஒப்பம், அடக்கடவுளே, தோன்றாத் துணை, அஜீரணம், மகன் தந்தைக்காற்றும் உதவி, தாளிப்பு, குழப்பம் என்னும் பட்டியல் நீள் வரிசை கொண்டது...

19.பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல்’ என்ற முழக்கத்துடன் வானம்பாடி கவி மடல்கள் வலம் வந்தன.

20. புரூக் பாண்ட் தேயிலை நிறுவனத்தின் லட்சினை ஓவியமான ‘ஒரு மொட்டும் இரு இலைகளும்’ ஓவியத்தை வரைந்தவர் புவியரசு வின் அப்பாதான். புராணிக ஓவிய மரபு தெரிந்தவர் அப்பா. ஓவியம் வழியாக ஒருகட்டத்தில் தத்துவத்துக்குப் போய்விட்டார். அவரின் பெயர் சுப்பையா.

21. நடிகர் கமல்ஹாசன் மதிக்கும் ஆசிரியர்களில் கவிஞர் புவியரசு முக்கியமானவர்.

22. மருதநாயகம் கதை வடிவமைப்பு கமல்ஹாசன் , கவிஞர் புவியரசு, எழுத்தாளர் சுஜாதா ஆகிய மூவரும் உருவாக்கியதே ஆகும்.

23. கவிஞர் புவியரசு அவர்களின் படைப்பில் முக்கியமானதாகக் கொண்டாடப்படும் 'மிர்தாத்தின் புத்தகம்' நூலை ரமணாசிரமத்திலிருந்து அனுப்பி மொழி பெயர்க்கச் சொன்னார்கள் என்றும், இதை மொழிபெயர்த்து விட்டு செத்து போ என்று அவராகவே நினைத்து எழுதியுள்ளார்.

24. ஞானிகள் நமக்குப் பாதைகளைச் சுட்டிக்காட்டும் கைகாட்டி மரங்களாக நின்றுகொண்டிருப்பார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார். 

25. கவிஞர் புவியரசு அவர்கள் ,பயணவழி அனுபவங்களே பாடங்கள். அதுவே வாழ்க்கை . அனுபவங்களை உணருங்கள் என்று வலியுறுத்துவார்.

26. கவிஞர் புவியரசு அவர்களின் மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பானது இன்று வரை மிகச் சிறந்த சாதனையாக உள்ளது.

27. நடிகர் பார்த்திபனுடன் ஹவுஸ்புல் படத்தில் இணை இயக்குநராகவும் கவிஞர் புவியரசு பணியாற்றியுள்ளார்.

28. சாகித்ய அகாடமி விருதுகள் கவிஞர் புவியரசு அவர்களுக்கு, வங்காளக் கவிஞன் காஜி நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான புரட்சிக்காரனுக்காகவும், கையொப்பத்திற்காகவும் வழங்கப்பட்டன.

29. ஒரு இரயில் பயணத்தில் "வானத்திற்கும் வாசல் திறக்கும்" என்ற மரபின் மைந்தன் முத்தையா மூலமே ஓஷோ பற்றிய அறிமுகம் கவிஞர் புவியரசு அவர்களுக்குக் கிடைத்தது. 

30. இன்றைய ஆசிரியர்களுக்கே ஓஷோவைத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு செல்ல முடியும்? என்னும் ஆதங்கத்தை அடிக்கடி வெளியிடுவார்.

31. தமிழரசு இயக்கத்தில் பங்குகொண்டு தமிழ் ஆட்சி மொழி- பயிற்சி மொழி -மற்றும் தமிழகஎல்லைப்போராட்டங்களிலும் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றவர்.

32. கவிஞர் புவியரசு அவர்களின் ஞானக்கிளி என்ற 13 வாரத்தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று .

33. ‌மூன்றாம் பிறை நாடகக்காவியம் பல 
பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.

34. மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசைப் பெற்றுள்ளார்.

35. திரைப்படத் துறையில் பங்கு கொண்டிருந்த கவிஞர் புவியரசு கேரள திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

36. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. 

37. மார்க்சியவாதியாய் இருந்த எனக்கு மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தி என்னுடைய தத்துவத் தேடலுக்கு வழி வகுத்தவர் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களே என்று கவிஞர் புவியரசு அடிக்கடி மேடையில் கூறுவார்.

38. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் முதல் மாணவர்களில் கவிஞர் புவியரசு அவர்களும் , திரு.மணவாளன் அவர்களும் முக்கியமானவர்கள்.

39. உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற போது கலைஞர் கருணாநிதி அவர்கள் விரும்பி அழைத்தும் , கொண்ட கொள்கை காரணமாக மறுத்தார். கலைஞர் கருணாநிதி அவர்கள், கவிஞர் கனிமொழி மூலம் பலமுறை வலியுறுத்தியும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் கவிஞர் புவியரசு.

40. கவிஞர் புவியரசு அவர்கள் , தமது தத்துவத்தின் தலைவராக திரு.மபொசி அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த போது , தமது தலைவனே கொள்கை மாறியதற்கு(திராவிட ஆதரவு) மிகவும் வருந்தி அதனை ஒரு பொது மேடையிலும் குறிப்பிட்டுள்ளார்.

41. மார்க்சிய திறனாய்வாளர் திரு. ஞானி அவர்களும் கவிஞர் புவியரசு அவர்களும் நெருங்கிய நண்பர்கள்.

42. கவிஞர் புவியரசு அவர்களின் இளமைக் காலத்தில் பாதி நாட்கள் சிறை , மீதி நாட்கள் பேரூராதீனம் தமிழ்க் கல்வி என்றே கழிந்தது. 

43. கவிஞர் புவியரசு அவர்கள் நாடகத் துறையிலும் சிறந்து விளங்கி வருபவர். இவர் இயற்றிய பல நாடகங்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளது.

44. வானம்பாடி கவிஞர்கள் , "மானுடம் பாடும் வானம்பாடி" என்னும் நோக்கில் கவிதைகள் எழுதி தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.

45. வானம்பாடி என்பது இதழ் அல்ல , இயக்கம் என்று கவிஞர் புவியரசு அடிக்கடி குறிப்பிடுவார்.

46. உலகின் மிகச்சிறந்த நல்ல நூல்களை எந்த மாநிலத்தில் அழகாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் எனில் மலையாள இலக்கியம் என்று மறுக்காமல் கூறி வருபவர் கவிஞர் புவியரசு.

47. கவிஞர் புவியரசு அவர்கள் ஆங்கில மொழியில் மிகச் சிறந்த புலமையோடு திகழ்கிறார். ஆங்கிலத்தை பள்ளி, கல்லூரியில் கற்காமல் Reader's digest எனும் இதழ் வாயிலாகவே கற்றுத் தேர்ந்தவர்.

48. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தை அறிஞர் அண்ணாவுடன் அமர்ந்து பார்த்த நிகழ்வு , தன் வாழ்நாளில் மறக்க இயலாத ஒன்று என்று எப்போதும் குறிப்பிட்டு மகிழ்வார்.

49. இலக்கிய வாழ்வு வாழ்ந்ததில் நிறைவு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. சின்ன மனத்தாங்கல்களும் இருக்கின்றன... அதில் முக்கியமானது, புறக்கணிக்கப்படுதல்.
எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்ற பலருக்கும் அது இருக்கிறது என்பது கவிஞர் புவியரசு அவர்களின் முக்கிய வினாவாக இன்றும் தொடர்கிறது.

50. 91 வயதிலும் தமிழ் இலக்கிய வானிலும் மொழி பெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கும் கொங்கு நாட்டின் மணி மகுடம் கவிஞர் புவியரசு.

இன்னும் பல நூல்கள் கவிஞர் புவியரசு அவர்கள் மூலம் இந்த உலகம் பிரசவிக்கும்..

அன்புடன் சங்கர்.

Monday, 30 May 2022

நான் விரும்பும் தலைவர் - வ.உ. சிதம்பரனார்

 நான்  விரும்பும் தலைவர் - வ.உ.சிதம்பரனார்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை

  2. பிறப்பும் இளமையும்இளமையும்

  3. தேசவிடுதலைப் பணிகள்

  4. இவரது சேவைகள்

  5. முடிவுரை

முன்னுரை

இந்திய சுதந்திர போராட்டத்திலே தனது அளப்பரிய தியாகத்தினால் மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவர்அறியப்பட்டவர் வ.உ சிதம்பரனார் ஆவார். இவரது வாழ்க்கை , இவரது சேவை , இவரது போராட்டங்கள் இக்கட்டுரையில் கட்டுரையில் நினைவுகொள்ளப்படுகிறது.

பிறப்பும்  இளமையும்இளமையும்

 வ.உ.சிதம்பரனார்  தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலுள்ள “ஒட்டப்பிடாரம்” எனும் இடத்தில் 05 செப்டம்பர் 1872 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தனது இளமை  முதலே சிறந்த கல்வி அறிவும் , பிற நல்ல குணங்களை உடைய மனிதராக விளங்கினார். வலியவர்களால் எளியவர்களுக்கு பாதிப்பு வரும் போதெல்லாம் இவர் மனம் கலங்கி அவர்களுக்கு உதவும் குணம் உடையவர்.

         திலகர் போன்ற தேசவிடுதலைப் போராளிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு 1905 இல் இந்திய காங்கிரஸில்  தன்னை இணைத்துக்க் கொண்ட இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடத் துவங்கினார்.மிகச்சிறந்த தனது அறிவாற்றலால் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இவரது வாழ்க்கைப் பயணம் முழுவதும்   போராட்டமாகவே விளங்கியது.

தேசவிடுதலைப்  பணிகள்

ஆங்கில அரசு இந்தியர்களை எல்லா வகையிலும் அடிமைப்படுத்துவதை கண்டு கொதித்த இவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெபெனிக்கு எதிராக 1906 இல் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” நிறுவனத்தை இவர் துவங்கினார்.

“எஸ். எஸ் கார்னியோ” “எஸ். ஏஸ் காவோ” என்ற இரு கப்பல்களை வாங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களின் எதிர்ப்பைக் காட்டினார். அதனால்  கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார். இவரது போராட்டங்களைக்க் கண்டு கோபமடைந்த ஆங்கில அரசு இவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தி இவரை சிறையில் அடைத்தது.அந்தத் தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே,  சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் ,  பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்" என்று எழுதினார். 

                    கோயமுத்தூர் சிறைச்சாலையில் இருந்த போது ஆங்கிலேய அரசு இவரை செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியது.  “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில்  நோவதுவுங் காண்கிலையோ?” என்று அவரின் உற்ற நண்பர் பாரதியார் மனம் நொந்து பாடினார்.

இவரது சேவைகள்

          இவரது சேவைகள் காலம் கடந்தும் வாழ்கின்றது. அடிமைப்பட்டு கிடந்த தேசத்துக்காக வ.உ.சி போராடினார். வசதி இல்லாத மக்களுக்கு சட்ட உதவிகளையும் இன்னும் பிற உதவிகளையும் எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்தார்.    சிவஞானபோதம், திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை எழுதி தமிழ்ப்ப்பணி ஆற்றினார். தனது சுயசரிதை வாயிலாக தேசத்து மக்களை உத்வேகப்படுத்தினார். இவர் தனது மன நிலைப்பாட்டை

“என் மனமும் என் உடம்பும் என் சுகமும் என் அறம் என் மனையும் என் மகவும் என் பொருளும்- என் மதியும் குன்றிடினும் யான் குன்றேன். கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து”

என்று மிகுந்த மன வைராக்கியம் உடைய மனிதராக வாழ்ந்து காட்டியவர் இவராவார்.  தம் வாழ்வின் இறுதி நிமிடங்களில்  , மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய 1936 நவம்பர் 18 ஆம் நாள் உயிர் துறந்தார்.

முடிவுரை

     வ.உ.சி அவர்களைப்  பெருமைபடுத்தும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் , பாடசாலைகளும், நூலகங்களும்  இவரது பெயரில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார்   போன்ற பெரும் தலைவர்களுக்கு எம்மால் முடிந்த நன்றிக் கடன் என்னவெனில் அவர்களின்  விடுதலை உணர்வுகளை எந்நாளும் மறவாமல் இருப்பதே ஆகும். 

 


Friday, 21 January 2022

வேலுநாச்சியார்

நான் தான் தமிழ் நாட்டின் வீரமங்கை வேலுநாச்சியார்.

பலரும் அறிந்த
ஜான்சிராணி என்னும் மாபெரும் வீரப் பெண்மணி தோன்றுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்பே பரங்கியரை எதிர்த்த  வீரத்தின் விளை நிலமாம் தமிழ் மண் பெற்றுத்தந்த வீரத் தமிழச்சித்தான் இந்த வேலுநாச்சியாராகிய நான்…
பெண்ணாக நான் பிறந்தாலும் ஆண் வாரிசாகவே வளர்க்கப்பட்டேன். கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, குதிரை‌ ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்துத் திறன்களையும் கற்றுத் தேர்ந்தேன்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது எனப் பல மொழிகளையும் கற்றேன்.

சிவகங்கைச் சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை நான்.
சிவகங்கை ராஜாவுக்கு
சீதனமாக...  சீர் எழிலாக
மன்னர் முத்துவடுக நாதருக்கு ராணியாக...
பின்னர் ஏணியாக-அவர் குலம் காக்கும்
கேணியாக
குணங் காக்கும் தோணியாக
அவரைச் சுற்றி தேனீயாக...
அவர் பயிற்சியிலும்
முயற்சியிலும் பங்கு
கொள்ளும் ராணியாகத் திகழ்ந்தேன்.

திப்பு சுல்தானின் 5000 படைவீரர்களின் உதவியோடு இழந்த சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தேன்.  ஏற்றமிகு ஆட்சி புரிந்தேன்.

ஆங்கிலேயர்கள் ஒருமுறை எங்கள் அரண்மனைக்கு வரி கேட்டு வந்த போது நான் அவர்களுக்குச் சொன்ன பதிலை இப்போது நம் இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின நாளில் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

எங்கள் மண்.
எங்கள் நாடு.
எங்கள் மக்கள்.
இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும் எங்கள் உழைப்பைச் சொல்லும்.
எங்கள் மக்களின் உழைப்பாலும் வியர்வையாலும் உதிரத்தாலும் உருவானது எங்கள் நாடு.
இங்கே ஓடுகின்ற நதிகளும்,
நிற்கின்ற மரங்களும்,
வீசுகின்ற காற்றும்,
அடிக்கின்ற வெயிலும் பெய்கின்ற மழையும்
எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்...

வீரம் எங்களுக்கு விளையாட்டு...
விவேகம் எங்கள் தாலாட்டு...
அன்புக்கு எங்கள் தலை குனியும்...
ஆணவம் கொண்டோர் தலை எங்கள் மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ வந்து எங்கள் பூமியில் பிழைக்க வந்த உங்களுக்கு, எங்களிடம் வரிகேட்க உரிமையும் இல்லை...
அதில் ஒழுக்கமும் இல்லை...
அதனால் எங்கள் மன்னர் சார்பிலும் எங்கள் மக்கள் சார்பிலும் சொல்கிறேன். வரி என்று எங்களிடம் கேட்டு வந்தது இதுவே இறுதியாக இருக்கட்டும்.

இனிமேலும் இது தொடர்ந்து வந்தால் வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது!
இது எச்சரிக்கை மட்டுமல்ல.
எங்கள் இறுதி அறிவிப்பும் இதுதான்..."
தமிழர் தாயகத்தை அன்னியரிடம் இருந்து மீட்கப் படை திரட்டி போராடிய முதல் பெண் வீராங்கனை  நானே!
இந்த மண்ணும் விண்ணும் உள்ள வரை வேலு நாச்சியாராகிய எனது வீரமும் தீரமும் வரலாற்றுப் பக்கங்களில் இருக்கும்.
எனது வரலாறு காலத்தால் அழிக்கப்படாத வீர வரலாறு…
வாழ்க பாரதம்
வாழ்க நம் தாய் நாடு!

Monday, 21 June 2021

தருமபுரம் ஆதீனம்

தருமையாதீன_பூசைமடம்

#திருத்தருமபுரம் மடத்தின் ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாக "#ஸ்ரீசெந்தமிழ்_சொக்கநாதப்பெருமான் எழுந்தருளி உள்ளார்!!", இவர் ஸ்படிகலிங்கமாக தாம் எழந்தருளி இருக்கும் பெட்டகத்துடன் "ஆதிகுரு முதல்வருக்கு மதுரை பொற்றாமரை குளத்தில் இறையருளால் கிடைக்கப் பெற்றவர்!!",

"கண்ணுக்கு இனிய பொருளாகி என் கரத்தில் வந்தனை!!" என்று இதனை ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமானும் குறிக்கிறார்கள், "இவர் திருவாலவாய் பெருமான் ஆதலால் ஆலவாய் சொக்கநாதப் பெருமான்தான் தருமையாதீன கர்த்தர்களுக்கு ஆன்மார்த்த மூர்த்தியும் ஆவார்!!"

இம்மூர்த்தி எழுந்தருளியுள்ள இடம் தருமபுர மடத்தில் "#பூசைமடம்" என்ற பெயரில் தெற்கு நோக்கி அமைந்துள்ளதும் இதன் இருபக்கங்களிலும் உள்ள "96 கண்கள்" உடைய சாளரசன்னலும் தில்லை சிற்றம்பலத்தையே நினைவு கூறுகிறது!!"

"மதுரை, உச்சந்தலைக்கு மேலே உள்ள #துவாதசாந்த_ஸ்தான_தலம் ஆதலால், இப்பூசைமடத்தின் "தொட்டிகட்டு" என்னும் இடத்தில் நின்று செந்தமிழ் சொக்கநாதரை வழிபடுவோரின் உச்சந்தலைக்கு நேரே சொக்கநாதப் பெருமான் எழுந்தருளி இருக்கும் பீடம் இருப்பது தனிச்சிறப்பு ஆகும்!!"

"தில்லையிலும் ஓதுவார்கள் நின்று பாடும் எதிரம்பலத்தின் கீழ்பகுதியில் நின்று தரிசிக்கும் போது கூத்தபிரானின் #குஞ்சிதபாதம் நம் உச்சந்தலைக்கு நேரே இருக்கும்!! இந்த இரு ஆலயத்தையும் துவாதசாந்த பூர்வமாக நினைவு கூறும் வகையிலேயே தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது!!" இவ்வமைப்பு வேறு எங்கும் கிடையாது!!

"பரார்த்த பூசைக்கு உரிய ஆலயங்களை போலவே கருவறையை சுற்றி வர சுற்றாலை, தீர்த்த கிணறு, தனி மடைப்பள்ளி முதலியவற்றுடன் ஒரு தனித்தொகுப்பாக தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்",

இப்பூசை மடத்தின் தொட்டிகட்டு என்ற பகுதி மிக விசேசமானது, இந்த "தொட்டிகட்டில் நின்று தரிசிப்போர் ஒரே நேரத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான், ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமான், ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதனங்கள், தம்பிரான்கள், திருக்கூட்டத்து அடியவர்கள்   என அனைவரையும் தரிசிக்க முடியும்!!" இவ்வமைப்பு வேறு எங்கும் இல்லை என்பது எண்ணி இன்புறத் தக்கதாம்,

"தருமையாதீன பூசை மடத்தில் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதப் பெருமானோடு குருமகா சன்னிதானங்களின் உடையவர் என்னும் சிவபூசை, ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் ஆகிய மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர்", பூசைக்கு வரும் குருமகா சன்னிதானங்கள் முதலில் தம் உடையவர், விநாயகர், முருகன் உள்ளிட்டோருக்கு அபிசேகம் செய்துவிட்டு பிறகு, "தங்கப் பேழையில் இருக்கும் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதராம் ஸ்படிக லிங்க மூர்த்தியை வெளிக் கொணர்ந்து ஸ்நான வேதிகையில் எழுந்தருளப் பன்னுவார்கள்!!"

"ஸ்ரீ சொக்கநாதருக்கு திருமடத்து நந்தன வனத்தில் மலரும் பூக்களே உபயோகப் படுத்தப் படும், கடைகளில் வாங்குவதில்லை என்றாலும் அன்பர்கள் பக்தியுடன் கொடுக்கும் மலர்களையும் பெருமான் ஏற்கிறார், இவருக்கான அபிசேக தீர்த்தமாக பூசைமடத்து உள்ளேயே இருக்கும் கிணற்று நீர் மட்டும்தான் பயன்படுத்தப் பெறும், இவரது நெய்வேத்யங்கள் பூசைமடத்திலேயே உள்ள பிரத்யோக மடைப்பள்ளியில் மட்டுமே தயரிக்கப் படும்!!"

"எவ்வளவு விலை கூடினாலும் சுவாமியின் பூசைக்கு தேவைப்படும் சந்தனம் முழுவதும் தினமும் புதிதாக கைகளால் அரைத்தே பெறப்படுகின்றது!!", இதற்காக உயர்ந்த ரக சந்தன கட்டைகள் வாங்கப்பட்டு, பூசைமடத்தில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவற்றுடன் சேர்த்து அரைக்கப் படுகின்றது!!

தினமும் புதிய சந்தனத்தால் சுவாமியின் மேனிமுழுவதும் காப்பிடும் அளவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் இங்கு சந்தனம் அரைத்தே பயன்படுத்த படுவது வேறங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்!!

சிவதீபன்: ஆதீனத்தின் கோசாலையில் இருந்து பெறப்படும் பால் தயிர் முதலிய திரவியங்களுடன் நீராட்டு காணும் ஸ்ரீ சொந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு ஆதிகாலம் தொட்டே நீராட்டுவதற்காக, "சகஸ்ரதாரை, காண்டாமிருக கொம்பு, யானைதந்தம், பசுகொம்பு, தங்கப்பூணிட்ட வலம்புரி இடம்புரி சங்குகள் முதலிய அரிய பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றது!!"

நீராடிய பிறகு சந்தனகாப்பு, சந்தனாபிசேகம் ஆகியதும் சுவாமிக்கு ஜலதோஷம் வராமலிருக்க "ஸ்நான வேதிகையிலேயே மிளகு சாதம் நிவேதனமும்" பிறகு அலங்காரம் ஆனபிறகு "மகாநெய்வேத்யமும்" நடைபெறும்

மகாநெய்வேத்யம் என்பது, "ஞாயிறன்று வெண்பொங்கல், திங்களன்று சர்க்கரை பொங்கல், செவ்வாயன்று சம்பாசாதம், புதனன்று புளியோதரை, வியாழனன்று பருப்பு சாதம், வெள்ளியன்று தயிர்சாதம், சனியன்று எள்ளன்னமுமுமாக" #கமலபாத்திரத்தில் இருப்பதோடு, நித்யபடி சுத்தான்னத்துடன் பருப்பு மசியல், ஒருகூட்டு, ஒருபொறியல், தயிர் வீதம் நடைபெறும் கூடவே, "நெய்வேத்தியத்தின் பொழுது தாகசாந்திக்காக பருக நீரும் சுவாமிக்கு வைக்கப்படும் ஒரே சம்பிரதாயம் தருமை பூசை மடத்திற்கு மட்டுமே உரிய சிறப்பாகும்!!"

பிறகு விசேட சோடசோபச்சாரத்துடன் தீபாராதனை நடைபெறும், "ஸ்ரீ செந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு பழங்கலந் தொட்டே சோடசோபச்சாரம் நிகழ்ந்தது!!" என்பதனை குமரகுருபரர சுவாமிகள்,

"அருத்தியோடு எம்மை உருத்திர கணங்கள் தெரித்து மற்று இவ்வாறு அருச்சனை புரிதீர் என்று அங்கையற்கண்ணி பங்கில் வீற்றிருந்த செக்கர் வார்சடை சொக்க நாயகனை ஈறெண் திறத்து உபசாரம் வாய்ப்ப!!" என்று பாடுகிறார்கள்!!

ஆன்மார்த்த பூசையில் சோடசோபச்சாரம் கொடுப்பதில் பழமையானது தருமையாதீனம் என்பது இதன் மூலம் விளங்குகின்றது

சிவபூசை நிறைவில் மகாதீபாராதனை ஆனதும் சண்டேச பூசை நடைபெறுவது வழக்கம், ஆனால் "தருமபுரத்தில் சொக்கநாதருக்கு "#சுத்தபூஜை!!" என்ற முறையில் பூசைகள் நடைபெறுவதால் இங்கு சண்டேசர் பூசை பத்தி என்பது கிடையாது!!"

சிவதீபன்: "ஸ்ரீசொக்கநாதப் பெருமானை பெட்டகத்தில் ஒடுக்கும் பொழுது பெருமானின் இண்டை மாலையை பூசை செய்யும் சன்னிதானங்கள் தமக்கு தீட்சை பன்னிய முந்தய சன்னிதனங்களுக்கு அர்பணிப்பதாக கருதி எடுத்து வைத்து, சிவபூசை பலனையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு சுவாமியை பெட்டகத்தில் ஒடுக்கும் சம்பிரதாயமும் தருமபுரத்தில் மட்டுமே நடைபெறும் சிறப்பு வழக்கம் ஆகும்!!"

பூசைக்கு வரும் சன்னிதானங்கள் சிவசிந்தனையோடு வருவார்கள் அவர்களது செவியில் வேறு உலகியல் ஒலிகள் சேராத வண்ணம், அவர்களது பணிவிடையும் நீராடி ஈரத்துண்டுடன், "ஹரஹர மகாதேவ!! சிவா!!" என்று கோஷம் எழுப்பி கொண்டு கைதட்டியபடி வருவார்

அப்போது சன்னிதானங்கள் திருமஞ்சனம் செய்து அனுட்டானம் நிறைவு பன்னி கண்ணாடி, காகிதம் உள்ளிட்ட பொருட்களை தீண்டாமல் எவர் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் சிவபூசை செய்யும் கரங்களை ஹிருதயத்திற்கு நேராக சின்முத்திரை காட்டியபடி வைத்து கொண்டு நாமஜபம் செய்தபடி பூசை மடத்திற்கு பிரவேசிக்கும் காட்சி மிக ஆனந்தமான ஒன்று!!

"ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் பூசை நிறைவேறும் வரை ஒருவரிடமும் உரையாடாமலும் நீர் கூட பருகாமலும் எவரையும் தீண்டாமலும் மிக ஆச்சாரமாக இருந்து பூசையை நிகழ்த்துவது தருமைக்குரிய சிறப்புகளுள் ஒன்றாம்!!"

"சிவபூசை செய்யும் பொழுதோ வேறு பூசைகளிலோ உடுத்தியிருக்கும் வேட்டி முழங்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்ற மரபு படி, சன்னிதானங்களும் தருமை தம்பிரான்களும் வேட்டி நுனியை முழங்காலுக்கு மேலே தூக்கி செருகி இருப்பார்கள்!!"*

இக்காட்சி தருமையாதீனம் தவிரவேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சியாம், இதற்கு "கந்தை மிகையாம் கருத்து!!"* என்ற தேவார வாசகமும், "வழிபட கடவ மறையோன் முன்னும் துகிலிடை சுற்றி தூநீர் ஆட்டி!!" என்ற பதினோறாம் திருமுறை வரிகளும் சான்றாக அமையும்!!

சிவதீபன்: சுவாமிக்கு பூசை நிறைவேறிய பிறகு ஓதுவார்கள் தோத்திரம் பாடுகையில் சன்னிதானங்கள் பெருமானுக்கு நமஸ்காரம் செய்வார்கள், சன்னிதானம் எழுந்த பிறகு தம்பிரான்கள் நமஸ்காரம் செய்வார்கள் அவர்கள் எழுந்த பிறகு வந்திருப்போர் அனைவரும் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது விதி!!

பூசை மடத்தில் பாடும் ஓதுவார்கள் "இண்டை கட்டிய ஓதுவார்கள்!!" எனப்படுவர், இவர்கள் மட்டுமே பூசை மடத்தில் பாடும் தகுதி உடையவர்கள்  ஆவார்கள்

பிறகு ஸ்ரீகுருஞான சம்பந்தப் பெருமானுக்கு பூசை தீபாராதன நிறைவேறியதும் "தம்பிரான்கள் "ஹரஹர மகாதேவ சிவா!!" என்று கோஷமிட சன்னிதானங்கள் அனைத்து மூர்த்தங்கள் படங்கள் முதலியவற்றுக்கும் மலரிட்டு வணங்கி பண்டாரகட்டுக்கு எழுந்தருளுவது தருமையில் உள்ள தனிப்பட்ட நடைமுறை ஆகும்!!"

பூசை நிறைவில் பெட்டகத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான் எழுந்தருளிவிடுவதால், *வெள்ளித் தேரில் நாள்முழுதும் சுப்ரமணியர் காட்சி தருவது வழக்கம்!!"

ஏனைய சைவ ஆதீனங்கள் எதிலும் இல்லாத தருமையில் மட்டுமே உள்ள சிறப்பான ஒரு கட்டமைப்பு "#பதினாறொடுக்கம்" ஆகும்!! இது ஆகாமோத்தமான யோக கலையின் பதினாறு ஸ்தானங்களை கூறும் பதினாறு சிற்றறைகள் ஆகும், "இந்த அமைப்பை பூசை மடத்தினை வலம் வரும் பொழுது தரிசிக்கலாம் பூசை மடத்தை வலம் வரும் அமைப்பும் பதினாறு ஒடுக்கமும் பூசைமட விமானம் தில்லை சிற்றம்பல பொற்கூரை போன்ற அமைப்பும் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புத அமைப்பு என்பதனை எண்ணுகையில் நம் மனம் கற்கண்டினும் இனிய உவகை கொள்ளும்!!"

சிவதீபன்: நித்யபடி நடைபெறும் "ஸ்ரீ சொக்கநாத ஸ்வாமி ஆன்மார்த்த பூசையை சன்னிதானங்கள் தலயாத்திரை செய்கையிலும் உடன் எழுந்தருள பன்னி கொண்டு போகும் வகையில் பல்வேறு கட்டளை மடங்களிலும் தனிபூசை மடமும் வெள்ளித்தேரும் தனி மடைப்பள்ளியும் ஆதீன நிர்வாகத்தால் அமைக்கப் பட்டுள்ளது!!"

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக "ஆன்மார்த்த மூர்த்திக்கு வருடாந்திர உற்சவம் செய்யும் ஒரே வழக்கம் திருத்தருமபுரம் மடாலயத்திற்கே உரிய சிறப்பாகும்!!"

"ஆதீன ஆன்மார்த்த சுவாமி, திருவாலவாய் சொக்கநாதர் ஆகையால் அவர் விரும்பி மகிழும் "#ஆவணிமூல #பிட்டுதிருவிழா!!" இங்கு வருடாந்திர உற்சவமாகவே கடைபிடிக்கப் படுகிறது!!"

மதுரையில் ஆவணிமூலம் கொடியேறியது முதல் பத்து நாட்களும் தருமபுரத்திலும் பெருமானுககு விசேச ஆராதனைகள், பிட்டு அப்பம் முதலியவை நிவேதனம் செய்து திருவிளையாடல் புராணம் சொற்பொழிவும் செய்து விழா எடுக்கப் படுவதும் தருமைக்கு மட்டுமே உரிய தனிப் பெருஞ்சிறப்பாகும்!!
என்ற அளவில் அரிய தகவல்களை விரிவஞ்சி நிறைவு செய்கிறோம்!!

"மூர்த்தி எல்லாம் வாழி!! எங்கள் மோனகுரு வாழி!!அருள் வார்த்தை என்றும் வாழி!! அன்பர் வாழி!! பராபரமே!!"

திருச்சிற்றம்பலம்🙏🏻