ஏப்ரல் 22, 1992. பம்பாய், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலகம்.
ஒரு ஜூனியர் அதிகாரி தன் மேலாளரிடம் ஓடி வந்தார். அவர் கையில் ஒரு கட்டு காகிதம்.
"சார், நம்ம கையில் 1000 கோடிக்கு BR இருக்கு. ஆனால் டெல்லி SGL-ல் நமக்கு ஒரு பத்திரம் கூட இல்லை"
மேலாளருக்கு வியர்த்தது. BR என்றால் Bank Receipt. "என்னிடம் உனக்கான அரசாங்க பத்திரம் இருக்கிறது" என்பதற்கான ரசீது. ஆனால் பத்திரம் இல்லை என்றால்? அந்த BR வெறும் காகிதம்.
அந்த நொடியில் தான் இந்திய வங்கித்துறையின் மிகப்பெரிய பொய் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. அந்த பொய்யின் பெயர் தான் ஹர்ஷத் மேத்தா மாடல்.
கொஞ்சம் பின்னோக்கி போவோம்.
1991. மும்பையில் இரண்டு உலகங்கள் இயங்கின. ஒன்று தலால் தெரு, இன்னொன்று பாம்பேயின் வங்கிகள் நிறைந்த கோட்டை பகுதி. இரண்டுக்கும் இடையே பாலமாக இருந்தவர்கள் புரோக்கர்கள்.
வங்கிகளுக்கு இடையே தினமும் ஒரு விளையாட்டு நடக்கும். பெயர் Ready Forward.
உங்களிடம் தங்க நகை இருக்கிறது, என்னிடம் பணம் இருக்கிறது. நீங்கள் சொல்கிறீர்கள், "இந்த நகையை 15 நாள் வைத்துக்கொள், 1 லட்சம் கொடு, 15 நாள் கழித்து 1 லட்சத்து 2 ஆயிரமாக திருப்பி கொடுத்து நகையை வாங்கிக்கொள்கிறேன்" - இது தான் RF Deal. வங்கிகளில் நகைக்கு பதில் அரசாங்க பத்திரம்.
பிரச்சனை என்னவென்றால், அந்த பத்திரம் டெல்லியில் RBI பெட்டகத்தில் இருக்கிறது. அதை மும்பைக்கு கொண்டு வர ஒரு வாரம் ஆகும். ஆனால் பணம் இன்றே வேண்டும். வங்கிகள் என்ன செய்தன?
ஒரு குறுக்கு வழி. "பத்திரம் என்னிடம் இருக்கிறது, பத்திரமாக வைத்திருக்கிறேன்" என்று ஒரு சீட்டு எழுதி கொடுத்தார்கள். அது தான் BR. இது ஒரு ஜென்டில்மேன் வாக்குறுதி. நீங்கள் என்னை நம்ப வேண்டும், நான் உங்களை நம்ப வேண்டும்.
இந்த நம்பிக்கையின் மீது தான் ஹர்ஷத் ஒரு மாளிகையை கட்டினார்.
மாயாஜாலம் எப்படி நடந்தது?
பாங்க் A-க்கு 100 கோடி தேவை. பாங்க் B-யிடம் 100 கோடி உபரி இருக்கிறது. ஹர்ஷத் நடுவில் வருகிறார்.
பாங்க் B, ஹர்ஷத்திடம் சொல்கிறது, "இந்த 100 கோடியை பாங்க் A-க்கு கொடு, அவர்களிடமிருந்து BR வாங்கி வா"
பாங்க் B ஹர்ஷத்திற்கு 100 கோடிக்கான செக் கொடுக்கிறது. ஆனால் அந்த செக் யார் பெயருக்கு? "A/C Payee" என்று இருக்க வேண்டும். ஹர்ஷத் என்ன செய்தார்? வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த செக்கை தன் கணக்கில் போட்டார்.
இப்போது 100 கோடி ஹர்ஷத்தின் கையில். அவர் பாங்க் A-க்கு போகவில்லை. நேராக தலால் தெருவுக்குப் போனார். ACC, Sterlite, Videocon பங்குகளை வாங்கி குவித்தார்.
பாங்க் B கேட்கும் போது, ஒரு BR-ஐ நீட்டுவார். "இதோ, பாங்க் A கொடுத்த BR". அந்த BR எப்படி வந்தது? இரண்டு வழி.
போலி BR அவரே பிரிண்ட் செய்தது. பாங்க் ஆஃப் கராட்-ன் லெட்டர் ஹெட், ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் அவரிடமே இருந்தது. பாங்க் A-க்கு தெரியாமல் பாங்க் Aயின் பெயரில் BR அடித்தார்.
பாங்க் ஆஃப் கராட் போன்ற சிறு வங்கிகளின் மேலாளர் சொல்வார், "என்னிடம் பத்திரம் இல்லை, ஆனால் BR வேண்டுமென்றால் தருகிறேன், 1 லட்சம் கமிஷன் கொடு". ஹர்ஷத் கொடுப்பார்.
இப்போது பாங்க் B-க்கு ஒரு காகிதம் கிடைத்தது, ஹர்ஷத்திற்கு 100 கோடி கிடைத்தது.
15 நாள் கழித்து என்ன ஆகும்? பாங்க் B-க்கு பணம் திரும்ப வேண்டுமே? ஹர்ஷத் என்ன செய்தார்? பாங்க் C-யிடம் போய் இன்னொரு 100 கோடி வாங்கி, பாங்க் B-க்கு கொடுத்து விடுவார். அது ஒரு சுழல். பணம் சுழன்று கொண்டே இருந்தது.
சக்கரம் சுழலும் வரை எல்லாம் நல்லது தான். பங்கு விலை ஏறியது. ACC 200-லிருந்து 9000 ஆனது. மக்கள் ஹர்ஷத்தை கடவுளாகப் பார்த்தார்கள்.
ஆனால் ஒரு நாள் பாங்க் B, "எனக்கு பத்திரம் வேண்டும், BR வேண்டாம்" என்று கேட்டால்? அன்று தான் விளையாட்டு முடியும்.
அது தான் ஏப்ரல் 22-ல் நடந்தது. SBI கணக்கை சரிபார்த்தது. கையில் BR இருக்கிறது, பத்திரம் இல்லை. பணம் எங்கே? ஹர்ஷத்தின் பங்குகளில்.
ஏப்ரல் 23 காலை, சுசேதா தலாலின் கட்டுரை வந்ததும், பீதி தொடங்கியது. ஒவ்வொரு வங்கியும் "என்னுடைய BR உண்மையானதா?" என்று சரிபார்க்க ஆரம்பித்தது. 70% BR போலி என்று தெரிந்தது.
ஹர்ஷத்தின் பங்குகளை விற்க முயன்றார்கள். வாங்க ஆள் இல்லை. சந்தை சரிந்தது. சாதாரண மனிதன் வாங்கிய 4500 புள்ளியில் வாங்கிய பங்கு, 2500 ஆனது.
இதில் வில்லன் ஹர்ஷத் மட்டுமா? ஒரு செக்கைத் தன் பெயரில் மாற்ற அனுமதித்த வங்கி அதிகாரிகள், "ஹர்ஷத் ஜெயிக்கிறான், நாமும் ஜெயிக்கலாம்" என்று கண்ணை மூடிய முதலீட்டாளர்கள் . எல்லோருக்கும் ஒரு பங்கு.
ஹர்ஷத் ஒரு விஷயம் சொன்னார், "இந்த அமைப்பில் விரிசல் இருந்தது, நான் விரலை வைத்தேன். விரிசலை அடைக்காமல் என் விரலை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள்"
No comments:
Post a Comment