Monday, 18 August 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -12


    தபால் தந்தி தொலைபேசி அலைபேசி என எதுவும் அன்று எங்களிடம் இல்லை. ஆனால் ஊருக்குள் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் காத்து வாக்குல செய்தி வந்து விடும்.
   எங்கள் சைக்கிள் எங்களுக்கு RX 100. மேடு பள்ளம் காடு மேடு சந்து என எல்லா பாதையிலும் சர் சர் என பயணித்து சம்பவம் நடந்த இடத்தை அடைந்து
 கால் கடுக்க வேடிக்கை பார்ப்போம்.
     யாரேனும் ஊர்க் கவுண்டர் வந்து முறைத்து இளவட்ட பசங்களுக்கு இங்க என்ன வேல. ஓடுங்கடா என்று விரட்டுவார்.  
     தேர்தல் வந்துவிட்டால் எங்கள் ஊருக்கு சாரை சாரையாக கட்சிகளின் வாகனங்கள் அணிவகுத்து வரும். ஊர் கோயில் அருகே வந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்னவென்றே தெரியாது. நின்று கேட்டுக் கொண்டிருப்போம். நோட்டீஸ் எல்லாம் தருவார்கள். உதயசூரியன் இரட்டை இலை நோட்டீசை கையில் வைத்துக்கொண்டு பாகுபாடு தெரியாமல் வேடிக்கை பார்ப்போம். 
    எங்கள் ஊருக்கு பெயிண்டர்கள் சைக்கிளில் வந்து வண்ண வண்ண தூரிகைகள் கொண்டு வடிவமாய் அழகு நிறத்தில் கட்சிகளின் சின்னத்தை வரைவர். 

    சில தேர்தல்களுக்கு எங்கள் உள்ளூரின் தொடக்கப் பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைந்திருக்கும். சில தேர்தல்களுக்கு ரங்கம்பாளையம் சென்று எங்கள் மக்கள் வாக்களிப்பர். அது ஒரு வைபோகம். கட்சிப் பாகுபாடு இன்றி வாகனத்தில் அழைத்துச் சென்று ஓட்டுப் போடச் சொல்வார்கள். 
      சில நாட்கள் கழித்து வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலமாய் எங்கள் ஊருக்கு வரும்போது கோயிலுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். எல்லா நிகழ்வுகளையும் எங்கள் பருவத்தில் நாங்கள் வேடிக்கை பார்த்து வளர்ந்தோம். 
      ஊருக்குள் முதன்முதலாக பேருந்து வந்த போது வேடிக்கை பார்த்தோம். ஊருக்குள் ஒரு திருடன் அகப்பட்டான். அவனை ஊர் மக்கள் நையப் புடைத்தார்கள். வேடிக்கை பார்த்தோம். KAS என்ற மினி பேருந்து எங்கள் ஊரின் ஒரு மாட்டின் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. பஸ் ஸ்டாண்ட் போயிட்டு அந்த பேருந்து அடுத்த முறை ஊருக்குள்ள வந்த போது ஊர் மக்கள் அந்த பேருந்தை ரவுண்டு கட்டி நிற்க வைத்தார்கள். அந்தப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இது யார் பேருந்து என்று தெரியுமா என்று மிரட்டப் பார்த்தார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி மிரட்டும் துணியில் கூறிய போது ஊர் மக்களுக்கு கோபம் உச்சிக்கு வந்து விட்டது. பேருந்தை விடவே கூடாது என்று முடிவு எடுத்தார்கள். கடைசியில் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்று ஒருவர் வந்து பஞ்சாயத்து பேசி பேருந்தை மீட்டுச் சென்றார். இப்படி பல கதைகளை நாங்கள் வேடிக்கை பார்ப்பதற்கு அன்று எங்களுக்கு தந்தியோ தபாலோ அலைபேசியோ தொலைபேசியோ தேவைப்படவில்லை. காத்து வாக்குல வரும் செய்தியை காதில் வாங்கிக் கொண்டு காலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு நின்று வேடிக்கை பார்ப்போம். 
   பல வேடிக்கைகள் எங்களுக்கு நல்லியம்பாளையத்தின் வரலாறுகளைத் தெரியப்படுத்தின.

Sunday, 10 August 2025

நதியின் பிழையன்று - நூல் மதிப்புரை

நூல்: நதியின் பிழையன்று 

ஆசிரியர்: சி.ஆர்.இளங்கோவன்

சிறுவாணி மலைத்தொடரில் தொடங்கும் இந்த நூல் குறிஞ்சி நிலம் முல்லை நிலம் மருத நிலம் ஆகிய நிலங்களின் நிலை இயல்பை மக்களின் வாழ்வியலை இயற்கையின் போக்கை போகிற போக்கில் மிக அழகாக சுட்டிச் செல்கிறது.
உயிர்ச் சூழல்
சூழல் மண்டலமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்தியல்பை சி ஆர் இளங்கோவன் அவர்கள் அழகாக விளக்குகிறார். 

நொய்யல் நதி உருவாகும் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று மரங்களின் பெயர்களையும் பறவைகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தி நொய்யல் நதியின் பார்வையிலேயே நம்மையும் அழைத்துச் செல்கிறார். 900 மூர்த்திகண்டி என்ற சிற்றாரின் பெயரையும் குறிப்பிட்டு, சாடி வயல் என்பதற்கு மிக அழகான விளக்கத்தை வழிகாட்டி போல விளக்குகிறார். 

அங்கிருந்து அந்த நதியின் போக்கிலேயே பேரூர் அழைத்து வந்து நம்மை பயணத்திற்கு ஆட்படுத்துகிறார். 

பேரூரில் நொய்யல் ஆற்றின் இடையே வீர ராஜேந்திர சோழ மன்னர் எழுப்பிய தேவி சிறை அணை குறித்தும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அன்றைய காலத்திற்கே நம்மை கைப்பிடித்து வழி நடத்துகிறார். 

நொய்யல் நதி கரையில் 36 சிவாலயங்கள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடுகிறார். 

மேற்குக் கடற்கரை சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் மையப் புள்ளியாக நொய்யல் நதி விளங்குவதை குறிப்பிடும் சி ஆர் இளங்கோவன் அவர்கள் ராஜகேசரி பெருவழி குறித்து அற்புதத் தகவல்களை அள்ளி வழங்குகிறார். 

ரோமானியர்களின் வணிகம் நொய்யல் நதி கரையில் எவ்வாறு நடைபெற்றது இங்கிருந்து பொருட்கள் எப்படி அந்த நாடுகளுக்கு சென்றன என்பதை வரலாற்று ஆய்வாளராக அழகாக விளக்குகிறார். 

கோவை நகரில் இருக்கும் குளங்களை சுட்டிக்காட்டி சிங்காநல்லூரின் குளத்தின் இடையில் செல்லும் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் குளத்தின் இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் செல்லும் காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரயில் பாதையையும் கூறி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறார்.

கோவை சுற்றுச்சூழல் அமைப்புகள் இயற்கையை காக்கும் விதத்தையும் ஆங்காங்கே அடிக்கோடிட்டு காட்டுகிறார். நொய்யல் பாதையிலேயே நம்மையும் அழைத்துச் சென்று வெள்ளலூர் குளத்தில் நிறுத்தி அங்கு உருவாக்கப்பட்ட மியாவாக்கி காடுகளை அறிமுகப்படுத்துகிறார். 

வெள்ளலூர் குளக்கரையில் ஏரி காத்த இரண்டு சகோதரர்களின் கோயில் குறித்து எடுத்துக் கூறுகிறார்.

கல்கண்டு மதகு கதையை எடுத்து கூறி...
வெற்றிலை மிகுதியாக விளைந்து நல்ல மருத நிலமாக இருந்த சோமனூர் பகுதி விசைத்தறி கூடமாக எப்படி மாறியது என்பதை நொய்யல் கரையோட்டத்துடன் கதையோடு கூறுகிறார். 

செம்மாண்டம் பாளையம் என்ற ஊர் பெயர் எவ்வாறு வந்தது அந்த ஊரில் குளம் எவ்வாறு வந்தது என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் சென்று விளக்குகிறார். 

குருடி மலையில் தோன்றும் நீர் தன்னாசி பள்ளமாக மாறி கௌசிகா நதியாக உருவெடுக்கும் விதத்தை வியப்புடன் கூறுகிறார். நொய்யல் நதியில் கௌசிகா நதி இணையம் விதத்தை காட்சிப்படுத்தும் விதம் அழகிலும் அழகு. 

திருப்பூரில் பணத்துக்குள் திருப்பூர் என்ற நிலை மாறி வனத்துக்குள் திருப்பூர் என்ற நிலை எவ்வாறு வந்தது இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன உள்ளூர் மக்களின் பங்கு என்ன ஏன் திருப்பூர் சாயக்கழிவுகளின் பிறப்பிடமாக மாறி பின்னர் மரம் வளர்ப்போம் என்ற நிலைக்கு ஏன் சென்றது என்பதை ஆதாரங்களுடன் அடுக்குகிறார். 

திருப்பூர் இன் சாயக்கழிவுகள் கொடுமணல் நிலத்தை எப்படி கொடுமை செய்தது என்பதை துல்லியமாக எடுத்துக் கூறுகிறார். 

கொடுமணல் சுற்றி பச்சைக் கல் வணிகம் எவ்வாறு நடைபெற்றது... ரோமானிய வணிகர்கள் இங்கு வந்து சூழலையும் சூழ்நிலையோடு விளக்குகிறார். 

சிறுவாணி மலைத்தொடரில் இருந்து நம்மை பல ஊர்களின் வழியே அழைத்துச் சென்று கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் நொய்யல் நதி காவிரியில் கலக்கும் இடம் வரை கைப்பிடித்து மனம் பிடித்து சொல்பிடித்து சோர்வடையாமல் 160 பக்கங்களில் அழகாக அழைத்துச் செல்கிறார். இந்தப் பாதையில் பயணம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தையும் தூண்டுகிறார். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

கோவை திருப்பூர் ஈரோடு கரூர் வாழ் மக்கள் தங்கள் ஊரில் பாயும் நதியின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான நூல்.

Saturday, 19 July 2025

Barefoot college - பங்கர் ராய்

 


               

ஆதியிலே நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வாழ்க்கையோடு இருந்தது. நமக்கு எவையெல்லாம் தேவை என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். பெரு முதலாளிகள் தீர்மானிக்கக் கூடாது என்பதையே காந்தியம் பேசுகிறது. காந்தியத்தின் அடியொற்றி சமூகத்தை மரபு வழியிலேயே மேம்படுத்த  இயலும் என்னும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர் பங்கர் ராய். 

பங்கர் என்னும் பெயர் இராஜஸ்தானின் திலோனா பகுதிக்கு வெறும் பெயர் மட்டுமல்ல. நம்பிக்கையின் உச்சம். படிக்காதவர்கள் , கல்விச்சாலைக்குச் செல்லாதவர்கள் பொறியாளராக ஆக முடியாது என்பது நம் இந்திய மனங்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்று உறுதியுடன் போராடி , ஓர் அமைப்பை உருவாக்கினார் பங்கர் ராய் . 

        ஒரு கிராமத்திற்குத் தேவையான  அடிப்படைத் தேவைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் இராஜஸ்தான் மாநிலத்தில் திலோனா கிராமத்தில் பங்கர் ராய் என்னும் நம்பிக்கை நபரால் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட்டது. காந்தியம் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரம் இக்கிராமத்தில் பங்கர் ராயால் நனவானது.  

           திலோனா கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி ஆண்டுகள் பல போராடியும் அவர்களுக்குத் தேவையான குடிநீர் , கல்வி , மருத்துவம் , மின்சாரம் போன்று அடிப்படை வசதிகள் கிடைக்காமலே இருந்தது. 1972 ஆம் ஆண்டு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத திலோனா கிராமத்தில் நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக , பணயமாக  வைத்து வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட , அம்மக்களின் மரபு சார்ந்த அறிவு ஆகியவற்றை துணையாகக் கொண்டு காந்தியம் என்னும் சொல் வெற்றி பெறும் என்று தொடங்கப்பட்ட வெறுங்கால் கல்லூரி (Barefoot college) இன்றும் வெற்றி நடை போடுகிறது. 

                 1967 ல் பங்கர் ராய் மிக வசதியான குடும்ப அமைப்பில் கல்வியை நிறைவு செய்த தருணத்தில் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் வறுமையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். பல கிராமங்களில்    மருத்துவம் கிடைக்காத மரணத்தை, அடிப்படை வசதி இல்லாத மறுபக்கத்தைக் கண்டு கலங்கிப் போனார் பங்கர் ராய். தன் தாயின் அனுமதியுடன் வசதியான வாழ்வை விட்டு கிராமம் நோக்கி அவரின் பாதங்கள் பயணமானது.    பல கிராமங்களில் வெறுங்கால் மனிதர்களைக் கண்ணுற்றார் . 

       இராஜஸ்தானில் திலோனா  கிராமத்தைத் தன்னிறை கிராமமாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் செயல்படத்தொடங்கினார். அந்த மக்கள் அவரை, வீட்டை விட்டு ஓடி வந்து விட்டவர் , மனநலம் பாதித்தவர், தீவிரவாதி என்று பல கோணங்களில் ஆரம்பத்தில்  எண்ணினர். இந்தக் கிராமத்திற்கு ஏதேனும் செய்ய வந்துள்ளேன் என்று கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்ட பிறகே மக்கள் இவரை மாற்றத்திற்கான மனிதராகப் பார்த்தார்கள். இந்தப் பகுதியில் ஒரு கல்லூரி  தொடங்குகிறேன் என்று அவர் முனைந்த போது , அந்த ஊரின் மருத்துவச்சி, உழவர், நெசவாளி ஆகியோர் கற்றுத்தரும் ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இந்த மக்களின் ஒத்துழைப்புடன் கிராமப் பொருளாதாரம் என்னும் நம்பிக்கை மலரத் தொடங்கியது. கண்ணால் கண்ட வெறுங்கால் மனிதர்களின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் வெறுங்கால் கல்லூரி உதயமானது. வறுமையால் கல்வி கிடைக்காத அல்லது  தடைபட்ட மக்களுக்கு , இரவுப்பள்ளி, தொழிற்கல்வி , உயர்கல்வி என்னும் முக்கல்வி முறை திலோனா பகுதியில் தொடங்கப்பட்டது.  திலோனா மக்களின் பங்களிப்புடன் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) அம்மக்களாலேயே கட்டப்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சிறிதும் நீர்க்கசிவு இல்லாத மாடிக்கட்டிடத்தை இந்தக் கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர்.  

 வறட்சிக்குத் தானம் கொடுக்கப்பட்ட பல இராஜஸ்தான் கிராமங்களில் திலோனாவும் ஒன்று. அப்படிப்பட்ட இடத்தில் அம்மக்களின் மரபு ரீதியான அறிவும் பங்கர் ராயின் நம்பிக்கையும் நாளடைவில் வெற்றி பெறத் தொடங்கிய போது , அது சமூக மாற்றத்திற்கு வழி வகுத்தது. 

           மழை என்னும் சொல் , நீர் என்னும் சொல் இம்மக்களின் கனவு வார்த்தைகள். இதனை மாற்றி வெறுங்கால் கல்லூரி மக்கள் 20 இலட்சம் மக்களுக்கு நீர் தரும் அமைப்பில் 5 அணைகளைக் கட்டி அதனை முறையாகப் பராமரிக்கும் வகையில் இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பல படிப்பறிவில்லாத பொறியாளர்களே திறம்பட நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தானில் சில வருடங்கள் வருடம் முழுமைக்குமே மழை இருந்ததில்லை. அந்த நிலையை எதிர்கொள்ள கிராமங்கள் தோறும் மழைநீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகப் பராமரிக்க வெறுங்கால் கல்லூரி சிறந்த நிலையை உருவாக்கியுள்ளது. 

          இராஜஸ்தானில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவுப்பள்ளிகள் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டன. 1975 களில் இந்தப் பள்ளிகள் அம்மக்களின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. வெறுங்கால் கல்லூரி மூலம் இரவுப்பள்ளிகள் மூலம் கிட்டத்தட்ட 1 இலட்சம் மாணவர்கள் கல்விப் பயின்று பின்னர் முறையாக கல்விப் பின்புலத்தில் பட்டம் பெற்றவர்களைப் பங்கர்  ராய் உருவாக்கியுள்ளார். 

         பங்கர்  ராய் உருவாக்கிய அமைப்பு மூலம் பல கிராமங்கள் தன்னிறைவு பெறத் தொடங்கின. மருத்துவ அமைப்பை நிர்வாக ரீதியாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்திலும் , அந்தக் கிராமத்தில் இருக்கும் மருத்துவம் பார்க்கும் பெண்களை வைத்து மாதவிடாய் , கருவுற்ற பெண்களின் சிக்கல்கள் , இரத்த சோகை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிகிச்சைகள் வழங்கத் தொடங்கினார்கள். இதனால் பல இராஜஸ்தான் கிராமங்களில் குழந்தை இறப்பு சதவீதம் குறையத் தொடங்கியது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளைப் பல கிராமங்களில் வெறுங்கால் கல்லூரி பங்கர்  ராய் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். 

              ராஜஸ்தான் கிராமங்களில் பல கிராமங்களில் பெண்கள் கவலைப்படுவது நீர் மற்றும் மின்சாரத்திற்காக மட்டுமே. அதனை நிறைவேற்றும் பொருட்டு நீர் வசதியைப் பெருக்கி  சுத்தமான நீர் கிடைக்க வழிவகை செய்தது. அதன்பின்னர் மின்சாரத்தைக் கனவாக எண்ணிய பகுதிகளை வெறுங்கால் கல்லூரி பங்கர்  ராய் தேர்ந்தெடுத்தார். மின்சாரமே இல்லாத கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சியை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் சிறந்த முறையில் செயல்வழிக் கற்றல் பயிற்சி பெற்று தமது கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கினார். 

          படிப்பறிவில்லாத மக்களுக்கு புத்தகங்கள் இல்லாமல் செயல்வழிக் கற்றல் மூலம் சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சிகள் பெரும் மாறுதலையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின. வயலில் உழவு வேலை பார்ப்பவரும் , வீட்டில் உணவுத் தயாரிக்கும் பெண்களும் மிக எளிதாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டனர். 

         வெறும்கால் கல்லூரி பங்கர் ராய் செயல்வழிக் கற்றலை அறிந்த இந்திய அரசு திட்டக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்தது. இதன் பின்னர் வெறுங்கால் கல்லூரியின் பல திட்டங்கள் நாடு முழுமையும் கொண்டு செல்லப்பட்டது. நாடுகளைக் கடந்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மின்சாரம் இல்லாத , மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லாத பகுதிகளில்  சூரிய ஒளி மின்சாரப் பயிற்சி வழங்கப்பட்டது. 

                         பங்கர் ராயின் பணியை சிறப்பிக்கும் வகையில் உலகின் சிறந்த டைம் இதழ் , உலகின் சக்தி வாய்ந்த நூறு நபர்களில் பங்கர் ராயும் ஒருவர் என்று அடையாளப்படுத்தியது. சிறிய ஒளி பெரிய வறுமையையும் மாற்றத் தொடங்கும் என்னும் வார்த்தை உண்மையானது. அதனால் பல கிராமங்கள் வெளிச்சமாகின. வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கின்றது. பங்கர் ராய் செயல்களில் நம்பிக்கை மிளிர்கின்றது. பங்கர் ராய் உருவாக்கிய செயல்வழிக் கல்வி  கிராமங்களை மேம்படுத்துகிறது. மக்களை மேம்படுத்துகிறது. நம்பிக்கையை மட்டுமே அறுவடையும் செய்கின்றது.                    


Sunday, 22 June 2025

பொ.சங்கரின் - இந்தியாவில் மவுண்ட் பேட்டன்

 

சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஷ் அரசு  , தனது ஆட்சிப்பரப்பில் பல நாடுகளிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் தமது நிலப்பரப்பையும் செல்வங்களையும் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. 

இந்தியாவில் ஆட்சி அமைப்பைத் தக்க வைக்க பலமுனை ஏற்பாடுகளைப் பிரிட்டீஸ் அரசு செய்தாலும் நாளுக்கு நாள் புதிய போராட்டங்களை இந்தியா முன்னெடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து தேர்ந்தெடுத்த நபர் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன். இந்திய சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தவர்களில் மவுண்ட் பேட்டன் முக முக்கிய மனிதராக அறியப்பட வேண்டியவராகத் திகழ்ந்த பாதையில் நாமும் கொஞ்சம் பயணிப்போம்.


 ஜார்ஜ் மவுண்ட் பேட்டன் இந்தியாவிற்கு எப்படி வந்தார்? இந்தியாவின் அதிகார மாற்றத்தில் இவரின் பங்களிப்பு என்ன? இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல் ஏன் மாற்றப்பட்டார்? இங்கிலாந்து பிரதமர் அட்லி மவுண்ட் பேட்டனை ஏன் தேர்வு செய்தார்? மவுண்ட் பேட்டன் திட்டம் என்றால் என்ன? என்ற பல  கேள்விகளுக்குப் பதிலை வரலாற்றின் பக்கங்களில்  , மவுண்ட் பேட்டன் வரலாற்றில்,  இந்திய வரலாற்றில் இருந்து காண்போம்.  


      பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார். 

இங்கிலாந்து இராணி எலிசபெத்தின் உறவினரான இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.

மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.

மவுண்ட்பேட்டன்ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றார்.  1916 ஆம் ஆண்டு தமது விருப்பத்தின் படி பிரிட்டிஷ் கப்பற்படையில் அதிகாரியாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். 

செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுண்ட்பேட்டன் நேரிடையாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். போரும் கடலும் படிப்பும் என மூன்று முனைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் உரிய நாளில் பயின்று நிறைவு செய்தார். 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் நெருங்கிய உறவு முறையாக இருந்தமையால் மவுண்ட் பேட்டனைத் தேடி பல பதவிக்களும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன. 


Wednesday, 4 June 2025

The rise and fall of Soviet Union -சோவியத் இரஷ்யா உருவாகி உடைக்கப்பட்ட வரலாறு 1917 -1991

 






  ரஷ்யாவின் ஜார் ஆட்சி 1917 ல் கவிழ்க்கப்பட்டது. ஜார் மன்னராட்சி என்பது ரஷ்யாவில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1917 வரை நடந்த முடியாட்சி அரசாட்சி ஆகும். 1917 க்குப் பிறகு  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உருவான நான்கு சோசலிச குடியரசுகள் டிசம்பர் 30, 1922 அன்று சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

   ஒரு தீவிர இடதுசாரி  குழுவான போல்ஷிவிக்குகள், ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸைத் தூக்கியெறிந்து, பல நூற்றாண்டுகளாக முடியாட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முன்னாள் ரஷ்யப் பேரரசின் பிரதேசங்களைக் கைப்பற்றிய போல்ஷிவிக்குகள் ஒரு சமூக அரசை நிறுவினர்.

அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷிவிக்குகள் போராடி, பழைய ஜாரிச ஆட்சியில் எஞ்சியிருந்த அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்தனர்.  1922 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர் விளாடிமிர் லெனின் ஆவார்.

<div class="paragraphs"><p>லெனின்</p></div> 


சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைமையாக, தலைவராகத் திகழ்ந்த லெனின் 1924 இல்  இறந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார்.  இலட்சக்கணக்கான தனது நாட்டு மக்களை தொழில் துறை மேம்பாட்டில் ஈடுபடுத்தினார். லெனின் உருவாக்க விரும்பிய கொள்கைகளை கைவிட்டு , கூட்டுப் பொருளாதாரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தியைத் தொழில்மயமாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கொள்கைகளை உருவாக்க ஸ்டாலின் முயன்றார்.


  சோவியத் பகுதியில் விவசாயத் துறையின் கூட்டுப் பண்ணைமயமாக்கலை அமல்படுத்திட ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கினார்.  விவசாயிகள் தங்கள் தனிப்பட்ட நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  மேலும் கூட்டுப் பண்ணைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையான பொருளாதாரச் செழிப்பை இழந்திருந்தாலும் சோவியத் உலகின் மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பனிப்போர்களால் இரஷ்யா பாதிப்பை அடைந்தது.  இதனால் ஸ்டாலின் செல்வாக்கையும் சொல்வாக்கையும் குறைக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை அந்நாடுகள்  எடுத்து வந்தன. பல நடவடிக்கைளை எடுத்தாலும் சோவியத் வளர்ச்சி பிரமாண்டமாகவே இருந்தது. 

 

   உலகம் வியந்த ஒரு செயலை சோவியத்  1957ஆம் ஆண்டு முதன்முதலாக நிகழ்த்தியது. 1957  அக்டோபர் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் 1 ஐ சோவியத்  ஏவியபோது உலக நாடுகள் மிரண்டு போயின. 

       சோவியத்தின் விண்வெளி முயற்சிக்குப் பதிலடி தர அமெரிக்கா அடுத்தடுத்த விண்வெளி முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. விண்வெளி , தொழில் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக சோவியத் பொருளாதார ரீதியாக கடுமையான பல சவால்களை எதிர்கொண்டது. 

1980களில்  அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலைகளைக் மிகக் குறைந்த அளவிற்குக் கொண்டு வந்து சோவியத் பொருளாதாரத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியபோது சோவியத் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 

சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க அமெரிக்கா பல நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடர்ந்து செய்து வந்தது. 

    கோர்பச்சேவ், டிசம்பர் 25, 1991 அன்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி சோவியத் ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்தது. அதன்படி ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, எஸ்டோனியா என பதினைந்து நாடுகளாகப் பிரிவதாக ஒவ்வொரு நாடுகளும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டன.

 உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வர போராடிய சோவியத் இரஷ்யா,  சிதறி பொருளாதாரக் காற்றால் பிய்த்து வீசப்பட்டன. அமெரிக்காவின் கனவு நிறைவேறியது. 1924 முதல் 1991 வரை உலகம் சோவியத் என்ற கட்டமைப்பைக் கண்டு சற்று மிரண்டது என்பது அறிய வேண்டிய வரலாறு . 

அறிய வேண்டிய பார்க்க வேண்டிய சில படங்கள்



    சோவியத் யூனியன், உலகின் ஆறில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாகும். இது சுமார் 22,402,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு விளங்கியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு. 


Sunday, 25 May 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 11. அரச மரம் ,ஆலமரம் , வேப்ப மரம்

அரசமரம்
     நல்லியம் பாளையம் கிராமம் ஐந்திணை அமைப்பில் மருத நிலம் என்னும் தகவமைப்பில் அமைந்துள்ளது. ஊரின் தெற்குப் பக்கத்தில் வாய்க்காலை ஒட்டி பெரிய அரசமரம் ஒன்று அமைந்திருக்கும்.
எங்கள் ஊர் பெரியவர்களை நான் கேட்டிருக்கிறேன். இந்த மரம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது என்று. 
     நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போதே இந்த மரம் இது போலவே தான் உள்ளது என்று கூறுவார்கள். 

வாய்க்காலுக்கு தெற்கு பக்கம் உள்ள காட்டில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய வெயிலில் நாங்கள் வாய்க்காலைத் தாண்டி வரும்போது எங்களை அறியாமல் நாங்கள் அண்ணாந்து பார்க்கும் அரசமரம் எங்களின் களைப்பைப் போக்கும் போதி மரமாக இருக்கும்.
 அதன் திண்ணையில் நாங்கள் அமர்ந்து கொள்வோம். காற்று சித்திரையிலும் சிலு சிலு என்று எங்கள் மீது வீசும். மகிழ்ந்து அரச மரத்தடியில் அமர்ந்திருப்போம்.

 எங்கள் அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை வீற்றிருக்கும். போகும்போதும் வரும்போதும் நாங்கள் எங்களை அறியாமலேயே வணங்கி விட்டு செல்வோம். 

அரச மரத்தை ஒட்டி ஓர் அறை இருக்கும். அந்த அறையில் ஒற்றுமை குழு நண்பர்கள் நற்பணி மன்றம் என்று ஒரு போர்டை பார்த்திருப்போம். 
ஆடு மாடுகளை மேய்த்து விட்டு வருவோர், இரங்கம்பாளையம் சென்று வருவோர், நல்லியம்பாளையம் வழியில் வருவோர் என அனைவரும் அந்த மரத்தடியில் நின்று சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வார்கள். 

அரச மரத்தை எப்போது கடந்து சென்றாலும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரின் முன்னோர்கள் பார்த்து அரசமரம் இன்று நாங்கள் பார்க்கும் அரசமரம், நாளை அடுத்த தலைமுறை பார்க்கும் அரசமரமாக எப்போதும் கம்பீரமாக உயரமாக வீற்றிருக்கும் அரசமரம் எங்கள் ஊரின் போதிமரம் தான். 

ஆலமரம்

       அரசமரம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கு நோக்கி சென்றால் வாய்க்கால் சற்று வளைவாகச் செல்லும் ஓர் இடம் வரும். அந்த இடத்தில் அரச மரத்திற்கு நிகராக எங்கள் ஊரின் ஆலமரம் வீற்றிருக்கும்.

 கோடையானாலும் குளிரானாலும் நாங்கள் இல்லத்திலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆலமரத்தின் அடியில் வளைவில் சலசலவென்று ஓடும் வாய்க்கால் நீரில் குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவோம்.

 ஆலமரத்தின் விழுதுகள் வாய்க்காலை ஒட்டி தவழ்ந்திருக்கும். ஆலமரத்தின் விழுதுகள் நிலத்தை நோக்கி வந்து அதன் தூண்களாய் வளர்ந்திருக்கும்.
 சிறுவயதில் விவரம் புரியாமல் எப்படி மரத்தின் மேலிருந்து மண்ணுக்குள் விழுது செல்கிறது என்று செந்தில் கவுண்டமணி காமெடி போல ஆராய்வோம். பக்கத்து தோட்டத்தில் பப்பாளி பழம் பறித்து வந்து ஆல மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

 இப்போது போல எங்களுக்கு அன்று கைக்கடிகாரம் எதுவும் இல்லை. ஆல மர நிழலில் கோடை வெயிலில் குதூகலமாய் வளைந்து நெளிந்து ஓடும் வாய்க்காலில் குளித்து குளித்து மகிழ்ந்தோம்.

 ஆலமரத்தில் சிறுசிறு பழங்கள் இருப்பதால் அந்த மரத்தில் எப்போதும் பறவைக் கூட்டங்கள் உற்சாகமாய் கத்திக் கொண்டே இருக்கும். வாய்க்காலில் எங்கள் சத்தம் , மரத்தில் பறவைகளின் சத்தம் என எப்போதும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த இடத்தை சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணுவேன். ஏனோ செல்ல இயல்வதில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது ஆலமர வாய்க்காலுக்கு எனது மகனையும் அழைத்துச் செல்ல வேண்டும். 
வேப்ப மரம் 
            எங்கள் ஊரின் நடுநாயகமாக ஊரின் மத்தியில் ஒரு வேப்பமரம் இருக்கும். 

அந்த வேப்ப மரத்தின் அடியில் பெருமாள் கோயில். 
மரத்தின் அடியில் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டில் நாங்கள் நெடுங்காலம் குடியிருந்தோம். குளிர்ச்சியான வேப்ப மரத்தின் காற்று எப்போதும் எங்களை புத்துணர்வாக வைத்திருக்கும். 

 ஊரில் உள்ள வயதான தாத்தா பாட்டிகள் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் திண்ணை எப்போதும் நிழலாக இருக்கும். எங்கள் ஊரில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. ஆனால் எங்கள் ஊர் மக்கள் மாரியம்மனையும் விநாயகரையும் பெருமாள் தெய்வத்தையும் வணங்கி மகிழ்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் அன்று அந்த பெருமாள் கோயில் திருவிழா கோலம் கொண்டிருக்கும். பிரசாதம் தருவார்கள். உண்டு மகிழ்ந்து ஓடி விளையாடுவோம். 
 
நல்லியம்பாளையம் கிராமத்தின் அரச மரம் ஆலமரம் வேப்பமரம் மூன்றும் எப்போதும் நீங்காத நினைவுகளை எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் வைத்திருக்கிறது. காலங்கள் பல மாறினாலும் இன்னும் சில அரச மரங்கள் ஊருக்குள் நடப்பட வேண்டும். 
ஏனெனில் ஊரின் பண்பாட்டை மரங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் என என் ஊரின் முன்னோர்கள் கூறிய சொற்கள் இன்றும் நினைவில் வந்து செல்கிறது. 

எங்கள் பால்ய காலம் மரங்களைச் சுற்றி வாய்க்காலைச் சுற்றி கிணறுகளைச் சுற்றி காடு மேடுகளைச் சுற்றி வயல் வரப்புகளைச் சுற்றி வலம் வந்த நினைவுகள் என்றும் நீங்கா நினைவுகள்.