சின்னப்புள்ள அக்கா
மண் மணம் மாறாத எங்கள் நல்லியம்பாளையத்தில் வாழ்ந்த ஒரு அக்காவின் பெயர் சின்னப் புள்ள. அவங்க பேரு ‘சின்னபுள்ள ‘ தானா என்று இதுவரை தெரியவில்லை.
நல்லியம் பாளையம் கிராமத்தில் இரவு பகல் பாராமல் எப்போது உறங்குவார் என்றே தெரியாத நிலைக்கு எப்போதும் நடந்து கொண்டே இருப்பார்.
நாங்கள் பால்ய வயதில் ஊரின் மேற்குப் புறம் கிழக்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் ஓடி ஓடி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு இருப்போம். கோவில் திண்ணையில் விளையாட்டுத் தொடங்கும். யாரோ ஒருவர் தேடும் பொறுப்புக்கு ஆட்படுவார். ஊரெல்லாம் சுற்றி சுற்றி தேடினாலும் காணக்கிடைக்காத சில இடங்களில் , சில மரங்களில் ஒளிந்து கொள்வோம்.
எங்கள் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் கோவில் திண்ணை அருகே நிற்கும் சின்னப்புள்ள அக்கா அடுத்தடுத்த நிமிடங்களில் கொத்துக்காரர் வீடு அருகே நடந்து வந்துவிடுவார். மனநிலை சற்று மாறி இருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாரும் ஊரில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
யாரையும் பார்த்து சிரிக்க மாட்டார். யாருடனும் பேச மாட்டார். ஆனால் எதையோ பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் விபரம் புரியாத வயதில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க , திடிரென்று சத்தம் போட்டு அடிக்க வருவார். ஆனால் அடிக்க மாட்டார். நடந்து சென்று விடுவார்.
எனது சிறுவயதில் வள்ளியம்மாள் ஆத்தாவிடம் , சின்னப்புள்ள அக்காவுக்கு என்னாச்சு என்று கேட்ட போது ஒரு கதை கூறினார் வள்ளியம்மாள் ஆத்தா.
எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு ஒன்பதைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்க யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் இருந்து இல்லம் செல்ல தொடங்கினால் கண்ணாமூச்சி ஆட்டம் நின்று விடும்.வூடு வந்ததும் அம்மா திட்டுவாங்க. காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாட்டு பற்றி சிந்தித்து , அடுத்த நாள் கிரிக்கெட், கிணறு னு யோசிச்சு தூங்கப் போவோம். ஆனால் இரவில் எந்தத் தெருவிலும் எங்கேயும் உறங்காமல் சின்னப்புள்ள அக்கா எதையோ பேசி நடந்து கொண்டிருப்பார்.
சின்னப்புள்ள அக்கா பேசுவது யாருக்கும் புரியாது. சில நேரங்களிலும் பாடல் கூட பாடி கேட்டதுண்டு. சிறு வயதில் மிக அழகாக இருப்பார் என்று ஊர்ப் பெரியவங்க சொல்லிக் கேட்டதுண்டு.
சின்னப்புள்ள அக்கா மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும் ஒருநாளும் யாரையும் காயப்படுத்தி கேள்விப்பட்டதில்லை.
ஈரோட்டில் இருந்து பழையபாளையம் வழியில் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து பலரும் வருவார்கள். ஊருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாராச்சும் பார்த்து , ஊருக்குள்ள போ என்று சொல்லிச் செல்வார்கள். மீண்டும் நடந்து ஊரின் தென்புறம் அரசமரம் அருகே வந்து நின்றிருப்பார். மீண்டும் யாராச்சும் ஊர்க்கவுண்டர்கள் சொல்ல , சின்னப்புள்ள அக்கா மாரியம்மன் கோயில் அருகே வந்து நின்றிருப்பார்.
மனநிலை மாறினாலும் ஒருநாளும் சின்னப்புள்ள அக்கா ஊரை விட்டு எங்கேயும் சென்றது இல்லை. ஊரின் மத்தியில் சின்னப்புள்ள அக்காவுக்கு ஒரு வீடு இருக்கும். ஆனால் வீட்டில் இல்லாமல் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பார்.
ஒருமுறை ஊரில் சின்னப்புள்ள அக்காவிடம் வெளிப்புறத்தான் கைவரிசை காட்டி தவறாக நடக்க முயல , சின்னப்புள்ள சத்தமிட்டுக் கத்து ஷாப்கார கவுண்டர் அந்த வெளிப்புறத்தானைப் பிடித்து அடி துவைத்து அழ வைத்து சின்னப்புள்ள அக்கா காலில் விழவைத்தார். நாங்கள் பால்ய வயதில் அந்த நிகழ்வுகளைக் கண்டு அந்த அக்கா மீது பரிதாபம் கொண்டே நடந்து கொண்டோம்.
ஊரில் எங்கள் பெரியவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட போலிசு மாதிரியே இருந்தமையால் தப்பித்தவறி கூட , அறிந்தும் அறியாமல் கூட நாங்கள் தவறே செய்து விட முடியாது.
குடும்ப நிலை, ஊரின் கெளரவம் , ஊர்க் கவுண்டர்களின் மீது இருந்த மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாங்கள் வளர்ந்தோம்.
இப்படியாக நீண்ட நல்லியம்பாளையத்தில் பல மணிநேரங்களாக சின்னப்புள்ள அக்கா காணாமல் இருக்க பலரும் பல இடங்களில் தேட , அவர் நடக்காமல் , அவர் பேசாமல் , பாடாமல் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அக்கா எதையோ சொல்ல பல ஆண்டுகளாக முயன்றும் , பலருக்கும் புரியாமலேயே அவரின் இறுதி வாழ்வு நிறைவடைந்தது.
இன்னமும் நினைவில் உள்ளது அவரின் குரல். ஆனால் என்ன சொன்னார் என்பது மட்டும் இன்னமும் புரியவில்லை. நல்லியம் பாளையம் கதையில் ஊரின் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு என அனைத்து வீதிகளிலும் , அரச மரம் , வேப்பமரம், ஆழமரம் என அனைத்து இடங்களிலும் அவர் நின்று கொண்டிருப்பார். என்ன சொல்லியிருப்பார்...அந்த மரங்களே சாட்சி….
No comments:
Post a Comment