Saturday, 17 February 2024

அறிய வேண்டிய வரலாறு- சோழச் சக்ரவர்த்தி இராசேந்திர சோழனின் கடற்பயணங்கள்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல உலக நாடுகள் தோன்றுவதற்கு முன்பே செழிப்புடன் செல்வாக்குடன் திகழ்ந்த நாடு சோழ நாடு. சோழ அரசின் சோழேந்திர சிங்கம் உள்ளிட்ட 25 பெயர்களால் அழைக்கப்பட்ட இராசேந்திர சோழனின் கடற்பயணங்கள் இன்றும் வியப்பானதாக விளக்கப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டுகளில் உலக அளவில் மூன்று அரச வம்சங்கள் மிகப் புகழ் பெற்றதாகத் திகழ்ந்தது. எகிப்து நாட்டை ஆண்ட பாதிமிட வம்சம். இரண்டாவது சீனாவை ஆண்ட ஷாங் வம்சம். அடுத்தது சோழப் பேரரசு. 
      சோழப் பேரரசின் இளவரசராக இராசேந்திர சோழன் திகழ்ந்த போது இலங்கை மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 

சோழப் பேரரசின் கப்பல் போர் முறைமைகள் பற்றி ஆய்வாளர் பா. அருணாசலம் " சோழர்களின் பாய்மரக் கப்பல் ஓட்டுமுறை" என்னும் தலைப்பில் அதிகமான செய்திகளைப் பகிர்கிறார். 1022 ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்காசிய நாடுகளை நோக்கி இராசேந்திர சோழனின் கடற்பயணங்கள் தொடங்கியதாக சோழ வரலாறு பதிவு செய்கிறது. 
    இந்தியக் கடற்படை ஆதரவுடன் மும்பைப் பல்கலைக்கழகம் சார்பில் பா.அருணாசலம் தலைமையில் ஐ.என்.எஸ்.தரங்கினி என்னும் பாய்மரக் கப்பலில் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து பல தரவுத்தளங்களை வெளியிட்டனர். 

சோழர்கள் கடல் காற்றை நன்கு ஆய்ந்து அதன் வழியாகத் தம் பயணத்தை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். சோழ நாட்டின் கடல் துறைமுகங்களில் இருந்து தெற்கு சென்று தென் நோக்கி செல்லும் கடல் காற்று வழியாக இலங்கையை அடைந்து அங்கிருந்து சுமத்திரா தீவுகளை அடைந்தனர் என்பது மும்பைப் பல்கலைக்கழகத்தின் நேரடி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
     கடற் படையெடுப்புக்கு உற்ற காலம் வங்கப் பெருங்கடலில் வட கிழக்குக் காற்று தீவிரம் குறையும் காலமாகும். இந்தக் காலகட்டம் தமிழ் மாதங்களில் மார்கழித் திருவாதிரை நட்சத்திரத்திற்குப் பிறகு வரக்கூடிய காலமாகும்.மேற்கூறிய காலத்தில் வங்கக் கடலில் புயல்கள் குறைந்து கடல் அமைதித் தன்மையுடன் காணப்படும். சோழர்கள் கடல் பயணத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில் போன்ற கணக்கீட்டு முறைகளைக் கையாண்டு பயணங்கள் மேற்கொண்டதாக அறியப்படுகிறது.
    இராசேந்திர சோழன் தமது 12 ஆம் ஆட்சியாண்டுகளில் கடாரம் மீது போர்த் தொடுத்து மாபெரும் வெற்றியை அடைந்தனர். கடாரம் என்பது மலேசிய தீபகற்பத்தில் உள்ள பகுதியாகும். நீண்ட கடற் பயணங்களை மேற்கொண்டு பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த அரசுகளை சோழப் பகுதிகளில் இணைத்த வேந்தராக இராசேந்திர சோழன் கருதப்படுகிறார். 1027 ஆம் ஆண்டில் கடாரத்தின் பெங் என்னுமிடத்தில் கடார வெற்றியைக் கொண்டாடும் வகையில் கற்றூண் ஒன்றையும் இராசேந்திர சோழன் உருவாக்கி உள்ளார். கடாரம் மீது போர்த் தொடுத்து கிழக்காசிய நாடுகளை பெருமளவில் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. சோழப் பேரரசின் கடற் பயண நிறைவில் திருவாரூர் அருகே "கடாரம் கொண்டான்" என்னும் பெயரில் ஒரு ஊரை உருவாக்கினார் என்றும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இராசேந்திர சோழன் குறித்து 27 கல்வெட்டுகள் இலங்கையில் கிடைக்கப் பெறுகிறது. 

இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்திக் கல்வெட்டு புதுச்சேரி அருகே உள்ள பாகூரில் கிடைக்கப்பெறுகிறது.

ஒவ்வொரு மன்னருக்கும் ஒரு மெய்கீர்த்தி இருக்கும்.அவர் செய்த செயல்கள்,போரிட்டு வெற்றி கொண்ட நாடுகள் குறித்த தகவல் கல்வெட்டாக பதியப்பட்டிருக்கும். அவ்வகையில் இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி வரலாற்று ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் பல குறிப்புகளை கொண்டு விளங்குகிறது.

மெய்கீர்த்தி :

ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்

துடர்வன வேலிப் படர்வன வாசியும் 
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்

ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும்

எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத் 
தொல் பெருங்காவல் பல்பழந் தீவும்

செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்

பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு
ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்

விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் 
முதிர்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமணைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்

பாசுடைப் பழன மாசுணித் தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்

பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து

வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சூரனை முறணுறத் தாக்கித்
திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் 

தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்

நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்

பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்

புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்

கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்

கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்

தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு" என்று குறிப்பிடுகிறது. இராசேந்திர சோழன் அரசாண்ட காலத்தில் வடநாட்டில் பெரும் படையெடுப்பு நடத்திய கஜினி முகமது அதே காலத்தைச் சார்ந்தவராக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.ஆனால் இருவரும் போர்களால் சந்தித்துக் கொள்வில்லை என்பது ஆச்சரியமான செய்தி. இன்றைய வரலாற்று நூல்கள் கஜினி முகமதுவின் படையெடுப்புப் பற்றி குறிப்பிடும் போது இராசேந்திர சோழனின் கடற்பயணங்கள் ஆட்சி முறைகள் ஆகியவை குறித்து ஏன் மெளனம் காக்கின்றன என்பது புரியவில்லை.  இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டிய கடற்பரப்பின் அரசன், பெரும் நிலப்பரப்பு அரசன் இராசேந்திர சோழனின் வரலாறு அறிய வேண்டிய வரலாறுகளில் முதன்மை இடம் வகிக்கிறது.

உதவி நூல்கள் - மும்பைப் பல்கலைக்கழகம் பா . அருணாசலம் ஆய்வுக் கட்டுரை, நீலகண்ட சாஸ்திரி- சோழர்கள் 

No comments: