ஐப்பசி மாதம் வந்து சேர்ந்தாச்சுன்னா, ஒரு விதமான மகிழ்ச்சி!
காலை எழுந்தவுடனே வானம் முழுக்க கரிய மேகம் சூழ்ந்திருக்கும். கிழக்கில காற்று வீசும் – அது ஒரு மணம்! “அடடா, மழை வாசனை தானே இது!”ன்னு யாரோ ஒரு அப்பத்தா சொல்லி புன்னகை வருட விடுவாங்க.
மழை வரப்போகுது என்ற உணர்ச்சிதான் ஊர்ல ஒரு திருவிழா மாதிரி இருக்கும். வாய்க்கால்ல நீர் ஓடும். நீர்த்தாரை வந்து சேரப் போறது போல நீலக் குன்றுகள் தூரத்தில மங்கலாய் தெரியும். நெல் வயலுக்குள்ள மண்ணு நனைந்து, பசுமையோட மிளிரும்.
பிள்ளைகள் எல்லாம் களத்தில ஓடி விளையாடும் “ஏய்! தண்ணி பொழியுது டா, நனைந்தா சளி பிடிச்சிரும்!”ன்னு அம்மாக்கள் கத்துவாங்க. ஆனா யாரு கேப்பா! நீரில் கால்கள விட்டு துள்ளுறது தான் அவர்களோட சந்தோஷம்.
மழை விழும் ஒலியும், பிள்ளைகளோட சிரிப்பும் சேர்ந்தா ஒரு இனிமையான இசை மாதிரி இருக்கும்.
மாடுகளும் மழைத் துளியில நிம்மதியா நிக்குது. மாடு தலையில விழும் துளியைக் கண்டு வால் ஆட்டுது. அதைக் கண்டு ஒரு தாத்தா சொல்லுவார் ,
“மாடு மகிழ்ந்தா மழை நல்லா பெய்யும் டா! இதுதான் நம்ம ஊர்ல பழமொழி!”
அந்த வார்த்தை கேட்டு நெஞ்சுக்குள்ளே ஒரு நம்பிக்கை எழும்.
மழை கொட்டிக் கொட்டிப் பெய்யும் போது, யார் வீட்டுக்குள்ளோ அடுப்பில வெந்தயக் குழம்பு வாசனை வரும்.
திண்ணையில ஆத்தா ஒரு தாளம் போட்டுட்டு மழை ஒலி கேட்டு மகிழ்வாங்க.
“மழை நன்றா பெய்யணும் டா, அப்போ தான் வயல் பசுமையா இருக்கும்!”ன்னு அப்பத்தா பேசிச் செல்வார்.
அந்த நேரத்துல நெல் நாற்று மழையில மிதந்த மாதிரி ஆடும். பசுமையான வயல் காணும் போதே விவசாயிகளின் மனசு நிறைவு ஆகிடும்.
இரவில மழை நின்னதும் வெளியே போனா , மண் வாசனை எப்படியோ ஒரு சுகம் தரும்.
நிலா மேகத்துக்குள்ள நுழைந்து ஒளி தரும் காட்சி. மரத்தில மழைத்துளி வழிந்துசெல்லும் சத்தம் காதுக்குச் சங்கீதம் மாதிரி இருக்கும்.
அடுத்த நாள் காலை, மண் மிதமிஞ்சிக் குளிர்ந்திருக்கும். பெண்கள் கோலமிட முடியாது.
சின்னப்பிள்ளைகள் மண்ணுல சின்ன மண் கோட்டைய கட்டுறது.
ஐப்பசி மழை நம்ம ஊர்க்கு வெறும் தண்ணி இல்லப்பா – அது நம்ம உயிர் தண்ணி!
அது வந்தா தான் வயல் பசுமையா இருக்கும், களங்கள் வளம் தரும், மனசு மகிழும்.
மழை வரணும், மண் குடிக்கணும், நம்ம ஊரு உயிரோட புன்னகைக்கணும் – அதுதான் எல்லாரோட ஆசை!
“மழை பெய்யட்டும் தாய்மண்ணே குடிக்கட்டும்,
நம்ம நல்லியம் பாளையம் நெல் தளிர் எழுந்து புன்னகைக்கட்டும்!”
No comments:
Post a Comment