Saturday, 28 March 2020

சூல் நாவல்

                    

        சூல்-  நூல் மதிப்பாய்வு 

          

  2019 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் . சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண் முன்னே உழல்வது போன்ற உணர்வு எழத் துவங்கியது. ”பிரஷ்னேவ்” எழுதிய "தரிசு நில மேம்பாடு" என்னும் புத்தகத்தைப் படித்த பொழுது, அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு சம்பவம்தான் தன்னை சிந்திக்க வைத்ததாகவும், அவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த வாழ்வின் அறம், ஆன்மீகத்தின் ஆணி வேர் இவை எல்லாம் சேர்ந்து நாவலை நோக்கிய தேடலை அதிகப்படுத்தியதாகவும் கூறுகிறார் எழுத்தாளர் சோ. தர்மன்.இந்த நாவலில் மொத்தம் 297 கதாப்பாத்திரங்கள், அதில் 53 பெண் கதாநாயகிகள். ஆம் வாருங்கள் பயணிப்போம்..பக்கங்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் பரவச உலகின் வாசித்தல் உணர்வு நிச்சயம்..


 அன்றைய காலத்தில் பாவங்களுக்கு பரிகாரம் சொன்னவர்கள் நீர்நிலைகளைப் பாதுகாக்க, மரங்களை நடு என நல்ல விசயங்களைச் சொன்னார்கள். இன்று பரிகாரம் செய்கிறேன் என்று நீர்நிலைகளில் உடுத்திய உடைகளைப் போடுவது, பிளாஸ்டிக் பைகளில் மாலைகளைப் போடுவது என பாழ்படுத்தும் பரிகாரம்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக ஊரே கூடியிருக்கும் அய்யனார் கோவில் புளிய மர நிழலிருந்து நாவல் துவங்குகிறது. நாவலின் துவக்கத்திலேயே நாவல் காட்டும் காலம் பல நூறாண்டுகளுக்கு முந்தியது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ”நீர்ப்பாய்ச்சி” மணல் அள்ள கண்மாய் கரைகளை திறந்து விடுகிறான். கண்மாயினால் பயன் அடைந்து வரும் ஊர் மக்கள் அனைவரும் கண்மாயின் மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்ப்பாய்ச்சி கண்மாயில் மணல் அள்ள வரும் மாட்டுவண்டிகளை ஒழுங்குபடுத்திவிடும் பணியில் உள்ளான். மழைக்காலத்திற்கு முன்பே நீர் ஆதரமான கண்மாய் பராமரிக்கப்பட்டு, மணல் அள்ளப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு, மழை நீரால் சூல் கொள்ளத் தயாராக இருக்க கண்மாயை கிராம வாசிகள் அக்காலத்தில் தயார் படுத்தியிருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் நீர் மேலாண்மையை எவ்வளவு நன்றாக கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நாவலைப் படிக்கும்பொழுது பெரும்பான்மையான இடங்களில் பகிரப்பட்டுள்ள சொலவடைகளைப் படிக்கும் பொழுது அடிவயிற்றில் உண்டாகும் சிரிப்பு, தலைக்கு வந்து, மூளை வரை சென்று கண்கள் சந்தோசத்தில் குளமாகி விடுவதை பல நேரங்களில் உணர முடிகிறது. குறிப்பாக முத்துவீரன், கொமராண்டி, சேவுகன், செம்பட்டையன் ஆகியோர் செய்யும் சம்பாசனைகள் இரசிக்கபடி இருக்கின்றன. அந்தக் காலத்தில் இத்தகைய கேலி கிண்டலோடு தான் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாவலைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது. தொத்தல் பகடை போன்ற மனிதர்கள் ‘கள்’ வாசனையை வைத்தே எந்த ஊர் கள் எனக் கூறும் அளவிற்கு தேர்ந்தவர்களாக இருந்துள்ளார். தொத்தல் பகடை வழியாக நாம் அறிந்து கொள்வது அந்தக் கால மனிதர்கள் எவ்வளவு நுண் உணர்வுடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. நீர்ப்பாய்ச்சி, மடைக்குடும்பன் என்ற பெயர்களின் மூலம், கிராமங்களில் கண்மாய்களைப் பராமரிக்க மனிதர்களை நியமிக்கும் வழக்கம் இருந்துள்ளது, அவர்கள் தான் பரம்பரை பரம்பரையாக கண்மாயைப் பாதுகாக்கும் பணிகளை ஆத்மார்த்தமாக செய்து வாழ்ந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் நீர்ப்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன்தான் அய்யனார் சாமியின் அருகில் உள்ள கருப்பன் சாமி என்ற விவரத்தைக் கூறுகிறார் ஆசிரியர். கண்மாயின் மேல்மடை, கீழ்மடை வழியாக வயல்களுக்குப் பாயும் தண்ணீர் நடுமடை வழியாக வெளியேறவில்லை, இதனால் நடுமடை வழியாக பயன் அடைந்துவரும் வயல்கள் வாடுகின்றன. வாடிய வயல்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீர்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன் மனம் வருந்துகிறான். ஊர்க்காரர்களின் பேச்சை கேட்க வேண்டியது வருமே என அய்யனார் சாமியிடம் மனம் வருந்தி வேண்டுகிறான். அவன் வேண்டுதலைக் கேட்டுப் பேசும் அய்யனார் சாமி, ” நீ நாளை மடையில் மூழ்கி அடைப்பை நீக்க முயற்சி செய் கண்டிப்பா அடைப்பு நீங்கி நீர் வயல்களுக்குப் பாயும்” என்கிறார். நீயும் என்னருகிலேயே வந்து தெய்வமாவாய் நாம் இருவரும் சேர்ந்து கண்மாயை காவல் காக்கலாம் என்கிறார். அதேபோலவே மறுநாள் நீர்ப்பாய்ச்சி கருப்பன், ஊர்க்காரர்கள் அனைவரையும் எல்லா தெருக்கள் வழியாகவும் சென்று, “ இன்னைக்கு நடுமடை திறக்கும் எனக் கூறுகிறான். ஊர்மக்களில் சிலர் இத்தனை நாள் முயற்சித்தும் திறக்காத மடை இப்போது திறக்கப் போகிறதா எனப் பேசிக் கொண்டும், என்னதான் நடக்கும் என்று பார்ப்போம் என எண்ணிக் கொண்டும் கண்மாய் கரையில் கூடுகின்றனர். நீர்ப்பாய்ச்சி கருப்பன் மடையில் மூழ்குகிறான். சிறிது நேரத்திலேயே நடுமடையிலிருந்து தண்ணீர் வெளி வருகிறது. ஊர்மக்கள் மகிழ்ச்சியில் தத்தளிக்கின்றனர். ஆனால், நீண்ட நேரமாக நீர்ப்பாச்சி கருப்பன் மேலே வரவில்லை அவன் உடல் மட்டும் சிறிது வேளைக்குப்பின் கண்மாயில் மிதக்கிறது. இதுபோல மனதை நாவலில் ஒன்றிப்போகச் செய்யும் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளனர். கொப்புளாயி, இருக்கன் குடி மாரியம்மன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு தயிர்ப்பானை வைக்கிறாள். மரங்களை நடுகிறாள். வனத்தை உருவாக்குகிறாள். மக்களின் மேல் கருணையோடு வாழ்கிறாள். அநாதையான காட்டுப்பூச்சி என்ற சிறுவனை வளர்க்கிறாள். அவன் அடிக்கடி ஓடிப் போகின்றவனாக இருந்தாலும் அவன் மேல் கருணை கொண்டு இருக்கிறாள். கொப்புளாயி இறந்தபின் காட்டுப்பூச்சி மரங்களை நட்டு வளர்க்கிறான். மாடுகளைக் கொன்றதினால் கூனிப் போய் மாடைப் போன்று நடந்து திரியும் நங்கிரியானின் கதையும் நமக்கு அக்காலத்தில் பாவம் செய்தவர்களுக்குப் பாடமாகி நின்ற கதையை கூறுகிறது. நாவலில் இன்னும் பல கதாப்பாத்திரங்கள் மனதில் நிறைந்துள்ளனர். எட்டையபுர அரசர் ஆட்சி, கட்டபொம்மன் வெள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து காடுகளில் மறைந்த கதை, ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் கோட்டை அமைத்து வெள்ளையர்களை தாக்கி மடிவது என வரலாறையும் ஒற்றியே நாவல் நகர்வது சிறப்பான ஒன்று. எலியன், பிச்சை ஆசாரிக்கு கிடைக்கும் நகைகளை அவர்கள் பயன்படுத்த முடியாமல் பூமிக்குள் மறைத்து வைத்து விளக்கேற்றி வழிபடுவதும், கோணக்கண்ணன் அவர்களைச் சந்தேகித்து பின் தொடர்வதும், நாவலில் சிரித்து மகிழ வேண்டிய இடங்கள்.. நாவலில் ஒவ்வொரு காலமும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் இருந்து எப்படி கண்மாய் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொலிவை, சிறப்பை இழந்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிச் செல்கிறார் ஆசிரியர். உருளைக்குடி கிராமம் எப்படி தன் வரலாற்றுச் சிறப்பை இழந்து நிற்கிறது என்பதை நாவலின் இறுதியில் படிக்கும் பொழுது மனம் கனத்து விடுவதைத் தவிர்க்க இயலவில்லை. காலம் காலமாய் நீர்மேலாண்மையை மேம்படுத்தி வாழ்ந்த நம் முன்னோர்கள் உருவாக்கிய கண்மாய் பொழிவிழந்து நிற்கிறது. இன்றிருக்கும் மோசமான சூழலில் நீர்மேலாண்மையின் தேவையை நமக்கு உணர்த்துகிறது இந்த சூல் நாவல். கண்மாயையும், கண்மாய் மனிதர்களையும் சுமந்திருக்கும் இந்த சூல் நாவல் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

படித்து முடித்து வழி செல்லும் சாலையில் மரங்கள் நட்டுச் செல்வோம்..... ஏரி, குளம் வரலாற்றை இளம் வயதினருக்கு அறிமுகப்படுத்துவோம்...


Monday, 16 December 2019

தருமை ஆதீனம்


                                                     தருமை  ஆதீனம்
              
                   2013  ஆம்  வருடம். வைகாசி  , சித்திரை  மாதங்களில்  நான் தமிழக  ஆதீனங்களுக்கு  யாத்திரையாக  திடிரென்று  கிளம்பி விட்டேன். திருவாவடுத்துறை  ஆதீனம் , திருப்பனந்தாள்  முடித்து அடுத்ததாக வைகாசி  முதல்  நாளன்று  காலை  பதினோரு  மணியளவில்  தரும்புரம்  பேருந்து  நிறுத்தத்தில்  இறங்கி  , நீண்ட  அரண்மனைத்  தோற்றம்  கொண்ட  மாளிகையை  நோக்கி  நடந்து  சென்றேன்.
              காலனியை  ஓரத்தில் இருத்தி விட்டு ஆதீனத்தின்  நிலவு மேல் ஒருவித மாயையுடன்  காலடி  எடுத்து வைத்தேன்.  ஆதீனத்தில்  ஆட்கள்  அதிகம்  இருந்தார்கள். ஆனாலும்  ஆதீன  மணியோசை  மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆதீனப்  பணியாட்கள்  ஓரமாய்  நிற்கச்  சொன்னார்கள். ஓரமாய்  நின்ற  போது , ஒய்யாரமாய்  குனிந்த  உருவமாய் குருஞானசம்பந்தருக்குப்  பூசைகள்  செய்து  கொண்டிருக்க, தம்பிரான்கள்  பயபக்தியோடு பணிந்து வணங்கி  தருமபுரம்  குருமகாசன்னிதானங்களை  வணங்கி ஆசி  பெற்றனர்.
வரிசையில் நின்று அவரது திருவடியை நான்  வணங்கிய போது  அவரது  மோதிர விரல்கள்  என்னைத்  தீண்டி , திருநீறு  இட்ட  போது,  அவரது  கண்கள்  என்னைக்  கூர்ந்து  நோக்கியது. எனக்கு  நேருக்கு  நேராய்  அவரது  கண்களைச்  சந்திக்க  சற்றுப்  பயமும் , கூச்சமும்  ஆட்கொண்டன.
               பூசைகள்  முடித்து, மதிய  உணவு  முடித்து  பெரிய , நீண்ட  வராந்தாவில்  அமர்ந்திருந்தோம். ஒருவர்  பின் ஒருவராக  அவரைச்  சந்தித்தனர்.  மாலை  4.10 மணிக்கு  எனக்கு  அழைப்பு.  உள்ளே  சென்றேன். சிம்மாசனத்தில் கம்பீரமாய்  சன்னிதானம்  அமர்ந்திருக்க, நான்  நடக்க நடக்க  என்னையே  அவரது  கண்கள்  பனித்து  கவனித்தன. நெடுஞ்சாண்கிடையாய்  கிடந்து  எழுந்து  ஓரத்தில்  நின்றேன்.  அமரச்  சொல்லி உத்தரவு  கிடைக்கக்,  கீழே  அமர்ந்தேன். எங்கிருந்து  வருகை  எனக்  கேட்க,  பேரூராதீனம்  எனச்  சொல்லிய  போது, பேரூராதீனக்  குருமகாசன்னிதானங்களை நலம் விசாரித்தார்கள்.    
  

  ஐம்பது  வருடங்களுக்கு  முன்பு  , நாமும்  , பேரூராரும்  பல்வேறு  தலங்களுக்கு  தல யாத்திரை  மேற்கொண்டோம்   என்று  நினைவைப்  பகிர்ந்தார்கள். இடைஇடையே  தமிழ், சமசுகிருத முரண்பாடுகள்  பற்றியும்  விவரித்தார்கள். 1.30  மணிநேரம்  பல்வேறு  செய்திகளை  இளையவனான என்னிடம்  பகிர்ந்து கொண்டே  இருந்தார்கள்.
தருமையாதீன  25 ஆம்  சன்னிதானம் பற்றி வியந்து பல செய்திகளைப்  பகிர்ந்து  கொண்டார்கள். ஆதீனத்தின் மூன்றாம்  மாடியில் இராஜ  துறவியாய்  25 ஆம்  சன்னிதானம்  காட்சிக்  கொடுப்பார்கள்  என்று  26 ஆம் இராஜ துறவி  கூறிய  போது , பேரூராதீனம்  தவத்திரு குருமகாசன்னிதானம்  கண்முன்  வந்து சென்றார்கள். 
 6.30  மணியளவில்  உத்தரவு  கிடைத்த  பின்  வெளியே  வந்தோம்.  சற்றுநேரத்தில் ஆதீனப்  பணியாள்  ஓடி வந்து , மீண்டும் சன்னிதானம்  அழைப்பதாய்  கூற  ஓடிச் சென்றேன். இரவு  தங்கிச்  செல்ல  உத்தரவு  கொடுத்து , காணிக்கையாய் 20  ரூபாய்  நோட்டும்  கொடுத்தார்.
           இரவு   7.45  க்கு  உணவு. நீண்ட   மற்றும்  அதிகளவு  உயரம்  கொண்ட  பெரிய  அறையில்  ஒற்றையாளாய் பழங்காலத்து  மரக் கட்டிலில்  ஓய்வு. விடிந்து   நெடுநேரம்  கழித்து  ஆதீனத்தைச்  சுற்றிப்  பார்த்தேன்.  தமிழக  அரசின்  தலைமைச்  செயலகக்  கட்டிடம்   போல் பல அறைகள். பல அறைகள்  பயன்பாடு  இன்றி  இருப்பது  கண்டு  கண்ணுற்றேன். ராஜாஜி  அவர்கள்  இந்தக்  கட்டிடங்களைப்  பார்த்து  வியந்து  போனதாய்  படித்தக்  குறிப்பு  நினைவுக்கு  வந்தது.  கோவை கிழார்  எழுதிய  கட்டுரையிலும்  இந்தக்  கட்டிடங்கள்  பற்றி  ஓர்  குறிப்பு  நினைவுக்கு  வந்தது. காலை  11  மணி  அளவில்  மதிய  பூசைக்கு  சன்னிதானம்  எழுந்தருளினார்கள். 12.10 க்கு  ஆசி பெற்று  வணங்கி விடைபெற்றேன்.




Monday, 28 January 2019

மதுரைப் பயணம்

2018 டிசம்பர்  மாத  இறுதியில்  நீண்ட நாள் தள்ளிப்போன மதுரைப் பயணத்தை  திடிரென திட்டமிட்டு  காரில்  பயணம்..காலை வழியில் உணவுகளைத் தயார்  செய்து நான்  என்  மனைவி மற்றும் மகன் கபிலனுடன் சுற்று வழிச் சாலையில்  பயணப்பட்டோம்.
       மேட்டுப்பாளையம் -  அவினாசி - செங்கப்பள்ளி  -ஊத்துக்குளி காங்கேயம் வந்து  சாலையோர  கோவிலில் ( டீக்கடையைக் கோவில் என்று தான் அழைப்போம். ) தேனீர் அருந்தினோம். மீண்டும்  பயணப்பட்டு கரூர் வந்தடைந்தோம்..
        கரூர்  வந்து  காஷ்மீர்-கன்னியாகுமரி  சாலையைக் கண்டடைந்து அதில் பயணம்.. 45 நிமிடப் பயணத்திற்குப் பின் தாடிக்கொம்பு  கோயிலுக்குச் சென்றோம்.. சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்ந்தது. நின்று ரசிக்க மனம் லயித்தது. அந்தக் காலத்தில்  சிற்பிகள்  கோயில் கட்ட ஒப்பந்தம் செய்யும் போது  பேரூர் - தாடிக்கொம்பு போன்ற ஏழு கோயில்கள் மாதிரி கட்ட இயலாது என்றே குறிப்பிடுவராம்.. அவ்வளவு அழகு.. மீண்டும் முதன்மைச் சாலையில் பிரிந்து அலங்காநல்லூர் வழியாக பயணம் செய்து அழகர் கோயிலை அடைந்தோம். தொ.பரமசிவனார் எழுதிய அழகர் கோயில் நினைவில் வந்தது. நல்ல நூல். பின்பு மலையேறி  பழமுதிர்சோலை அறுபடைத்தள வழிபாடு.. பின்பு  மதுரை வந்து பிர்லா விடுதியில் தங்கினோம்.. குறைவான மனதுக்கு  நிறைவான தங்கும் இடம். மதுரை ஆலயப் பிரவேசம் மனமெங்கும் மகிழ்ச்சி.. ஆயிரங்கால்  மண்டபம், அர்த்த சாம பூசை ,தெப்பக்குளம்,  மீனாட்சி சன்னிதி, சொக்கன்  சன்னிதி வழிபாடு  முடிந்து ஆலயத்தில் அமர்ந்து காலாற ஓய்வு.. மீண்டும் இந்தப் பயணம் என்று  வாய்க்குமோ?  என்று நினைவில் அறை வந்து ஓய்ந்து,

   
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால் என்ற சுந்தர ராமசாமியின் கவியை நினைந்து  மறுநாள் நேதாஜி சிலை அருகே உள்ள கோவிலில் தேனீர் அருந்தி பயணம் .  வழி நெடுக வானம்.. சாலை முழுக்க செவ்வரளிப் பூக்கள்.. மனமெங்கும்  மகிழ்ச்சி..மனைவி மகனுடன் மண்வாசனைத் தொடர மழைத் தூறல் ஆரம்பிக்க மேட்டுப்பாயைம் நோக்கி பயணம் தொடங்கியது..
                        அன்புடன்
.               பொ.   சங்கரன்