2018 டிசம்பர் மாத இறுதியில் நீண்ட நாள் தள்ளிப்போன மதுரைப் பயணத்தை திடிரென திட்டமிட்டு காரில் பயணம்..காலை வழியில் உணவுகளைத் தயார் செய்து நான் என் மனைவி மற்றும் மகன் கபிலனுடன் சுற்று வழிச் சாலையில் பயணப்பட்டோம்.
மேட்டுப்பாளையம் - அவினாசி - செங்கப்பள்ளி -ஊத்துக்குளி காங்கேயம் வந்து சாலையோர கோவிலில் ( டீக்கடையைக் கோவில் என்று தான் அழைப்போம். ) தேனீர் அருந்தினோம். மீண்டும் பயணப்பட்டு கரூர் வந்தடைந்தோம்..
கரூர் வந்து காஷ்மீர்-கன்னியாகுமரி சாலையைக் கண்டடைந்து அதில் பயணம்.. 45 நிமிடப் பயணத்திற்குப் பின் தாடிக்கொம்பு கோயிலுக்குச் சென்றோம்.. சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்ந்தது. நின்று ரசிக்க மனம் லயித்தது. அந்தக் காலத்தில் சிற்பிகள் கோயில் கட்ட ஒப்பந்தம் செய்யும் போது பேரூர் - தாடிக்கொம்பு போன்ற ஏழு கோயில்கள் மாதிரி கட்ட இயலாது என்றே குறிப்பிடுவராம்.. அவ்வளவு அழகு.. மீண்டும் முதன்மைச் சாலையில் பிரிந்து அலங்காநல்லூர் வழியாக பயணம் செய்து அழகர் கோயிலை அடைந்தோம். தொ.பரமசிவனார் எழுதிய அழகர் கோயில் நினைவில் வந்தது. நல்ல நூல். பின்பு மலையேறி பழமுதிர்சோலை அறுபடைத்தள வழிபாடு.. பின்பு மதுரை வந்து பிர்லா விடுதியில் தங்கினோம்.. குறைவான மனதுக்கு நிறைவான தங்கும் இடம். மதுரை ஆலயப் பிரவேசம் மனமெங்கும் மகிழ்ச்சி.. ஆயிரங்கால் மண்டபம், அர்த்த சாம பூசை ,தெப்பக்குளம், மீனாட்சி சன்னிதி, சொக்கன் சன்னிதி வழிபாடு முடிந்து ஆலயத்தில் அமர்ந்து காலாற ஓய்வு.. மீண்டும் இந்தப் பயணம் என்று வாய்க்குமோ? என்று நினைவில் அறை வந்து ஓய்ந்து,
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பிதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால் என்ற சுந்தர ராமசாமியின் கவியை நினைந்து மறுநாள் நேதாஜி சிலை அருகே உள்ள கோவிலில் தேனீர் அருந்தி பயணம் . வழி நெடுக வானம்.. சாலை முழுக்க செவ்வரளிப் பூக்கள்.. மனமெங்கும் மகிழ்ச்சி..மனைவி மகனுடன் மண்வாசனைத் தொடர மழைத் தூறல் ஆரம்பிக்க மேட்டுப்பாயைம் நோக்கி பயணம் தொடங்கியது..
அன்புடன்
. பொ. சங்கரன்
No comments:
Post a Comment