Monday, 18 August 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -12


    தபால் தந்தி தொலைபேசி அலைபேசி என எதுவும் அன்று எங்களிடம் இல்லை. ஆனால் ஊருக்குள் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் காத்து வாக்குல செய்தி வந்து விடும்.
   எங்கள் சைக்கிள் எங்களுக்கு RX 100. மேடு பள்ளம் காடு மேடு சந்து என எல்லா பாதையிலும் சர் சர் என பயணித்து சம்பவம் நடந்த இடத்தை அடைந்து
 கால் கடுக்க வேடிக்கை பார்ப்போம்.
     யாரேனும் ஊர்க் கவுண்டர் வந்து முறைத்து இளவட்ட பசங்களுக்கு இங்க என்ன வேல. ஓடுங்கடா என்று விரட்டுவார்.  
     தேர்தல் வந்துவிட்டால் எங்கள் ஊருக்கு சாரை சாரையாக கட்சிகளின் வாகனங்கள் அணிவகுத்து வரும். ஊர் கோயில் அருகே வந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்னவென்றே தெரியாது. நின்று கேட்டுக் கொண்டிருப்போம். நோட்டீஸ் எல்லாம் தருவார்கள். உதயசூரியன் இரட்டை இலை நோட்டீசை கையில் வைத்துக்கொண்டு பாகுபாடு தெரியாமல் வேடிக்கை பார்ப்போம். 
    எங்கள் ஊருக்கு பெயிண்டர்கள் சைக்கிளில் வந்து வண்ண வண்ண தூரிகைகள் கொண்டு வடிவமாய் அழகு நிறத்தில் கட்சிகளின் சின்னத்தை வரைவர். 

    சில தேர்தல்களுக்கு எங்கள் உள்ளூரின் தொடக்கப் பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைந்திருக்கும். சில தேர்தல்களுக்கு ரங்கம்பாளையம் சென்று எங்கள் மக்கள் வாக்களிப்பர். அது ஒரு வைபோகம். கட்சிப் பாகுபாடு இன்றி வாகனத்தில் அழைத்துச் சென்று ஓட்டுப் போடச் சொல்வார்கள். 
      சில நாட்கள் கழித்து வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலமாய் எங்கள் ஊருக்கு வரும்போது கோயிலுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். எல்லா நிகழ்வுகளையும் எங்கள் பருவத்தில் நாங்கள் வேடிக்கை பார்த்து வளர்ந்தோம். 
      ஊருக்குள் முதன்முதலாக பேருந்து வந்த போது வேடிக்கை பார்த்தோம். ஊருக்குள் ஒரு திருடன் அகப்பட்டான். அவனை ஊர் மக்கள் நையப் புடைத்தார்கள். வேடிக்கை பார்த்தோம். KAS என்ற மினி பேருந்து எங்கள் ஊரின் ஒரு மாட்டின் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. பஸ் ஸ்டாண்ட் போயிட்டு அந்த பேருந்து அடுத்த முறை ஊருக்குள்ள வந்த போது ஊர் மக்கள் அந்த பேருந்தை ரவுண்டு கட்டி நிற்க வைத்தார்கள். அந்தப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இது யார் பேருந்து என்று தெரியுமா என்று மிரட்டப் பார்த்தார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி மிரட்டும் துணியில் கூறிய போது ஊர் மக்களுக்கு கோபம் உச்சிக்கு வந்து விட்டது. பேருந்தை விடவே கூடாது என்று முடிவு எடுத்தார்கள். கடைசியில் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்று ஒருவர் வந்து பஞ்சாயத்து பேசி பேருந்தை மீட்டுச் சென்றார். இப்படி பல கதைகளை நாங்கள் வேடிக்கை பார்ப்பதற்கு அன்று எங்களுக்கு தந்தியோ தபாலோ அலைபேசியோ தொலைபேசியோ தேவைப்படவில்லை. காத்து வாக்குல வரும் செய்தியை காதில் வாங்கிக் கொண்டு காலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு நின்று வேடிக்கை பார்ப்போம். 
   பல வேடிக்கைகள் எங்களுக்கு நல்லியம்பாளையத்தின் வரலாறுகளைத் தெரியப்படுத்தின.

No comments: