Tuesday, 26 August 2025

பாளையம் என்ற பெயரும் நல்லியம் பாளையமும் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -15


கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது . பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். 13 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. இதனை பாளையக்காரர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது. அதனால் கொங்கு நாட்டின் பெரும்பாலான ஊர்கள் பாளையம் என்னும் பெயரில் திகழ்ந்தன. 

இதில் பூந்துறை நாட்டில் நல்லியம்பாளையம் உள்ளடக்கிய ஊராகத் திகழ்ந்தது. நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன. 

பூந்துறை நாட்டின் அரச பகுதி பழையகோட்டை பட்டக்கார மரபில் வருவது என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன. 

1.பூந்துறை நாடு

2.தென்கரை நாடு 

3.காங்கேய நாடு 

4.பொங்கலூர் நாடு 

5.ஆறை நாடு 

6.வாரக்க நாடு 

7.திருஆவினன்குடி நாடு

8.மண நாடு 

9.தலைய நாடு 

10.தட்டய நாடு 

11.பூவாணிய நாடு 

12.அரைய நாடு 

13.ஓடுவங்க நாடு 

14.வடகரை நாடு 

15.கிழங்கு நாடு 

16.நல்லுருக்கா நாடு 

17.வாழவந்தி நாடு 

18.அண்ட நாடு 

19.வெங்கால நாடு 

20.காவடிக்கா நாடு 

21.ஆனைமலை நாடு 

22.இராசிபுர நாடு 

23.காஞ்சிக்கோயில் நாடு 

24.குறுப்பு நாடு

ஆகிய நாடுகள் கொங்கு மண்டல நாடுகளாகத் திகழ்ந்தன. 


நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில பெயர்களை இங்குக் காணலாம். 

சென்னிமலை சாலையில் உள்ள பாளையங்கள்

1. ரங்கம்பாளையம் 

2. சேனாதிபதிபாளையம்

3. முத்தம்பாளையம் 

4. காசிபாளையம் 

5. குப்பகவுண்டன்பாளையம்

6. தொட்டிபாளையம்

7. கவுண்டச்சிபாளையம்

8. வெ. மேட்டுப்பாளையம் 

9. முகாசி புலவபாளையம்

10. நாமக்கல் பாளையம் 

11. அர்த்தனாரி பாளையம் 

12. நல்லியம் பாளையம் 

13. கொண்டவன்நாயக்கன் பாளையம் 

14. தாசநாயக்கன் பாளையம் 

15. பனிமடா பாளையம் 


பெருந்துறை சாலையில் உள்ள பாளையங்கள்

1. பழைய பாளையம்

2. வீரப்பம்பாளையம் 

3. செங்கோடன் பாளையம்

4. வேப்பம் பாளையம்

5. சானார் பாளையம் 

6. கூறபாளையம் 

7. வள்ளிபுரத்தான்பாளையம் 

8. ராசம்பாளையம்

9.தோப்பு பாளையம் 

10. வேட்டுவ பாளையம் 

11. திருவேங்கடம் பாளையம் 

12. ஓலப்பாளையம்

13. மடத்துப்பாளையம் 



கரூர் மற்றும் முத்தூர் சாலையில் உள்ள பாளையங்கள்


1. கொல்லம் பாளையம் 

2. முத்துகவுண்டன் பாளையம் 

3. சின்னியம் பாளையம் 

4. ஆயகவுண்டன் பாளையம் 

5. செல்லத்தா பாளையம் 

6. பாண்டி பாளையம் 

7. ஆனந்தம் பாளையம் 

8. பாரப்பாளையம் 

9. மேற்கு பாளையம் 

10. தாண்டாம் பாளையம் 

11. மோலபாளையம்.

12. கந்தசாமி பாளையம் 

13. மின்னப்பாளையம் 

14. காங்கேயம் பாளையம் 

15. சாவடிப்பாளையம்

16. கணபதி பாளையம் 

17. கருமாண்டம் பாளையம் 

18. மலையப்பாளையம் 

19. காரணம் பாளையம் 

20. நாகமநாயக்கன் பாளையம் 

21. இச்சிபாளையம்

22. தாமரைப் பாளையம் 

23. ஆரம்பாளையம் 

24. மின்னப்பாளையம்

25. எல்லப்பாளையம்


பூந்துறை சாலை

1. மூலப் பாளையம்

2. ரகுபதிநாயக்கன் பாளையம் 

3. ஆனைக்கள் பாளையம் 

4. வெள்ளியம் பாளையம் 

5.  கவுண்டன்பாளையம் 

6. கொங்கடையம் பாளையம் 

7. குடுமியாம் பாளையம் 

8. அஞ்சுராம்பாளையம் 

9. ஊஞ்சப்பாளையம்     

ஈரோட்டில் இது போல 1800 க்கும் மேற்பட்ட ஊர்கள் பாளையம் என்ற பெயரில் இருப்பதை அறிந்தோம். 


நல்லியம் பாளையம் சோழாராட்சியில் , காலிங்கராயர் ஆட்சியில் எந்த நிலையில் இருந்தன என்ற வரலாறுகளைத் தேடி வருகிறோம். 

பூந்துறை நாட்டில் நல்லியம் பாளையத்தின் பங்கு போன்ற இன்னும் பிற விபரங்களையும் சான்றுகளையும் தேடித் தொகுக்கும் பணியில் இருந்த போது 1667 மற்றும் 1799 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பூந்துறை  நாடு கடுமையான பாதிப்புகளைக் கண்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது. 

 பூந்துறை நாட்டின் ஓர் ஊராகத் திகழ்ந்த நல்லியம் பாளையமும் கடுமையான சேதங்களைக் கண்டதாகப்  பத்தாண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர் புலவர் இராசு ஐயாவைச் சந்தித்து உரையாடிய போது எம்மிடம் தெரிவித்துள்ளார். 

         படையணிகள் வாய்க்கால் கரைகளில் தான் முகாமிடுவார்கள். அவ்வகையில் நல்லியம்பாளையம் பள்ளம் வாய்க்காலில் திப்பு சுல்தான் , ஆங்கிலேயப் படைகள் முகாம் அமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை அறிந்தோம். 

நல்லியம் பாளையம் கதை பேசுவோம்- இன்னும் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். மண்ணின் , மரத்தின், மக்களின் கதைகளைப் பேசுவோம். 



Sunday, 24 August 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் - 14 கிராமம் மண் மணம் மாறிய கதை

      கிராமம் மண் மணம் மாறிய கதை

     நல்லியம் பாளையம்- இந்த மண்ணின் வரலாற்றை முழுமையாக பதிவு செய்ய பல கதைகள் பகிரப்பட வேண்டும். 
      மரங்களும் மரபுகளும் மருத நிலமும் சூழ்ந்த வளமான ஊராக என் நல்லியம்பாளையம் திகழ்ந்திருந்தது. பழைய பாளையம் ஊரிலிருந்து நல்லியம்பாளையம் ஊருக்குள் நுழையும் போதே குளிர்ச்சி தென்படத் தொடங்கும். 
         ஓடைமேடு பள்ளத்தைத் தாண்டியவுடன் தென்னந்தோப்புகள் சூழ்ந்த வயல்வெளிகள் கண்களுக்குப் படத் துவங்கும். சற்று பயணித்து வந்தால் ஒரு வளைவான திருப்பத்தில் குட்டி கிணத்து மேடு என்று சொல்லக்கூடிய ஓரிடம் வரும். 
       நாங்கள் சைக்கிளில் வரும் போது அந்த மேட்டை சைக்கிளில் எழாமல் இருக்கையில் அமர்ந்தபடியே அழுத்திக்கொண்டு மேலேறுவதை ஒரு விளையாட்டுப் போல செய்வோம். அந்த இடத்தில் செந்தில் புக் பேலஸ் உரிமையாளர் வீடு. அவரின் மகன் சிறந்த புகைப்படக் கலைஞர் என்று பின்னர் ஒரு நிகழ்வில் நான் அறிந்து மகிழ்ந்தேன்.. 
        கோயமுத்தூரில் புரந்தரதாசர் நிகழ்வரங்கில் நான் பேரூர் அடிகளார் உடன் ஒரு நிகழ்வுக்கு சென்று இருந்த போது, ஒரு நூலில் ஓர் கொங்கு கிராமத்தின் அப்பத்தா ஒருவர் கொங்கு மண்ணின் மரபு சார்ந்து நிற்கக்கூடிய அழகிய புகைப்படத்தை எடுத்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு விருது வழங்கினார்கள். 
     செந்தில் புக் பேலஸ் காரர் வீட்டைத் தாண்டினால் சம்பு கவுண்டர் வீடும் இருக்கும். அடுத்து வேப்ப மரங்கள் அடர்ந்த வளைவில் செல்வி அக்கா வீடு இருக்கும் . அங்கிருந்து சற்றுப் பயணப்பட்டால் வேட்டுவங்காட்டுக்காரர் தோட்டம் அடர்ந்த தோப்பாக இருக்கும். அதனை ஒட்டியே மெட்ராஸ் கார ஆத்தா காடும் இருக்கும். அடுத்த வளைவில் ருக்மணி அக்கா வீடு இருக்கும். அவர்கள் இல்லத்தில் தான் நாங்கள் நீண்ட காலம் குடி இருந்தோம்… அவர்கள் அந்த வீட்டைக் கட்டும் போது நான் ஆறாம் வகுப்பு படித்து அந்த வீட்டில் மணலில் விளையாண்ட நினைவு. அவர்கள் வீட்டைக் தாண்டி ஒன்று போலவே இருக்கும் இரண்டு வீடுகள். சாக்குக் கடைக்காரர் வீடு. அவர்கள் வீட்டை ஒட்டியே 
      மறுபடியும் ஒரு S வடிவ வளைவில் வேட்டுவங்காட்டுக்காரர் தோட்டத்து சாலை. அடுத்து நல்லியம்பாளையம் ஊரை நோக்கிச் செல்லும் போது கிழக்கு மேற்கு என இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அழகான வயல்வெளிகள் காட்சி தரும். ஆனால் இன்று கண்ணுக்கட்டிய தூரம் வரை காட்சி தந்த அந்த வயல்வெளிகள் வீடுகளாக மாறிவிட்டன. வாய்க்காலின் நீர் எங்கள் நல்லியம் பாளையம்தான் கடைமடை என்று சொல்வார்கள். 

     மரங்களும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்த ஊராகத் திகழ்ந்த நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றிலும் அதாவது ஊருக்கு தெற்கு பக்கமும் கிழக்கு பக்கமும் 1997 களில் தமிழ்நாடு அரசு சார்பில் வீட்டு வசதி வாரியம் அமைக்கத் தொடங்கினார்கள் . இதன் மூலம் ஊரிலிருந்து வயல்களையும் காடுகளையும் தோட்டங்களையும் வீட்டு வசதி வாரியத்திற்கு நில எடுப்புச் செய்தார்கள்.
     மடமடவென ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டத் தொடங்கி விட்டார்கள். மிகக் குறுகிய காலத்தில் நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றி ஹவுசிங் போர்டு உருவாகிவிட்டது. சிறுசிறு கடைகளும் பற்பல வீடுகளும் உருவாகி ஊரின் தென்கிழக்கு கிராமியத்தை இழந்திருந்தது. 
         திண்டல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாக இருந்த நல்லியம்பாளையம் கிராமம் காலமாற்றத்தில் ஈரோடு மாநகராட்சியின் எல்லையாக விரிவுபடுத்தப்பட்டது. அதனால் கிராமம் மீண்டும் அதன் கிராமியத்தை இழந்து ஊரைச் சுற்றிலும் பற்பல வீடுகள் உருவாகிவிட்டன. . நல்லியம்பாளையம் ஊரிலிருந்து திண்டல் செல்லும் பகுதியில் சக்தி நகரின் விரிவாக்கம் நல்லியம்பாளையம் வரை பரவி இருந்தது. ஆங்காங்கே நிலப்பிரிப்புகள் செய்து நல்லியம்பாளையம் கிராமம் அதன் மண் மணத்தை மாற்றும் சூழலுக்கு உள்ளானது. 
      குளித்து மகிழ்ந்த கிணறும் பெரிய குச்சி வைத்து பப்பாளி பழம் பறித்த மரம் இருந்த இடமும் நெல்லிக்காய் பறித்த மரம் உள்ள இடமும் கண்களில் இன்னும் நிழலாடுகின்றன. 

Thursday, 21 August 2025

என் ஊரின் கங்கை- நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -13

மலையின் உச்சியில் இருந்து அருவியாக பாய்ந்து ஆர்ப்பரித்து அமைதியான ஆறாக பரவி பவானி நதி வந்து, அங்கிருந்து பவானி அணை சேர்ந்து பெரு வாய்க்காலில் பயணித்து என் ஊரை தொட்டு பாயும் நதியை எங்கள் ஊரில் வாய்க்கால் என்று அழைப்பார்கள். பள்ளம் என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். ஆண்டின் ஏழு மாதங்களில் வற்றாத நீரோடையாக பாயும்.
       இரட்டபாளி வலசை தாண்டி சலசலவென சலசலவென பாய்ந்து பரவசத்தோடு ஓடி வரும் என் ஊரின் கங்கையை ஊரின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் அரச மர விநாயகர் சன்னதி வரவேற்கும்.

       இந்தப் பெரும்பள்ளத்தின் கரையில் பல படிக்கப்படாத எழுதப்படாத இதிகாசங்கள் நிகழ்ந்துள்ளன. அரச மரத்தில் இருந்து சற்று கீழே இறங்கி பாலத்தில் நின்று கேட்டால் சலசலவென்று ஓடும் நீரின் ஓசை எங்கள் ஊரின் இசை. 
      புரட்டாசி ஐப்பசி காலங்களில் எங்கள் நல்லியம் பாளையம் ஊரின் கங்கையில் பாலத்தைத் தொட்டு செந்நிறமாய் பாய்ந்து ஓடும் நீரை பார்ப்பதற்கென்று நாங்கள் பாலத்தில் நின்று கொண்டிருப்போம். 
         பாலத்தின் மேற்குப் பக்கத்தில் ஏதேனும் பொருளை நீரில் போட்டுவிட்டு ஓடி வந்து பாலத்தின் கிழக்குப் புறத்தில் நின்று பார்ப்போம். 

      பல யுகங்களாய் ஓடிய நீர் பாறைகளில் பட்டு பட்டு சில பாறைகளை சிற்பமாகவும் மாற்றியுள்ளது. கால் நனைத்து முகம் நனைத்து காது மடல்களில் நீர் பட்டு நாங்கள் கோடை கால வெப்பத்தை இந்த வாய்க்காலில் தணித்திருக்கிறோம். 

      ஷாப் கார கவுண்டர் தோட்டம் செல்லும் பாதையில் ஓடும் வாய்க்காலில் சிறிது ஆழம் இருக்கும். நாங்கள் குதித்து மகிழ குளித்து மகிழ ஆர்வமும் இருக்கும். 
       மார்கழி மாதங்களில் எங்கள் ஊரின் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் பூச்சாட்டு நேரங்களில் பெரும்பாலும் நாங்கள் இரவில் நெடுநேரம் விழித்திருப்போம். பொடிநடையாய் ஊரின் மேலே இருந்து கீழே இறங்கி வழிந்து ஓடும் வாய்க்கால் நீரைக் கண்டு ரசிப்போம். இரவு நேரத்தில் பெளர்ணமி நிலவின் ஒளியில் வாய்க்கால் வண்ண வண்ண நினைவுகளை எங்களுக்கு வட்டமிட்டு காட்டும். 
     நல்லியம் பாளையம் எல்லையைத் தாண்டும் பள்ளம் அருகே எங்கள் ஊரின் இடுகாடு இருக்கும். அதற்குப் பின்னே உள்ள பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் செல்லத் தயங்குவோம். பயம் ஒரு காரணம். புதர்கள் மறு காரணம். இன்று அந்தப் பகுதியை சீரமைத்து பாலம் கட்டி சாலை அமைத்து விட்டார்கள். 
     நல்லியம்பாளையம் கிராமத்தின் வளத்தை வளப்படுத்தும் எங்கள் ஊரின் பள்ளம் எங்களுக்கு யமுனை நதி.
     நல்லியம்பாளையம் கிராமத்தில் வடக்குப் புறத்தில் பாயும் ஓடையும் தெற்குப் புறத்தில் பாயும் ஓடையும் ஓரிடத்தில் சங்கமிக்கும் கூடுதுறையும் எங்கள் ஊரின் தோட்டங்களில் உள்ளது. 
      எங்கள் இளம் பிராயத்தில் நானும் நண்பர்களும் நடந்து நடந்து வாய்க்கால் கரையோரத்திலேயே அணைக்கட்டு வரை சென்று பார்த்து வந்து வீட்டில் திட்டு வாங்கியுள்ளோம். 
எங்கள் ஊரில் பள்ளத்தில் சில வருடங்களில் பங்குனி மாதத்திலும் பளிங்கு நீராய் ஓடும் நீரை அள்ளி அள்ளி முகத்தில் தெளித்து உற்சாகம் கொள்வோம். சமீபத்தில் ஊருக்குச் சென்று இருந்த போது பாய்ந்து ஓடிய வாய்க்காலை நின்று பார்க்க மனம் கூசியது. ஊரைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகி விட்டமையால் என் ஊரின் கங்கையும் அதன் இயற்கை தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது. வாய்க்காலை ஒட்டி சிமெண்ட் கரைகள் ஏற்படுத்தி விட்டாலும் நாங்கள் சிறுவயதில் பார்த்த வாய்க்காலே இன்னும் எங்களுக்குள் ஊர்வலமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. 
      பவானியில் இருந்து பவனி வரும் எங்கள் ஊரின் வாய்க்கால் நீர் பல துன்பங்களை மறைக்கச் செய்துள்ளது. சில மாதங்களில் காய்ந்திருக்கும் வாய்க்காலில் முதல் நீர் வரும்போது கால்நனைத்து கை நனைத்து உடல் நனைத்து உள்ளம் நனைத்து குளிப்போம். மீண்டும் ஒரு முறை நனைய வேண்டும். நல்லியம்பாளையத்தின் கங்கையில்…காவிரியில்…தாமிரபரணியில்…யமுனையில்…

நனைதல் தானே நதிக்கு அழகு. நல்லியம் பாளையம் நதியில் நனைவோம்.


Monday, 18 August 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -12


    தபால் தந்தி தொலைபேசி அலைபேசி என எதுவும் அன்று எங்களிடம் இல்லை. ஆனால் ஊருக்குள் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் காத்து வாக்குல செய்தி வந்து விடும்.
   எங்கள் சைக்கிள் எங்களுக்கு RX 100. மேடு பள்ளம் காடு மேடு சந்து என எல்லா பாதையிலும் சர் சர் என பயணித்து சம்பவம் நடந்த இடத்தை அடைந்து
 கால் கடுக்க வேடிக்கை பார்ப்போம்.
     யாரேனும் ஊர்க் கவுண்டர் வந்து முறைத்து இளவட்ட பசங்களுக்கு இங்க என்ன வேல. ஓடுங்கடா என்று விரட்டுவார்.  
     தேர்தல் வந்துவிட்டால் எங்கள் ஊருக்கு சாரை சாரையாக கட்சிகளின் வாகனங்கள் அணிவகுத்து வரும். ஊர் கோயில் அருகே வந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்னவென்றே தெரியாது. நின்று கேட்டுக் கொண்டிருப்போம். நோட்டீஸ் எல்லாம் தருவார்கள். உதயசூரியன் இரட்டை இலை நோட்டீசை கையில் வைத்துக்கொண்டு பாகுபாடு தெரியாமல் வேடிக்கை பார்ப்போம். 
    எங்கள் ஊருக்கு பெயிண்டர்கள் சைக்கிளில் வந்து வண்ண வண்ண தூரிகைகள் கொண்டு வடிவமாய் அழகு நிறத்தில் கட்சிகளின் சின்னத்தை வரைவர். 

    சில தேர்தல்களுக்கு எங்கள் உள்ளூரின் தொடக்கப் பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைந்திருக்கும். சில தேர்தல்களுக்கு ரங்கம்பாளையம் சென்று எங்கள் மக்கள் வாக்களிப்பர். அது ஒரு வைபோகம். கட்சிப் பாகுபாடு இன்றி வாகனத்தில் அழைத்துச் சென்று ஓட்டுப் போடச் சொல்வார்கள். 
      சில நாட்கள் கழித்து வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலமாய் எங்கள் ஊருக்கு வரும்போது கோயிலுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். எல்லா நிகழ்வுகளையும் எங்கள் பருவத்தில் நாங்கள் வேடிக்கை பார்த்து வளர்ந்தோம். 
      ஊருக்குள் முதன்முதலாக பேருந்து வந்த போது வேடிக்கை பார்த்தோம். ஊருக்குள் ஒரு திருடன் அகப்பட்டான். அவனை ஊர் மக்கள் நையப் புடைத்தார்கள். வேடிக்கை பார்த்தோம். KAS என்ற மினி பேருந்து எங்கள் ஊரின் ஒரு மாட்டின் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது. பஸ் ஸ்டாண்ட் போயிட்டு அந்த பேருந்து அடுத்த முறை ஊருக்குள்ள வந்த போது ஊர் மக்கள் அந்த பேருந்தை ரவுண்டு கட்டி நிற்க வைத்தார்கள். அந்தப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் இது யார் பேருந்து என்று தெரியுமா என்று மிரட்டப் பார்த்தார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி மிரட்டும் துணியில் கூறிய போது ஊர் மக்களுக்கு கோபம் உச்சிக்கு வந்து விட்டது. பேருந்தை விடவே கூடாது என்று முடிவு எடுத்தார்கள். கடைசியில் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்று ஒருவர் வந்து பஞ்சாயத்து பேசி பேருந்தை மீட்டுச் சென்றார். இப்படி பல கதைகளை நாங்கள் வேடிக்கை பார்ப்பதற்கு அன்று எங்களுக்கு தந்தியோ தபாலோ அலைபேசியோ தொலைபேசியோ தேவைப்படவில்லை. காத்து வாக்குல வரும் செய்தியை காதில் வாங்கிக் கொண்டு காலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு நின்று வேடிக்கை பார்ப்போம். 
   பல வேடிக்கைகள் எங்களுக்கு நல்லியம்பாளையத்தின் வரலாறுகளைத் தெரியப்படுத்தின.

Sunday, 10 August 2025

நதியின் பிழையன்று - நூல் மதிப்புரை

நூல்: நதியின் பிழையன்று 

ஆசிரியர்: சி.ஆர்.இளங்கோவன்

சிறுவாணி மலைத்தொடரில் தொடங்கும் இந்த நூல் குறிஞ்சி நிலம் முல்லை நிலம் மருத நிலம் ஆகிய நிலங்களின் நிலை இயல்பை மக்களின் வாழ்வியலை இயற்கையின் போக்கை போகிற போக்கில் மிக அழகாக சுட்டிச் செல்கிறது.
உயிர்ச் சூழல்
சூழல் மண்டலமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்தியல்பை சி ஆர் இளங்கோவன் அவர்கள் அழகாக விளக்குகிறார். 

நொய்யல் நதி உருவாகும் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று மரங்களின் பெயர்களையும் பறவைகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தி நொய்யல் நதியின் பார்வையிலேயே நம்மையும் அழைத்துச் செல்கிறார். 900 மூர்த்திகண்டி என்ற சிற்றாரின் பெயரையும் குறிப்பிட்டு, சாடி வயல் என்பதற்கு மிக அழகான விளக்கத்தை வழிகாட்டி போல விளக்குகிறார். 

அங்கிருந்து அந்த நதியின் போக்கிலேயே பேரூர் அழைத்து வந்து நம்மை பயணத்திற்கு ஆட்படுத்துகிறார். 

பேரூரில் நொய்யல் ஆற்றின் இடையே வீர ராஜேந்திர சோழ மன்னர் எழுப்பிய தேவி சிறை அணை குறித்தும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அன்றைய காலத்திற்கே நம்மை கைப்பிடித்து வழி நடத்துகிறார். 

நொய்யல் நதி கரையில் 36 சிவாலயங்கள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடுகிறார். 

மேற்குக் கடற்கரை சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் மையப் புள்ளியாக நொய்யல் நதி விளங்குவதை குறிப்பிடும் சி ஆர் இளங்கோவன் அவர்கள் ராஜகேசரி பெருவழி குறித்து அற்புதத் தகவல்களை அள்ளி வழங்குகிறார். 

ரோமானியர்களின் வணிகம் நொய்யல் நதி கரையில் எவ்வாறு நடைபெற்றது இங்கிருந்து பொருட்கள் எப்படி அந்த நாடுகளுக்கு சென்றன என்பதை வரலாற்று ஆய்வாளராக அழகாக விளக்குகிறார். 

கோவை நகரில் இருக்கும் குளங்களை சுட்டிக்காட்டி சிங்காநல்லூரின் குளத்தின் இடையில் செல்லும் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் குளத்தின் இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் செல்லும் காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரயில் பாதையையும் கூறி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறார்.

கோவை சுற்றுச்சூழல் அமைப்புகள் இயற்கையை காக்கும் விதத்தையும் ஆங்காங்கே அடிக்கோடிட்டு காட்டுகிறார். நொய்யல் பாதையிலேயே நம்மையும் அழைத்துச் சென்று வெள்ளலூர் குளத்தில் நிறுத்தி அங்கு உருவாக்கப்பட்ட மியாவாக்கி காடுகளை அறிமுகப்படுத்துகிறார். 

வெள்ளலூர் குளக்கரையில் ஏரி காத்த இரண்டு சகோதரர்களின் கோயில் குறித்து எடுத்துக் கூறுகிறார்.

கல்கண்டு மதகு கதையை எடுத்து கூறி...
வெற்றிலை மிகுதியாக விளைந்து நல்ல மருத நிலமாக இருந்த சோமனூர் பகுதி விசைத்தறி கூடமாக எப்படி மாறியது என்பதை நொய்யல் கரையோட்டத்துடன் கதையோடு கூறுகிறார். 

செம்மாண்டம் பாளையம் என்ற ஊர் பெயர் எவ்வாறு வந்தது அந்த ஊரில் குளம் எவ்வாறு வந்தது என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் சென்று விளக்குகிறார். 

குருடி மலையில் தோன்றும் நீர் தன்னாசி பள்ளமாக மாறி கௌசிகா நதியாக உருவெடுக்கும் விதத்தை வியப்புடன் கூறுகிறார். நொய்யல் நதியில் கௌசிகா நதி இணையம் விதத்தை காட்சிப்படுத்தும் விதம் அழகிலும் அழகு. 

திருப்பூரில் பணத்துக்குள் திருப்பூர் என்ற நிலை மாறி வனத்துக்குள் திருப்பூர் என்ற நிலை எவ்வாறு வந்தது இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன உள்ளூர் மக்களின் பங்கு என்ன ஏன் திருப்பூர் சாயக்கழிவுகளின் பிறப்பிடமாக மாறி பின்னர் மரம் வளர்ப்போம் என்ற நிலைக்கு ஏன் சென்றது என்பதை ஆதாரங்களுடன் அடுக்குகிறார். 

திருப்பூர் இன் சாயக்கழிவுகள் கொடுமணல் நிலத்தை எப்படி கொடுமை செய்தது என்பதை துல்லியமாக எடுத்துக் கூறுகிறார். 

கொடுமணல் சுற்றி பச்சைக் கல் வணிகம் எவ்வாறு நடைபெற்றது... ரோமானிய வணிகர்கள் இங்கு வந்து சூழலையும் சூழ்நிலையோடு விளக்குகிறார். 

சிறுவாணி மலைத்தொடரில் இருந்து நம்மை பல ஊர்களின் வழியே அழைத்துச் சென்று கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் நொய்யல் நதி காவிரியில் கலக்கும் இடம் வரை கைப்பிடித்து மனம் பிடித்து சொல்பிடித்து சோர்வடையாமல் 160 பக்கங்களில் அழகாக அழைத்துச் செல்கிறார். இந்தப் பாதையில் பயணம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தையும் தூண்டுகிறார். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

கோவை திருப்பூர் ஈரோடு கரூர் வாழ் மக்கள் தங்கள் ஊரில் பாயும் நதியின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான நூல்.