Saturday, 23 March 2024

அறிய வேண்டிய வரலாறு-செம்ஸ்போர்டு-எட்வின் மாண்டேகு Montagu–Chelmsford Reforms - - இந்திய விடுதலைப் போர் -

                                                                            

                 செம்ஸ்போர்டு                                      

எட்வின் மாண்டேகு

      1857 ல் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடி பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் இந்தியா வந்தாலும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. இந்தியாவெங்கும் போராட்டங்கள் தீவிரமானாலும் சில நாட்களில் அந்தப் போராட்டங்கள் அடக்கப்பட்டு விடும். இவ்வாறாக நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்திய விடுதலைப் போரில் இரண்டு பெயர்கள் மிக முக்கியமான பெயர்கள்.

 

(இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் செம்ஸ்போர்டு மற்றும் எட்வின் மாண்டேகு)

செம்ஸ்போர்டு-எட்வின் மாண்டேகு ஆகிய இருவரின் சீர்திருத்தங்கள் இந்தியர்களுக்கு எவ்வாறு உரிமைகள் அளித்தன , ஏன் இந்திய விடுதலைப் போரில் செம்ஸ்போர்டு-எட்வின் மாண்டேகு இந்த இருவரும் நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படுகின்றனர் என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு. 

                           

      பிரிட்டீஸ் இந்தியாவின் முதன்மைச் செயலராக இருந்த செம்ஸ்போர்டு இந்தியாவின் சுதந்திர இயக்கத் தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி , இந்தியர்களுக்கு ஓரளவு உரிமையுடைய சுயாட்சி அதிகாரம் வழங்கும் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். முழுமையான சுதந்திரமே இந்தியர்களுக்கானது என்பதில் ஆரம்ப காலகட்டத்தில் இந்தியர்கள் தீவிரமாக இருந்தாலும் வைசிராய் செம்ஸ்போர்டு தீவிர பேச்சுவார்த்தையின் காரணமாக இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது. 

            1917 ஆம் ஆண்டு எட்வின் மாண்டேகு, செம்ஸ்போர்டு ஆகியோரால் பல கட்டங்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்று இறுதி அறிக்கையாக பிரிட்டீஸ் அரசு வசம் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை , இந்திய அரசுகள் சட்டம் 1919 என்றும் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை என்றும் இங்கிலாந்து பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. 1919 ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் இந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தன. அதன்படி பஞ்சாப், வங்காளம், சென்னை, மத்திய மாகாணம் , பம்பாய் ஆகிய மாகாணங்களில் இந்தியர்கள் கொண்ட சட்டமன்றங்கள் கொண்ட அவை அமைக்க பிரிட்டீஸ் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. 

           மாகாணங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் வைசிராய் அல்லது ஆளுனர் ஒப்புதல் பெற்றாலே சட்ட வடிவம் பெறும் என்றும் , மாகாண அவையில் இந்தியர்கள் இருந்தாலும் கவர்னர்களாக பிரிட்டீஸ் அதிகாரிகளே நீடித்து வந்தனர். அதனால் இந்தச் சட்டம் பெயரளவில் மட்டுமே சுயாட்சி என்னும் சொல்லுக்கு உரியதாக இருந்து வந்தது. 

          முழுமையான ஆட்சி அதிகாரம் பிரிட்டீஷ் கையில் இல்லாமல் பாதி அளிவிலாவது இந்தியர்கள் பங்கு பெறும் அரசாட்சி முறை அமைவதை செம்ஸ்போர்டு பெரிதும் விரும்பினார். இந்தச் சட்டத்தின் படி பாதி அதிகாரம் மட்டுமே கிடைக்கப்பெற்றதை எதிர்த்தும் பல  விடுதலை இயக்கங்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் செம்ஸ்போர்டு அவர்கள் அடுத்தகட்டமாக உள்ளூர் நிலையில் இந்திய மக்களுக்கு அதிகாரங்கள் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் 1920 ஆம் ஆண்டு நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் அமைக்கும் உரிமையையும் பிரிட்டீஸ் பாராளுமன்றம் வாயிலாகப் பெற்றுத் தந்தார். 

                         

            இன்று இந்தியாவில் இருக்கும் நாடாளுமன்ற அவை, சட்டமன்ற அவை, ஆளுநர், நகராட்சி , மாநகராட்சி ஆகிய முறைகள் யாவும் செம்ஸ்போர்டு அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. 

           இந்திய நாடாளுமன்றம் மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய இந்திய அரசின் நிர்வாகத்தை இந்தியச் செயலர் நடத்த வேண்டும்.  இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும். இந்தியத் தலைமை ஆளுநருக்கு மாகாண சட்டமன்றங்களை கலைக்கும் அதிகாரம் மற்றும் மாகாணங்களில் அவரசர நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம் உள்ளது. 

இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

மாகாண சட்டமன்றங்கள் மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டதாக இருக்க வேண்டும். மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டத்தின் வாயிலாக அமைக்கப்பட்ட முறைகளே நூற்றாண்டுகள் கடந்தும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரதிநிதியாக செம்ஸ்போர்டும் , இங்கிலாந்தில் இந்திய பிரதிநிதியாக மாண்டேகுவும் இணைந்து இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வர முன்னின்றனர். 

        

       மகாத்மா காந்தியடிகள் இந்தச் சீர்திருத்தங்களை முழுமையாக எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். மகாத்மா காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் போட்டங்கள் தொடங்கின. செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்பவர்களை விசாரணையின்றி சிறையில் அடைக்க பிரிட்டீஸ் அரசு உத்தரவிட்டது. விசாரணையின்றி சிறையில் ஆங்கிலேயர்களால் ரெளலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக் பூங்காவில்  பெரும் போராட்டம் நடைபெற ஜெனரல் டயர் என்பவர் தலைமையில் துப்பாக்கிகள் கொண்டு சுடப்பட்டதில் 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, ஜெனரல் டயர் மீது விசாரணை நடத்த   ஹண்டர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. 

            மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டம் , இரட்டை ஆட்சி முறையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்த , அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் வட்டமேசை மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன்படி 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுகள் சட்டம் - 1935 இயற்றப்பட்டது. இதன்படி பல சுயாட்சி முறைகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடைமுறை வழங்கப்பட்டது. இருப்பினும் மன்னர்களின் எதிர்ப்பு , இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய முஸ்லிம் லீக் ஒற்றுமையின்மை காரணமாக இந்திய கூட்டாட்சி முறை நடைமுறைக்கு வரவில்லை. எந்த சுயாட்சிக்காக போராடினோமே அந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்றும் நமது ஒற்றுமையின்மையால் நமக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. இந்தச் சீர்திருத்தங்கள் சரியாக  , முறையாக , ஒற்றுமையாக நடந்திருக்குமேயானால் 1935 களில் நமக்கு விடுதலை கிடைக்கப்பெற்று இருக்கலாம். செம்ஸ்போர்டு மற்றும் மாண்டேகு ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க இயலாத பெயர்களாக , நாம் அறிய வேண்டிய பெயர்களாக இருந்து வருகின்றது. 

 


No comments: