பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டிருந்த ஒருவர் செய்த செயல் வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றங்களை அறிவோம். இங்கிலாந்தில் ஊர் சுற்றிக்கொண்டும் பலரிடம் மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்த இராபர்ட் கிளைவ் என்பவரை அவரது தந்தை பொறுப்பும் துணிவும் வரவேண்டும் என்பதற்காக கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணியில் சேர்த்து விட்டார். 19 மாத காலம் கப்பல் பயணம் இராபர்ட் கிளைவ் க்கு பெரும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. 1744 ஆம் ஆண்டு ஒரு மாலைப் பொழுதில் சென்னை நகரின் கடற்கரையில் வந்திறங்கினார். இந்தியாவின் கடுமையான வெப்பம் தனது மகனை மாற்றும் என்று அனுப்பிய தந்தையின் கூற்றை மாற்றிக் காட்டினார். இராபர்ட் கிளைவ் எழுத்தராகப் பணியில் சேர்ந்து இந்தியாவையே தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தார்.
சென்னை நகரின் கடும் வெப்பம் இராபர்ட் கிளைவ் க்கு கடுமையான தாக்கத்தை அளித்தது. எப்படியாவது இந்த நகரை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். பல முறை முயன்று தோல்வியில் துவண்டு போனார். எழுத்தர் பணியில் பிடிப்பில்லாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றார்.
1746 ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் பொதுமக்கள் போல மாறுவேடம் இட்டு சென்னையில் இருந்து கடலூருக்குத் தப்பிச் சென்றார். பிரெஞ்ச் ஆளுனராக இருந்த டியூப்ளே கடலூர் கோட்டை மீது படையெடுத்தார். இராணுவம், போர் , தந்திரம் போன்ற எந்தவிதமான அனுபவமும் இல்லாத கிளைவ் கைகளில் கிடைத்த சாதாரண வெடிகுண்டுகளை பிரெஞ்ச் படை மீதி வீசீ குழப்பத்தை ஏற்படுத்தினார். அதற்குள் பிரிட்டீஸ் படை டியூப்ளே படையைச் சுற்றி வளைத்து வீழ்த்தியது. பிரிட்டீஸ் படை இராபர்ட்டை வாழ்த்தியது. பின்னர் கிழக்கிந்திய நிறுவனத்தின் முக்கியமான பதவிகளுக்கு இராபர்ட் கிளைவ் உயர்ந்தார்.
1753 ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மார்க்ரெட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 17 ஆம் நூற்றாண்டிலேயே வெடிகுண்டுகளை எதிர்க்கும் அளவுக்கு மிக உறுதியான கட்டிடமாக அன்றைய புனித ஜார்ஜ் கோட்டை இருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. இன்றைய தமிழக அரசின் அதிகார மையமாக விளங்கும் இந்தக் கோட்டையே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார மையமாகவும் 350 ஆண்டுகளுக்கு முன்பு விளங்கியது. 1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.
சென்னையில் திருமணம் ஆன உடன் வசிக்க விரும்பிய கிளைவ் க்கு இந்திய அரசியல் ஓரிடத்தில் இருக்க விடாமல் துரத்தியது. உள்நாட்டு அரசியல் வாரிசி உரிமையப் பயன்படுத்தி கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தைப் பரவலாக்க விரும்பினார். வங்காளத்தில் இரு நவாப்களுக்கு உதவுவது போல் உதவி இரண்டு பேரையும் வீழ்த்தி இந்திய ஆட்சிக்கு அடிகோலினார் இராபர்ட் கிளைவ்.
23 ஜூன் 1757 அன்று ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காள நவாப் மற்றும் அவரது பிரெஞ்சு கூட்டாளிகளின் மிகப் பெரிய படைக்கு எதிராக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தீர்க்கமான வெற்றியாக பிளாசி போர் அமைந்தது.இந்த போர் நிறுவனம் வங்காளத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற உதவியது.அடுத்த நூறு ஆண்டுகளில், அவர்கள் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.
இந்தியாவில் முதன்முதலாக இராபர்ட் கிளைவ் வங்காளத்தின் ஆட்சியை ஒரு நிறுவனத்தின் அதிகாரியாகக் கைப்பற்றினார். வங்காளம் மற்றும் சில பகுதிகளில் வரிவசூல் செய்யும் முறையை இராபர்ட் கிளைவ் பெற்றிருந்தார். இதன் மூலம் பெரும்பாலான சொத்துகளை எளிதாக அவரால் சேர்க்க முடிந்தது. 1770 களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இராபர்ட் கிளைவ் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எளிதாக இராபர்ட் கிளைவ் மீண்டார்.
இந்தியாவில் தனது அதிகாரத்தின் மூலம் பல பகுதிகளில் ஆட்சி செலுத்தும் உரிமையைப் பெற்றுத் தரும் நாயகனாக இராபர்ட் வளர்ந்தார். வணிகம் செய்யும் நிறுவனம் ஆட்சி செய்யும் போது நாம் ஏன் ஆட்சி செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் பிரிட்டீஸ் ஆட்சி அதிகாரம் இந்தியாவுக்குள் வர வழிவகுத்தார் இராபர்ட் கிளைவ். கிழக்கிந்திய கம்பெனி பிரெஞ்ச்அரசையே எதிர்க்கும் அளவுக்கு வலிமை இருந்தாலும் பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியே இராபர்ட் கிளைவ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியது. சுமார் 1000க்கும் மேற்பட்ட தங்கங்களை பெரும் பாளம் போன்ற கட்டிகளாக மாற்றி இராபர்ட் கிளைவ் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்ற டோனிங்டன் கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதாக கிழக்கிந்திய நிறுவனத்தின் குறிப்புகளில் காணப்படுகிறது. கடலில் புதையல் தேடும் குழுவினர் இன்றும் இராபர்ட் கிளைவ் எடுத்துச் சென்ற தங்கத்தை , டோனிங்டன் கப்பல் மூழ்கிய இடத்தில் தேடுவது அவ்வப்போது செய்தியாக வரும்.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிறுவியவர்களின் வரலாற்றில் இராபர்ட் கிளைவ் க்கு தனித்த இடம் வரலாற்றில் உண்டு . ஆனால் இவ்வளவு செயல்களைச் செய்த இராபர்ட்கிளைவ்க்கு தனியான அடையாள சமாதி கூட இல்லாமல் எப்படி இறந்து போனார் என்பதையும் நாம் அறிய வேண்டும்.
1772 களுக்குப் பிறகு இராபர்ட் கிளைவின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. ரத்தக் கொதிப்பால் தூக்கமின்றி அவதிப்பட்ட கிளைவிற்கு பித்தப்பை கோளாறும் இருந்தது. தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுக் கொண்டதால் நரம்புத் தளர்ச்சி அதிகமானது. வலியாலும் வேதனையாலும் அழுது கதறிய கிளைவ், தன்னைக் கொன்று விடும்படி மன்றாடினார். இறுதியில் 1774-ம் ஆண்டு 49-ம் வயதில் இந்தியாவில் ஊழல் மூலம் சம்பாதித்த பண்ணை வீட்டில் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட இறந்து போனார். தற்கொலை செய்து கொண்டவர்களை கிறித்துவ தேவாலயத்தில் அங்கீகரிக்காத காரணத்தால் அவரது மரணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் தேவாலய அங்கீகாரமில்லாத கல்லறையாக இங்கிலாந்தில் புதைக்கப்பட்டார் இராபர்ட் கிளைவ். அடையாளமில்லாத நபர் இந்தியாவின் அடையாளமாக , அரசியலாக , அதிகாரமாக மாறியவரின் இறுதி வாழ்வு அவர் தொலைத்த பெருமளவிலான தங்கம் போலவே விடை தெரியாமல் வரலாற்றில் இருக்கின்றது.
No comments:
Post a Comment