Sunday, 17 March 2024

பாலம் கல்யாண சுந்தரம் - அறிய வேண்டிய வரலாறு

                       
                  
ஆறுகளிலும் , வாய்க்கால்களிலும் பாலம் இருந்தால் எளிதாகக் கடக்கலாம். அதுபோல எளிய மனிதர்களின் வாழ்க்கைக்குப் பாலமாக இருந்தவரைப் பற்றி அறிய வேண்டுமெனில் பில் கிளிண்டனிடம் இருந்து தொடங்கினால் இவரை அறிய முடியும். ஆம் , அமெரிக்காவின் அதிபராக பில் கிளிண்டன் இருந்த போது இந்தியா வருகை புரிந்தார். அப்போது அரசு சாராமல் அமெரிக்க அரசு சார்பாக இருவரைச் சந்திக்க விரும்புவதாக அதிபர் மாளிகை இந்திய அரசுக்குத் தகவல் தெரிவித்தது.அவர்களில் ஒருவர் அப்துல்கலாம். மற்றொருவர் பாலம் கல்யாணசுந்தரம். 

         ஐக்கிய நாடுகள் சபை ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று சிறப்பித்தது. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் சர்வதேச குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இத்தனை சிறப்புகளுக்கு உரியவர் நம் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதை எண்ணுவதில் ஏற்றம் கொள்வோம். யார் இந்த பாலம் கலியாணசுந்தரம்? அறிவோம். 
  திருநெல்வேலியில் மேலகருவேலங்குளம் கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் பிற்காலத்தில் தான் கொண்ட கொள்கையால் தன் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது என்னும் உயரிய சிந்தனையில் உயர்ந்த மனிதராக உயர்வான மனிதராக வாழும் மானுடமாக வாழ்கிறார். 
         திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராக 35 ஆண்டுகள் பணியைத் தொடர்ந்தார். தன் பணிக்காலத்தில் தமக்குக் கிடைத்த ஊதியத்தை இல்லாத மக்களுக்கு வாரி வழங்கி ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தினார். தனது மாத சம்பளத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துவிட்டு திருநெல்வேலி ஆர்யாஸ் உணவகத்தில் சர்வர் வேலை செய்து தமக்கான செலவினங்களை சரிபார்த்துக்கொண்டார். தமது குடும்பத்தின் சொத்துக்களாக 1970களில் கிடைத்த 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதியை உடனடியாக ஏழைகளுக்கு , கல்விக்கு , கிராமத்திற்கு தானம் அளித்து நடைபாதை மனிதரானார். பாலம் கல்யாணசுந்தரம் பாதையைப் இன்றைய இளம் தலைமுறையினர் படித்தால் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்திருக்க இயலுமா? என்றுதான் கேள்வி எழுப்புவார்கள்.  
 இந்தியாவில் எங்கு இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் தனி மனிதராக முயன்று பலரிடம் கையேந்தி அதில் கிடைக்கும் நிதியை குழந்தைகளுக்காக அளித்து ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார். சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்த போது தமது பாலம் அமைப்பின் மூலம் நிதி பெற்று எளிய மக்களின் முகவரியாய் , ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி கதராடை மகாத்மாவாகவே திகழ்ந்தார். 
      பணிக்காலத்தில் மேடைகளில் நின்று பகட்டு உடைகள் அணிந்து எளிமை பற்றி பேசினால் பொருத்தமாக இருக்காது என்று எண்ணி , மகாத்மா மதுரையில் கதராடை அணியத் துவங்கியது போல இவரும் திருநெல்வேலியில் எளிய கதராடை மனிதராக மாறிப்போனார். இவரால் கல்வி பெற்றவர்கள் தமிழகம் மட்டுமல்ல உலகின் அனைத்துக் கண்டங்களில் , அனைத்து நாடுகளிலும் உள்ளனர் என்பது இவருக்கான முகவரி. ஏழை மக்களின் துயரினை அறிய ஏழு ஆண்டுகள் நடைபாதையில் உறங்கி நடைபாதை மக்களுக்கும் இல்லம் கிடைக்க உறுதுணையாக இருந்தார். பாலம் கல்யாணசுந்தரத்தின் பணிகளைப் பாராட்டி தமிழக அரசு இல்லம் ஒன்று வழங்கியது. இல்லத்திற்கு எளிய பொருட்கள் வாங்க தொகை இல்லை உதவுங்கள் என்று 30 கோடியை உலகக் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கியவர் கேட்க இந்தியக் குடியரசுத் தலைவர் முதல் நடிகர்கள் ரஜினிகாந்த் வரை ஒரு ருபாய் வழங்கி உதவினர். அதிலும் தன் தேவைக்கு மேல் தொகை சேர்ந்தவுடன் மீதித் தொகையை சர்வதேச குழந்தைகள் அமைப்புக்கு அளித்து விட்டார். பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பணிகளைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தமது தந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டார். ரஜினிகாந்த் இல்லத்தின் பாதுகாப்பை மீறி உதவி கேட்க வருபவர்கள் இவரைச் சந்திக்க முடியாமல் போக , ரஜினிகாந்த் அவர்களின் அன்பைப் பாராட்டிவிட்டு மீண்டும் தமது சமுதாயப் பணிகளை எளிய மக்களுடன் தொடர்ந்தார். பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி திரைப்படம் எடுக்கத் திட்டமிட்ட போது அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக அமிதாப்பச்சன் இருப்பார் என்று எண்ணி அணுகிய போது , ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி அவருக்கே அளித்துவிட்டு திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். பாலம் கல்யாணசுந்தரம் உடல் மொழிகள் தமக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  சில நாட்கள் மாறுவேடத்தில் பாலம் கல்யாணசுந்தரத்துடன் தங்கி இருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். 
          ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தத்து எடுத்து தம் பாலம் அமைப்பின் மூலம் உதவினார். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெற இயலாத மாணவர்களை அடையாளம் கண்டு உயர்கல்வி பெற வழிவகுத்தார். 1963 ல் இந்திய சீன யுத்த நிதிக்காக தமது 5 பவுன் தங்க நகையை காமராசரிடம் வழங்கியதிலிருந்து இவரது பயணம் தொடர்கிறது. இன்றும் எளிய மனிதராக , அலைபேசியில் பேசும் மனிதராக , குரலில் உறுதியுடன் கொள்கையில் ஏணியாக , கதராடை மனிதராக வாழ்ந்து வருகிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதரை நமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம். இந்த நூற்றாண்டின் எளிய மனிதரிடம் நீங்கள் பேசும் வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . 98402 18847 என்ற எண்ணில் அழைத்து அவரை நாம் பணிவுடன் வணங்கினால் இந்த உலகம் வளரும். இவரின் சமூகப் பணிகள் தொடர நாமும் அவரது வேண்டுகோளை ஏற்று ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி அவரின் அன்பில் கரைந்திடுவோம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தன்னம்பிக்கையாளர், பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களை வழிகாட்டியாய் கொண்டு சமுதாயப் பணிகளில் இணைத்து இந்த உலகம் ஏற்றம் பெற ஏணியாய் திகழ்வோம். 














            




1 comment:

Bharathanaatiyam said...

மிகவும் உணர்வு பூர்வமாக படித்து மகிழ்ந்தோம்.