Saturday, 16 March 2024

தாந்தியா தோப்பே- அறிய வேண்டிய வரலாறு - இரண்டாம் சுதந்திரப் போர்- Indian Rebellion of 1857

    

                                                                                                                           

       தாந்தியா தோப்பே என்னும் ஒற்றைப் பெயர் கிழக்கிந்திய நிறுவன வரலாற்றில் மிக முக்கியமானது. ஏனெனில் இந்தியாவில் கிழக்கிந்திய நிர்வாகத்தை அடி பணியவைத்து இரண்டு ஆண்டுகள் இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியவர் என்னும் பெருமைக்குரியவர். தாந்தியா தோப்பே என்பவரால்தான் கிழக்கிந்திய நிறுவனம் வெளியேற்றப்பட்டது. 

இரண்டாம் இந்திய சுதந்திர போரை வழிநடத்தியவரின் வரலாறு நமது பாடப்புத்தகங்களில் , வரலாறுகளில் மறைக்கப்பட்டதாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் முதல் விடுதலைப் போர் தமிழகத்தினுடையது. இரண்டாவது விடுதலைப்போர் மீரட் நகரில் தொடங்கி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்.  சவாலாக விளங்கியவர்களில் முக முக்கியமானவர் தாந்தியா தோப்பே.


         பிளாசிப் போர் 1757 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று நடைபெற்றது. இந்தப் போரின் மூலம் இந்தியாவின் அரச விதிகள் இரு நூற்றாண்டுகள் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை அடிமைபடுத்தியது.  பிளாசிப் போரில் கிழக்கிந்திய கம்பெனி வங்காள நவாப் அரசை வீழ்த்தி வங்காள ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் நூற்றாண்டு தினமான 1857 ஜூலை 31 அன்று மாபெரும் கிளர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்த இந்திய சுதந்திர வீரர்கள் மாபெரும் திட்டங்களைத் தீட்டினர். ஆனால் சுதந்திரம் வேண்டும் என்ற தீ இரண்டு  மாதங்களுக்கு  முன்னதாகவே 10.5.1857 ல் மீரட் போன்ற நகரங்களில் உருவாகத் தொடங்கியது. 1806 தமிழகத்தில் தொடங்கிய சுதந்திர தீ 1857 ல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பரவத் தொடங்கியது. 


      தாந்தியா தோப்பே மூலம்   சுதந்திர தீ பரவுவதை அறியாத ஆங்கிலேயர்கள் வழக்கம் போல ஞாயிறு அன்று மகிழ்ச்சிக் கொண்டாடத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் இந்திய வீரர்கள் மாபெரும் தாக்குதலை ஏற்படுத்தி ஆங்கிலேயரை வீழ்த்தி இரண்டாம் பகதூர் ஷா அவர்களை அரியணையில் அமர வைத்தனர். துப்பாக்கியில் மத வெறுப்புணர்வால் ஏற்பட்ட நிகழ்வு என்று இன்றும் நம்மால் வாசிக்கப்படும் இரண்டாம் சுதந்திரப்போர் 1857 ல் உணர்வால் , சுதந்திர வேட்கையால் உருவானது. மக்களிடமும் இந்த இரண்டாம் சுதந்திரப் போருக்கு மிக  அதிகமான ஆதரவு இருந்தது.   

        கிழக்கிந்திய படைப்பிரிவில் பல வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக இருந்தமையாலும், துப்பாக்கியின் தோட்டா மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்தமையாலும் கிழக்கிந்திய நிர்வாகம் துப்பாக்கிகளைத் திரும்ப பெற திட்டம் வகுத்தது. அதன்படி மங்கள் பாண்டே துப்பாக்கியைத் திரும்ப ஒப்படைக்காமல் ஆங்கிலேயர்களைத் தாக்கி எழுச்சியை ஏற்படுத்தினார். அதனால் கைது செய்ய உத்தரவிடப்பட்ட போது , ஜமேதார் மங்கள் பாண்டேவை கைது செய்யாமல் இருக்கவே இருவரையும் கிழக்கிந்திய நிறுவனம் தூக்கிலிட்டது. இந்த நிகழ்வே வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இந்திய வீரர்கள் பெரும் கோபத்துடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். பொது மக்களும் இணைந்து போராடினர். தாந்தியா தோப்பே  வட இந்தியா முழுவதும் மாறுவேடத்தில்  பயணித்து 1857 நிகழ்வை ஒருங்கிணைத்தார். கிழக்கிந்திய நிறுவனம் தாந்தியா தோப்பேவை கைது செய்ய பல வழிகளில் முயன்றது. ஆனால் போராட்டம் தீவிரமானது. 

        கிழக்கிந்திய நிறுவனம் கிட்டத்தட்ட தோல்வியின் பாதையில் ஒவ்வொரு நகரங்களாக இழக்கத் தொடங்கிய நிலையில் பிரிட்டீஸ் அரசாங்கம் விழித்துக்கொண்டது. சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐரோப்பிய படையை இந்தியாவை நோக்கி அனுப்பி உத்தரவிட்டது. 

           கொரில்லா போர் முறைகளில் வல்லவரான தாந்தியா தோப்பே சிப்பாய்களின் எழுச்சியை மக்கள் எழுச்சியாக மாற்றி இரண்டு வருடங்கள் மாபெரும் தலைவராக  உருவெடுத்தார். எத்தகைய நிலையில் தப்பி சென்று போர் புரியும் வல்லமை பெற்றவராக தாந்தியா தோபே திகழ்ந்தார். 

   ஜூன் 1857 5 அன்றுசிப்பாய்களின் கிளர்ச்சி கான்பூரில் தாந்தியா தோப்பே தலைமையில்  நடந்தது. தாந்தியா  கலகக்காரர்களின் தலைவரானார். 1857 ஜூன் 25 அன்று கிழக்கிந்திய  படைகள் சரணடைந்தன.  ஜூன் மாத இறுதியில் தாந்தியா  தலைவராக அறிவிக்கப்பட்டார். ஜெனரல் ஹேவ்லாக் இரண்டு முறை போரில் தாந்தியா தோப்பே  படைகளுடன் சண்டையிட்டார்.  கிழக்கிந்திய படையினர் மூன்றாவது முறையாக தோற்கடிக்கப்பட்டு பித்துருக்குத் திரும்பினர்.  தாந்தியா தோபே 1857ஜூன் 27, இல் நிகழ்ந்த கான்பூர் கலவரத்திற்கு காரணமாக இருந்த தலைவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார்.  ஆகஸ்ட் 16, 1857 அன்று சர் ஹென்றி ஹேவ்லாக் தலைமையிலான ஆங்கிலேய படையால் வீழ்த்தப்படும் வரை தாந்தியா தோபே அந்தப் பகுதியை பாதுகாத்து வந்தார் பின்னர், கான்பூரில் தளபதி சார்லஸ் ஆஷ் வின்ட்ஹாமை தோற்கடித்தார்.   


        சர் கொலின் காம்ப்பெல்லின் கீழ் ஆங்கிலேயர்கள் எதிர் தாக்குதல் நடத்தியபோது தாந்தியா தோபே மற்றும் அவரது இராணுவம்  தோற்கடிக்கப்பட்டது. தாந்தியா தோபே மற்றும் பிற கிளர்ச்சியாளர்கள் தப்பி  ஜான்சி ராணியிடம்  தஞ்சம் புகுந்தனர். பின்னர் ஜான்சி இராணிக்குக் கிட்டத்தட்ட படைத்தளபதி போல பல உதவிகளை செய்தார் தாந்தியா தோப்பே.  இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று பிரிட்டீஸ் படை இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்திய வீரர்களால் கைப்பற்றபட்ட டெல்லி ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. இந்திய வீரர்கள் கடுமையாக நடத்தப்பட்டனர். இரண்டாம் சுதந்திர நெருப்பு கட்டுப்பாட்டு நிலைக்கு வந்தது. தாந்தியா தோபே காடுகளில் மறைந்து ஆங்காங்கே கொரில்லா தாக்குதலை மேற்கொண்டார். உடனிருந்த ஒருவரால் தாந்தியா தோப்பே காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். 1859 ஏப்ரல் 18 ஆம் நாள் சிவபுரி என்னும் இடத்தில் தாந்தியா தூக்கிலிடப்பட்டார். வரலாற்றில் மங்கள் பாண்டே வுக்கு இருக்கும் இடம் கூட தாந்தியா தோப்பே க்கு இல்லை என்பது பதிய வேண்டிய வரலாறு. 

         1857 முதல் 1859 வரை இந்தியாவில் மாபெரும் சுதந்திர எழுச்சிக்கு விதையாகத் திகழ்ந்தவரால் கிழக்கிந்திய நிர்வாகம் தோல்வியுற்று பிரிட்டீஸ் படை படை இந்தியா வந்தது. 

        இந்திய வரலாற்றில் 1857 இல் நடைபெற்ற போர்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.     ஆங்கிலேயர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை அழித்துவிட்டு ஆங்கில முடியரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்தினர். முடியரசின் பிரதிநிதியாக இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சிக் கொள்கையின் அறிவிப்பின்படி "இந்திய அரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்கள்" ஆகிய அனைவரும் பிரித்தானிய ஆட்சியின்கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்று விக்டோரியா அவர்கள் அறிவித்தார்.பிரித்தானிய வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதுடன், காலாட்படையை கையாள பிரித்தானிய வீரர்களை மட்டுமே அனுமதித்தனர். இரண்டாம் பஹதுர் ஷா பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார், அங்கு அவர் 1862 இல் மரணமடைந்தார்.1877-  விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார். இந்திய சுதந்திர வீரர்கள் பல்லாயிரம் பேர் இந்தியாவின் நான்கு திசையிலும் இந்திய சுதந்திரத்திற்குப் போராடினர். அவர்களில் மிகச்சிலர் வரலாற்றில் வாசிக்கப்படாமலேயே வீழ்ந்தனர். எண்ணற்ற தியாகிகளால் கட்டமைக்கப்பட்ட இந்த நாட்டின் வரலாற்றில் இரண்டாம் சுதந்திரப் போருக்கு அடி வேராக திகழ்ந்து ஆங்கிலேயருக்கு மிரட்சியை ஏற்படுத்திய தாந்தியா தோப்பே வரலாற்று வீரன். 1806 மற்றும் 1857 ஆகிய இரு நிகழ்வுகளும் சிப்பாய்க் கலகம் என்றே இன்றளவும் நமது குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் உள்ளது. வரலாற்றை உரிய முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணி இன்றைய பாடத்திட்ட வல்லுநர்களிடம் இருக்கிறது. முதல் மற்றும் இரண்டாம் சுதந்திரப் போர் என்றே மேற்காணும் இரு நிகழ்வுகளையும் நம் பாடங்களில் பதிவு செய்ய வேண்டும். பெயர் தெரியாத தியாகிகளால் கட்டமைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர் (1806) , தாந்தியா தோப்பே , மங்கள் பாண்டே , ஜான்சி ராணி போன்றோரால் நடத்தப்பட்ட இரண்டாம் சுதந்திரப் போர் நாம் அவசியம் அறிய வேண்டியது. 


      


No comments: