செளரி - செளரா என்பது உத்திரப்பிரதேசம் அருகில் செளரி மற்றும் செளரா என்னும் இரு சிறு நகரத்தையும் இணைக்கும் ஒரு இரயில் நிலையமாகும். ரெளலட் சட்டம் கடுமையான நடைமுறையில் இந்தியாவில் இருந்த காலத்தில் , தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகைபுரிந்த மகாத்மா காந்தியடிகள் , தென்னாப்பிரிக்காவில் நடத்தியது போன்று ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். ஆனால் அன்றைய இந்திய விடுதலைப் போராட்ட மூத்த தலைவர்கள் பலர் இந்த இயக்கத்தை ஆதரிக்கவில்லை. மாறாக இளைஞர் பட்டாளம், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஒத்துழையாமை இயக்கத்தைப் பின்பற்றினர். அரசு பதவிகளில் இருப்போர் பதவி விலகினர். பிரிட்டீஸ் பட்டம் பெற்றவர்கள் பட்டங்களைத் திருப்பி அளித்தனர். உள்நாட்டு வணிகப் பொருட்கள் மட்டுமே பெரும்பான்மையான மக்களால் கேட்டு வாங்கப்பட்டது. இதனால் பிரிட்டீஸ் அரசாங்கம் மகாத்மா மீதும் , மக்கள் மீது கடுமை காட்டத் தொடங்கியது.
பிப்ரவரி 4 ,1922 அன்று செளரி செளரா இரயில் நிலையத்தில் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வழிநடத்தும் தலைமை இல்லாத காரணத்தால் , போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையை அடக்க ஆங்கிலேய அரசு துப்பாக்கிச் சூடு நடத்திட அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தைத் தாக்க அதில் 22 ஆங்கிலேய காவலர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் தொடர்புடைய மக்களை, இயக்கத்தினரை ஆங்கிலேயர்கள் தேடித்தேடி கைது செய்தனர்.பிரிட்டீஸ் நீதிமன்றம் சம்பவத்தில் தொடர்புடைய 172 பேருக்குத் தூக்கு தண்டனை அறிவித்தது.
ஒத்துழையாமை இயக்க நிகழ்வு வன்முறையாக மாறியமைக்குப் பொறுப்பேற்று மகாத்மா காந்தியடிகள் 5 நாட்கள் உண்ணாவிரதமும் , பேசா விரதமும் இருக்கத் தொடங்கினார். இந்தியா முழுமைக்கும் இந்தப் போராட்டம் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். காந்திஜியின் உண்ணாநோன்பும் , பேசா விரதமும் தொடங்க , இந்த நிகழ்வில் தண்டனை பெற்ற பலரும் செய்வதறியாது திகைத்தனர். அந்த நேரத்தில் மானவேந்திரனாத் ராய் என்னும் தலைவர் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க, வேறு வழியின்றி பிரிட்டீஸ் அரசாங்கம் மேல்முறையீடு செய்து 172 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை மாற்றப்பட்டு , 19 பேருக்கு தூக்குதண்டனையும் , மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பேச வேண்டிய மகாத்மா காந்தியடிகள் , மூன்று பேரின் கொலையை மட்டும் கண்டித்த நிலையில் மற்றவர்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தது நூற்றாண்டுகள் கடந்தும் பலரால் ஏனென்று இன்றும் பேசப்பட்டு வருகிறது.
ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ல் காந்திஜி தொடங்கியமையால் தான் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டன என்பதைக் கருத்தில் கொண்டு , தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில், 1922 மார்ச் 10-ல் காந்தி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1922-ல் இதே நாளில் காந்தி மீதான குற்றச்சாட்டு உண்மை எனக் கூறி அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1924-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தான் பின்பற்றிய நெறிக்கு மாறாக, ஒத்துழையாமை இயக்கம் சென்றமையால் போராட்டத்திற்கும் வன்முறைக்கும் தாமே காரணம் என்று பொறுப்பேற்றுக் கொண்டு காந்திஜி சிறையும் சென்றார். இந்த நிகழ்வில் காந்திஜியின் மெளனமே போராட்டத்தை அமைதியாக்கியது என்று வாதிடுவோரும் உண்டு. பலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தமைக்கு காந்திஜி குரல் கொடுக்காமையும் அவரது மெளனமும் ஏன் என்பதற்கு விடை அறியப்பட வேண்டும். எம்.என் .சர்மா அவர்கள் எழுதிய cowrie cowra violence- suspension of Movement என்னும் நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.