பொ. சங்கர்
Monday, 18 August 2025
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -12
Sunday, 10 August 2025
நதியின் பிழையன்று - நூல் மதிப்புரை
Saturday, 19 July 2025
Barefoot college - பங்கர் ராய்
ஆதியிலே நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வாழ்க்கையோடு இருந்தது. நமக்கு எவையெல்லாம் தேவை என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். பெரு முதலாளிகள் தீர்மானிக்கக் கூடாது என்பதையே காந்தியம் பேசுகிறது. காந்தியத்தின் அடியொற்றி சமூகத்தை மரபு வழியிலேயே மேம்படுத்த இயலும் என்னும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர் பங்கர் ராய்.
பங்கர் என்னும் பெயர் இராஜஸ்தானின் திலோனா பகுதிக்கு வெறும் பெயர் மட்டுமல்ல. நம்பிக்கையின் உச்சம். படிக்காதவர்கள் , கல்விச்சாலைக்குச் செல்லாதவர்கள் பொறியாளராக ஆக முடியாது என்பது நம் இந்திய மனங்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்று உறுதியுடன் போராடி , ஓர் அமைப்பை உருவாக்கினார் பங்கர் ராய் .
ஒரு கிராமத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் இராஜஸ்தான் மாநிலத்தில் திலோனா கிராமத்தில் பங்கர் ராய் என்னும் நம்பிக்கை நபரால் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட்டது. காந்தியம் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரம் இக்கிராமத்தில் பங்கர் ராயால் நனவானது.
திலோனா கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி ஆண்டுகள் பல போராடியும் அவர்களுக்குத் தேவையான குடிநீர் , கல்வி , மருத்துவம் , மின்சாரம் போன்று அடிப்படை வசதிகள் கிடைக்காமலே இருந்தது. 1972 ஆம் ஆண்டு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத திலோனா கிராமத்தில் நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக , பணயமாக வைத்து வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட , அம்மக்களின் மரபு சார்ந்த அறிவு ஆகியவற்றை துணையாகக் கொண்டு காந்தியம் என்னும் சொல் வெற்றி பெறும் என்று தொடங்கப்பட்ட வெறுங்கால் கல்லூரி (Barefoot college) இன்றும் வெற்றி நடை போடுகிறது.
1967 ல் பங்கர் ராய் மிக வசதியான குடும்ப அமைப்பில் கல்வியை நிறைவு செய்த தருணத்தில் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் வறுமையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். பல கிராமங்களில் மருத்துவம் கிடைக்காத மரணத்தை, அடிப்படை வசதி இல்லாத மறுபக்கத்தைக் கண்டு கலங்கிப் போனார் பங்கர் ராய். தன் தாயின் அனுமதியுடன் வசதியான வாழ்வை விட்டு கிராமம் நோக்கி அவரின் பாதங்கள் பயணமானது. பல கிராமங்களில் வெறுங்கால் மனிதர்களைக் கண்ணுற்றார் .
இராஜஸ்தானில் திலோனா கிராமத்தைத் தன்னிறை கிராமமாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் செயல்படத்தொடங்கினார். அந்த மக்கள் அவரை, வீட்டை விட்டு ஓடி வந்து விட்டவர் , மனநலம் பாதித்தவர், தீவிரவாதி என்று பல கோணங்களில் ஆரம்பத்தில் எண்ணினர். இந்தக் கிராமத்திற்கு ஏதேனும் செய்ய வந்துள்ளேன் என்று கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்ட பிறகே மக்கள் இவரை மாற்றத்திற்கான மனிதராகப் பார்த்தார்கள். இந்தப் பகுதியில் ஒரு கல்லூரி தொடங்குகிறேன் என்று அவர் முனைந்த போது , அந்த ஊரின் மருத்துவச்சி, உழவர், நெசவாளி ஆகியோர் கற்றுத்தரும் ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இந்த மக்களின் ஒத்துழைப்புடன் கிராமப் பொருளாதாரம் என்னும் நம்பிக்கை மலரத் தொடங்கியது. கண்ணால் கண்ட வெறுங்கால் மனிதர்களின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் வெறுங்கால் கல்லூரி உதயமானது. வறுமையால் கல்வி கிடைக்காத அல்லது தடைபட்ட மக்களுக்கு , இரவுப்பள்ளி, தொழிற்கல்வி , உயர்கல்வி என்னும் முக்கல்வி முறை திலோனா பகுதியில் தொடங்கப்பட்டது. திலோனா மக்களின் பங்களிப்புடன் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) அம்மக்களாலேயே கட்டப்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சிறிதும் நீர்க்கசிவு இல்லாத மாடிக்கட்டிடத்தை இந்தக் கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர்.
வறட்சிக்குத் தானம் கொடுக்கப்பட்ட பல இராஜஸ்தான் கிராமங்களில் திலோனாவும் ஒன்று. அப்படிப்பட்ட இடத்தில் அம்மக்களின் மரபு ரீதியான அறிவும் பங்கர் ராயின் நம்பிக்கையும் நாளடைவில் வெற்றி பெறத் தொடங்கிய போது , அது சமூக மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மழை என்னும் சொல் , நீர் என்னும் சொல் இம்மக்களின் கனவு வார்த்தைகள். இதனை மாற்றி வெறுங்கால் கல்லூரி மக்கள் 20 இலட்சம் மக்களுக்கு நீர் தரும் அமைப்பில் 5 அணைகளைக் கட்டி அதனை முறையாகப் பராமரிக்கும் வகையில் இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பல படிப்பறிவில்லாத பொறியாளர்களே திறம்பட நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தானில் சில வருடங்கள் வருடம் முழுமைக்குமே மழை இருந்ததில்லை. அந்த நிலையை எதிர்கொள்ள கிராமங்கள் தோறும் மழைநீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகப் பராமரிக்க வெறுங்கால் கல்லூரி சிறந்த நிலையை உருவாக்கியுள்ளது.
இராஜஸ்தானில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவுப்பள்ளிகள் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டன. 1975 களில் இந்தப் பள்ளிகள் அம்மக்களின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. வெறுங்கால் கல்லூரி மூலம் இரவுப்பள்ளிகள் மூலம் கிட்டத்தட்ட 1 இலட்சம் மாணவர்கள் கல்விப் பயின்று பின்னர் முறையாக கல்விப் பின்புலத்தில் பட்டம் பெற்றவர்களைப் பங்கர் ராய் உருவாக்கியுள்ளார்.
பங்கர் ராய் உருவாக்கிய அமைப்பு மூலம் பல கிராமங்கள் தன்னிறைவு பெறத் தொடங்கின. மருத்துவ அமைப்பை நிர்வாக ரீதியாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்திலும் , அந்தக் கிராமத்தில் இருக்கும் மருத்துவம் பார்க்கும் பெண்களை வைத்து மாதவிடாய் , கருவுற்ற பெண்களின் சிக்கல்கள் , இரத்த சோகை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிகிச்சைகள் வழங்கத் தொடங்கினார்கள். இதனால் பல இராஜஸ்தான் கிராமங்களில் குழந்தை இறப்பு சதவீதம் குறையத் தொடங்கியது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளைப் பல கிராமங்களில் வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.
ராஜஸ்தான் கிராமங்களில் பல கிராமங்களில் பெண்கள் கவலைப்படுவது நீர் மற்றும் மின்சாரத்திற்காக மட்டுமே. அதனை நிறைவேற்றும் பொருட்டு நீர் வசதியைப் பெருக்கி சுத்தமான நீர் கிடைக்க வழிவகை செய்தது. அதன்பின்னர் மின்சாரத்தைக் கனவாக எண்ணிய பகுதிகளை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் தேர்ந்தெடுத்தார். மின்சாரமே இல்லாத கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சியை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் சிறந்த முறையில் செயல்வழிக் கற்றல் பயிற்சி பெற்று தமது கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கினார்.
படிப்பறிவில்லாத மக்களுக்கு புத்தகங்கள் இல்லாமல் செயல்வழிக் கற்றல் மூலம் சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சிகள் பெரும் மாறுதலையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின. வயலில் உழவு வேலை பார்ப்பவரும் , வீட்டில் உணவுத் தயாரிக்கும் பெண்களும் மிக எளிதாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டனர்.
வெறும்கால் கல்லூரி பங்கர் ராய் செயல்வழிக் கற்றலை அறிந்த இந்திய அரசு திட்டக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்தது. இதன் பின்னர் வெறுங்கால் கல்லூரியின் பல திட்டங்கள் நாடு முழுமையும் கொண்டு செல்லப்பட்டது. நாடுகளைக் கடந்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மின்சாரம் இல்லாத , மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரப் பயிற்சி வழங்கப்பட்டது.
பங்கர் ராயின் பணியை சிறப்பிக்கும் வகையில் உலகின் சிறந்த டைம் இதழ் , உலகின் சக்தி வாய்ந்த நூறு நபர்களில் பங்கர் ராயும் ஒருவர் என்று அடையாளப்படுத்தியது. சிறிய ஒளி பெரிய வறுமையையும் மாற்றத் தொடங்கும் என்னும் வார்த்தை உண்மையானது. அதனால் பல கிராமங்கள் வெளிச்சமாகின. வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கின்றது. பங்கர் ராய் செயல்களில் நம்பிக்கை மிளிர்கின்றது. பங்கர் ராய் உருவாக்கிய செயல்வழிக் கல்வி கிராமங்களை மேம்படுத்துகிறது. மக்களை மேம்படுத்துகிறது. நம்பிக்கையை மட்டுமே அறுவடையும் செய்கின்றது.
Sunday, 22 June 2025
பொ.சங்கரின் - இந்தியாவில் மவுண்ட் பேட்டன்
சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஷ் அரசு , தனது ஆட்சிப்பரப்பில் பல நாடுகளிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் தமது நிலப்பரப்பையும் செல்வங்களையும் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்தியாவில் ஆட்சி அமைப்பைத் தக்க வைக்க பலமுனை ஏற்பாடுகளைப் பிரிட்டீஸ் அரசு செய்தாலும் நாளுக்கு நாள் புதிய போராட்டங்களை இந்தியா முன்னெடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து தேர்ந்தெடுத்த நபர் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன். இந்திய சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தவர்களில் மவுண்ட் பேட்டன் முக முக்கிய மனிதராக அறியப்பட வேண்டியவராகத் திகழ்ந்த பாதையில் நாமும் கொஞ்சம் பயணிப்போம்.
ஜார்ஜ் மவுண்ட் பேட்டன் இந்தியாவிற்கு எப்படி வந்தார்? இந்தியாவின் அதிகார மாற்றத்தில் இவரின் பங்களிப்பு என்ன? இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல் ஏன் மாற்றப்பட்டார்? இங்கிலாந்து பிரதமர் அட்லி மவுண்ட் பேட்டனை ஏன் தேர்வு செய்தார்? மவுண்ட் பேட்டன் திட்டம் என்றால் என்ன? என்ற பல கேள்விகளுக்குப் பதிலை வரலாற்றின் பக்கங்களில் , மவுண்ட் பேட்டன் வரலாற்றில், இந்திய வரலாற்றில் இருந்து காண்போம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார்.
இங்கிலாந்து இராணி எலிசபெத்தின் உறவினரான இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.
மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.
மவுண்ட்பேட்டன்ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றார். 1916 ஆம் ஆண்டு தமது விருப்பத்தின் படி பிரிட்டிஷ் கப்பற்படையில் அதிகாரியாக முதல் உலகப்போரில் பங்கேற்றார்.
செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுண்ட்பேட்டன் நேரிடையாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். போரும் கடலும் படிப்பும் என மூன்று முனைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் உரிய நாளில் பயின்று நிறைவு செய்தார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் நெருங்கிய உறவு முறையாக இருந்தமையால் மவுண்ட் பேட்டனைத் தேடி பல பதவிக்களும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன.
Wednesday, 4 June 2025
The rise and fall of Soviet Union -சோவியத் இரஷ்யா உருவாகி உடைக்கப்பட்ட வரலாறு 1917 -1991
ரஷ்யாவின் ஜார் ஆட்சி 1917 ல் கவிழ்க்கப்பட்டது. ஜார் மன்னராட்சி என்பது ரஷ்யாவில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1917 வரை நடந்த முடியாட்சி அரசாட்சி ஆகும். 1917 க்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உருவான நான்கு சோசலிச குடியரசுகள் டிசம்பர் 30, 1922 அன்று சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒரு தீவிர இடதுசாரி குழுவான போல்ஷிவிக்குகள், ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸைத் தூக்கியெறிந்து, பல நூற்றாண்டுகளாக முடியாட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முன்னாள் ரஷ்யப் பேரரசின் பிரதேசங்களைக் கைப்பற்றிய போல்ஷிவிக்குகள் ஒரு சமூக அரசை நிறுவினர்.
அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷிவிக்குகள் போராடி, பழைய ஜாரிச ஆட்சியில் எஞ்சியிருந்த அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்தனர். 1922 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர் விளாடிமிர் லெனின் ஆவார்.
சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைமையாக, தலைவராகத் திகழ்ந்த லெனின் 1924 இல் இறந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார். இலட்சக்கணக்கான தனது நாட்டு மக்களை தொழில் துறை மேம்பாட்டில் ஈடுபடுத்தினார். லெனின் உருவாக்க விரும்பிய கொள்கைகளை கைவிட்டு , கூட்டுப் பொருளாதாரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தியைத் தொழில்மயமாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கொள்கைகளை உருவாக்க ஸ்டாலின் முயன்றார்.
சோவியத் பகுதியில் விவசாயத் துறையின் கூட்டுப் பண்ணைமயமாக்கலை அமல்படுத்திட ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் தனிப்பட்ட நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கூட்டுப் பண்ணைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையான பொருளாதாரச் செழிப்பை இழந்திருந்தாலும் சோவியத் உலகின் மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பனிப்போர்களால் இரஷ்யா பாதிப்பை அடைந்தது. இதனால் ஸ்டாலின் செல்வாக்கையும் சொல்வாக்கையும் குறைக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை அந்நாடுகள் எடுத்து வந்தன. பல நடவடிக்கைளை எடுத்தாலும் சோவியத் வளர்ச்சி பிரமாண்டமாகவே இருந்தது.
உலகம் வியந்த ஒரு செயலை சோவியத் 1957ஆம் ஆண்டு முதன்முதலாக நிகழ்த்தியது. 1957 அக்டோபர் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் 1 ஐ சோவியத் ஏவியபோது உலக நாடுகள் மிரண்டு போயின.
சோவியத்தின் விண்வெளி முயற்சிக்குப் பதிலடி தர அமெரிக்கா அடுத்தடுத்த விண்வெளி முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. விண்வெளி , தொழில் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக சோவியத் பொருளாதார ரீதியாக கடுமையான பல சவால்களை எதிர்கொண்டது.
1980களில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலைகளைக் மிகக் குறைந்த அளவிற்குக் கொண்டு வந்து சோவியத் பொருளாதாரத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியபோது சோவியத் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க அமெரிக்கா பல நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடர்ந்து செய்து வந்தது.
கோர்பச்சேவ், டிசம்பர் 25, 1991 அன்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி சோவியத் ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்தது. அதன்படி ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, எஸ்டோனியா என பதினைந்து நாடுகளாகப் பிரிவதாக ஒவ்வொரு நாடுகளும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டன.
உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வர போராடிய சோவியத் இரஷ்யா, சிதறி பொருளாதாரக் காற்றால் பிய்த்து வீசப்பட்டன. அமெரிக்காவின் கனவு நிறைவேறியது. 1924 முதல் 1991 வரை உலகம் சோவியத் என்ற கட்டமைப்பைக் கண்டு சற்று மிரண்டது என்பது அறிய வேண்டிய வரலாறு .
அறிய வேண்டிய பார்க்க வேண்டிய சில படங்கள்
சோவியத் யூனியன், உலகின் ஆறில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாகும். இது சுமார் 22,402,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு விளங்கியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு.