ஆதியிலே நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வாழ்க்கையோடு இருந்தது. நமக்கு எவையெல்லாம் தேவை என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். பெரு முதலாளிகள் தீர்மானிக்கக் கூடாது என்பதையே காந்தியம் பேசுகிறது. காந்தியத்தின் அடியொற்றி சமூகத்தை மரபு வழியிலேயே மேம்படுத்த இயலும் என்னும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர் பங்கர் ராய்.
பங்கர் என்னும் பெயர் இராஜஸ்தானின் திலோனா பகுதிக்கு வெறும் பெயர் மட்டுமல்ல. நம்பிக்கையின் உச்சம். படிக்காதவர்கள் , கல்விச்சாலைக்குச் செல்லாதவர்கள் பொறியாளராக ஆக முடியாது என்பது நம் இந்திய மனங்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்று உறுதியுடன் போராடி , ஓர் அமைப்பை உருவாக்கினார் பங்கர் ராய் .
ஒரு கிராமத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் இராஜஸ்தான் மாநிலத்தில் திலோனா கிராமத்தில் பங்கர் ராய் என்னும் நம்பிக்கை நபரால் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட்டது. காந்தியம் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரம் இக்கிராமத்தில் பங்கர் ராயால் நனவானது.
திலோனா கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி ஆண்டுகள் பல போராடியும் அவர்களுக்குத் தேவையான குடிநீர் , கல்வி , மருத்துவம் , மின்சாரம் போன்று அடிப்படை வசதிகள் கிடைக்காமலே இருந்தது. 1972 ஆம் ஆண்டு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத திலோனா கிராமத்தில் நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக , பணயமாக வைத்து வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட , அம்மக்களின் மரபு சார்ந்த அறிவு ஆகியவற்றை துணையாகக் கொண்டு காந்தியம் என்னும் சொல் வெற்றி பெறும் என்று தொடங்கப்பட்ட வெறுங்கால் கல்லூரி (Barefoot college) இன்றும் வெற்றி நடை போடுகிறது.
1967 ல் பங்கர் ராய் மிக வசதியான குடும்ப அமைப்பில் கல்வியை நிறைவு செய்த தருணத்தில் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் வறுமையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். பல கிராமங்களில் மருத்துவம் கிடைக்காத மரணத்தை, அடிப்படை வசதி இல்லாத மறுபக்கத்தைக் கண்டு கலங்கிப் போனார் பங்கர் ராய். தன் தாயின் அனுமதியுடன் வசதியான வாழ்வை விட்டு கிராமம் நோக்கி அவரின் பாதங்கள் பயணமானது. பல கிராமங்களில் வெறுங்கால் மனிதர்களைக் கண்ணுற்றார் .
இராஜஸ்தானில் திலோனா கிராமத்தைத் தன்னிறை கிராமமாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் செயல்படத்தொடங்கினார். அந்த மக்கள் அவரை, வீட்டை விட்டு ஓடி வந்து விட்டவர் , மனநலம் பாதித்தவர், தீவிரவாதி என்று பல கோணங்களில் ஆரம்பத்தில் எண்ணினர். இந்தக் கிராமத்திற்கு ஏதேனும் செய்ய வந்துள்ளேன் என்று கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்ட பிறகே மக்கள் இவரை மாற்றத்திற்கான மனிதராகப் பார்த்தார்கள். இந்தப் பகுதியில் ஒரு கல்லூரி தொடங்குகிறேன் என்று அவர் முனைந்த போது , அந்த ஊரின் மருத்துவச்சி, உழவர், நெசவாளி ஆகியோர் கற்றுத்தரும் ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இந்த மக்களின் ஒத்துழைப்புடன் கிராமப் பொருளாதாரம் என்னும் நம்பிக்கை மலரத் தொடங்கியது. கண்ணால் கண்ட வெறுங்கால் மனிதர்களின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் வெறுங்கால் கல்லூரி உதயமானது. வறுமையால் கல்வி கிடைக்காத அல்லது தடைபட்ட மக்களுக்கு , இரவுப்பள்ளி, தொழிற்கல்வி , உயர்கல்வி என்னும் முக்கல்வி முறை திலோனா பகுதியில் தொடங்கப்பட்டது. திலோனா மக்களின் பங்களிப்புடன் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) அம்மக்களாலேயே கட்டப்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சிறிதும் நீர்க்கசிவு இல்லாத மாடிக்கட்டிடத்தை இந்தக் கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர்.
வறட்சிக்குத் தானம் கொடுக்கப்பட்ட பல இராஜஸ்தான் கிராமங்களில் திலோனாவும் ஒன்று. அப்படிப்பட்ட இடத்தில் அம்மக்களின் மரபு ரீதியான அறிவும் பங்கர் ராயின் நம்பிக்கையும் நாளடைவில் வெற்றி பெறத் தொடங்கிய போது , அது சமூக மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மழை என்னும் சொல் , நீர் என்னும் சொல் இம்மக்களின் கனவு வார்த்தைகள். இதனை மாற்றி வெறுங்கால் கல்லூரி மக்கள் 20 இலட்சம் மக்களுக்கு நீர் தரும் அமைப்பில் 5 அணைகளைக் கட்டி அதனை முறையாகப் பராமரிக்கும் வகையில் இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பல படிப்பறிவில்லாத பொறியாளர்களே திறம்பட நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தானில் சில வருடங்கள் வருடம் முழுமைக்குமே மழை இருந்ததில்லை. அந்த நிலையை எதிர்கொள்ள கிராமங்கள் தோறும் மழைநீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகப் பராமரிக்க வெறுங்கால் கல்லூரி சிறந்த நிலையை உருவாக்கியுள்ளது.
இராஜஸ்தானில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவுப்பள்ளிகள் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டன. 1975 களில் இந்தப் பள்ளிகள் அம்மக்களின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. வெறுங்கால் கல்லூரி மூலம் இரவுப்பள்ளிகள் மூலம் கிட்டத்தட்ட 1 இலட்சம் மாணவர்கள் கல்விப் பயின்று பின்னர் முறையாக கல்விப் பின்புலத்தில் பட்டம் பெற்றவர்களைப் பங்கர் ராய் உருவாக்கியுள்ளார்.
பங்கர் ராய் உருவாக்கிய அமைப்பு மூலம் பல கிராமங்கள் தன்னிறைவு பெறத் தொடங்கின. மருத்துவ அமைப்பை நிர்வாக ரீதியாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்திலும் , அந்தக் கிராமத்தில் இருக்கும் மருத்துவம் பார்க்கும் பெண்களை வைத்து மாதவிடாய் , கருவுற்ற பெண்களின் சிக்கல்கள் , இரத்த சோகை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிகிச்சைகள் வழங்கத் தொடங்கினார்கள். இதனால் பல இராஜஸ்தான் கிராமங்களில் குழந்தை இறப்பு சதவீதம் குறையத் தொடங்கியது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளைப் பல கிராமங்களில் வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.
ராஜஸ்தான் கிராமங்களில் பல கிராமங்களில் பெண்கள் கவலைப்படுவது நீர் மற்றும் மின்சாரத்திற்காக மட்டுமே. அதனை நிறைவேற்றும் பொருட்டு நீர் வசதியைப் பெருக்கி சுத்தமான நீர் கிடைக்க வழிவகை செய்தது. அதன்பின்னர் மின்சாரத்தைக் கனவாக எண்ணிய பகுதிகளை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் தேர்ந்தெடுத்தார். மின்சாரமே இல்லாத கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சியை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் சிறந்த முறையில் செயல்வழிக் கற்றல் பயிற்சி பெற்று தமது கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கினார்.
படிப்பறிவில்லாத மக்களுக்கு புத்தகங்கள் இல்லாமல் செயல்வழிக் கற்றல் மூலம் சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சிகள் பெரும் மாறுதலையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின. வயலில் உழவு வேலை பார்ப்பவரும் , வீட்டில் உணவுத் தயாரிக்கும் பெண்களும் மிக எளிதாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டனர்.
வெறும்கால் கல்லூரி பங்கர் ராய் செயல்வழிக் கற்றலை அறிந்த இந்திய அரசு திட்டக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்தது. இதன் பின்னர் வெறுங்கால் கல்லூரியின் பல திட்டங்கள் நாடு முழுமையும் கொண்டு செல்லப்பட்டது. நாடுகளைக் கடந்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மின்சாரம் இல்லாத , மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரப் பயிற்சி வழங்கப்பட்டது.
பங்கர் ராயின் பணியை சிறப்பிக்கும் வகையில் உலகின் சிறந்த டைம் இதழ் , உலகின் சக்தி வாய்ந்த நூறு நபர்களில் பங்கர் ராயும் ஒருவர் என்று அடையாளப்படுத்தியது. சிறிய ஒளி பெரிய வறுமையையும் மாற்றத் தொடங்கும் என்னும் வார்த்தை உண்மையானது. அதனால் பல கிராமங்கள் வெளிச்சமாகின. வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கின்றது. பங்கர் ராய் செயல்களில் நம்பிக்கை மிளிர்கின்றது. பங்கர் ராய் உருவாக்கிய செயல்வழிக் கல்வி கிராமங்களை மேம்படுத்துகிறது. மக்களை மேம்படுத்துகிறது. நம்பிக்கையை மட்டுமே அறுவடையும் செய்கின்றது.
No comments:
Post a Comment