நல்லியம் பாளையம் கிராமத்தில் இரண்டு திருவிழாக்கள் வகைப்படுத்தப்பட்டு அதன்படி நடந்து வந்தது. முதலில் ஊர் முன்னோர்களால் வகைப்படுத்தப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா. இந்தத் திருவிழாவை பொங்கல் , நோம்பி என்று வட்டார வழக்குச் சொற்களால் அழைப்போம்.
இரண்டாவது நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டு விழா . நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டுவிழாவும் கிட்டத்தட்ட திருவிழா போலவே ஊரில் நடக்கும்.
ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.
ஊரின் தெற்குப் பக்கம் நீரோடும் பாலத்திலிருந்து சைக்கிள் போட்டி தொடங்கும். பலரும் சைக்கிள்களை வரிசையாக வைத்துக் கொண்டு தயாராக நிற்பர்.
நல்லியம் பாளையத்தில் தொடங்கும் சைக்கிள் போட்டி இரயில் நகர் வழியாக , ஜீவா நகர் வழியாக , இரட்டப்பாளி வலசு வழியாக பல தோட்டங் காடுகளைத் தாண்டி மீண்டும் நல்லியம்பாளையம் பாலத்தின் அருகேயே வரும். நான் பார்த்த சைக்கிள் போட்டிகளில் ஷாப்கார கவுண்டர் மகன் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலாவதாக வந்துள்ளார்.
நீரோடும் வாய்க்கால் ஓரத்தில் நாங்கள் நின்று கொள்ள, விசில் ஊதியதும் தொடங்கும் போட்டியில் ஊரின் இளவட்டங்கள் பலரும் பாய்ந்து செல்ல , மேடுகளையும் காடுகளையும் கடக்க கடக்க யார் முதலில் வருவாங்க என்று அறிய ஆவலாக நின்று கொண்டிருப்போம்.
பெரும் பாய்ச்சலென வீர் சத்தத்துடன் சைக்கிள்கள் சர் சர் என வர அதில் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலில் வருவார்.
அதன்பிறகு கோயில் முன்பு பானை உடைத்தல் போட்டி நடக்கத் தொடங்கும். கண்களைக் கட்டிக் கொண்டு பானையை உடைக்க ஊரின் இளைஞர்கள் தயாராக இருக்க போட்டி தொடங்கும். மணி நேரங்கள் கடந்தாலும் நேரம் போவதே தெரியாமல் நடக்கும் போட்டியை எல்லோரும் இரசித்துக் கொண்டே இருப்பாங்க.
காலை தொடங்கி மாலை வரை நடக்கும் போட்டிகள் முடிந்து எல்லோரும் திருவிழா உற்சாகத்தில் இருப்போம்.
அன்று இரவு 8 மணிக்கு மேல் கோயில் முன்பு பெரிய திரை கட்டி அதில் திரைப்படம் திரையிடுவார்கள். அன்றைய காலத்தில் நாங்கள் திரையரங்கு செல்வதற்கெல்லாம் பெரிய வாய்ப்புகள் அமையாது. அந்தக் குறையைப் போக்க பெரிய திரை கட்டி தியேட்டர் அனுபவத்தை நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒரு படம். நாட்டாமை, எஜமான். சூர்யவம்சம் போன்ற படங்கள் திரையிடுவார்கள். சில வருடங்கள் மிகப் பழைய திரைப்படங்களைத் திரையிட நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்திருப்போம்.
நல்லியம் பாளையம் மாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக ஓட்டுக் கட்டிடமாக இருக்க , பின்னர் ஊர்ப் பெரியவங்க ஒன்று சேர்ந்து கோயிலை அழகான வடிவில் மாற்றி பெரிய கோபுரங்கள் கட்டி குடமுழுக்கு நடத்தி பின்னர் ஊரின் அழகே எங்கள் கோயில் தான் என்பது போல மாற்றி அமைத்தார்கள். அவ்வாறு கோயில் பணிகளில் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்களைப் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
ஆண்டு விழா முடிந்து அடுத்த நாள் விடுமுறை எனில் வெயிலோடு ஓடி , அடி பைப்பில் நீர் குடித்து , தோட்டத்திலோ , யாராச்சும் வீட்டிலோ அவங்ககிட்ட கேட்டு பெரிய குச்சி வைத்து பப்பாளி பறித்து அமராவதி அண்ணன் மகன் கார்த்திக் ,கோபால் , நான் இன்னும் பிற நண்பர்கள் கூட்டாக அமர்ந்து சாப்பிட்டு கிணற்றில் நீராடி நாட்கள் விளையாடிவோம்.
என் நினைவில் எங்கள் ஊருக்கு ஒருமுறை கூட காவலர்கள் வந்ததாக நினைவில் இல்லை. ஊர்ப் பெரியவங்க எங்களின் ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். தப்பித் தவறி கூட தவறுகள் செய்யாத ஊர்க் கட்டுப்பாட்டில் நாங்கள் வளர்ந்தோம்.
எங்கள் ஊர் நல்லியம் பாளையம் என்பது எங்களின் பெருமைகளில் ஒன்று.
No comments:
Post a Comment