Thursday, 12 February 2015

கவிஞர் அறிவுமதி=நீலம்

 2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.
 “நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.
தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.
நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.
 என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.
arv1.jpg
 தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.

தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.
“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழியஎன்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.
படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.
தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

No comments: