தமிழைப் படித்துவிடாதீர்கள்!' - விகடன்
தமிழைப் படித்துவிடாதீர்கள்!' - விகடன்
''தமிழைப் படித்துவிடாதீர்கள்!' - நொந்தவர்கள் சொல்கிறார்கள்..
'தாய்மொழியாம் தமிழ் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டவர்கள் நாங்கள். அதனால்
தமிழ் மொழியை பாடமாக எடுத்துப் படித்தோம். வாழ்க்கையில் எத்தனை பெரிய தவறை
செய்துவிட்டோம் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது’ என்று நமக்கு
கண்ணீர் கடிதம் ஒன்று வந்திருந்தது.
அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு...!
சங்க காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைக் காண்பதையே பெரும்பேறாகக்
கருதினார்களாம், ஆனால், இன்று மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் தமிழ்
இலக்கியம் படித்தவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். தமிழாசிரியர்
பணிக்காக பி.ஏ., எம்.ஏ., பி.லிட்., பி.எட்., படிப்புகளை, அதுவும்
கல்லூரிகளில் சென்று படிக்க முற்படாதீர்கள். ஏன் என்றால் அதன் விளைவுகள்
படித்து முடித்த பிறகே தெரியும்!
இன்று வரை தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில்
தமிழாசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறது. ஆனாலும், அரசுப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாநில பள்ளிக் கல்வித் துறை
இயக்குநர் போன்றோர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தமிழாசிரியர்
பணியிடத்தை மட்டும் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் இப்போது தமிழை போதிப்பவர்கள் யார் தெரியுமா? ஆங்கிலம்,
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வணிகவியல், உடற்பயிற்சி,
கைத்தொழில், குடிமையியல், வரலாறு, புவியியல், ஓவியம் போன்ற பாட
ஆசிரியர்கள்தான். கோனார் உரையைக் கையில் வைத்துக் கொண்டு படித்துக்
காண்பிக்கிறார்கள். வெளி உலகுக்கு இந்த உண்மைகள் தெரிவதில்லை. தெரிந்தாலும்
யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மட்டும்,
அந்தந்தப் பாடத்துக்கான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து,
( 20 முதல் 30 லட்சம் கொடுப்பவர்களை மட்டும்) அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைந்து நியமித்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு கொடுமை தெரியுமா?
ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியில்
சேர்ந்தவர்களில் 98 சதவிகிதத்தினர் தொலைதூரக் கல்வியில் பி.ஏ., பி.எட்.,
தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்தவர்களே. புதிய தமிழாசிரியர் பணி
நியமனத்தில் இவர்களுக்கே 50 சதவிகிதத்துக்கும் மேலாகப் போய்விடுகிறது.
ஏற்கெனவே பணியில் இருப்பவர்களைக் கொண்டு தமிழாசிரியர் புதிய பணி இடங்களை
நிரப்பி விடுவதால், தமிழாசிரியருக்கு படித்தவர்கள் இலவு காத்த கிளியாக
காத்திருக்க வேண்டி இருக்கிறது. பெண்களுக்குப் பொதுவான பணியில் 33
சதவிகிதம், மேலும், ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் அவர்களுக்கே முன்னுரிமை
இருப்பதால் ஆண்களுக்கு 57-வது வயதில்தான் பணி கிடைக்கிறது. சென்ற ஆண்டு ஒரு
நண்பருக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் இந்த ஆண்டு ஓய்வு
பெறுகிறார். இதைவிடக் கொடுமை, பணியில் சேர்ந்து 2, 3 மாதங்களில் ஓய்வு
பெறுபவர்களும் பணி கிடைக்காமலே ஓய்வுபெறும் வயதை எட்டிப் பிடிப்பவர்களும்
இருக்கிறார்கள்.
மற்ற எல்லாப் பாடங்களையும்விட, மிகமிகக் குறைந்த அளவில்தான்
தமிழாசிரியர்களை நியமிக்கிறார்கள், அதுவும் கண்துடைப்புக்காகவே. அதனால்
வேறு வழியின்றி தனியார் மெட்ரிக், மேல்நிலை, பிரைமரி, நர்சரி பள்ளிகளில்
பணி புரிகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். முடித்தவர்
நர்சரி பள்ளியில் 1-வது 2-வது வகுப்புக்குப் பாடம் நடத்துகிறார்.
அவர்களுக்கு அடிமாட்டுச் சம்பளமாக மாதம் 1,000 முதல் 5,000 வரை மட்டுமே
வழங்கப்படுகிறது. கேட்டால்... தமிழாசிரியர்தானே என்று கேவலமாய்ப்
பேசுகிறார்கள்.
இன்னொரு உண்மைச் சம்பவத்தை இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது. நண்பர்
ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்தது. அந்த சமயத்தில்தான், இவர்
எம்.ஏ., பி.எட்., தமிழ் இலக்கியம் முடித்தவர் என்பது தெரியவர, உடனே அந்த
மணப்பெண் திருமணத்தையே நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, 'தமிழ்
ஆசிரியர் என்றால் தனியார் பள்ளியில் குறைந்த ஊதியமே பெறக்கூடியவர்.இவர்
பாடத்துக்குத் தனியாக டியூஷன் வைத்தும் சம்பாதிக்க முடியாது, ஓய்வு பெறும்
வயதில்தான் அரசுப்பணி கிடைக்கும்’ என்றும் சொல்லி இருக்கிறார்.
அண்மையில் வெளிநாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் சிலர் சென்னையில் முதல்வரை
சந்தித்து, 'தங்கள் குழந்தைகளால் தமிழ் படிக்க இயலவில்லை, அங்குள்ள
பள்ளிகளில் தமிழ்ப்பாடம் இல்லை. எங்களுக்கு கற்பிக்க நேரம் கிடைப்பது
இல்லை’ என்று முறையிட்டு, 'தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும்,
அதில் பணியாற்ற சிலநூறு தமிழாசிரியர்களை அனுப்பி வையுங்கள்’ என்றும்
கேட்டுக் கொண்டார்கள். ஆவன செய்வதாக முதல்வர் கூறிய செய்தியும், அவருடன்
தமிழறிஞர்கள் சந்தித்த படமும் வெளியாயின. ஆனால், அது காகிதச் செய்தியோடு
அப்படியே நிற்கிறது.
கோவை செம்மொழி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தெரிந்தோ தெரியாமலோ
'தமிழ் படித்தவர்களுக்கு அதிகப் பணி நியமன வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று
கோரிக்கை வைத்தார். உடனே முதல்வர், 'தமிழ்வழி படித்தவர்களுக்கு வேலை
வாய்ப்பில் முன்னுரிமை’ என்ற சட்டமியற்றி, தமிழ் இலக்கியம்
படித்தவர்களுக்கு 0% சதவிகிதம்கூட பயனில்லாமல் செய்துவிட்டார்.
தமிழ் படிப்பது இத்தனை பெரிய பாவமா? இந்தத் தமிழ்நாட்டில் எங்கள் தமிழுக்கு
மதிப்பும், மரியாதையும் கிடைக்கவே கிடைக்காதா? ஏதாவது அற்புதம் நிகழும்
என்று இன்னமும் காத்துக் கிடக்கிறோம்...
இப்படிக்கு,
தமிழ் இலக்கியம் படித்ததனால்,
கண்ணீரோடு தவித்துக்கொண்டிருப்போர்.
* ஜூனியர் விகடன் 09-மார்ச் -2011
No comments:
Post a Comment