Thursday, 12 February 2026

ஈரோடு நல்லியம் பாளையமும் எழுதிங்கள் சீரும் - 21

                                  நல்லியம் பாளையம் கதை பேசுவோம்

கொங்கு நாட்டுக் கிராமங்களில் எழுதிங்கள் சீர் முக்கியமானதாகப் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் கொங்கு நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் எழுதிங்கள் சீர் சிறப்பானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் எங்கள் ஊரான நல்லியம் பாளையம் கிராமத்திலும் எழுதிங்கள் சீர் சிறப்பாகக் நடந்துள்ளது. நான் சிறுவனாக இருந்த போது ஊரில் நல்ல முகூர்த்த நாட்களில் , நாளை எழுதிங்கள் சீருக்குப் போறேனுங்க என்று எங்கள் கடை அருகில் ஊர்க் கவுண்டர்கள் பேசுவார்கள். எந்த ஊருல சீரு என்று இன்னோரு கவுண்டர் கேட்க அது கதையாக நீளும். 

தோட்டத்தில் இருந்து பால் கறந்து வரும் ஐயனும் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச செல்லும் ஐயனும் நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே முக்கால்மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கதைகளின் ஊடாகத் தோட்டத்தில் இருந்து காய்களையும் சுமந்து வரும் ஆத்தாக்களும் கதைகளில் கலந்து  நின்று கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள்.  

கவுண்டிச்சி பாளையம் குடி நாவிதன் வந்து பத்திரிக்கை கொடுத்தமாதிரி இருந்திச்சே யாரு வூட்டுல விசேசம் என்று மீண்டும் ஒரு கதை தொடங்கும். கவுண்டிச்சி பாளையம் வாய்க்கால ஒட்டி மேக்கால தோட்டத்து என்று சொல்லி அவர்களின் ஒறவு முறை கூறிட , அட ஆமா ஆமா தெரியும் சொல்லுங்க என்று கதை நீளும். 

நாங்கள் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருக்கும் போது மாலை அந்தி சாயத் தொடங்கும் கதை,  லேசாக இருட்டு விளும் நேரத்தில் , அட நேரமாயு போச்சு போகனும்ங்க காட்டுல தண்ணிக் காட்டணும் என்று ஒரு கவுண்டர் ஆரம்பிக்க , அட ஒங்க கூட பேசிட்டே நானும் பால் ஊத்தப் போகனுங்கறத மறந்துப்புட்டேன். சரி பாப்போங்க நாளைக்கு எழுதிங்கள் சீர் க்கு போகனுங்க வாரேங்க  என்று கிளம்புவார்கள். 

நல்லியம்பாளையம் மண்ணின் மைந்தர்கள் பலரின் கதைகள் செவி வழியாகவே கடத்தப்பட்டு வாழ்வியலாகக் கடந்துள்ளது. அவ்வகையில் நல்லியம் பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வேளாள மக்களின் முக்கிய சீராக நடத்தப்பட்டு வருகின்றது. 

கொங்கு கிராமங்களின் கொத்துக்காரர் பட்டம் எவ்வாறு முக்கியமானதோ அதுபோல அருமைக்காரர் பட்டமும் முக்கியமானதாகக் கருதப்படும். என் ஊரிலும் அருமைக்காரர் திரு. தங்கமுத்துக் கவுண்டரின் தந்தை சென்னிமலைக் கவுண்டர் ஊரின் முக்கியமானவராக , ஊரின் சடங்குகளை முன் நின்று நடத்துபவராகத் திகழ்ந்துள்ளார். 

நல்லியம்பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீரினை நடத்தும் முக்கியமானவராக வெள்ளோடு மேட்டுப்பாளையம் அருமைக் காரர் இருந்துள்ளார்.

 எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வழக்கப்படி வீட்டில் உள்ள பெண்ணின் மகள் பூப்பெய்தும் போதோ அல்லது அவரின் மகன் திருமண வயதின்போதோ நடத்தப்படுவது. அதற்கான செலவுகளை பெண்ணின் தாய்வீடே பெருமையாக ஏற்றுக் கொள்ளும். அவ்வகையில் எழுதிங்கள் சீர் நடத்த நாள் குறித்தல் என்பது முதல் நிகழ்வாகும். 

 எழுதிங்கள் சீருக்கு நாள் குறித்தவுடன் ஊரின் அருமைகார ஐயனுக்கு  வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பர். அந்த அழைப்பை அருமைக்காரர் ஏற்றுக்கொண்டு நிகழ்வை நடத்தித் தர ஒப்பதல் வழங்குவார். அதன் பிறகு பின் முறைமையில்  அருமைக்காரர் வந்து முகூர்த்தகால் நட ,விநாயகர் பூஜை செய்துசீர் தண்ணீர் கொண்டு வருதல் நிகழ்வு நடத்தப்படும். அடுத்து எழுதிங்கள் செய்யும் பெண் ,   குலவிக்காரி, புடைச்சட்டிகாரர், கட்டுகண்ணிகளுக்கு  முறையே வெற்றிலைப் பாக்கு கொடுத்தல் முறைமையில் நிகழ்வு நடத்தப்படும்.

அடுத்ததாக கங்கணம் கட்டும் முறைமை நடத்தப்படும். 

புடைச்சட்டி,வானைசட்டி, கோதைமாவு, அச்சு வெல்லம் ஆகியவை  வைத்து பூஜை செய்து கங்கணம் கட்டப்படும். 

.பின்னர்  சில சீர் முறைகள் செய்து எழுதிங்கள் செய்து கொள்ளும் பெண்ணுக்கு  சிகப்பு இட்டு நீர் வார்த்தல் நடைபெறும். 

எழுதிங்கள் பெண் நீராட்டு முடிந்தவுடன் , கோதை மாவை நிலவு மேல் வைத்து கோடாரியில் எழுதிங்கள் செய்து கொள்வார். பின்னர் அருமைக்காரர் முன் நிற்க எழுதிங்கள் பெண் வெல்லம் எடுத்துக் உறவுகளுக்கு காட்டி, கோதை மாவை அனைவருக்கும் கொடுப்பார்.பின்னர் அருமைக்காரர் உத்தரவு படி ஊரில் உள்ள வேப்ப மரம்  அரச மரம்  விநாயகர்  கோயில் சென்று வணங்கி வருதல் நிகழ்வு நடக்கும். இது முடிந்தபின்னர் எழுதிங்கள் பெண் அருமைக்காரர் மற்றும் இல்லத்துப் பெரியவர்களை  வணங்கி ஆசி பெறுவார். பின்னர் அந்தப் பெண் தன் உடன் பிறந்தவர் இல்லம் சென்று  வெல்லம் சாப்பிடுவார். இதோடு எழுதிங்கள் சீர் நிறைவுறும் .

எங்கள் நல்லியம் பாளையத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கிட்டத்தட்ட ஒரு திருமணம் நடப்பது போலவே பெரிய ஏற்பாடுகளுடன் எழுதிங்கள் சீர் நடைபெறும்.

நல்லியம் பாளையம் கிராமத்தில் ஆரம்ப நாட்களில் திருமணம் , எழுதிங்கள் சீர் போன்ற மரபுகள் இல்ல மரபாகவே நடந்துள்ளது. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமண முறைகள் தற்காலங்களில் மாற்றம் பெற்று திருமணக் கூடங்களில் நடக்கின்றது.

இது போல எண்ணற்ற சீர் முறைகளும் , உறவுக் கதைகளும் கொண்டதாகக் கொங்குக் கிராமமான நல்லியம் பாளையம் திகழ்கின்றது. . 








Sunday, 8 February 2026

"ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம்"


நோம்பி வேற வருது.. 
வூடு வாசல் எல்லாம் சுத்தம் பண்ணி பூசி வலிக்கோனும்ங்க என்ற சொற்கள் எங்கள் ஊரில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் கேட்கத் தொடங்கிவிடும். நல்லியம்பாளையம் கிராமத்தில் மையப் பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் காக்கும் கடவுளாக விளங்கி வருகின்றது. ஈரோடு நகரின் அருகில் இருக்கும் சூரம்பட்டி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுத் தொடங்கியவுடன் அதனைத் தொடர்ந்து பழைய பாளையம் நல்லியம்பாளையம் ரங்கம்பாளையம் ரெட்டபாலி வலசு கவுண்டிச்சி பாளையம் என அனைத்துக் கிராமங்களிலும் நோம்பி தொடங்கிவிடும். நோம்பி என்னும் சொல் திருவிழாவைக் குறிக்கும். எங்கள் ஊர் மக்கள் பெரும்பாலும் இந்த நோம்பியை பொங்கல் என்றே குறிப்பிடுவர். 
நகரத்திற்கு குடிபோன ஊரின் மக்கள் வழிபாட்டுக்காக நல்லியம்பாளையம் வரும்போது , ஏனுங்க நங்கையா கொளுந்தியா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்ற சொல்லாட்சி மாறி மாறி கேட்கும். 
'வாங்கொ வாங்கொ இப்பத்த வர்ரீங்களா' 

'வூட்ல எல்லாரும் நல்லாருக்கலாங்கலா'

'ஐயன் ஆத்தா அப்பன் அம்மா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்று ஊரில் குடியிருக்கும் மக்கள் வாஞ்சையோடு நலம் விசாரிப்பார்கள். 
பையன் என்ன பன்றானுங்க..என்று நகர்ப்புறத்து மாந்தர் விசாரிக்க கிராமப்புற மாந்தர், 
காலேஜி சேந்துருக்கானுங்க நாலு வருஷமுங்க என்று பேசி மகிழ்வார்கள். குறிப்பிட்ட நாளில் மார்கழி மாதத்தில் பூச்சாட்டுத் தொடங்கும். நாங்கள் கிராமம் முழுவதும் திரிந்து வேப்பிலை , ஆவாரம் பூ ஆகியவற்றை பை நிறைய பறிக்க கிளம்பி விடுவோம். இன்றைய நவீன உபகரணங்கள் அன்று எதுவுமில்லை. வேப்பிலையும் ஆவாரம் பூவும் பறிக்கச் செல்லும் போது தோட்டங்களில் பப்பாளியைப் பறித்து கூட்டமாக அமர்ந்து கூறு போட்டு சாப்பிடுவோம். கொய்யா மரத்தில் ஏறி கொய்த கனிகளை மென்றிடுவோம். தோட்டத்தில் உள்ள ஐயன் டேய் யார்ரா அது என்று குரல் கொடுப்பார். ஐயா நாங்க தானுங்க என்று நாங்கள் குரல் கொடுக்க சரி சரி மரத்தை முறிக்காதீங்க.. என்று கூறுவார். பை நிறைய வேப்பிலையும் ஆவாரம் பூ பறித்து மாலை தயாராக இருப்போம். நல்லியம்பாளையத்தில் பூச்சாட்டுத் தொடங்கும் நாளில் கோயிலுக்கு கீழ்ப்புறம் உள்ள ஊர்க் கிணற்றில் காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலை நீருக்குள் இருப்பது போல ஒரு வருடம் முழுமையும் கோயில் பூச்சாட்டு மரம் ஊர்க் கிணற்றில் நீருக்குள் தவம் இருக்கும். ஊர்க் கோயில் பூசாரி பயபக்தியுடன் வழிபாடு செய்து கிணற்றுக்குள் இறங்கி பூச்சாட்டு மரத்தை மேலே தூக்கி வருவார். சலசலவென்று ஓடும் வாய்க்காலின் கரையில் அரச மரத்தின் கீழ் பூச்சாட்டு மரத்தை தனது தோளில் சுமந்து ஊர்க் கோயில் பூசாரி நர்த்தன நடனம் ஆடுவார். நாங்கள் பறித்து வந்த வேப்பிலையை மரத்தின் மீது தூவ வேண்டும் என்னும் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் தூவுவோம். இல்லை இல்லை நாங்கள் மிக வேகமாக அந்த வேப்பிலையை வீசும் போது பூசாரியின் முதுகில் சுளிர் சுளிர் என்று வேப்பிலைகள் பட்டுத் தெறிக்கும். ஊர் மனிதர் வானவேடிக்கை நிகழ்த்துவார். நாங்கள் அண்ணாந்து பார்த்து வான வேடிக்கையை நட்சத்திர மின்மினிகளுக்கு இடையில் கண்டு ரசிப்போம். அரச மர விநாயகர் சிலையில் இருந்து மேடேறி கோயில் முன்பாக பூசாரியின் ஆட்டம் தொடங்கும். பிறகு கோயிலுக்குள் உள்ளே வந்து கோயிலின் மையப் பகுதியில் சுமந்து வந்த மரத்தின் மூன்று கவைகளுக்கு மத்தியில் எரியும் பூச்சட்டியை வைப்பார். அதில் எப்போதும் அணையாத சுடர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் முழுமையும். மறுநாள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் இல்லங்களில் இருந்து சிறு குடம் எடுத்து வந்து பூச்சாட்டு கம்பத்திற்கு நீரூற்றி வழிபாடு நிகழ்த்துவார்கள். இரவு மக்கள் இல்லங்களில் உணவை முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை புரிந்து விடுவர். கோயில் திண்ணைகளில் அமர்ந்து ஆத்தாக்களும் ஐயன்களும் பேசிக் கொண்டிருப்பர். இளவட்டங்களாகிய நாங்கள் பறை இசைக்க நடு சாமம் வரை பறை இசைக்கேற்ப ஆடிக்கொண்டே இருப்போம். பறை இசைக் கலைஞர்கள் கை வலிக்க இசை இசைக்க நாங்கள் கால் வலிக்க ஆடிக்கொண்டே இருப்போம். எப்போதும் பூச்சாட்டுத் தொடங்கி அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஊர் மக்கள் பொதுவாக காவேரி ஆறு சென்று நீர் சுமந்து வருவோம். மக்கள் எல்லோரும் செல்வதற்கு வசதியாக இரண்டு லாரிகள் தயாராக இருக்கும். ஆண்களுக்கு ஒரு லாரி பெண்களுக்கு ஒரு லாரி. மாலை 4 மணிக்கு லாரி காவிரிக்கரை நோக்கிச் செல்லும். அங்கு காவிரியில் குளித்து நீராடி மகிழ்ந்து நீர் சுமந்து காவிரியின் கரையில் ஒரு பொது இடத்தில் எல்லா குடங்களையும் பூ சுற்றி மாவிலை வைத்து வைத்து விடுவோம். ஊர்க்காரர்களுக்கு தெரியாமல் நானும் நண்பர்களும் கரையை விட்டு வெளியே வந்து சிற்றுண்டிகள் சாப்பிட்டு ஓடி வந்து விடுவோம். கரகம் வேல் கம்பு முதலியனவற்றை ஒவ்வொருவரும் எடுத்து சுமந்து வருவர். காவிரிக் கரையில் இருந்து நடந்து ஈரோடு நகருக்குள் புகுந்து பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபாடு நிகழ்த்தி பெரியார் நகர் சூரம்பட்டி நால்ரோடு வழியாக சூரம்பட்டி கோயிலுக்குள்ளும் சென்று திருநீறு அணிந்து கொண்டு மீண்டும் நடந்து பழைய பாளையம் வழியாக நல்லியம்பாளையம் வந்தடைய இரவு ஒரு மணி ஆகிவிடும். காவிரியில் இருந்து சுமந்து வந்த நீரினை அம்மனுக்கு ஊற்றி வழிபாடு நிகழ்த்தி உறங்கிப் போவோம். புதன் அன்று விடியற்காலையில் இல்லத்து பெண்கள் கோயில் முற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடாற்றுவார்கள். கோயிலில் சிறு சிறு பொம்மைக் கடைகள் இருக்கும். அன்று முழுவதும் நாங்கள் மகிழ்ச்சியோடு ஆடிப் பாடி விளையாடி மகிழ்வோம். அன்றுதான் நோம்பி. மறுநாள் கோயிலுக்குள் இருக்கும் அம்மனை உற்சவர் ஆக மாற்றி தேரில் அமர்த்தி ஊர் முழுவதும் வலம் வந்து மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெறும். மதியம் கிளம்பிய அம்மன் உற்சவம் இரவு வரை ஊரின் அனைத்து வீதிகள் வழியாகவும் சென்று இல்லங்கள் தோறும் காட்சி கொடுத்து மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருக்கும். அம்மன் உற்சவம் மீண்டும் கோயிலுக்கு வரும்போது இரவு நெடுநேரம் ஆகியிருக்கும். நோம்பி முடிந்து விட்டதே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

(மீண்டும் கதை பேசுவோம்)

Saturday, 7 February 2026

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -20 ஊரும் உறவும்


நல்லியம் பாளையம் கிராமம் பல மனிதர்களின் உழைப்பால் உணர்வால் உயிரோட்டமான கிராமமாக இருந்து வருகின்றது. தென்னை மரங்களும் வயலும் சூழ்ந்த வளமான கிராமம் எங்கள் நல்லியம் பாளையம். ஊரின் அடையாளங்கள் பல இருந்தாலும் இப்போதும் எப்போதும் ஊரின் அடையாளமாக இருப்பது உறவாகத் திகழும் மக்கள் தான். 

நல்லியம்பாளையம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. அந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் கவுண்டர்கள். அவர்களில் சாத்தந்தை கூட்டம் , கண்ணன் கூட்டம் , காடை கூட்டம், முத்தங் கூட்டம் , தூரன் கூட்டம் , மணியங் கூட்டம், செல்லன் கூட்டம், ஆந்தை கூட்டம், அந்துவன் கூட்டம் , ஓதாளன் கூட்டம்  இன்னும் பிற கூட்டங்கள் கூட்டமாய் நின்று ஊரின் பெருமை காத்து வந்தனர். 

நல்லியம்பாளையம் கிராமத்தின் காவல் தெய்வம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பணிகளில் எப்போதும் முன் நிற்பர். ஊரின் பெருமைக்குச் சிறப்பு சேர்க்க ஊர்க் கவுண்டர்கள் தங்களை எப்போதும் முன் நிறுத்தி பெருமை கொள்வர். 

கொங்கு வேளாள கவுண்டர்களின் கூட்டம் என்பது சோழர் காகாலத்திலிருந்தே நிலம் மற்றும் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான குலப்பிரிவுகள் ஆகும். திருமண உறவு முறையை முறைப்படுத்தவும், ரத்த உறவு அடையாளத்தை நிலைநிறுத்தவும், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் (குலக்குழுக்கள்) பங்காளி முறைப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் ஊர் நல்லியம்பாளையத்தார்கள் சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, ஊருக்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களின் முன்னோர்கள் வழியில் ஊரைக் காப்பதில் முன்நிற்பர். 

நல்லியம்பாளையத்தின் முன்னோர்கள் காடு திருத்தி நாடு நலம் பெற பெரும் வேளாண்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கொங்கு நாடு 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஊருக்கு ஒரு கொத்துக்காரர் மூலம் ஊர் வழிநடத்தப்படும் மரபு வழிவழியாக இருந்து வருகின்றது. எம் ஊரிலும் அந்த மரபு இருந்து வருகின்றது. 


நல்லியம்பாளையம் கிராமத்தில் கவுண்டர்கள் ஆரம்ப காலங்களில் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கினர். அடுத்தடுத்த தலைமுறைகளில் வந்தவர்கள் நகரம் நோக்கிச் சென்று பல்வேறு தொழில் முனைவோராக உருவாகி நல்லியம்பாளையத்திற்குப் பெருமை சேர்த்தனர்.நல்லியம்பாளையம் கவுண்டர்கள்  மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. 

    ஊர்க்கவுண்டர்களில் ஒருவரான சூரம்பட்டியார் ஐயனின் மகன் குழந்தைசாமி அண்ணன் அவர்கள் நகரம் சென்று தொழில்துறையில் சிறந்து விளங்கினார். பல்வேறு முயற்சிகளில் அடுத்தடுத்த நிலைக்குச் சென்ற திரு. குழந்தைசாமி அண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. அவரைச் சிறப்பிக்கும் வகையில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊரின் தெற்குப் புறத்தில் அரச மரத்தின் அருகில் மேடை அமைத்து ஊர் மக்கள் அனைவரின் சார்பாக அவருக்குப் பாராட்டு விழா எடுத்தனர். அப்போதெல்லாம் நாங்கள் சிறுவயது பாலகனாய் விளையாடிக்கொண்டு இருப்போம். 

திரு.குழந்தைசாமி அண்ணன் அவர்கள் தனது உரையில் , இந்த விருது எனது நல்லியம்பாளையம் கிராமத்திற்குச் சேர்ந்தது என்று பெருமைபட கூறினார்கள். 

ஊரின் பெரும்பாலான காணியாளர்கள் விவசாயம் போக மாற்றுத் தொழிலாக நகரம் சார்ந்து பல்வேறு தொழில் முனைவோர்களாகத் திகழ்ந்தனர். எங்கள் நல்லியம்பாளையம் கிராமத்திற்கு ‘நகைக்கடைக்காரர் ஊர்’ என்ற பெயர் இன்றும் உண்டு. ஊரில் பெரும்பாலானவர்கள் நகைக்கடைத் தொழிலில் சிறந்து விளங்கினர். 

ஊர் நகரமயமாகத் தொடங்கியதால் ஊரின் பெரும்பாலான வேளாண் நிலங்கள் வீடுகளாக மாறத்தொடங்கினாலும் ஊரின் பெருமை என்றும் மாறாமல் இருப்பதற்கு ஊர்க்கவுண்டர்களின் அயராத உழைப்பும் ஊர்க்கட்டுப்பாடும் காரணமாய் இருந்து வருகின்றது. 

               பதினெட்டு வகையான சமூகங்களை  ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.

நல்லியம்பாளையம் கிராமத்தில் ஊர்க்கவுண்டர்கள் போக ஆசாரியார்கள் சமூகம் ,திருக்கோயில் பணி புரியும் பண்டார சமூகம் , செட்டியார் சமூகமாக எங்கள் குடும்பம் ஆகியோர்  வசித்து வந்தனர். 

       ஊர்க்கவுண்டர்களின் இல்லத்தின் நிகழ்வுகளில் பண்டார சமூகத்தினர் முன்நின்று பல பணிகளைச் செய்வர். ஊரில் காவல் தெய்வமாக இருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூஜை பணிகளில் அவர்கள் முன்நிற்பர். ஊரில் பூச்சாட்டு தொடங்குவதில் இருந்து கம்பம் எடுத்து வந்து கம்பத்தை ஊரின் பொதுக்கிணற்றில் விடுவதுவரை ஒவ்வொரு கொங்கு கிராமத்திலும் பண்டார சமூகத்தினரின் பணி முக்கியமானது. 

ஊரில் ஊர்க் கவிண்டர் சமூகத்தில் அவர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் முக்கிய சமூகமாக குடிநாவிதர் சமூகம் இருக்கும். கொங்கு கிராமங்களில் பண்டாரத்தினர் மற்றும் குடிநாவிதர் இன்றி கிராமங்கள் கிடையாது என்ற அமைப்பு முறையை கொங்கு வேளாள முன்னோர்கள் உருவாக்கித் தந்தனர்.


நான் சிறுவனாக இருந்தபோது ஊர்க்கவுண்டர் வீட்டுத் திருமணங்களில் அழைப்பிதழை கவுண்டர் வீட்டுச் சமூகம் வந்து கொடுப்பதற்கு முன்பாக , குடிநாவிதர் சமூகம் ஒவ்வொரு இல்லம் சென்றும் வழங்கும் முறையை உருவாக்கி வைத்திருந்தனர். 

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் , ஆண் , பெண் ஆகியோரின் உறவு முறைகளை விசாரித்து , சொத்து பத்து எவ்வளவு ? வெளியூர் மாப்பிள்ளையின் நடத்தை ஆகியவற்றை விசாரித்து வந்து சொல்வதில் நாவிதர் சமூகத்திற்கு அந்த உரிமையை வேளாளக் கவுண்டர்கள் அளித்திருந்தனர். 

கவுண்டர்களின் திருமண மேடையில் மங்கல வாழ்த்துப் பாடி குலதெய்வ வழிபாடு வரை நாவிதர் சமூகம் முன்நிற்பர். கொங்கு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நாவிதர் சமூகம் இன்ப , துன்ப நிகழ்வுகளில் முன்நிற்பர். ஏதேனும் இல்லங்களில் துக்க காரியம் நடந்தால் அதனைக் கொங்கு கிராமங்களில் பெரிய காரியம் என்று சொல்வர். அப்படி நடந்தால் முதன்மையாக நாவிதர் சமூகத்திற்குத்தான் முதன்மையாகச் சொல்லி அனுப்புவர். பெரிய காரியம் நடந்தவுடன் இறந்தவரின் உடலை ஆடைபோற்றி , தலைமாட்டில் சூடம் ஊதுபத்தி ஏத்தி பன்னீர் தெளித்த பிறகே அழும் வழக்கம் கொங்குக் காணியாளர்கள் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.  

      இன்று மின்மயானங்கள்  வந்தாலும் அந்த முறைகளிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் நாவிதர் சமூகத்தின் பணி முக்கியமானதாக இருந்துவருகின்றது. 

நல்லியம்பாளையம் போன்ற கொங்குக் கிராமங்கள் இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்கு முன்னோர்கள் உருவாக்கித் தந்த நடைமுறைகளே சாட்சியாய் இருந்து வருகின்றது.  

ஊருக்குக் ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம்.  எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்று பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு கொங்கு கிராமங்களில் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. 

நல்லியம்பாளையம் கதை கொங்கு கிராமங்களின் கதை. நல்லியம்பாளையம் முன்னோர்கள் ஊர் எப்படி இருக்க வேண்டும் என்ற மரபை உருவாக்கி அதை அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைத்துள்ளனர். 

ஊரின் பெருமை என்பது மக்களால் உருவாக்கப்படுவது. எங்கள் ஊர் பெருமைமிகு ஊர் என்பதில் கர்வம் கொள்வோம்.