Sunday, 25 February 2024
ஹிட்லர்- அறிய வேண்டிய சில பக்கங்கள்- பொ.சங்கர்
Wednesday, 21 February 2024
அறிய வேண்டிய நூறு வரலாறு - இந்தியாவின் மூன்று இயக்கங்கள் - பொ.சங்கர்
இந்தியாவின் மூன்று இயக்கங்கள் - பொ.சங்கர்
பாடப்புத்தகங்களில் வெறும் பத்திகளாக மட்டுமே பதிவு செய்யப்பட்ட சில வரலாறுகள் எதிர்காலத்தலைமுறையினர் வாசித்து அறிய வேண்டிய பகுதிகள். அவ்வகையில் இந்தியாவில் மூன்று இயக்கங்கள் வரலாற்று ரீதியாக அறிய வேண்டியது அவசியம் . சுதந்திர இந்தியா இயக்கம், பூமிதான இயக்கம், சிப்கோ இயக்கம். இந்த மூன்று இயக்கங்களும் அமைதியான வழியில் போராடி மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கங்கள். வெற்றி கண்ட இயக்கங்கள். சுதந்திர இந்தியா இயக்கம் மக்களைச் சென்றடைந்த அளவு மற்ற இயக்கங்கள் மக்களுக்குத் தெரியவில்லை. வரலாறு அறிவோம். வாருங்கள்.
சுதந்திர இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியடிகளின் பயணத்தால் பல மாற்றங்களையும்
பல ஏற்றங்களையும் சந்தித்தது. பயணம் செல்வதில்
பெருவிருப்பம் கொண்டவர் மகாத்மா காந்தியடிகள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியாவின்
பெரும்பாலான கிராமங்களுக்கும் யாத்திரை மூலம் பயணம் மேற்கொண்டார். பெரும்பாலும் இரயில்களில்
பயணம் மேற்கொண்டு தேவைப்படும் இடங்களுக்கு காரிலும் , காலாற நடந்தும் பயணம் மேற்கொண்டு
சுதந்திர இந்தியா இயக்கத்தை மகாத்மா காந்தியடிகள் வலுவூட்டினார். இந்தியாவின்
பெரும்பாலான கிராமங்கள் தமிழகத்தில் சென்னை , ஊட்டி, கோவை, திருச்செங்கோடு , மதுரை
, திருச்சி போன்ற நகரங்களுக்கு வந்து அங்கிருந்து குக்கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.
1930 மார்ச் 12 அன்று உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கி 250 மைல்கள் கொண்ட தண்டி கடற்கரை
நோக்கி மூட்டுவலியுடன் நடந்தே சென்று ஏப்ரல் 6 அன்று தண்டி கடற்கரையில் ஒரு பிடி உப்பை
அள்ளி கைகளை உயரே தூக்கியபோது பிரிட்டீஸ் இந்தியா ஆட்டம் காணத்துவங்கியது. மகாத்மா
காந்தி கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த எழுச்சி காரணமாக
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் இந்தியர்கள் சிறைகளை நிரப்பி கைது செய்யப்பட்டனர்.
இன்றைய தலைமுறையினர் , உப்புக்காக எதற்கு இவ்வளவு
போராட்டம் என்று கேலி செய்யலாம். ஆனால் இன்று
எளிதாகக் கிடைக்கும் உப்பு அன்றைய காலங்களில் எளியோர்க்குக் கிடைக்காத உணவுப் பொருள்
என்பதை அறிய வேண்டும். சுவாசிக்கக் காற்றும் அருந்த நீரும் இன்றியமையாதது போல உப்பும்
இன்றியமையாதது என்றும் அனைத்து மக்களுக்கும் உப்பு கிடைக்கப்பெற வேண்டும் என்று பெரும்
போராட்டத்தைத் காந்தி முன்னின்று நடத்த அந்த எழுச்சி இந்தியா எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தனது அகிம்சை போராட்டம் வலுவானலும் ஆங்கிலேய அரசு சில நேரங்களில் மகாத்மா காந்தியைப்
பொருட்படுத்தாமல் இயங்கியது. 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலபாக் போராட்டத்தில் பலரை ஆங்கிலேய
அரசு சுட்டுக்கொன்ற போது தமது சபர்மதி ஆசிரமத்தில் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
மேலும் தமது அகிம்சைப் போராட்டத்தை ‘இமாலயப் பிழை’ என்றும் சுட்டிக்காட்டினார். 1921
ஆம் ஆண்டு தாம் சார்ந்த காங்கிரசு இயக்கத்திற்கு நிதி சேர்க்க மீண்டும் இந்தியா முழுவதும்
பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.
இந்தியா
முழுவதும் 30 இலட்சம் இராட்டைகளை பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது
பயணத்தைத் தொடங்கி இரயில்களில் பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில் பயணம் மேற்கொண்டார்.
தமது வாழ்வின் கடைசி காலம் வரை பயணம் , உண்ணாவிரதம் , அகிம்சை ஆகியவற்றை தீவிரமாகக்
கடைப்பிடித்தார். காலங்கள் பல கடந்தும் கால எல்லையின்றி மாறுபட்ட கொள்கை உடையோரையும்
நேசிக்க வைத்த காந்தியம் அவசியம் அறிய வேண்டியது. காந்தியின் இறுக்கமான பல பிடிவாத குணங்களை இன்றைய
இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டும்.
2.
பூமிதான இயக்கம்
சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்கம் பூமிதான இயக்கம். பூமிதான இயக்கத்திற்காக பல்லாயிரம் மைல்களுக்கு நடந்தே சென்று தனது
காலடித்தடங்களின் மூலம் இலட்சியத்தை அடைந்தவர் வினோபாவே. இந்த லட்சியம் ஒருவருக்கானதல்ல. இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காகத்
தொடங்கிய இலட்சியப் பயணம் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இருந்துதான் தொடங்கியது.
வானூர்தி , வாகனங்கள் இருந்தும் நடந்து
நடந்து தனது காலடித்தடங்களின் மூலமாக இந்தியாவின் இதயத்தை நிரப்பிய வல்லமை வினோபா பாவே குறித்து இன்றைய இளைய
தலைமுறையினர் இந்த வரலாற்றை அறிவது
அவசியம்.
நிலம் என்னும் சொல் நீண்ட காலப் போரட்டத்தின் நீட்சி என்பதை நீண்ட
பயணத்தின் மூலம் அடைந்து தடம் பதித்த வினோபா பாவே தம் வாழ்நாளில் இரு பயணத்தைத்
திட்டமிட்டார். இந்தியச் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் கல்கத்தா
சென்று புரட்சியில் ஈடுபடலாமா? காசிக்குச் சென்று துறவறம்
மேற்கொள்ளலாமா? என்று இரு திட்டங்களில் இருந்தவரை ஒரு
இலட்சியத்தை நோக்கி நடக்க வைத்த பெருமை மகாத்மா காந்தியை சாரும். மகாத்மா
காந்தியின் உரையைக் கேட்டு தம் வாழ்நாளில் அகிம்சையே சிறந்த இலட்சியம் என்ற
நோக்குடன் பயணத்தைத் தொடங்கி பல , காந்தியம் என்னும்
இலட்சியத்தை காந்தியை விட சரியாகப் பின்பற்றியவராக மகாத்மா காந்தியாலேயே அடையாளம்
காட்டப்பட்டார்.
1947
ல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மகாத்மா காந்தியின்
மரணத்திற்குப் பிறகு அகிம்சை என்னும் இலட்சியத்தைப் போதிக்க
ஊரூர் தோறும் சென்ற வினோபா பாவே அவர்களின் பாதை திடீரென ஒரு களத்தில் , ஒரு கிராமத்தில் , ஒரு மரத்தடியில் தன் பாதையை
மாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். அகிம்சையைப் போதிக்கும் வினோபா பாவே விடம்
ஒரு முதியவர் எழுந்து, ஐயா நாங்கள் அகிம்சையாளர்களே. ஆனால்
இந்தச் சமூகத்தின் நிலையால் நாங்கள் வயிறு என்னும் ஆயுதம் சுமந்து அகிம்சையைப்
பின்பற்றமுடியாமல் தவிக்கிறோம் என்றார். மரத்தடியில் அமர்ந்து மாற்றி
யோசிக்கத் தொடங்கியர் தொடங்கிய இலட்சிய இயக்கம் பூமிதான இயக்கம்.
இந்தியாவின் காந்திய மனிதராக , மகாத்மா காந்தியாலேயே
அடையாளம் காட்டப்பட்ட வினோபா பாவே இன்றைய தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
போச்சம்பள்ளி என்னும் இடத்தில் , முதியவரின் புலம்பலுக்குத்
தீர்வாக நிலம் கொடுக்க யார் தயார் ? என்ற வினாவுடன்
எதிர்நோக்க இராமச்சந்திரன் என்னும் நிலக்கிழார் முதன்முதலாக நூறு ஏக்கர் நிலத்தைத்
தான் தானமாகத் தருவதாக உறுதியளித்தார். இந்த உறுதி வினோபா அவர்களை பல இலட்சம்
மைல்கள் நடக்கத் தூண்டியது.
நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் என்னும் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி 14
ஆண்டுகளில் 75 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல்
தனது பாதம் தேய , இலட்சிய நெருப்பை அணைய விடாமல் நடந்தார்.
அவரின் “காலடித் தடம்” மண்ணையும்
மனிதர்களையும் இணைக்கும் தடமாக மாறி மகத்தான இலட்சியத்தை நோக்கி மாபெரும் மக்கள்
இயக்கமாக மாறத் தொடங்கியது.
தீராத துயர் தரும் சிறு சிறு நோய்கள் வினோபா அவர்களை வாட்டினாலும் தினமும்
இருபது மைல்கள் நடந்து தம் தடங்களினால் தடம் பதிக்க வேண்டும் என்ற உயரிய ஒற்றை
இலட்சியத்துக்காக நடக்கத் தொடங்கியவரின் எளிமை , நோக்கம் ,
தீ்ர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல நடுத்தர விவசாயிகளும் தமது
நிலங்களைத் தரத் தொடங்கினார்கள். நிலங்களைப் பெற்று உரிய முறையில் சட்ட வழியில்
ஏழைகளுக்கு நிலம் வழங்குவதை மிகச் சரியாகச் செய்யத் தொடங்கினார். எளிய மக்களிடம்
எளிய மொழியில் பேச வேண்டும் என்பதற்காகத் தம் பயணத்தில் எட்டு இந்திய மொழிகளைக்
கற்றுத் தேர்ந்தார். இந்தியா என்னும் நாடு வேளாண்
குடிகளின் உழைப்பால் உயர்ந்த நாடு என்பதைக் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்களின்
இல்லத்தில் இலட்சிய விளக்கை ஏற்றினார் வினோபா .
ஐந்தடி உயரம் கொண்ட சட்டை அணியாத வினோபா பாவே எளிய மக்களின்
இலட்சியங்களுக்கு விடிவெள்ளியாக மாறத் தொடங்கினார். இந்தியாவின் உயரிய விருதுகளைப்
பெற்று மிகப்பெரிய இலட்சியத்தின் மீட்சிப்பாதையை உருவாக்கிய வினோபா பாவே அவர்களைப்
போற்றி டைம் நாளிதழ் தமது அட்டைப்படத்தில் இவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து
மரியாதை செலுத்தியது.
இந்தியா முழுவதும் எளிய குக்கிராமங்கள் நோக்கி நடந்து நடந்து 43 இலட்சம் ஏக்கர் நிலங்களை நிலக்கிழார்களிடம் பெற்று நிலமில்லாத
ஏழைகளுக்குப் பிரித்துத் தந்தார் வினோபா பாவே. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி
ரூபாய்க்கும் மேல் மதிப்புக் கொண்ட நிலங்களைப் பெற்று ஏழைகளுக்குத் தந்த வினோபா
பாவே நாள் ஒன்றுக்கு வெறும் இரண்டு அணாக்கள் மட்டுமே தம் செலவான உணவுக்குப்
பயன்படுத்தினார் என்பதை இன்றைய வளரிளம் தலைமுறையினர் அறிய வேண்டும்.
பாதைகளே இல்லாத இடத்திலும் கூட வினோபா அவர்களின் பாதம் பட்டு பூமிதான
இயக்கம் மக்கள் இயக்கமாக வளரத்தொடங்கி பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு
வழிவகுத்த இந்த இயக்கத்தின் இலட்சியம் இந்தியாவின் வடக்கு, தெற்கு,
கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும்
நம்பிக்கையின் உதயத்தை மலரச் செய்தது.
மிகப்பெரிய பயணம் முதல் அடியில்தான் தொடங்கும் என்பது போல மிகப்பெரிய
இயக்கத்தின் இலட்சியம் வினோபா அவர்களின் பல இலட்சக்கணக்கான காலடித்தடங்களால்
பூர்த்தி செய்யப்பட்டது.
இலட்சியத்திற்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது என்னும் இலட்சியத்துடன்
பயணித்த வினோபா பாவே அவர்களின் காலடித்தடம் நாம் பணிந்து வணங்க வேண்டிய , கடைப்பிடிக்க வேண்டிய , காக்க வேண்டிய காலடித் தடம்
என்பதை உணர்வோம்.
3.
சிப்கோ இயக்கம்
காடுகளே இந்தியாவின் பொருளாதாரம் என்று
இந்திய அரசுக்குப் பாடம் எடுத்தவர்கள் மலைவாழ் மக்கள். தொழிற்புரட்சியே இந்தியாவை மேம்படுத்தும்
என்ற கோணத்தில் இமயமலையின் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அற்று எவ்வளவு மரங்களை வேண்டுமானாலும்
வெட்டிக்கொள்ளலாம் என்ற தீவிரத்தை எதிர்த்து சுந்தர்லால் பகுகுணா என்ற மாமனிதரின் போராட்டம்
சிப்கோ இயக்கமாக மாறியது.1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டு
மரங்களை வெட்டக்கூடாது என்னும் நோக்கில் பல
பகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்த இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார்.
மகாத்மா காந்தியடிகள் மார்ச் மாதம் தண்டி யாத்திரையைத் தொடங்கியதன் நினைவாக
மார்ச் மாதம் சிப்கோ இயக்கப் பயணத்தைத் தொடர்ந்தார். கவுரா தேவி என்னும் பெண்ணின் தலைமையில்
பல பெண்கள் மரங்களைப் பற்றிக் கொண்டு ‘ இந்தக் காடும் இந்த மரங்களும் எங்கள் தாயின்
வீடு’ என்று முழங்கினார்கள். மரம் வெட்ட வந்தவர்கள் தடுமாறினார்கள். 1974 மற்றும் 1975
ஆண்டுகளில் இமயமலை மத்தியப்பகுதிகள் முழுவதும் சுந்தர்லால் பகுகுணா தலைமையில் 5000
மைல்களுக்கு மேல் பயணம் மேற்கொண்டனர். சிப்கோ
இயக்கம் பற்றி ரோஸ் என்பவர் எழுதிய The People Who Hugged the Trees என்ற நூல் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். சிப்கோ இயக்கத்தின்
பெரும்பாலான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
சுந்தர்லால் பகுகுணாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெரும் படை செயல்படத்தொடங்கியது.
சிப்கோ இயக்கம் வெறும் போராட்ட இயக்கமாக இல்லாமல் மலைவாழ் மக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கும்
பாடுபடத்தொடங்கியது. காட்டு வளங்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுத்தந்தது.
டெகரி பகுதியில் சுரங்கம் தோண்டுவதை எதிர்த்து சிப்கோ இயக்கம் போராடி அந்தத் திட்டத்தை
தடை செய்யும் வரை போராடியது.
18 ஆம் நூற்றாண்டிலேயே
சிப்கோ இயக்கம் போலவே பெண்கள் மரங்களைக் கட்டி அணைத்து வெட்டக்கூடாது என்று இராஜஸ்தான்
மாநிலத்தில் போராட்டம் நடத்திய நிகழ்வும் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட வேண்டும்.
சுதந்திரம்
பெற்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு அகிம்சை போராட்டம் இந்தியாவில் வெற்றி பெற சுந்தர்லால்
பகுகுணா என்ற மனிதரின் பயணம் உதவியது. இந்தியாவின் மூன்று இயக்கங்கள் வரலாற்றால் வாசிக்க
வேண்டிய, அறிய வேண்டிய முக்கியமானவை ஆகும்.
Tuesday, 20 February 2024
அறிய வேண்டிய நூறு வரலாறு - நெப்போலியன் போனபர்ட்
அறிய வேண்டிய நூறு வரலாறு- பொ.சங்கர்
வறுமையாலும் கலகத்தாலும் சிதறுண்ட பிரான்ஸ் நாட்டைத் தன் ஆட்சித் திறமையால் மீட்சிமை பெற வைத்தவரின் வரலாறு அறிய வேண்டுமா? மொத்த ஐரோப்ப உலகத்தையும் தன் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டு அரசாட்சி செலுத்தியவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா? இழந்த நாட்டை வீழ்ந்து போது வீறு கொண்டு போராடி மீட்டவரின் வரலாறு அறியப்பட வேண்டுமா? இப்படி பல வரலாறுகளுக்குச் சொந்தமான மாவீரன் யார்? நெப்போலியன் போனபர்ட் என்னும் பெயரே வரலாறாக, வரலாறே பெயராக மாற்றிய மாவீரனின் வரலாறு அறிவோம் வாருங்கள்.
பிரான்ஸ் நாட்டின் கார்சிகா தீவில் 1769 ல் பிறந்த நெப்போலியன் சிறுவயதில் சாதாரண மாந்தருக்கு மகனாகப் பிறந்து மன்னனாக மாறிய இவரின் வாழ்வு சரித்திரத்தின் சாதனைச் சுவடுகளில் காலம் கடந்தும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் மகனாகப் பிறந்து பார் புகழும் மன்னனாக அவதாரம் எடுத்த நெப்போலியன் , தாம் கடந்து வந்த பாதைகளைப் பார் புகழும் வரலாறாக மாற்றினார்.
நெப்போலியன், பிரெஞ்ச் இராணுவப் படையின் ஆர்டிலரி பிரிவில் சேர்ந்து டுலால் போரில் சிறப்பாகப் போரிட்டமைக்காக, பிரெஞ்ச் படையின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். படைத்தளபதியாக முன்னின்று ஆஸ்திரிய படைகளை வென்ற பிறகு நெப்போலியனின் புகழ் நாடு கடந்து பரவியது. படைத்தளபதியாக பல நாடுகளை வென்றவர் ஒரு கட்டத்தில் தன் நாட்டின் அரசனாக 1804 ல் தன்னைத் தானே முடிசூட்டிக் கொண்டார்.
1804 முதல் 1815 வரை பல நாடுகளை வென்றெடுத்து பிரெஞ்ச் நாட்டை பல வழிகளில் மேம்படுத்தினார். வரலாற்றில் ‘நெப்போலியன் போர்கள்’ என்றழைக்கப்படும் இந்தப் போர்களினால் பலவற்றை இழந்து , பலவற்றைப் பெற்று தம் தேசத்தைக் கட்டமைத்தார். புரட்சி, கலகம் , வறுமையால் அமைதியை இழந்திருந்த பிரெஞ்ச் நாடு நெப்போலியன் மன்னராக ஆனபிறகுதான் அமைதியான வாழ்வை வாழத்தலைப்பட்டனர். பிரெஞ்ச் நாட்டின் உயர் வகுப்பு மக்களின் அதிகாரத் திமிரை அடக்கி , பிரெஞ்ச் நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்று சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வாழ்வை இழந்து , உரிமைகளை இழந்திருந்த தேசத்திற்கு நெப்போலியன் விடிவெள்ளியாக மாறினார். பிரெஞ்ச் நாட்டின் அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் CODE OF NEPOLEAN என்று அழைக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் BANQUE DE FRANCE வங்கியை நிறுவி நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவினார். ஜெர்மனி, இத்தாலி , போலந்து , டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளைத் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
அமைதி இல்லாத , உரிமை இல்லாத , வறுமை நீடித்திருந்த ஒரு தேசத்தின் மக்களுக்கு உரிமைகள் பலவற்றை அளித்து வறுமை இல்லாத நாடாக மாற்றிய நெப்போலியன் வரலாற்றில் அவசியம் படிக்கப்படவேண்டிய பாடம். இவ்வளவு புகழுடன் விளங்கியவரின் வீழ்ச்சியையும் நாம் அறிய வேண்டும்.
ஐரோப்பா முழுமையையும் போரில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கடைசி வரை இங்கிலாந்தை நெப்போலியனால் வெல்ல முடியவில்லை. அதனால் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாடும் இங்கிலாந்துடன் வணிகத்தொடர்புகள் கொள்ள கூடாது என்று தடை விதித்தார்.
நெப்போலியனின் தடையை மீறி ரஷ்ய நாடு இங்கிலாந்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டது. இதனால் ரஷ்யா மீது போர்ப்பிரகடனம் செய்து ஐந்தரை இலட்சம் படை வீரர்களுடன் ரஷ்யாவை முற்றுகையிட்டார். ரஷ்ய படைகள் தம்மை எதிர்க்கும் , ரஷ்ய மன்னன் எதிர்கொண்டு தம்மோடு போர் புரிவான் தம் படையால் ரஷ்யாவை வீழ்த்தலாம் என்று எண்ணியவரை மாஸ்கோ என்னும் மனிதர்கள் இல்லாத நகரம் வரவேற்றது. மன்னன் இல்லாத , மனிதர்கள் இல்லாத ரஷ்ய நாட்டில் கடுமையான பனியும் கடுங்குளிரும் பிரெஞ்ச் வீரர்களை வாட்டியது. எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து பிரெஞ்ச் நாட்டைக் கைப்பற்றிய நெப்போலியன் ரஷ்ய நாடு குறித்துத் திட்டமிடாமல் நடத்திய போரால் கிட்டத்தட்ட பல இலட்சம் வீரர்களை இழந்தான். 30 ஆயிரம் படை வீரர்களுடன் நாடு திரும்பிய நெப்போலியனை ரஷ்யா ,இங்கிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரிய நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்கியது. பல இலட்சம் படை வீரர்களை இழந்த நெப்போலியன் தம் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான்.
நான்கு நாடுகளும் கூட்டாகத் தாக்கியதில் பிரெஞ்ச் வீழ்ந்தது. எல்பா தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி மீண்டும் பிரெஞ்ச் நாட்டின் சக்ரவர்த்தியானார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்தை பெல்ஜியத்தில் வாட்டர்லூ என்னுமிடத்தில் எதிர்கொண்டார். சூரியன் மறையாத , தோல்வியே இல்லாத இங்கிலாந்திடம் நெப்போலியன் மீண்டும் தோற்றார். வரலாற்றில் வாட்டர்லூ போர் நீங்கா இடம் வகித்தது. நெப்போலியனும் நீங்கா இடம்பிடித்தார். பல சிறப்புகளை , பல வரலாறுகளை உருவாக்கிய நெப்போலியனை ஹெலினா தீவில் ஆறு வருடங்களுக்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைத்து வைத்தனர். மங்காத புகழுக்குச் சொந்தக்காரனாக விளங்கிய நெப்போலியன் தன் வாழ்வில் வீழ்ச்சி அடைந்தாலும் வரலாற்றில் வீழ்ச்சி அடையவில்லை. அறிய வேண்டிய வரலாற்றில் நெப்போலியன் வரலாறு தனித்துவமானது.