Saturday, 28 March 2020

தந்திர வாக்கியம்

வரலாற்றில் ஆதாரங்கள் கிடைக்காதபோது பலவிதமான ஊகங்களைக்கொண்டு அவ்விடைவெளிகளை நிரப்புவது உண்டு. சரியென்றோ தவறென்றோ நிரூபணமாகதவரை எல்லா ஊகங்களும் கவனிக்கப்பட வேண்டியவைதான். வரலாற்றுப் புனைவு எழுத வருபவர்களுக்கு இந்த இடைவெளிகள்தான் கொண்டாட்டம். வாசகர்களுக்கும்தான். தந்திர வாக்கியமும் ஒரு வரலாற்றுப் புனைவு நூல்.

புத்தரின் மந்திர வாக்கியம் என்பது பற்றிக் கேள்விப்பட்டு அதைக் கண்டுபிடிக்க சீனாவிலிருந்து ஜாங் என்பவர் – சுமார் கிபி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் – இந்தியாவுக்கு வருகிறார். பயணம் நெடுக அவருடைய மடத்துக்கு அவர் பார்த்தவற்றை ஐம்பது கடிதங்களில் எழுதுகிறார். ஒருவழியாகப் 19ம் நூற்றாண்டில் அக்கடிதங்கள் ஆங்கில மொழியாக்கம் பெறுகின்றன. அந்த பழைய நூலின் ஒரு பிரதியைத்தான் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நிகந்தன் யதேச்சையாகப் பார்த்துவிடுகிறான்.

அதில் களப்பிரர்கள்தான் வரலாற்றின் முதல் வெற்றிகரமான புரட்சியாளர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்களைச் சிறைவைத்துவிட்டு ஜாங் தென்னிந்தியா வந்தபோது அங்கு ஆட்சிபுரிந்துகொண்டிருந்தவன் நிகந்தன் என்ற அரசன் என்றும் அதில் இருக்கிறது. இப்படித்தான் வரலாறும் நிகழ்காலமும் ஒன்றோடு ஒன்று உறவாடி நாவல் விறுவிறுப்பாக நகர்கிறது. நிகழ்கால சிங்கப்பூர் நிகந்தன் ஒரு மென்பொருள் வல்லுநன். தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரிபவன்.

ஒரு பக்கம் ஐடி ஊழியர்களின் வாழ்க்கைப் பயணம். இன்னொரு பக்கம் மந்திர வாக்கியத்தைத் தேடிப்போன ஜாங்கின் பயணம். இதுதான் நாவல் அமைந்துள்ள களம். ஆசிரியருடைய கற்பனை உரையாடல்கள் பல இடங்களில் பொருத்தமாக, ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. பல தத்துவக் கருத்துக்களை வாசகர் புரிதலுக்காக எளிமையாகப் பேசிவிடும் முனைப்பும் நாவலில் இருக்கிறது. புத்தர் சொன்னது தந்திர வாக்கியம்தான், மந்திர வாக்கியம் அல்ல என்று வரும் இடமும் அது தொடர்பான தத்துவ விளக்கங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. ஓஷோவின் தாக்கம் இவ்விளக்கங்களில் கணிசமாக இருக்கிறது.

‘துண்டாடப்பட்ட விவரணை’ உத்தியில் புதினம் அமைந்துள்ளது என்பதெல்லாம் எந்த தாக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. வாசிக்க எளிதாக இருந்தது. புதுமையாக ஏதும் தென்படவில்லை. சிங்கப்பூர் வாசகர்கள் நாவலின் பல பகுதிகளைக் கற்பனையில் தெளிவாகக் காணவியலும். சிங்கையின் அனேக இடங்களுக்கு நிகந்தனும் அவனது காதலியும் போகிறார்கள். கொஞ்சம்போல மலேசிய கெண்டிங்கும் உண்டு.

வரலாறு, தத்துவம் இவற்றில் ஓரளவுக்கு அறிமுகமும் ஆர்வமும் உள்ள வாசகர்களுக்கு இந்த நாவல் பிடிக்கலாம்.

ஆசிரியர் : எம்.ஜி.சுரேஷ்

No comments: