Saturday, 28 March 2020

இறுதி யாத்திரை நூல்

இறுதி யாத்திரை   நூல்

எம்.டி.வாசுதேவன் நாயர்

இந்நூலின் சொற்கள் இதன் கடந்த காலத்தை நினைவுபடுத்தி ஒரு பழம்பெரும் நதியைப் போல நகர்ந்தாலும் கரை நம்மை இன்றைக்கு போல உயிர்ப்பாக்குகிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்பி விட முடியும் எனத் தெரியவில்லை. இந்நாவலில் ஜீவன் மட்டுமல்ல உடலும் அவர் சொந்த வாழ்வின் வழியே வந்தவை என்பதால் இதன் மேற்பூச்சற்ற எழுத்து நம் ஜீவனைப் பற்றி ஒரு பசுங்கொடியைப் போல மேலெழுகிறது.

காலம்தான் இந்நாவலின் நாயகன். எழுதி முடிக்கையில் அது ஒரு பனிக்கட்டி மாதிரி உருகிக் கரைந்து காணாமல் போகிறது. சொந்த தகப்பனால் புறக்கணிக்கப்படும்  மகனின் துயரம் தோய்ந்த மனநிலை பத்து பக்கங்களில் படிப்பவனை ஊசி முனை கொண்டு துளைத்து எடுக்கிறது. இடை வெளிகளினூடேதான் என் வாசிப்பு அத்தியாயங்களைக் கடந்தது. இந்நாவிலின் ஒவ்வொரு அத்தியாயமும் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து மீண்டும் ஒழுங்குடனும் ஒழுங்கற்றும் காலத்தைப் போல அடுக்கப்படுகிறது. நிகழ்காலமும் கடந்த நாட்களும் சீட்டுக்கட்டை விட லாவகமாக நம் முன் அடுக்கி காட்டப்படும் உத்தி, எம்.டி.வி. என்ற மகத்தான படைப்பாளியின் எழுத்தின் உயரத்தை ஒரு தமிழ் வாசகனுக்கு மேலெழுந்து காண்பிக்கிறது.

கடந்த வருடத்தின் வெயில் காலத்தில் ஆரம்பித்து இக்குளிர்காலம் வரை இதை நான் வாசித்தேன். எம்.டி.வி. என்ற எழுத்தாளனின் பெயரும் இக்கதைகளில் விரியும் மனிதர்களின் பெயர்களுமே இதை வேறொரு மொழியில் எழுதப்பட்ட நாவல் என நினைவுப்படுத்தியது.

கே.வி.ஷைலஜாவின் இயல்பான மொழிபெயர்ப்பு மூலத்திற்கு அதிகபட்ச நியாயம் செய்திருக்கிறது. படைப்பாளிக்கு மட்டுமே இக்கால விளையாட்டு சொந்தமா என்ன? வாசகனுக்கும் கூட.......
அன்புடன் சங்கர்....

No comments: