Monday, 6 April 2020

ஆசிரியராற்றுப்படை _ கவிதை

ஆசிரியராற்றுப்படை

வைகாசி மாத புலர் காலைப் பொழுதில் ஆதீனத்
தென்னந்தோப்பு பம்பு செட்டில்  குளியல் முடித்து சாந்தலிங்கனார் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பயிலத் தொடங்கினோம்.

நால்வரையும் அறியாது நாலாயிர திவ்ய பிரபந்தமும் தெரியாது நாங்கள் வீற்றிருக்க நாவுக்கரசராய் நீர் நுழைய
நிமிர்ந்து அமர்ந்தோம்.

வறுமை எங்கள் வயிற்றைப் பதம் பார்க்க
பாணர்களாய் நாங்கள்
கல்விக்கு ஊற்றெடுக்க தமிழை வாரி வாரி வழங்கிய வாகீசரே!

கல் தூணைப் பூட்டி கடலில் பாய்ச்சியது போல ,
கற்களையும் சிற்பமாக்கிய சிவநேசரே!

பருவம் தீண்டிய போது
பக்குவமாய் ஆற்றுப்படுத்திப் பதிகப் பலனை பரிசளித்த அப்பரே!

பரிபாடலை நொய்யல் ஆற்றின் நதியில் அமர வைத்து உணர வைத்த ஆற்றின்ப வெள்ளமே!

திருநாவுக்கரசரே!
உமக்குக் குரு காணிக்கை அளிக்காமல் உமது நடையை கொள்ளையடித்துக் கொண்ட சீர் மரபில் நான் மட்டும்
நேர் நேர் தேமா!

வினைத் தொகையை முக்காலமும் உணர்த்தி வரும் பண்புப் பெயரே!

வேற்றுமை எட்டு வகை மட்டுமல்ல (உலகில்) என்பதைக் கற்றுக்கொடுத்த தை மழையே!

உங்கள் வாழ்வில் மட்டும் இயல்புப் புணர்ச்சியாய் இருங்கள் என்றும் , உலக வாழ்க்கையில் விகாரப் புணர்ச்சியாய் தோன்றி, திரிந்து அடுத்தவரை கெடுக்காமல் வாழ வழி செய்த திருநாவுப்படையில் என்னையும் ஓர் அணியாய் அழகு படுத்திய ஆவணமே!

அலகு மட்டுமல்ல
அழகையும் கற்றுணர்ந்தால் அம்மை அப்பனுக்கு சீர் பிரிக்க வேண்டியது இல்லை என்பதை "நாள் மலர் காசு பிறப்பால்" உணர வைத்த உவமைத் தொகையே!

ஆசிரியராய் ஞானத் தகப்பனாய் எங்களை (பாணர்களை) ஆற்றுப் படுத்தி வரும் பேரூராதீனத் தமிழ்க் கல்லூரியின் திருநாவுக்கரசே !
உம்மை வணங்குகிறோம்.

பொ‌.சங்கர்

Wednesday, 1 April 2020

கீழடி

கீழடி

உச்சம் கண்ட தமிழனின் வரலாற்றை இனியும் மிச்சம் வைக்கக் கூடாது என்று வட நாட்டுக் கூட்டம் திட்டம் போடுது!

நாகரீகத்தின் தொட்டிலில் கட்டில் போட்டு அமர்ந்து, வரலாற்றைக் கடுகளவாய் ஒரு கூட்டம்
குறைக்கின்றது!

கீழடி அகழ்வாய்வை மேலே அடி வைக்காமல் வெளியிடாமல் வேகம் கூட்டி வாசம் காட்டி வஞ்சனைகள் தொட்டு வருடுகிறது இன்னொரு கூட்டம்!

முப்போகம் விளைய வைத்த வரலாற்றை வெளியிடாமல்
முச்சந்தியில் நிற்க வைத்து தமிழனுக்கு இலவச அரிசி தருகின்றது மற்றொரு கூட்டம்!!

குழிக்குள் குழி வெட்டி
கூட்டமாய் கூடி நின்று கற்பனைகள் பல செய்து எட்டிப்பார்த்த கீழடியை , இது மண் குழி தான் என்று எட்டப்பன் வேலை செய்த நாகசாமிக்கு செம்மொழி பதவி!

மூடு பல்லக்கில் கீழடி பொருட்களை எருமை தேசம் கொண்டு சென்று ஊனம் ஆக்கிய வீணர்களுக்கு உயர் பதவி!

ஹரப்பா அகழ்வாய்வை உரைப்பாய்  சொன்ன ஊது குழல்கள் கீழடியை கல்லடியில் போட்டு வைத்திருக்கும் கயமைத்தனம் என்று வெளியாகும்?
ஆதவனைக் கைகளில் மறைக்க முடியாது!
தமிழர்களின் வரலாற்றைக் கீழடியில் முடக்க முடியாது!

வஞ்சனைகளை வெஞ்சினம் வெல்லும்!

பொ.சங்கர்

Monday, 30 March 2020

பேரன்பு கவிதை

‌பேரன்பு

திரை இசைக்குத் தீட்டுக் கழித்து
தமிழிசைக்குத் தாலாட்டுப் பாடுவதும்
பேரன்பே!

பிச்சைக்காரன் என்றாலும்
உன்னை வணங்கினால்
நீயும் அவனை வணங்கு…
அது பேரன்பு!
மனசிருந்தால்
காசு போடு
இல்லையென்றால்
ஒரு புன்னகை சிந்து…
பூரித்துப் போவான்!
அது பேரன்பு !
ஒவ்வொரு பூக்களும்
வாசத்திற்கு உரியவை தான்
ஒவ்வொரு மனிதனும்
நேசத்திற்கு உரியவன் தான்!
பேரன்பு கொள்!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நீயும் வாடாதே...
அதற்கு நீரூற்று அதுதான் பேரன்பு!
கொலைவாளினை எடு மிகு கொடியோர் செயல் அறவே.. தாசனின் வரிகளும் பேரன்பே!
நீருக்குப் புட்டி வைத்தவனையும்
காற்றுக்குள் மாசு வைத்தவனையும் களையெடு..அது
உலகுக்கு நாம் செய்யும் பேரன்பு!
மண்ணை மலடாக்கும் மானிடர்களை மண்ணே
மன்னிக்கும் செயல்தான் பேரன்பு!!
வரிப்புலிகளையும்
பூனைகளையும் ஒன்றாக ஓட வைப்பவனை
தண்டிப்பதும் பேரன்பே!

       
பொ.சங்கர்.

Saturday, 28 March 2020

தந்திர வாக்கியம்

வரலாற்றில் ஆதாரங்கள் கிடைக்காதபோது பலவிதமான ஊகங்களைக்கொண்டு அவ்விடைவெளிகளை நிரப்புவது உண்டு. சரியென்றோ தவறென்றோ நிரூபணமாகதவரை எல்லா ஊகங்களும் கவனிக்கப்பட வேண்டியவைதான். வரலாற்றுப் புனைவு எழுத வருபவர்களுக்கு இந்த இடைவெளிகள்தான் கொண்டாட்டம். வாசகர்களுக்கும்தான். தந்திர வாக்கியமும் ஒரு வரலாற்றுப் புனைவு நூல்.

புத்தரின் மந்திர வாக்கியம் என்பது பற்றிக் கேள்விப்பட்டு அதைக் கண்டுபிடிக்க சீனாவிலிருந்து ஜாங் என்பவர் – சுமார் கிபி மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் – இந்தியாவுக்கு வருகிறார். பயணம் நெடுக அவருடைய மடத்துக்கு அவர் பார்த்தவற்றை ஐம்பது கடிதங்களில் எழுதுகிறார். ஒருவழியாகப் 19ம் நூற்றாண்டில் அக்கடிதங்கள் ஆங்கில மொழியாக்கம் பெறுகின்றன. அந்த பழைய நூலின் ஒரு பிரதியைத்தான் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நிகந்தன் யதேச்சையாகப் பார்த்துவிடுகிறான்.

அதில் களப்பிரர்கள்தான் வரலாற்றின் முதல் வெற்றிகரமான புரட்சியாளர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டியர்களைச் சிறைவைத்துவிட்டு ஜாங் தென்னிந்தியா வந்தபோது அங்கு ஆட்சிபுரிந்துகொண்டிருந்தவன் நிகந்தன் என்ற அரசன் என்றும் அதில் இருக்கிறது. இப்படித்தான் வரலாறும் நிகழ்காலமும் ஒன்றோடு ஒன்று உறவாடி நாவல் விறுவிறுப்பாக நகர்கிறது. நிகழ்கால சிங்கப்பூர் நிகந்தன் ஒரு மென்பொருள் வல்லுநன். தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரிபவன்.

ஒரு பக்கம் ஐடி ஊழியர்களின் வாழ்க்கைப் பயணம். இன்னொரு பக்கம் மந்திர வாக்கியத்தைத் தேடிப்போன ஜாங்கின் பயணம். இதுதான் நாவல் அமைந்துள்ள களம். ஆசிரியருடைய கற்பனை உரையாடல்கள் பல இடங்களில் பொருத்தமாக, ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. பல தத்துவக் கருத்துக்களை வாசகர் புரிதலுக்காக எளிமையாகப் பேசிவிடும் முனைப்பும் நாவலில் இருக்கிறது. புத்தர் சொன்னது தந்திர வாக்கியம்தான், மந்திர வாக்கியம் அல்ல என்று வரும் இடமும் அது தொடர்பான தத்துவ விளக்கங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. ஓஷோவின் தாக்கம் இவ்விளக்கங்களில் கணிசமாக இருக்கிறது.

‘துண்டாடப்பட்ட விவரணை’ உத்தியில் புதினம் அமைந்துள்ளது என்பதெல்லாம் எந்த தாக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. வாசிக்க எளிதாக இருந்தது. புதுமையாக ஏதும் தென்படவில்லை. சிங்கப்பூர் வாசகர்கள் நாவலின் பல பகுதிகளைக் கற்பனையில் தெளிவாகக் காணவியலும். சிங்கையின் அனேக இடங்களுக்கு நிகந்தனும் அவனது காதலியும் போகிறார்கள். கொஞ்சம்போல மலேசிய கெண்டிங்கும் உண்டு.

வரலாறு, தத்துவம் இவற்றில் ஓரளவுக்கு அறிமுகமும் ஆர்வமும் உள்ள வாசகர்களுக்கு இந்த நாவல் பிடிக்கலாம்.

ஆசிரியர் : எம்.ஜி.சுரேஷ்

மிளிர்கல்

                மிளிர் கல்- நூல் மதிப்பாய்வு 

கொங்கு நாட்டின் பகுதிகளில்  குறிப்பாக காங்கேயம், கரூர்  பகுதிகள்
பிரஸ்யஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்ற
ரத்தினக்கற்கள் விளையும் பூமி. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று
அவ்விளைநிலங்களை ஆக்கிரமித்து கற்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கற்களை
ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறார்கள். இதற்காகப் பழங்கால வணிகப்பாதைகள் பற்றி
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீகுமார் என்ற பேராசிரியரை அவருக்கே தெரியாமல் இவ்வேலையில் ஈடுபடுத்துக்கிறது அந்நிறுவனம். வடமாநிலத்தில் வளர்ந்த தமிழ்ப்பெண் முல்லை. தன் தந்தையின் மூலம் சங்ககால இலக்கியங்களை கற்றவள்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி மேல் கொண்ட மிகுந்த ஆர்வம்
காரணமாக சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த இருப்பிடங்களை ஆவணப்படமாக்க
வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரி இயக்கக் கொள்கையின் பிடிப்பில் அலையும் நவீன்
என்ற நண்பனுடன் பூம்புகார் வருகிறாள். அங்குப் பேராசிரியருடன் ஒன்று
சேர்ந்து சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த சாலையில் பயணம் செய்து
சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பூம்புகார் காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டத்தில் நிறைவு செய்வதுதான் கதை. அதிக
விறுவிறுப்புடன், சுவாரஸ்யம் குறையாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன்
பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் முருகவேள். ஏற்கனவே எரியும் பனிக்காடு நாவலை
தமிழ்ப்படுத்தியவர். மிளிர்கலில் சிலப்பதிகாரத்தைஎளிமைப்படுத்தியுள்ளார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,
   ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம்
உணர்த்தும் மூன்று அறநெறிகளாகும். இதன் அர்த்தத்தை மாணவன் ஆசிரியரிடம்
வினவுவதுப் போல் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வினவ வைத்து
இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தம் தெரிவிப்பதாக நாவலில் பல
காட்சிகள் வரும். நாவலின் பலமான பகுதிகள் அவை. குறிப்பாக கோவலனும்
கண்ணகியும் சோழ நாட்டை விட்டு சென்றதும் மிகப்பெரிய வணிக குடும்பத்தில்
பிறந்த அவர்களைத் தேடி யாரும் வராததும், கண்ணகியை ஏன் சேர மன்னன்
தெய்வமாக்கினான் ? உண்மையில் சிலப்பதிகாரம் நம் நிலத்தில் நடந்ததா ? என்ற
வினாக்கள் இக்காப்பியத்தை படிக்கும் எல்லாருக்கும் ஏற்படும் ஐயங்கள்.
இதற்குப்பதில் நாவலில் இருக்கிறது. பதில் வெறும் ஒற்றை வார்த்தையாக
இல்லாமல் தனிக்கவனத்துடன் ஆராயப்பட்ட பதில்களாக இருக்கும்.

பூம்புகாரின் ஏழுநிலை மாடங்களையும் கரைபுரண்டு ஓடும் காவேரியையும்
எதிர்ப்பார்த்து வந்த முல்லைக்கு, தற்போது இருக்கும் பூம்புகாரின்
தற்கால நிலையைக் கண்டு கலங்கும் நேரத்தில் ' உண்மையான வரலாறு
வேண்டுமென்றால் மக்களிடம் கேள் ' என்று பேராசிரியரின் பதில் கள ஆய்வு
எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதாகும். பேராசிரியருக்கும்
முல்லைக்கும் உண்டான  உரையாடல்கள் நாவலின் உவப்பனதாகும். ஏன் சார்,
எதுக்கு சார், இப்படி இருந்திருக்கலாமோ என்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் முல்லை சீக்கிரம் நம் மனதில் இடம்பெற்றுவிடுகிறாள்.

கோவலன் என்ற பெயர் கோவலர்கள் என்ற இனத்தின் பெயராக இருக்கலாம். கொங்கு
நாட்டில் வாழ்ந்த ஆடு மேய்க்கும்
பழங்குடி இனத்தின் பெயர் கோவலர்கள் என்றும், அவர்கள்
சேரப்புமலைப்பகுதியில் வாழ்ந்ததாகவும் அந்தமலைதான் இப்போது காங்கேயம்
அருகில் உள்ள சிவன்மலை என்றும், பதிற்றுப்பத்தில் கூட கோவலர்கள் என்ற
சொல் இடம்பெற்றிருக்கிறதாகவும், கொற்றவை கோவிலில் கண்ணகியைப் பார்த்து
கொங்கர் செல்வி என்று எய்னர்களால் பாடப்படுகிறாள். கோவலன் கண்ணகி
மூதாதையர் ரத்தின வியாபாரம் காரணமாக சோழ நாட்டுக்கு
இடம்பெயர்ந்திருக்கலாம், உண்மையில் அவர்கள் கொங்கு நாட்டுப்பகுதியை
சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியிலும் முருகவேள் ஆராய்ச்சி
நடத்தியுள்ளார்.

அவர்கள் பயணம்தான் எவ்வளவு சிறப்பானது. "வடகரை காவேரி, உறையூர்,
நெடுங்குளம் சிறுமலை, மேலூர், மாங்குளம் சமணக்குன்றுகள், அழகர் மலை,
மதுரை மூதூர், கோவலன் பொட்டல், கம்பம் கண்ணகி கோவில், திருச்சுர்,
கொடுங்களூர் பகவதி கோவில்" என நாவல் பல பிரதேசங்களின் பகுதிகளைத் தொட்டு
இட்டுச் செல்கிறது.

சமண இரவுத்தங்கலில் ஏற்படும் உரையாடல்களாக இருக்கட்டும் , மத வரலாறு,
இனவரையியல் பற்றிய பேச்சுகளாகட்டும், வணிக வரலாறு, இடதுசாரிக்கொள்கையின்
கருத்துக்கள், நிகழ்கால அரசியல் விமர்சனம், ராஜஸ்தான் கல்பட்டை
தீட்டுபவர்கள் பற்றி, உயிர்ப்பலிகள் பற்றி, அரவான் வழிபாடு,அடிமை
வரலாறுகள், ஆரிய திராவிடத் தோற்றம், சமணக் கழுவேற்றம், கோசோம்பி
கருத்துக்கள், தாய்த்தெய்வ வழிப்பாட்டு நம்பிக்கைகள், கொடுமணல் நாகரிகம்,
சங்ககால இலக்கியங்கள்
ர், கொடுங்களூர் கண்ணகி கோவில் வெளிச்சப்பாடுகள் என ஒட்டுமொத்தத் தர்க்க
கருத்துக்களின் வழியே நாவல் புதுப்புது பரிமாணம் எடுத்து மிளிர்கல்லாக ஒளிர்கிறது.
 எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது

படைப்பிலக்கியத்தின் வெற்றி எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்றால் வாசிப்பின் முடிவில் ஏற்படும் வெறுமையா? அல்லது அதன்பின்
உருவாகும் அக எழுச்சியா என்று சொல்லிவிட முடியாது. எந்தப்புள்ளியில்
படைப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியிட்டுக் கூறமுடியாது.
படைப்பின் மீறல்களையும் தர்க்க ரீதியாக ஆராயவும், கதையின்
இருப்பிடங்களையும் கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் வாசகனை தேடத்தொடங்க
வைக்க வேண்டும். அந்த வகையில் இளங்கோவடிகள் வழி முருகவேள் வெற்றி பெற்றுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை ஒர் வாசகன் மனநிலையில் ஆராய்ந்து, கதை
நிகழ்ந்த தற்கால இருப்பிடங்களை தேடி அலைந்து, கண்ணகி ஏன் தெய்வமானாள் ?
என்ற ரீதியிலும் சிலப்பதிகாரம் என்ற மிளிர்கல் படைப்பைச்  சிறந்த படைப்பாகத்
தந்துள்ளார் எழுத்தாளர் முருகவேள்...