கட்சிக் கம்பங்கள் இல்லா ஊர்
தமிழக அரசியல் களம் தேர்தல் வந்தால் பரபரப்பாய் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் , சட்டமன்றத் தேர்தல் , ஊராட்சி மன்றத் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்கள் நடக்கும் போது ஊரில் சிறிது பரபரப்பு இருக்கும்.
அன்றைய நாட்களில் கோயில் பொது மேடையில் ஒரு தினத்தந்தி நாளிதழ் பொதுவாய் வரும். எல்லோரும் படிப்பார்கள். தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் , தமிழகத்தில் என் காலடி படாத கிராமமே இல்லை என்று முழங்கியிருப்பது செய்தியாக வந்திருக்கும். என் நினைவில் அந்த முக்கிய அரசியல்வாதிகள் யாரும் எங்கள் நல்லியம்பாளையம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வந்ததாய் நினைவில்லை.
வேட்பாளர் சார்பாய் ரேடியோ கட்டிய வண்டில நோட்டிஸ் போட்டுக்கொண்டு வாகனம் வரும். யாரேனும் ஒரு பேச்சாளர் வண்டிக்குள்ள உட்கார்ந்து கொண்டு ,உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ________ சின்னத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்க. தேர்தல் நாள் _____ என்று பதிவு செய்து போவார்கள்.
ஏதேனும் ஒரு சில சுவர்களில் மட்டும் மாநிலக் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும். மற்றபடி என் நினைவில் தெரிந்து நல்லியம்பாளையம் கிராமத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எங்கும் இருந்தது இல்லை.
நல்லியம்பாளையம் கிராமத்தில் பல கட்சியினரும் இருந்தாலும் பொது இடங்களில் , கோவில்களில் யாரும் அரசியல் பேசாமல் ஊரின் தன்மானம் காக்க ஒற்றுமையாய் இருந்தனர்.
என் பதினோரு வயதில் உள்ளாட்சித் தேர்தலில் சம்புக் கவுண்டர் வெற்றி பெற்று ஊரில் வெற்றி ஊர்வலம் வந்தது நினைவில் உள்ளது. அவரது முயற்சியால் ஊரின் தென்புறம் இரட்டபாளி வலசு செல்லும் பாதையில் வசிக்கும் மக்களுக்காக வாய்க்காலைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர முயற்சி எடுக்கப்பட்டது.
நல்லியம்பாளையம் கிராமம் கிட்டத்தட்ட 1998 வரை கிராமமாகவே இருந்தது. அதன்பிறகு ஊருக்கு அருகில் ஹவுசிங் போர்டு வர நூற்றுக்கணக்கான வீடுகள் ஊரைச் சுற்றி உருவாகத் தொடங்கின.
நல்லியம்பாளையம் ஊரில் வசித்த உள்ளூர் மக்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரிலும் தோட்டத்திலும் வசித்த நிலையில் இன்று ஊரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளூர் மக்கள் வசிக்கும் நிலை உருவானது. ஆனாலும் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நாட்களிலும் , மாதந்தோறும் பெளர்ணமி நாட்களிலும் ஊர்க்கோயில்களில் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நல்லியம்பாளையம் கிராமம் காலப்போக்கில் ஊராட்சி மன்ற அமைப்பில் இருந்து , மாநகராட்சியின் எல்லைக்குள் வந்தது.
மண்மணம் மாறினாலும் ஊரின் நிலையை என்றும் எடுத்துரைப்பது ஊர்க்கோயிலும் , பெருமாள் கோயிலும் அரச மர அடையாளமும் தான். ஊர் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாடுகள் என்றும் மாறாமல் இன்றும் இருப்பதே அதன் பெருமைக்குக் காரணமாய் இருக்கின்றன.
இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நின்று நிதானமாய் கதை பேசி நகர்ந்து சென்ற ஆத்தாக்களும் , தாத்தாக்களும் இன்று எண்ணிக்கை குறைந்து விட்டார்கள்.
ஆனாலும் நல்லியம்பாளையம் கதை இன்னும் பல பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஊரின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்.