" எல்லாமும் வேண்டும் . இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை என்று முழங்கி எங்களுக்கான சுதந்திரத்தைத் தாருங்கள் தாருங்கள் என்று ஏன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? 'பிறந்த குழந்தை கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!’ என்ற அவரது கூற்றே அவர் எப்படிப்பட்டவர் என்பதை எடுத்துரைக்கிறது.
அகிம்சையையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஒதுக்கி வைத்து தீவிர முறையில் இந்தியாவை மீட்டெடுப்போம் என்று குரல் கொடுத்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். காந்தியையும் நேருவையும் மிதவாதிகளையும் மிரள வைத்தவர். ஆங்கிலேயர்களை அலற வைத்தவர். இந்திய வரலாற்றில் தவிர்க்க இயலாதவாறு தடம் பதித்த நேதாஜி, காந்தியால் தலைவராக்கப்பட்டு காந்தியாலேயே தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட வரலாறு நாம் அறிய வேண்டிய வரலாறு.
காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சி.ஆர்.தாஸ் அவர்களின் ஈர்ப்பில் உயர்வான இலட்சியத்தோடு காங்கிரசில் இணைந்த நேதாஜி தீவிரமான முறையில் கட்சிப்பணிகளை ஆற்றி வந்தார். அன்றைய காலத்தில் காங்கிரசு பணி என்றாலே அது இந்திய விடுதலைப் போராட்டம் என்றே எல்லோரும் நினைக்கும் அளவுக்குக் காங்கிரசு இயக்கம் இந்திய சுதந்திரத்தை முன்னெடுத்து வந்தது.
1937 ஆம் ஆண்டு சரியான தலைமை இல்லாத காரணத்தால் காங்கிரசு இயக்கம் இருக்க, காங்கிரசு கட்சிக்கு இளைய இரத்தமும் புதிய பாய்ச்சலும் அவசியம் தேவை என்பதை உணர்ந்து மகாத்மா காந்தியடிகள் நேதாஜியை காங்கிரசு இயக்கத்தின் தலைமைப் பதவிக்குப் பரிந்துரைத்தார்.
நேதாஜி தலைமையில் இந்திய காங்கிரசு இயக்கம் புதிய பாய்ச்சலோடு வீறு நடை போட , 1939 ஆம் காங்கிரசு கட்சிக்கான தேர்தலில் மகாத்மா காந்தியடிகள் நேதாஜியை ஆதரிக்காமல் இருந்தார். பட்டாபி சீதாராமையா என்பவரை தேர்தலில் நிறுத்தினார். ஆனாலும் நேதாஜி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனையடுத்து காந்தி, இது என்னுடைய தோல்வி என்று அறிக்கை விட , காந்தியை மனவேதனை படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து காங்கிரசு இயக்கத்திலிருந்தே நேதாஜி விலகினார்.
தமது அடுத்த வாரிசாக , அரசியல் தலைமையாக நேருவையே காந்தி வழிமொழிந்தார். சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு நேதாஜி மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இந்திய இளைஞர்களின் தலைவர்களாக இருவரும் உருவெடுத்தார்கள். இந்தியா முழுமையும் நேதாஜி மற்றும் நேரு அவர்களுக்கு மாபெரும் செல்வாக்கு உருவாகியது.
ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !" என்றார் .
கால சூழ்நிலையில் மாறுவேடத்தில் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரை ஆங்கிலேய அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது. நேதாஜி இந்தியாவில் இருந்து தப்பினார்.
பெஷாவர் நகருக்குள் நுழைந்து அங்கிருந்து ஆப்கானுக்குள் சென்றார் நேதாஜி. ரஷ்யாவின் வழியாக இத்தாலி போகலாம் என்று திட்டமிட்டு இருந்த போஸ் ஹிட்லர் அழைக்கிறார் என்பதை அறிந்து அவரை சந்திக்க மாஸ்கோவில் இருந்து ஜெர்மனி போய் சந்தித்தார் . ஹிட்லர் போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் உதவுவதாக உத்தரவாதம் அளிக்க ஆனால்,எந்த உதவியும் கிடைக்காமல் போனது.
அதனைத்தொடர்ந்து ஜப்பான் போனார் நேதாஜி. ராஷ் பிஹாரி போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்துக்கு உத்திரவாதம் அளித்து போரில் கைது செய்யப்பட்ட இந்திய வீரர்களைக் கொண்டு இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்தார். பெண்கள் பலரையும் இராணுவத்தில் போர்ப்படையில் இணைத்துக்கொண்டார்.
"ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் "என்று நேதாஜி உரையாற்றினார். அக்டோபர் 21 அன்று சுதந்திர இந்தியாவுக்கான அறிவிப்பை சிங்கப்பூர் நாட்டில் உரையாற்றி வெளிப்படுத்தினார்.
வானொலியில் " இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகளிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் வேண்டுகிறோம் !" என்றார் நேதாஜி. ,"தேசபக்தர்களுள் இளவரசர் !" என்று நேதாஜி குறித்து காந்தி மகிழ்வோடு கூறினார். டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்திய தேசிய அரசின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்கு ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்திய தேசிய இராணுவம் , பர்மாவில் இருந்து மொய்ராங் என்கிற மணிப்பூரின் பகுதியை கைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நேதாஜியின் படை முன்னேறி அடுத்து நாகலாந்து பகுதியைக் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிட , இந்தியாவில் நேதாஜியின் செல்வாக்கு பெருகியது.
அந்த நேரத்தில் தென்மேற்கு பருவ மழை ,போரின் போக்கை மாற்றியது . தகவல் துண்டிப்பு, ஆயுதங்கள் வந்து சேராமை எல்லாம் தோல்வியை நோக்கி படையை தள்ளியது. போஸ் ஜப்பானின் உதவியோடு மீண்டு வந்து போராடலாம் என்று முடிவு செய்து கொண்டு சிங்கப்பூர் வரை சென்று அங்கிருந்து சைகோன் சென்றது படை. . சைகோனில் இருந்து மன்ச்சூரியா நோக்கி இருவர் மட்டும் போகக்கூடிய குண்டு வீச்சு விமானத்தில் தோழர் ஹபீப்புடன் ஏறினார். தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று அன்று முதல் இன்று வரை கூறப்பட ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று கூற, பல விசாரணை கமிஷன்கள் அமைத்தும் நேதாஜியின் மரணம் குறித்த மர்மம் வரலாறாகவே நீடிக்கிறது.
நேதாஜியின் மரணத்துக்குப் பிந்தைய பிறந்தநாளில் பேசிய நேரு, ‘நானும் அவரும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இணைந்து விடுதலைப் போரில் பங்காற்றினோம். பேரன்பால் எங்கள் உறவு நிறைந்திருந்தது. என்னுடைய தம்பி அவர். எங்களுக்குள் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தது என்றாலும், விடுதலைக் காகப் போராடிய தீரமிகுந்த போராளி அவர்.’ என்று குறிப்பிட்டார்.
1939 ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் நேதாஜி , தமது அரசியல் வாழ்வை அடியோடு மூழ்கச் செய்தவர்களில் முதன்மையானவர் நேரு என்று முழங்கி இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்துக்கு அதிர்ச்சி அளித்தார். எமது வாழ்வில் மிகப்பெரிய கெடுதல்களைச் செய்தவர் என்று கூறிய நேருவின் பெயரில் ஒரு படைப்பிரிவை நேதாஜி அமைத்தார் என்பதும், இந்திய தேசிய இராணுவ வீரர்கள் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது நேரு என்பது நாம் அறிய வேண்டிய தகவல். படைப்பிரிவுகளுக்குக் காந்தி, நேரு, ஆசாத் ஆகியோரின் பெயரை நேதாஜி சூட்டியிருந்தார்.
நேதாஜி வாழ்ந்த போதும் , மறைந்த பிறகும் புரிந்து கொள்ளப்படாத புதிராகவே சாகசங்களின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார்.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டுள்ளார்கள்.
1 comment:
அருமையான பதிவு , பல புதிய தகவல்கள்..... நன்றி
Post a Comment