மத்திய ஆசியாவின் மலைத்தொடர் பகுதிகளில் அமைந்த நிலப்பகுதி திபெத். திபெத் நாடாக இல்லாமல் பல பகுதிகளாக பிரிந்து பரந்த பகுதிகளாக இருந்த நிலையில் ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சன் என்னும் அரசர் திபெத் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த திபெத் நாட்டை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் புத்த மதம் பரவிய போது திபெத் நாட்டில் புத்த மதத்தை அறிமுகப்படுத்தியவராக சாங்ட்சன் கருதப்படுகிறார்.
16 ஆம் நூற்றாண்டில் திபெத் பிரிவினையால் பிளவுபட்டிருந்தது. இந்த பிரிவினையைப் பயன்படுத்தி சக்கர் என்னும் பகுதியை ஆட்சி செய்த லிக்டென்கான் என்பவர் திபெத் மீது படையெடுத்து வர , சரியான அரசர் இல்லாமல் நாடு தத்தளித்தது. அச்சமயத்தில் திபெத் மக்கள் 5 ஆம் தலாய்லாமாவை அணுகி நாட்டைக் காக்க வேண்டினர். 5 ஆம் தலாய்லாமா மங்கோலிய தலைவர் குஷ்ரிகானிடம் நாட்டை மீட்டுத் தர வேண்டினார். குஷ்ரிகானும் லிக்டென்கானை வீழ்த்தி நாட்டை மீட்டு 5ஆம் தலாய்லாமா வசம் ஒப்படைத்தார். அது முதல் 1959 வரை திபெத் தலாய்லாமா தலைவர்களாலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
பதினான்காம் நூற்றாண்டில் இட்ஜோங்கபா என்பவர் தனித்த புத்த மதப் பிரிவைத் தோற்றுவித்தார். இவர்கள் கெலுக் அதாவது மஞ்சள் தொப்பி அணிந்த சமயத்துறவிகள் என்று அழைக்கப்பட்டனர். சிக்கிம் நாடு சிவப்பு நிறத் தொப்பி அணிந்த சமயத்துறவிகள் வாழ்ந்த பகுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
1578 ஆம் ஆண்டு மங்கோலிய அரசரே தலாய்லாமா என்னும் பட்டத்தை வழங்கயதாகக் குறிப்புகள் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 3வது தலாய்லாமா காலத்திலேயே இப்பட்டம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக்காலகட்டத்திலேயே உலகின் பல இடங்களிலும் குருகுல மடங்கள் தனித்த ஆட்சி செலுத்தத் தொடங்கியிருந்தன. குறிப்பாக தமிழகத்தில் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் திருவாவடுதுறை ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றது.
17 ஆம் நூற்றாண்டில் திபெத் தலாய்லாமா தலைவர்கள் வசம் நாடு வந்தபோது தமது மதச்சடங்குகளுக்கு எவ்வித சிக்கலும் அரச, நிர்வாகக் காரணங்களால் வரக்கூடாது என்பதற்காக ‘பஞ்சன்லாமா’ என்னும் பதவி தோற்றுவிக்கப்பட்டு தலாய்லாமா ஆசியுடன் திபெத் பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்கினார். திபெத்திய வழக்கப்படி ‘பஞ்சன்லாமா’ ஒருவர் மறைவுக்குப் பின்னர் அவர்களை தலாய்லாமா தலைவர்களே தேர்ந்தெடுப்பது முறையாக இருந்து வருகின்றது. தலாய்லாமா மறைவுக்குப் பின்னர் அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘பஞ்சன்லாமா’ வையே சார்ந்ததாக இருந்து வருகின்றது.
18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா ஆங்கிலேயர் வசம் இருந்தபோதிலும் திபெத் கலாச்சாரம் எவ்விதப் பாதிப்பும் இன்றி சீராகவே இருந்து வந்தது. 17 நூற்றாண்டில் 5 ஆம் தலாய்லாமா தொடங்கி 13 ஆம் தலாய்லாமா வரை எவ்விதச் சிக்கலும் இன்றி திபெத் இயங்கி வந்தது. இந்தியாவிற்கு 1947 ல் சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 1950 வரை இங்கிலாந்து இராணியின் அதிகாரியாக திபெத் பகுதியில் இங்கிலாந்து ஆட்சி நிர்வாகமே நடைபெற்றதால் சீனா எவ்வித சிக்கல்களையும் அந்தக் காலங்களில் ஏற்படுத்தவில்லை.
1935 ஆம் ஆண்டு தற்போதயை 14 ஆம் தலாய்லாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுவயது முதலே சிறந்த திறன்களைப் பெற்று சிறந்த ஆன்மீகத் தலைவராக தமது 20 ஆம் வயதில் திகழத்தொடங்கினார். 1950 களில் சீனாவின் தனிப்பெரும் தலைவராக மா சே துங் தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவில் அவரின் தலைமையில் ஆட்சி மலர்ந்தது. திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக தற்போதைய தலாய்லாமா கொண்டாடப்பட, அப்போதைய சீனா அரசு (இப்போதும்) இவரை மரபு வழி தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. 1958 ஆம் ஆண்டு சீனா திபெத் மீது பெரும் ஆக்ரமிப்பை நடத்தி போர் நடத்தியது. திபெத்லிருந்து பெரும்பாலான மக்கள் இந்திய நாட்டில் தஞ்சமடைய , இந்திய அரசு மனமுவந்து திபெத்தியர்களை வரவேற்று வாழ்விடங்களை வழங்கியது. 1959 ஆம் ஆண்டு 14 வது தலாய்லாமாவும் சாதாரண படைவீரன் போல மாறுவேடத்தில் இரகசிய வழியில் ஆற்றைக் கடந்து 33 நாட்களுக்குப் பிறகு இந்தியாவிடம் தஞ்சம் புகுந்தார். தலாய்லாமா கிளம்பிய அடுத்த நாளே அவரைத் தேடும் பணியை சீனா தீவிரப்படுத்தியது. கிட்டத்தட்ட 88 ஆயிரம் திபெத்தியர்கள் சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இருப்பினும் சீனாவால் தலாய்லாமாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தலாய்லாமாவிற்கு இந்தியா ஆதரவு அளித்து இடம் அளித்தது வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்தியாவிடம் சீனா, தலாய்லாமாவை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூற அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்து திபெத்தியர்களுக்கும் தலாய்லாமாவிற்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று கூறிவிடுகிறார். இதனால் கோபமடைந்த சீனா , இந்தியா மீது 1962 ல் படையெடுத்தது. இந்தியா சில பகுதிகளை இந்தப் போரில் இழந்தது. உலக நாடுகளின் கண்டிப்பால் சீனா இந்தப் போரில் பின்வாங்கினாலும் இந்தியா பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
தற்போதைய 14வது தலாய்லாமா 1995 ஆம் ஆண்டு ‘பஞ்சன்லாமா’ வைத் தமது தலாய்லாமா அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்தார். ஆனால் சிலநாட்களில் அந்த ‘பஞ்சன்லாமா’ எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியாமல் போனது. இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு சீன அரசு ஒரு ‘பஞ்சன்லாமா’ வைத் தேர்ந்தெடுக்க தற்போது சீன அரசு தேர்ந்தெடுத்த ‘பஞ்சன்லாமா’ தான் ஒரே வாரிசாக இருக்கிறார். தற்போதைய தலாய்லாமா மறைவுக்குப் பிறகு அடுத்த தலாய்லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் நிலவும் என்று திபெத்தியர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய 14 ஆம் தலாய்லாமா காலத்திற்குப் பிறகு அடுத்த தலாய்லாமா தலைவரை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் பங்கு மிகுதியாக இருந்தாலும் பெரும்பாலான திபெத்தியர்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை. அப்போதைய நிலையில் இந்தியாவின் உதவியை திபெத்தியர்கள் நாட வாய்ப்பு உண்டு. தலாய்லாமா , திபெத் காரணமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் கடந்த அறுபது ஆண்டுகளாகவே நீடிக்கிறது என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நாடு கடந்த அரசாங்கம் அமைக்க உத்தரவிட்டது. அந்த அரசு இந்தியாவின் தர்மசாலாவில் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment